கவிதைகள்

கவிதை: 1
கைத்தறி

  நெல்லை கவிநேசன் 

 Email:nellaikavinesan25@gmail.com, 

Website: nellaikavinesan.com

  




1. 
வான்மழை பெய்தபின்பும்
     வாடுகின்ற மக்களுக்கு
தேன்மழைக் கவிதைதரும்
     தேனிசைக் கவிஞருக்கும்
இன்தமிழைக் கேட்கவந்த
     இதயங்கள் அனைவருக்கும்
என்னிதிய வணக்கங்கள்
     இனிமைமிகு வணக்கங்கள்

2.
குடிக்காதே என்றொருவன் உரத்துக்கூலி 
     கூடிநின்ற பேர்களிடம் உரைகள் செய்தான்
குடிகெடுக்கும் குடியினையே உயிராய் எண்ணி
     குடிக்கின்ற மக்களெல்லாம் நிறையும் நாட்டில்
படித்தவனாய் இருப்பானென்று பக்கம் சென்றேன்
     பாவிப்பயல் முன்னூறு மில்லி யோடு
வடித்திட்ட சாராயம் போட்டுக்கொண்டு
     வார்த்தைகளால் தள்ளாடி நிற்கின்றானே

3. 
சாராயச் சந்தையிலே எல்லோரும் தஞ்சம்
     சத்தியமாய் அறிவான செய்கைக்குப் பஞ்சம்
ஆராய்ந்து காரியங்கள் செய்வதையே தடுக்கும்
     ஆனந்த ராஜ்யத்தை அடியோடு கெடுக்கும்
போராட்டம் வாழ்வினிலே தினந்தினமும் நடக்கும்
     புத்திகூட மழுங்கிப்போய் சோம்பலிலே கிடக்கும்
பாராளும் உண்மையினை கரையான்போல அரிக்கும்
     பண்பான சுதந்திரத்தை வேரோடு பறிக்கும்

4.
முதல்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று
     முத்தமிழை வளர்த்துநின்ற சங்கங்கள் உண்டு
இதயத்தில் அன்புப்பயிர் வளர்க்கின்ற சங்கம்
     இப்போது எங்குண்டு? சிலுக்குக்கும் சங்கம்
உதவாக்கரை நடிகருக்கும் ஊரெல்லாம் சங்கம்
     ஊதாரிப் பேர்வழிக்கும் உடனேபல சங்கம்
மதயானை போலவெறி பிடிக்கின்ற சாதி
    மகத்தாக வளர்வதற்கும் தெருவெல்லாம் சங்கம்
                                                                 - இது ஒற்றுமைக்கு பங்கம்.

5.
சட்டத்தைக் கடுமையாக்கி
     சரிவரவே கடைபிடித்தால்
சட்டெனவே சாதிபேதக்
     சங்கடங்கள் மறையாது
திட்டமிட்டுத் தீமைதரும்
     தீண்டாமைத் தீயழிக்க
பட்டுப்போல் மனம் வேண்டும்
     பண்பான குணம் வேண்டும்

6.
மனமாற்றம் நடந்தால்தான்
     மதுப்பழக்கம் தீண்டாமை
தினந்தோறும் மறைந்துவிடும்
     திண்மையான நெஞ்சுதந்து
புனர்ஜென்மம் தந்துவிடும்
     புதுவாழ்வு நாம்பெறவே
மனமாற்ற வரவேண்டும் - அது
     மகிழ்வுதனையே தினம்தூண்டும்

7.
துண்டுபோட்டு நாட்டினையே 
     துண்டுதுண்டாய் பிரிக்கும்போது - கைத்தறி
துண்டுபோட்டு சிறப்பித்த
     பண்பாளர் அனைவரும்
கண்டுகளிக்க வந்தோர்கள்
     கைத்தறியார் அனைவருக்கும்
உண்டுஎனது நன்றிகள்
     நெல்லைகவிநேசன் நன்றிகள்

(நாகர்கோவில் கைத்தறி கண்காட்சி - கவியரங்கக் காட்சி கவிதைகள்-26.04.1984)
______________________________________________________________________________________________

கவிதை: 2
கலிப்பகைவன்

நெல்லை கவிநேசன் 

 Email:nellaikavinesan25@gmail.com, 

Website: nellaikavinesan.com

1.
பேசுகின்ற சொற்களிலே அசிங்கப் பொய்கள்
பாதைதனை மாற்றுகின்ற போதைப் பொய்கை 
மாசுகொண்ட உள்ளத்தில் மயக்கும் செய்கை
மதிகெடுக்கும் பொருட்களையே வாங்கும் கைகள்
வீசுகின்ற தென்றலையும் தேடி வந்து
விழுந்துவிட்ட விஷக்காற்றைப் போல இங்கு
காசுக்காய் கிடைக்கின்ற போலி அன்பு
கலிப்பகைவன் இவைஒழிப்பான் மனமே நம்பு

2.
திரட்டுப்பால் திருட்டுப்பால் குடிப்பார் - அகிலத்
திரட்டுப்பால் குடிப்பதற்கு வெறுப்பார்
முரட்டுத்தனம் குருட்டுத்தனம் நீக்கும் -பகைகள்
முளைவிட்டால் வைகுண்டம் போக்கும்

3.
திருட்டுத்தனம் நீக்குகின்ற மன்னன்
திருவடிகள் அருவருவது திண்ணம்
இருட்டுக்குள் ஒளிதானே அய்யா - இதய
இனிப்புக்கு வழிதானே அய்யா

4.
அய்யாவின் நாமத்தைச் சொன்னாலே போதும்
அருள்வந்து தினம்நெஞ்சில் அலையலையாய் மோதும்
கொய்யாக்கனி போல்சுவையே உள்ளத்தில் ஊறும்
கொடும்எண்ணும் நொடிப்பொழுதில் வேரோடு மாறும்
செய்கின்ற செயல்களெல்லாம் நன்மையாக ஆகும்
செல்கின்ற வழியெல்லாம் உண்மையாகிப் போகும்
தெய்வீக அன்பிருந்தால் கலிப்பகைவன் நாளும்
தேடிவந்து குடியிருக்க மனம்மகிழ்ந்து வாழும்.


(23.10.1984 சுவாமித்தோப்பு கவிதைப்போட்டியில் - முதல் பரிசு பெற்ற கவிதை)




Post a Comment

புதியது பழையவை

Sports News