என்னைப்பற்றி


1.“பன்முகத் தன்மையுள்ள படைப்பாளி-நெல்லை கவிநேசன்”

வானம் முட்டும் செம்மண் துகள்கள். தூரத்து விழிகளில் காட்சியாய் காற்றின் இருப்பை உறுதி செய்யும் சமதளமில்லாத சிவப்பு மணல் பரப்பு. இவைதான் தேரிக்காட்டின் அடையாளங்கள். நிமிர்ந்து நிற்கும் பனைமரங்களும் பச்சை விரிந்து கிடக்கும் நீர்க்கருவை மரங்களும் இங்கே வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம். இத்தேரிக்காடு தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் பனைமரம் சார்ந்த தொழிலைச் செய்து வாழ்ந்து வந்தனர். கால மாற்றம், கல்விசார் வாழ்க்கைமுறை ஆகியன இம்மக்களைப் பொருள் தேடி இடம்பெயரச் செய்தது. இதன் பயனாக இம்மக்கள் தங்கள் வாழ்வில் பொருளாதார வளர்ச்சியைக் கண்டனர். இவ்வாறாக வளர்ச்சி கண்ட இம்மக்களின் வாழ்வியல் நடப்புக்களை அவர்களோடு வாழ்ந்துகொண்டே படைப்பு வழியாகக் கல்வி சார் உலகிற்கு இலக்கியமாகப் படைத்தளித்தவர்களுள் ‘நெல்லை கவிநேசன்’ என்ற பேராசிரியர் முனைவர் சௌ.நாராயணராஜனும் ஒருவர். 

இவர் புதுக்கவிதை, சிறுகதை, குறுநாவல் என்ற இலக்கியப் பாதையின் வழியாக பயணித்துப் பயணக்கட்டுரை, கல்வி, தொழில், மொழி எனப் பல்வேறு தளங்களில் நின்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். இவர் படைத்தளித்துள்ள படைப்புக்களின் பன்முகத் தன்மையை விமர்சன நோக்குடன் மதிப்பீடு செய்யலாம்.
 
படைப்பாளியின் பல்வேறு பரிமாணங்கள் ஒரு படைப்பு உருவாக்கப்படும்போது பலரது மனங்கள் அதில் ஈடுபடுகின்றன. பலரது மனங்கள் படைப்பில் ஈடுபடுவதால் பல்வேறு வாசிப்புகளுக்கு அது இடமளிக்கிறது. இதனால் வாசிப்பு நிலையில் பல்வேறு தளங்கள் உருவாகின்றன. படைப்பில் படைப்பாளரின் நோக்கம் வெளிப்படும். படைப்பாளன் தன் படைப்பின் வழியாக புதிய, புதிய பரிமாணங்களைக் காண்கிறான். தன் ஆளுமையைப் படைப்பின் வழியாக வெளிப்படுத்துகிறான். அவன் புதிய உத்தியைப் படைப்பில் கையாள்கிறான். படைப்பில் படைப்பாளன் “வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதை எழுதுவது எழுத்துப்பணியாகாது. எது பிடிக்க வேண்டுமென்று ஆசிரியர் நினைக்கிறரோ, எது உண்மை என்றும், நன்மை என்றும் அவருக்குப் படுகிறதோ, அதை வாசகர்களுக்குப் பிடிக்கும் முறையில் எழுத வேண்டும் என்ற கொள்கைகொண்ட ஆசிரியர் அந்நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்”. (தமிழியல் ஆய்வு-1997;167) என்ற கருத்தைத் தன் படைப்பின் வழியே தருகிறார். இவ்வியல்புகளை நெல்லை கவிநேசன் என்ற படைப்பாளியிடமும் காண முடிகிறது.
 
இலக்கியங்களில் காணப்படுகின்ற புதுக்கவிதை, சிறுகதை, குறுநாவல், பயணக்கட்டுரை என்ற இலக்கிய அடையாளங்களுடன் கல்வியாளராய் இவர் பரிsணமித்தார். கல்வி தொடர்பான கட்டுரைகளையும் படைத்தளித்தார். இலக்கியத் தன்மையோடு கற்பித்தலைக்கூடத் தன் படைப்பாற்றல் மூலமாக கட்டுரைகளாக்கித் தந்துள்ளார். தனது இலக்கிய ஆர்வத்தை தவிர்க்க இயலாத நிலையில் இப்படைப்பாளன் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இலக்கியவாதியாகவும், கல்வியாளராகவும் தன்னை அடையாளங் காட்டினார்.
 
கல்வி சார்ந்த வாசிப்போன் இலக்கியத்தை மட்டும் வாசிப்புக்கு 
உட்படுத்தாமல் அறிவு சார்ந்த தன் தேவையை நிறைவு செய்துகொள்ள, அறிவு சார்ந்த படைப்புகளை வாசிப்புக்குட்படுத்துகிறான். அவன் இலக்கியங்கள் என்ற தளங்களைக் கடந்து தன் வாசிப்புத் தேவைகளைப் பெறப் பொழுதுபோக்கு நிலைகளைக் கடந்து அறிவு, மொழி எனப் பல்துறை சார்ந்த தளங்களில் நின்று தன் வாசிப்பை விரிவாக்கிக் கொள்கிறான். இவ்வாசிப்போனின் வாசிப்புத் தேவையை உணர்ந்துகொண்ட படைப்பாளன் படைப்பின் வழியாக வாசகனைத் தொடர்பு கொள்கிறான். அவன் படைப்பாளனாக அங்கே வெற்றி கொள்கிறான்.

இத்தகைய பன்முகத்தன்மைகொண்ட படைப்பாளிகள் தமிழ் இலக்கியவுலகில் ஒரு சிலரே உள்ளனர். அவர்களின் வரிசையில் நெல்லை கவிநேசன் என்ற படைப்பாளியையும் அடையாளங் காணலாம். இப்படைப்பாளி, தான் கற்றுணர்ந்த கல்வியனுபவங்களைக் கொண்டும் வாழ் தளங்களில் நின்றும், தன் எழுத்தைத் திறன்படப் பதிவு செய்துள்ளார்.
 
படைப்புகளின் பட்டியல்
     “சென்றிடுவீரெட்டுத் திக்கும் கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்”
              (பாரதியார் கவிதைகள் 2001:60) என்ற கவிதைக்கு உரம் சேர்த்த படைப்பாளி. இலக்கியம், கல்வி ஆய்வு, தொழில், அறிவு புகட்டல் என்ற பல்வேறு தளங்களில் நின்றுகொண்டு தனது படைப்புக்களைப் படைத்தளித்துள்ளார்.
 
இலக்கியக் கூறான புதுக்கவிதையினைப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும் நெல்லை கவிநேசன் என்ற கவிஞனாய் நின்று பிரதிபலித்தவர். சிறுகதைகளை இதழ்களிலும், வானொலி ஒலிபரப்பிலும் பதிவு செய்தவர். பின்னர், நூல் வடிவில் வெளியிட்டவர். தனக்கு நாவலும் எழுத வரும் என்பதை உறுதி செய்ய “கலைக்க முடியாத வேஷங்கள்” என்ற குறுநாவலை எழுதியவர். தனது அந்தமான் அனுபவங்களைப் பயணக் கட்டுரையாக்கி “அந்தமான் பயண அனுபவங்கள்” என்ற நூலாக வெளியிட்டவர். “வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்” என்னும் தொடரை ‘தமிழ் முரசு’ நாளிதழில் வெளியிட்டவர். “சிரிப்போம் சிந்திப்போம்” என்ற தொடரை ‘தேவி’ வார இதழில் எழுதி வந்தவர். “வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்” ‘தினத்தந்தி’ இளைஞர் மலரில் வெளியிட்டவர். “நம் தலைவர் காமராஜர்” என்ற தலைப்பிட்டு நூல் படைத்தவர். “அய்யா வைகுண்டர்” என்ற வாழ்க்கை வரலாற்றுத் தொடரை ‘தினகரன்’ நாளிதழில் அளித்தவர். “அய்யா வைகுண்டர் அருளமுதம்” என்ற நூலைப் படைத்தவர். “சட்டம் சந்தித்த பெண்கள்” என்னும் தலைப்பில் நூல் படைத்தவர். இத்தகைய படைப்புக்களைப் படைத்தளித்த படைப்பாளி நெல்லை கவிநேசன்.
 
இவர் கல்வி சார்ந்த பணியினைச் செய்து வருவதால் மாணவர்களுக்குப் பயனளிக்கும் படிப்புச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்குத் தயார்செய்து கொள்ளும்வகையில் “போட்டித் தேர்வுகளுக்கான பொதுக் கட்டுரைகள்” நூலாகப் படைத்தளித்துள்ளார். “மாற்றங்களைச் சந்திப்போம்” என்ற தொடர் கட்டுரையை வளர்தொழில் மலரில் வெளியிட்டவர் (ஏப் 20-10-2013-நவம்பர்).
 
தொழில் துறைக்கு ஆலோசனை வழங்கும் தன்மையில் “நேரத்தைப் பணம் ஆக்கலாம்” என்ற நூலும், தொழில் வணிகம் இதழில் தொடராக வெளிவந்த “நீங்களும் சிறந்த நிர்வாகி ஆகலாம்” என்ற நூலும் வெளியிட்டுள்ளார். மேலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொழில் சார்ந்த கட்டுரைகளையும் படைத்தளித்துள்ளார். இவரது படைப்புகளின் பட்டியல் இவரது அறிவுத்திறனை நமக்குச் சொல்வதாக உள்ளது. இப்படைப்பாளி, படைப்பாளன் என்ற நிலையினைத் தாண்டி “பயனெழுத்துப் படைப்பாளி” என்ற உயரிய நிலையைத் தன் படைப்பின் வழியாக உணர்த்துகின்றார்.
 
கவிநேசனும் கவிதையும் திரைப்படப் பாடல்மீதுகொண்ட காதலால் நெல்லை கவிநேசன் என்ற கவிஞன் உருவாகினார். தனக்குத்தானே புனைபெயர் இட்டுக்கொண்ட கவிஞன். நானூற்றைத் தாண்டித் தன் கவிதைத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சித்த கவிஞன். இக்கவிஞனின் கவிதைகளில் காதல், சமூக எதார்த்தம் போன்றவற்றைக் காண முடிகிறது. பாரதியின் கருத்துப்பதிவை கவிதைகளில் காட்டிப் பெண் பற்றிய தனது மதிப்பீட்டை அருமையாகப் பதிவு செய்கிறார்.
“மாட்டுக்கு மூக்கினிலே கயிற்றை மாட்டி
மனம்போல ஆட்டுவிக்கும் கலையைப் போன்று
பூட்டுக்கு மேல்பூட்டுப் போட்டுவைத்து
பூட்டிவைத்து பெண்களையே அடைக்கலாமா?
வீட்டுக்குள்ளே குதிபோடும் எலியும்கூட
வீரமுடன் வெளிவந்து ஆட்டம் போடும்
நாட்டுக்குள் பெண்ணின்நிலை அடிமையென்றால்
நாம் ஏற்றுக்கொள்வதும் நல்லதல்ல” 
              - (தங்க மங்கை செப்.2013; 80) இதழ் பெண் பற்றிய சமூக மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறார். பெண் அடிமைத்தனம் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லதல்ல என்கிறார். இவரின் கவிதைகள் வார, மாத இதழ்களில் வெளிவந்தன.
 
ஒரு ஏழைச் சிறுவன் இன்னொரு சிறுவனை தன் முதுகில் தூக்கிச்சென்ற காட்சியைப் பார்த்து எழுதப்பட்ட கவிதை இதயம் பேசுகிறது இதழில்,
இளமை
லிப்ட்டா?
இந்நாட்டு
மன்னர்களா?
இனிமை
தேடும்
இளையச் செல்வங்களா?
புதியதோர்
உலகம் செய்யப்
புறப்படும்
வீரர்களா?
வறுமைக்கோலங்களா?
வருங்கால போர்ட்டர்களா?
சோகச் சித்திரங்கள்
சொல்லும் புதுக்கவிதைகளைக் கண்டு
சிரிக்காதீர்கள்;
உள்ளம் புதுக்க விதைகளைத்
தூவுங்கள் (இதயம் பேசுகிறது 20.01.1981)
 
பரிசுக் கவிதையாய் வெளிவந்தது தினமலர் வாரமலரில் ‘கவிஞர்’ என்ற தலைப்பில்,

“வாடி.... லேடி
ஜாடி.... மூடி
தாடி.... போடி
சும்மா எழுதினேன்
என்னை
சினிமாக் கவிஞன்
ஆக்கிவிட்டார்கள்” (தினமலர் வாரமலர் 1984)
 
               -என்று சினிமாக் கவிஞர்களை நையாண்டி செய்து எழுதிய கவிதையும் இவரின் திறமைக்கு உதாரணம் எனலாம்.
 
இக்கவிதைகள் வானொலி ஒலிபரப்பில் வாசிக்கப்பட்டன. ‘கலிப்பகைவன்’, ‘என் கவிதை’ போன்ற கவிதைகள் வானொலி மூலமாக மக்களின் மனங்களைக் கவர்ந்தன எனலாம். காலவோட்டத்தில் இவரின் அறிவுத் தேடல்கள் விசாலமானதால் இவரின் படைப்பார்வம் பல்துறை சார்ந்ததாக அமைந்தது. கவிதையிலிருந்து கட்டுரை, கதைக்களங்களை நோக்கியதாக இவரின் படைப்பு நிலை மாற்றங்கண்டது.
கதைத்தளங்களில் கவிநேசன்
 
இதழ்கள் படைப்பாளனின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. தேவி வார இதழ் நெல்லை கவிநேசன் என்ற படைப்பாளிக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இவ்விதழ் கவிஞனாகவும், கதாசிரியனாகவும் அவரை அடையாளம் காட்டியது. இதன் பின்னரே பல்வேறு மாத, வார இதழ்களில் இவரின் கதைகள் வெளிவரலாயிற்று. இவரின் கதைகள் சில வானொலி ஒலிபரப்பில் வாசிக்கப்பட்டன.
 
இக்கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தியாகப்பரிசு’ என்னும் தலைப்பில் ஆசிரியர் நூலாக வெளியிட்டார். இத்தொகுப்பில் பதினெட்டுச் சிறுகதைகள் உள்ளன.
 
தியாகப்பரிசு என்னும் கதைத் தொகுப்பில் முதல் கதையாக தியாகப்பரிசு என்னும் கதையையே ஆசிரியர் தந்திருக்கிறார். இக்கதை கதாசிரியர் தான் சார்ந்த பேராசிரியப் பணிக்கு கௌரவம் சேர்ப்பதாகப் படைத்தளித்துள்ளார்.
 
‘தியாகப் பரிசு’வில் தனது கல்லூரிப் பேராசிரியருக்கு வந்த ஒரு கடிதத்திலிருந்து கதைக்கரு கிடைத்ததாகக்கூறும் ஆசிரியர் கதை நிகழ்வில் பேராசிரியர் சுந்தரத்தின் மகனும், மகளும், அவரை மதிக்காது சுயமாகத் தனது துணையைத் தேடிப் போய்விடுகிறார்கள். இப்பிரிவின் காரணமாகப் பேராசிரியர் தனது பணியில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார். அவரின் மனைவி, தனது சகோதரி வருவதால் வீட்டில் இருக்க வேண்டுகிறார். ஆசிரியரோ தனது பணிக்கு முதன்மையளித்து மறுக்கிறார். அவரின் மனைவி இருபது வருசத்துக்கு மேல பாடம் சொல்லிக் கொடுத்து ஏதாவது பயன் இருக்குதா? இல்லியே! நீங்க கஷ்டப்பட்டு பாடம் நடத்தி வர்றீங்கன்னு ஏதாவது பரிசா தர்றாங்க...? உடலை உருக்கி கத்திக் கத்தி... உங்களுக்குக் கிடைத்த பரிசு இருமல்தானே...” (தியாகப்பரிசு 2005:13) என்கிறாள். கதை முடிவில் அதற்கான பதிலாகத் தன் பழைய மாணவன் சீதாராமனின் கடித வரிகளில் அன்புள்ள அப்பாவுக்கு எனத் தொடங்கித் தன் திருமணத்திற்குத் தங்களின் நல்லாசி வாங்க நேரில் வருகிறேன் என்ற வரிகளை வாசித்த அவரின் மனநிலையைத் தன் மனைவியிடம் கண்களில் நீர்வழிய...” எனக்குப் பரிசு கிடைச்சிருக்கு இங்க பார் இந்தக் கடிதத்தைப் பார் சொந்த மகனும் மகளும் சொந்தத்துக்கே டாடா காட்டிட்டுப் போனபிறகு எனக்கும் உனக்கும் மகன் கிடைச்சிருக்கான்” (தியாகப்பரிசு 2005:17) என்று கதையை முடிக்கிறார் ஆசிரிய, மாணவ உறவு நிலைகளைக் கொண்டு விளக்கிச் செல்கிறார். இக்கதை அவர் சார்ந்திருக்கும் கல்வி நிறுவனத்தை மையமிட்டு எழுதப்பட்ட படைப்பாகக் காண முடிகிறது.
 
‘மனங்கள்’ என்னும் சிறுகதையில் ஒரு தாயின் அன்பின் ஆழத்தை உணர முடியாத மகன் தன் மனைவியுடன் இரவில் திருச்செந்தூரில் விடுதியில் தங்க முடியாத நிலையை அடைகிறான். தான் செய்த தவறுக்குத் தண்டனையாக இதனைக் கருதுகிறான். மாறாக, தாய் தன் மகனும் மருமகளும் தான் இல்லாது என்ன துயரம் அடைகிறார்களோ? என வருந்துகிறாள். இக்கதையில் இருவேறுபட்ட மனங்களின் மனவோட்டம் கதையில் பார்க்கப்பட்டுள்ளது. இக்கதையின் கதாசிரியர் தான் சார்ந்த பகுதியை கதைக்களமாக்கித் தந்திருக்கிறார்.
 
‘மனதில் ஒரு உறுதி’ என்னும் கதையில் மனைவி இறந்த நிலையில் தான் செய்யும் தொழில் நலன்கருதியும் குடும்ப நலன் கருதியும் மறுமணம் செய்ய முயலுகிறார் தந்தை. இதனைப் புரிந்துகொள்ள இயலாத கல்லூரி மாணவனாக வரும் மகன் தற்கொலை செய்துகொள்ள முயலுகிறான். இவனது கோழைத்தனத்தினால் அவன் காதலி அவனைக் காதலிக்க மறுத்துப் பிரிகிறாள். இக்கதையில் மகனின் கோழைத்தனமான முடிவை உதாசீனப்படுத்தி உறுதியான மன நிலையுடன் கல்லூரி மாணவியான காதலி பாத்திரத்தைத் திறன்படப் படைத்து தந்திருக்கிறார்.

தென் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஏற்படும் வன்முறைகளைக் கருத்தில்கொண்டு ‘பலியாடுகள்’ என்னும் சிறுகதையைப் படைத்துள்ளார். இக்கதையில் தனிமனிதர்கள் சிலரின் சுய இலாபத்திற்காகவும் பிடிவாதத்தினாலும், ஆடுகளைப் பலியிடக்கூடாது என எதிர்த்து, பலியாகும் மனித உயிர்களை சமூகக் கண்ணோட்டத்துடன் கதையாக்கித் தந்துள்ளார். இக்கதை நிகழ்வு உண்மைச் சம்பவங்களைப்போல அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இக்கதையில் ஆசிரியர் தான் காணுகிற நிகழ்வை பிரதிபலித்திருக்கிறார்.
‘தியாகப் பரிசு’ கதைத் தொகுதியில் வருகின்ற கதைகளின் நிகழ்விடங்கள் திருச்செந்தூர்ப் பகுதியைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. இவரின் கதைகூறும் முறை படித்தவர்களுக்கான மொழிநடை பின்பற்றப்பட்டுள்ளது. இக்கதைகளில் சிலவற்றின் பாத்திரங்களின் உரையாடல்கள் கதைக் களத்தோடு ஒன்றியதாக காண முடியவில்லை. மாறாக கதை கூறும் செய்தி வாசிப்பவனுக்கு படிப்பினைத் தருவதுபோல் உள்ளது.
 
‘இது என்ன பிழைப்பு’ என்னும் சிறுகதை இவரின் மற்ற கதைகளிலிருந்து மாறுபட்டதாகப் படைத்தளித்துள்ளார். இக்கதைப் பாத்திரங்களின் உரையாடல் அது இயங்கும் களத்திற்கான பேச்சு மொழியைக் கொண்டுள்ளது. இக்கதையின் மொழிநடை வட்டார மொழிநடையில் அமைத்துத் தரப்பட்டுள்ளது.
 
இக்கதையில், “லேய் கைலாசம்... சொன்னா கேளுல... வள்ளியூலு சம்பந்தம் வேண்டாமுல, நம்ம ஈத்தாமொழி செயகுமாருக்க மொவள உறுதியாய் பார்ப்போம்” (தியாகப்பரிசு 2005; 66) என்பதிலும் “வள்ளியூருக்காரன் நல்லா குடுப்பேன்னுதான் சொல்லுதான். அவனுக்க மொவா கொஞ்சசோலாயாவது லெச்சணமா இருப்பான்னு நெனைச்சேன். புள்ள நம்மூரு நனைஞ்ச பனை மரம் மாதிரி இருக்கா... நக நட்டெல்லாம் மனசுக்கு பிடிச்சது மாதிரி தந்துட்டாலும் மொகரக்கட்ட நல்லாருக்காண்டாம்?” (தியாகப்பரிசு 2005; 66). என்பது போன்ற பேச்சுக்கள் எல்லாம் திருச்செந்தூரைச் சுற்றியுள்ள (தேரிக்காட்டு) பகுதியில் பேசக்கூடிய வட்டார மொழியின் அடையாளங்களைக் காணமுடிகிறது. இத்தொகுப்பில் உள்ள மற்ற கதைகள் இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வியலினைப் பிரதிபலிக்கும் தன்மையில் தரப்பட்டுள்ளன. கதைகூறும் முறைகளில் நெல்லை கவிநேசன் தனக்கெனத் தனி எழுத்துப் பதிவைச் செய்திருக்கிறார்.
 
‘கலைக்க முடியாத வேஷங்கள்’ இவரின் குறுநாவல் ஆகும். இதன் கதைப் பகுதியில் இருவேறுபட்ட சாதியினரின் காதல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நாவலில் காதலிப்பதனால் ஏற்படுகின்ற விளைவுகள் ஆசிரியரால் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. கதையில் இரு குடும்பத்தில் உள்ளவர்கள் சந்திக்கும் சமூகச் சிக்கல்களை எதார்த்தமாகக் காட்டுகிறார் இறுதியில் பெண்ணின் தந்தை சமூகம் அவருக்கு விதிக்கின்ற தடையைத் தகர்த்து எறிகின்றார். இதன்மூலம் தன்னாலும் சிறந்த நாவல் எழுத முடியும் என்பதை நெல்லை கவிநேசன் நிரூபித்துள்ளார்.
 
இலக்கியத் தரத்துடன் ‘சட்டம் சந்தித்த பெண்கள்’ சட்டக் கல்லூரியில் படித்த நெல்லை கவிநேசனை ‘சட்டம் சந்தித்த பெண்கள்’ என்னும் தொடரை எழுதத் தூண்டியதில் வியப்பு ஏதுமில்லை. அவரின் இத்தொடர் கதையோடு கலந்த கட்டுரையாகப் படைத்துத் தரப்பட்டது அவரின் புதிய முயற்சியாகக் கொள்ளலாம். தனது இலக்கிய ஆர்வத்தின் காரணமாக கதை கலந்த படைப்பாக உண்மை நிகழ்வை இதில் காட்டியுள்ளார். திரைப்பட நடிகர்களின் கதாப்பாத்திரம்போல புகைப்படக் காட்சியை உருவாக்கி நடிகர்களைச் சித்திரமாகத் தந்திருக்கிறார். இத்தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பின்னரே நூல் வடிவமாகப் படைத்தளித்துள்ளார். இப்படைப்பு 1990களில் எம்.ஃபில்.பட்ட ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வேடாக மலர்ந்தது. பிற்காலத்திய கல்வியாளர்களுக்கு இப்படைப்பு ஆய்வுக்களம் அமைத்துக் கொடுத்தது.
 
கலைச் சொல்லாக்கமும் நெல்லை கவிநேசனும் படைப்பாளன் காலத்திற்கேற்ப மாற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறான். நெல்லை கவிநேசன் என்ற படைப்பாளியும் இதற்கு விதிவிலக்கல்ல... இவர் கவிதை, கதை, கட்டுரை என்ற பரிமாணங்களைக் கடந்து மொழி வளர்ச்சிக்குப் புதிய சொல்லாக்கங்களை வழங்கியுள்ளார். இவர் வட்டார மொழிச் சொற்களை (Vernacular Language) வளர்தொழில் மாத இதழின் ‘மாற்றங்களைச் சந்திப்போம்’ (2010 ஏப்ரல் - 2013 நவம்பர்) என்ற தொடரில் புதிய சொல்லாக்கங்களாக வழங்கியுள்ளார் இப்புதிய சொற்களில் குறிப்பிடத்தக்கவை.

1. Work Life Balance                    -     பணி வாழ்வு சமநிலை
2. Unplanned Change                    -    திட்டமிடப்படாத மாற்றங்கள்
3. Adaptiveness                             -     ஏற்றுக்கொள்ளும் தன்மை
4. Organisational Resistance        -     அமைப்புசார் எதிர்ப்பு
5. Collective Authority                  -     கூட்டு அதிகாரம்
6. Translator                                  -    மாற்றங்களைச் சரியாக எடுத்துரைப்பவர்
7. Creativity                                  -     புத்தாக்க சிந்தனை
8. Aligned Workforce                   -     நெறிப்படுத்தப்பட்ட பணியாளர்கள்
9. Performance Management      -    பணித்திறன் மேலாண்மை
10. Stake holders                         -    நிறுவனப் பொறுப்பாளர்
11. Rick Taking Ability                -    இடர் ஏற்படும் திறன்
12. Formal Organisation             -     முறை சார் அமைப்பு
13. Burden of Change                 -    மாற்றுச்சுமை
14. Self Motivation                     -     தன்னூக்கம்
15. Process Redesign                 -    தொழில்முறை மறுவடிவம்
16. Transition                              -    நிலை மாற்றம்
17. Perception                             -    புலனுணர்வுப் புரிதல்
18. Infiltrate                                -    ஊடுருவுதல்

என்பனவற்றை இவரின் மொழித் திறனுக்குச் சான்றாகக் கூறலாம். இவை நெல்லை கவிநேசனின் சொல்லாக்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தொடர் கட்டுரைகளின்மூலம் வாசிப்போனுக்கு எளிதில் படித்துப் புரிந்துகொள்ளத்தக்க வகையில் சொற்களைக் கையாண்டுள்ளார்.
கட்டுரை வடிவில் கதைகள்
 
நாம் அன்றாடம் செய்தித் தாள்களில் காண்கின்ற செய்திகளின் பின்னணியிலிருந்து தினசரி நடப்பு நிகழ்வுகளிலிருந்து, கிடைக்கப்பெறும் பல்வேறு விதமான தகவல்களைக் கட்டுரைகளாக்கி கதையோடு கலந்து பயனுள்ளதாகப் படைத்தளித்தவையே ‘வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்’, ‘உனக்குள்ளே உலகம்’, ‘சிரிப்போம் சிந்திப்போம்’, ‘வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்’ போன்ற தொடர்களைக் குறிப்பிடலாம். பின்னாளில் இவையெல்லாம் நூல் வடிவம் பெற்றன. இந்நூல்களில் படைப்பாளன் தான் விரும்பி, உணர்ந்த கருத்துக்களைக் கதையோடு கலந்த கலவையாக்கிக் கட்டுரை வடிவில் வாசிக்கும் வாசகனுக்கு வாசிப்பில் தொய்வு ஏற்படாவண்ணம் படைத்துக் கொடுத்தார். இதில் ஆலோசனைகளும், அறிவுரைகளும் ஆசிரியரால் வழங்கப்பட்டன.
பயனெழுத்துப் படைப்பாளி
 
படைப்பாளன் தன் படைப்பின் வழியாகத் தான் கூற நினைத்த கருத்துக்களைப் பதிவு செய்கிறான். படைப்பாளன், வாசகன் என்ற இருவேறு தளங்களில் படைப்புக்கள் வாசிப்புச் செய்யப்படுகின்றன. படைப்பாளன் தான் சொல்ல நினைத்ததைப் படைப்பில் தருவது தவிர்க்க முடியாததாகிறது. படைப்பாளன் படைப்பின் ஓர் அங்கமாகவே மிளிர்வான். வாசகன் படைப்பினை வாசிப்பு செய்கின்றபோது படைப்பாளனின் கருத்து வாசிப்போனுக்கு ஏற்புடையது எனில் அவன் மன நிறைவை அடைகிறான். இங்கேதான் படைப்பு வெற்றியடைகிறது. படைப்பாளியின் படைப்பு மனநிறைவு, பொழுதுபோக்கு இரண்டையும் தருவதாக அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும். படைப்பு மக்களைச் சென்றடைகின்ற நிலையில் வாசிப்பில் கிடைக்கின்ற மனநிறைவு காரணமாக வாசகர்களின் வட்டத்தை அதிகப்படுத்தும். இந்நிலையில் அப்படைப்பு வெற்றி பெற்றதாகக் கருதப்படும். இவற்றிலிருந்து மாறுபட்ட நிலையில் நெல்லை கவிநேசன் தன் எழுத்தை வாசிப்போனுக்கு வழங்கியிருக்கிறார். அவர் வாசிப்போனுக்குப் பயன்தரும் வகையில் தனது படைப்பை வழங்கியிருக்கிறார். இவர் தனது எழுத்தை தொடர் கட்டுரைகளாக்கித் தந்து அதன் வாசிப்பு நிலையை விரிவுபடுத்தியபின்பே நூலாக்கித் தந்துள்ளார்.
 
இந்நூல்கள் வாசிப்போனுக்குப் பயன்பாட்டைத் தருவதால் நெல்லை கவிநேசன் என்ற படைபப்£ளி பயனெழுத்துப் படைப்பாளி என்ற கூறத்தக்கவராகிறார். இவரின் தொடர் கட்டுரைகளான “ஐ.ஏ.எஸ். கனவல்ல நிஜம்”, “பெர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்வது எப்படி?” என்பன இதற்குச் சான்றாகும். இவரின் தகுதி அறிந்து இதழ் பதிப்பாளர் சங்கம் இவருக்கு ‘பயனெழுத்துப் படைப்பாளி விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. இவர் ஆய்வு ரீதியிலும் கல்வியாளர் என்ற நிலையிலும் எண்ணற்ற கட்டுரைகளை இன்றுவரை படைத்தளித்துக் கொண்டிருக்கிறார். இவரின் எழுத்தாற்றல் இலக்கிய நிலைகளைக் கடந்து கல்வியாளர் என்ற உயர்ந்த நிலைக்குள் நிலை பெற்றுள்ளது என்றால் மிகையில்லை.
படைப்பாளி பற்றிய பார்வை
 
நெல்லை கவிநேசன் என்னும் படைப்பாளியின் படைப்புக்கள் எல்லாவற்றையும் இங்கே விளக்கிச் சொல்வது கடினம் எனக் கருதி இலக்கிய விமர்சனப்பாங்குடன் அவரின் படைப்புக்கள் வாசிக்கப்பட்டது அதிலிருந்து கிடைக்கப் பெறுபவை.
 
புதிய தேடல்கள் தான் கற்றதைக் கற்போருக்குப் பகிர்ந்தளிப்பது என்பதே அவர் கையாண்ட படைப்பு உத்தியாகும். அவர் ஓர் அனுபவமிக்க கல்வியாளர் என்பதை அவரின் படைப்புக்களின் வழியே வெளிப்படுத்தியுள்ளார். இவர் படைத்தளித்துள்ள நூல்களின் எண்ணிக்கை இன்று 30ஐக் கடந்து நிற்கிறது. ஆனால் கல்வியாளராய் அளித்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் ஏராளம். அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பேச்சைக் குறைத்துத் தன் எழுத்துக்களால் முத்திரை பதிக்கும் ஒரு கல்வியாளரின் பன்முகத் தோற்றம் படைப்பின் வழியாக அவரை இனம் காட்டியிருக்கிறது. அவரின் படைப்புப் பரிமாணங்கள் இலக்கிய நிலைகளைக் கடந்து கல்வியாளர் என்ற அடையாளங்களோடு இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. தேரிக்காட்டின் நிகழ்வுகளைக் கதைக்களமாக்கி, கல்வியாளர் என்ற நிலையில் தனக்கென ஒரு நடையைப் பின்பற்றி கதை வழங்கிய படைப்பாளி இன்று கல்வியாளராய் எதிர்கால இளைஞர்களைத் தூக்கி நிறுத்துகின்ற பணியினைச் செய்கிறார். என்பதே இவரின் படைப்புப் பரிமாணங்கள் சொல்லும் உண்மை எனலாம். 

-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “தேரிக்காட்டு இலக்கியங்கள்” என்னும் நுலில், முனைவர்.சி.சிங்காரவேலு அவர்கள்.
 

2.“மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர் - நெல்லை கவிநேசன்"

தமிழகத்தின் தென்பகுதி மாவட்டக்காரர்கள் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொட்ட துறையனைத்திலும் துலங்குகிறவர்கள் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். நான்கூட திருநெல்வேலி மாவட்டத்துக்காரன் என்பதால் இதைப் பெருமையாகச் சொல்லவில்லை. வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவனென்றாலும் இதைப் பொறாமையோடாவது நிச்சயம் ஒப்புக்கொள்வேன்.
 
பத்திரிகைத் தொழிலென்றால் தினத்தந்தி, தினமலர், மாலைமலர், மாலைமுரசு; உணவு விடுதிகளென்றால் சரவணபவன், ஆனந்தபவன் வாகனத்துறையென்றால் டி.வி.எஸ்., சிம்ப்ஸன்; மென்பொருள் துறையென்றால் ஹெச்.சி.எல். கேளிக்கைப் பூங்காக்களென்றால் கோல்டன் பீச், குயின்ஸ்லேண்ட், எம்.ஜி.எம்., வீட்டுப் பயன் பொருட்களென்றால் வி.ஜி.பன்னீர்தாஸ், வசந்த் அன்ட் கோ போன்ற பெரிய தொழில்களோடு பொறியியல் கல்லூரிகள், ரியல் எஸ்டேட், பலசரக்குக் கடைகள் என்று தலைநகரில் பெரிய பெரிய பெயரோடு புகழ்பெற்றிருக்கிறவர்கள் திருநெல்வேலிக்காரர்கள்.
 
இலக்கியத்திலும் சளைத்தவளர்களல்லர் எனுமாறு மாக்கவி பாரதி, புதுமைப்பித்தன, ரசிகமணி டி.கே.சி., ரா.பி.சேதுப்பிள்ளை, தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், வண்ணதாசன், நெல்லைக்கண்ணன் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். திரைத்துறையிலும் எண்ணற்றோர். குறிப்பாக டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, இயக்குநர் நடிகர் சூர்யா, டெல்லி கணேஷ், படத் தயாரிப்பாளர் குற்றாலிங்கம், நடிகர் ஜெய்சங்கர் இன்னும் அதிகமாய் கல்வித் துறையிலும் கணிசமாகத் தம் பங்கைச் செய்கிறவர்களும் திருநெல்வேலிக்காரர்கள் என்ற புகழுக்குரியவர்கள் பலர் உள்ளனர்.
 
இப்படியரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டத்தின் புகழ்மிக்கப் பிரமுகர்களில் அதுவும் மனித ஆற்றல் வாழ்வியல் சிந்தனைத்துறையில் முதற்பெயராகவும், முன்னணிப் புகழாளராகவும் விளங்குகிற ஒருவர் என் நீண்ட நாளைய நண்பர் என்பதாலும் அவரைப்பற்றி எழுதவும் என் இதயத்தில் இருத்திக் கொள்ளவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
 
அவர் வேறு யாருமல்லர். நெல்லை கவிநேசனாகத் தன்னை நிறுவி நிலைத்துள்ள டாக்டர் நாராயணராஜன் அவர்கள்தான். இம்மாத அட்டைப்பட நாயகர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் நாராயணராஜன் அவர்கள் தம் கல்விப் பணியோடு சமூகநலன் குறிப்பாக இளைஞர் நலம், நாட்டின் வளர்ச்சி குறித்த அக்கறையோடு மிகச்சிறந்த தொண்டினைச் செய்து வருகிறார்.
 
எல்லா நட்பினைப் போலவும், எழுத்துதான் எங்களை இணைத்தது. அவரை முதலில் சந்தித்த நாளே இனிய நாள். கவிதை உறவு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் வழங்குகிறது. இவற்றுக்குச் சில புகழ்வாய்ந்த நட்பு நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன. வாழ்வியல் நூல்களுக்கான பரிசுகளை சுதா பதிப்பகம் வாயிலாய் என் தாய்-தந்தையர் பெயரில் என் துணைவியார் திருமதி சிதம்பரம்மாள் வழங்கி வருகிறார். சிறந்த வாழ்வியல் நூல்களுக்கான முதற்பரிசை நெல்லை கவிநேசன் அவர்கள் எழுதியிருந்த “வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் பெற்றது”. நடுவர்கள் இந்நூலைப் பரிசுக்காகத் தேர்ந்து தந்ததும் நானும் படித்தேன். அற்புதமான நூலென்று கண்டுகொண்டதிலும், அவருடன் கைகுலுக்கிப் பாராட்டியதிலும் பெரிதும் மகிழ்ந்தேன்.
 
திரு.நெல்லை கவிநேசன் அவர்கள் ஒரு வெற்றிச் சிந்தனையாளர். கூடவே ஒரு வெற்றியாளரும்கூட. இரண்டுமாய் இருப்பது அரிது. எப்படி என்று எழுதுகிறவர்கள் அப்படி இருக்கமாட்டார்கள் என்பது பொது விதி. அந்த விதியைப் புரட்டிப் போட்டவர் திரு.நெல்லை கவிநேசன். தம்முடைய கல்விப்பணி பாதிக்காமலும் குடும்ப நலத்தில் குறை வைக்காமலும் நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு, நலமான சிந்தனைகளையும் விதைத்துக்கொண்டு, சிறந்த நூல்களையும் படைத்துக்கொண்டு, பேசிக்கொண்டு, பயன் விளைத்துக்கொண்டு... எப்படி இவருக்கு இத்துணையும் சாத்தியமாகிறது. இவருக்கேது இவ்வளவு நேரம்? என்ற வினாவுக்கு இவரது நேர நிர்வாக உத்தியே நமக்குப் பதிலாகும்.
 
நேர நிர்வாகத்தில் எதற்கு எவ்வளவு நேரம் என்பது போக, எது முதலில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற தேர்வு சிறந்த நேர நிர்வாகமாகிறது என்பார் இவர். இதுவே இவரது வாழ்க்கையின் வெற்றியுமாகியுள்ளது. சாதனையாளர் கவிநேசனின் கல்வி, பணி, வாழ்க்கைப் பயன்களெல்லாம் நம்மை வியப்பிலாழ்த்துகிறது. இடைவெளியின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே இவரது இமாலய வெற்றியின் காரணம். படித்துக் கொண்டும், படைத்துக்கொண்டும், பகிர்ந்து கொண்டுமான பயனுள்ள வாழ்க்கை என்ற பெருமைக்குரியவரான இவரின் அடிப்படைக் கல்வி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் (மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்) பி.பி.ஏ. பட்டம் (பணியாளர் மேலாண்மை) தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ. பட்டம். இது வணிக மேம்பாட்டுக்கான பட்டம். பணியாற்றிக்கொண்டே இருபதாண்டுகளுக்குப்பிறகு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுசெய்து பெறுகிறார். இவையெல்லாம் போதாதென்று, இதழியலில் பட்டயப்படிப்பு மற்றும் காந்தியச் சிந்தனைகளிலும், விற்பனைத் திறனிலும், இதழியலிலும் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார்.
 
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படிப்புகள்தான் என்றாலும், படித்ததையெல்லாம் தொடர்பு படுத்திக்கொண்டு முன்னேற விழையும் இளைஞர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் உள்ள வாய்ப்புகள், அவற்றில் துலங்கும் வழிகள் ஆகியவற்றைக் கற்றுத் தருவதில் சிறந்து விளங்குதல் கவிநேசன் அவர்களின் சிறப்பு எனலாம்.
கற்றலைப் பொருத்தவரை கல்வித்துறையில் புதிய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் கவிநேசன் அவர்கள் சிறந்து மட்டுமல்ல, கல்வி நிறுவனங்கள் பலவற்றிற்குத் தெரிந்தும் விளங்குகிறார். நெல்லையில் உள்ள பி.எஸ்.என்.பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாண்டு மாணவர்களுக்கான ‘Ethics and Values’ என்ற புதிய பாடத்திட்டத்தை கவிநேசன் அவர்கள் ஒரு உறுப்பினராக அமர்ந்து உருவாக்கித் தந்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பி.பி.ஏ. கல்விக்கான பாடத் திட்டங்களை அக்குழுவின் தலைவராக அமர்ந்து மறுசீரமைத்துக் கொடுத்துள்ளார். கால்சென்டர் மேலாண்மையில் பட்டயப்படிப்பு, திட்ட மேலாண்மை தொழில்முறைத் தலைமைப்பண்பு, ஆளுமை வளர்ச்சி, நிகழ்ச்சி நிர்வாகம் ஆகியவற்றின் சான்றிதழ்ப் படிப்பு குறித்த பாடத் திட்டங்களை வடிவமைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
 
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடத்திட்டங்களின் உருவாக்கம், மறுசீரமைப்பு ஆகியவற்றில் கவிநேசன் அவர்களின் பங்களிப்பு பெரிதும் குறிப்பிடத்தக்கது. கற்பதற்காகவும், கற்பிப்பதற்காகவும் பல்வேறு பாடங்களை உருவாக்கியுள்ளார். தலைமைப்பண்பு, புலன் உணர்வு (Perception) தகவல் பரிமாற்றம், மனப்பான்மை (Attitude), இலக்கு குறித்தல், குழுக் கலந்தாய்வு, நேர்காணல் நுட்பங்கள், போட்டித் தேர்வுகள் குறித்த குறுந்தகடுகள் பலவற்றை கவிநேசன் தயாரித்துள்ளார்.
 
கல்வித்துறையில் பல புதுமைகளையும், புரட்சிகளையும் செய்துள்ளது இவரை மிகச்சிறந்த கல்வியாளராக உயர்த்தியுள்ளது. பல்வேறு கலந்தாய்வுகள், மாநாடுகள், கூட்டங்களில் தேசிய அளவில் கலந்து கொண்டுள்ளார். வங்கிகளுக்குப் பெரிதும் பயனுள்ள பல கட்டுரைகளை இது போன்ற கூட்டங்களில் இவர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலைகளில் ஜனநாயகம் (Democracy in Industries) மற்றும் மனித உரிமை குறித்த கட்டுரையன்றும் வழங்கியுள்ளார்.
 
இவருடைய வழிநடத்தலில் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட பி.பி.ஏ. மாணவர்கள் ஆய்வுத் திட்ட அறிக்கையை முழுமை செய்துள்ளனர். ஒவ்வொரு தலைப்பும் இவருடைய துறைசார்ந்த அறிவாற்றலையும்  மேம்படுத்தியிருக்கும். திருநெல்வேலி அரசு போக்குவரத்து துறைக்கும் இவரது ஆய்வுப் பயனளித்திருக்கிறது. திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்களில் இவரது கல்வியறிவு, ஆய்வுத்திறன், பல்துறை அனுபவங்கள் பெரிதும் உலவுவதால் வரவேற்கப்படுகிற பிரமுகராகத் திகழ்கிறார்.
 
இவரது உழைப்பு ஆய்வாகவும், அற்புதமான பொழிவுகளாகவும், கட்டுரைகளாகவும் மட்டுமே நின்றுவிடாது பல்துறை நூல்களாகவும் பரிமளிப்பது குறிப்பிடத்தக்கது. என்ன படிப்பது, என்ன தொழில் செய்வது எப்படி உயர்வது, வேலை வாய்ப்புகள், சுயமுன்னேற்றம், ஆன்மிகம், மேலாண்மை கல்வியியல், ஐ.ஏ.எஸ். தேர்வு நேர்காணல்களைச் சந்திப்பது, வங்கி வேலைக்குத் தயாராவது, சிறுகதை, வாழ்க்கை வரலாறு என்று வியப்பூட்டும் அளவுக்கு விரிந்திருக்கிற ஞானம், சில பக்கங்களில் அடங்குகிற செய்தியாக அல்லாமல், நூலே எழுதுமளவு நிறைய, நிறைவாக இருக்கிறது எனலாம்.
 
தினத்தந்தி தொடர்ந்து நடத்துகிற மாணவர்களுக்கான “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயனுள்ள யோசனைகள் வழங்கி வருகிறார். திங்கள்தோறும் மாணவர் சிறப்பிதழில் எழுதி வருகிறார். “ஐ.ஏ.எஸ். கனவல்ல நிஜம்” என்கிற இவரது தொடர் பிரபலமானது. வளர்தொழில் என்னும் வணிக இதழில் “மாற்றங்களைச் சந்திப்போம்” என்ற தலைப்பில் மிகச்சிறந்த தொடரொன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை எனும் இதழில் “உனக்குள்ளே உலகம்” என்ற இவரது தொடரும் பெரிதும் வரவேற்கப்படுகிற தொடர். சான்றோர் மலரில் “வேலை வழங்கும் படிப்புகள்”, ஜோதிட அரசு இதழில் “அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு”, கோகுலம் கதிர் இதழில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் என்று எழுதியும், இயங்கியும் தமிழ்ச் சமூகத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
 
மிகச்சிறந்த பொறுப்புகளை வகிக்கிற கவிநேசன், அப்பொறுப்புகளின் வாயிலாக இளைஞர்கள் நலத்துக்கே தன்னைப் பெரிதும் அர்ப்பணித்துள்ளார். மாணவர்கள் இலக்கிய அமைப்பான “இலக்கிய உலா” தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். ஆதித்தனார் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அதிகாரியாக 2003லிருந்து செயலாற்றுகிறார். இவ்வமைப்பின் வாயிலாக இவர் நடத்திய நிகழ்ச்சிகளின் பட்டியல் வெகு நீளமானது. வேலைவாய்ப்பு உதவும் மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வுக்கான பயிற்றுநராகவும், மாணவர் ஆலோசகராக (தொழில் மேலாண்மை மாணவர்களுக்கு) 1987லிருந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. தாம் பணியாற்றும் ஆதித்தனார் கல்லூரி குழுக்கள் பலவற்றில் அங்கம் வகிக்கும் கவிநேசன் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளையெல்லாம் சிறப்பாக நிறைவேற்றிய பெருமையைப் பெற்றுவிடுவார்.
 
இவையன்றி திருச்செந்தூர் அரிமா சங்கத்தில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். சிவந்தி சமூக வானொலியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக 2007லிருந்து செயலாற்றி வருகிறார். என்னையும் சில நேரங்களில் உரையாற்ற அழைத்துச் சிறப்பித்துள்ளார். பல்வேறு நேர்காணல்களுக்குச் செல்வோரின் அச்சத்தையும், நடுக்கத்தையும் களைந்த மாதிரி நேர்காணல்களை நடத்தி உற்சாகப்படுத்துகிறார். கவிநேசன் அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், இவரெழுதிய சிறுகதைகள், கவிதைகள் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இதழ்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
 
இவரது வாழ்வியல் நூல் கவிதை உறவு விருது பெற்றதைப்போலவே தமிழ்நாடு இதழ்கள் பதிப்பாளர் சங்கம் வழங்கிய “பயன் எழுத்துப் படைப்பாளி” என்ற விருதையும் பெற்றுள்ளார். இவரது அந்தமான் பயண அனுபவங்கள் நூல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது. இவரது படைப்புகளை இருவர் எம்.பில்.எட்ட ஆய்வுக்கும், ஒருவர் பி.எச்.டி. பட்ட ஆய்வுக்கும் எடுத்துக் கொண்டிருப்பது இவரது படைப்புத்திறனுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.
 
பொன்விழா வயதினைத் தாண்டியிருக்கிற இந்த பேரிளைஞரின் உழைப்பும், உன்னதமான பண்புகளும் வியக்க வைக்கின்றன. சாதனைகளால் சிகரம் தொட்டிருக்கிற இவர், இன்னும் தனக்கான உயரங்களுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார். எல்லாத் துறைகளிலும் ஏராளமான நண்பர்களைப் பெற்றுள்ளார். எங்கு இவரைப்பற்றிப் பேசினாலும் அங்கெல்லாம் இவரையறிந்த அநேகர் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். இவரது நண்பர்கள் பட்டியலில் இருக்கிற ‘வளர்தொழில்’ ஜெயகிருஷ்ணன், ‘தேவி’ ஜேம்ஸ், ‘ராணி’ ராமகிருஷ்ணன், ‘தினத்தந்தி’ சண்முகநாதன் ஆகியோரெல்லாம் எனக்கும் நண்பர்கள். அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் இவரைப் பேசிப் புகழாத நாளே இராது.
 
ஆதித்தனார் கல்லூரியில் படித்துப் பட்டம்பெற்று அங்கேயே 26 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டு, கல்வித் துறையில் மட்டுமல்ல, பொது வாழ்விலும் துலங்குகிற கவிநேசன் அவர்கள், தன்னை ஆளாக்கிய பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தன் நெஞ்சாரப் போற்றி நன்றி பாராட்டி நெகிழ்கிறார். தம்மை உருவாக்கியதில் அவருக்கே பெரும் பங்குள்ளதென்று பேச்சுக்குப் பேச்சு பாராட்டி மகிழ்கிறார்.
 
சொந்த ஊருக்கு செல்லும்போதெல்லாம் நான் செந்தூர் முருகனைத் தரிசிக்கத் தவறுவதில்லை. செந்தூருக்குச் செல்லும்போதெல்லாம் நான் கவிநேசன் அவர்களைக் கண்டு திரும்பாமல் இருப்பதில்லை. அவருக்குத் தொல்லைதரக்கூடாது என்பதற்காகவே கூடுமானவரை விடுமுறை நாட்களில் செல்வேன். விடுமுறை நாள் கூட்டத்தில்கூட இவரது செல்வாக்கே என்னைச் செந்தூர் அழகனைத் தரிசிக்கப் பெரிதும் உதவும். திருச்செந்தூரில் புகழ்வாய்ந்த இந்த மனிதரை சென்னை நண்பர்கள் அங்கு சென்றால் சந்திக்கத் தவறுவதில்லை என்பது கூடுதல் செய்தி.
 
எப்போதும் சிரித்த முகம், இனிய விருந்தோம்பல் என்ற கவிநேசன் அவர்களைப்போலவே திருமதி சிவசெல்வி அவர்களும் எங்கள் குடும்பத்தின்பால் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். இவர்களின் அன்புமகன் விவேக் சௌந்தர் பி.டெக். படித்திருக்கிறார். பெங்களூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மகள் செல்வி பவித்ரா சௌதாமினி ஆங்கில இலக்கியம் இளங்கலை மாணவி.
 
கவிநேசன் அவர்களின் தந்தையார் தனியாக மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய நெல்லை மாவட்டப் பிரமுகர். 1962ல் ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். 1967ல் பெரும் பின்னடைவை காங்கிரஸ் சந்தித்தபோது, தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சௌந்தர பாண்டியன். அந்நாளில் என் தந்தையாரும் தீவிரமான காங்கிரஸ்காரரும் இராணுவ வீரருமான திரு.சுப்பையா அவர்களுக்குத் தெரிந்தவர். நேர்மையான அந்தகால அரசியல்வாதியான அவரைப்பற்றி என் தந்தையார் பெருமையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தத் தலைமுறையாய் அவர்களுக்குள் அறிமுகம் மட்டுமே. ஆனால், நானும் கவிநேசன் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்பது எனக்குக் கூடுதல் பெருமை.
 
தந்தையின் நிகலிலும், புகலிலும் மட்டுமே ஒட்டிக்கொண்டிராது இன்னாரின் மகன் என்கிற பெருமையை வளர்த்துத் தானும் உயர்ந்து ஒளிர்ந்து இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்லுக்கு இலக்கணமாகத் திகழும் கவிநேசன் அவர்களின் பெயரும் புகழும், உழைப்பும் உயர்வும் தொல்காப்பியம் பாயிரம் மொழியும் வரிகளுக்கேற்ப வழிவழி சிறந்து பொலிமின் என்பதை எடுத்துச் சொல்லி இனிய நண்பர் கவிநேசன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க. பல்லாண்டு.-கவிதை உறவு செப்டம்பர் 2012 மாத இதழில் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள்.

3.“வாத்தியார் - நேர சிற்பியின் நேர்த்தி வடிவம்!”


எழுதுவதும், பேசுவதும் ஒரு கலை. இரண்டும் ஒரு சேர வாய்க்கப் பெற்றவர்கள் வெகுசிலரே. அவர்களிலும் எழுத்தையும், பேச்சையும் நேரடியாக சமூகத்திற்குப் பயன்தரும் வகையில் தந்து வரும் படைப்பாளுமைகள் சிறப்பு வாய்ந்தவர்கள். அத்தகைய சாதனையாளர்தான் பேராசிரியர் நெல்லை கவிநேசன். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாக இயல் துறைத்தலைவர் இவர் வகிக்கும் முதன்மைப்பணி. ஆனால், கடந்தகால நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டின் இளைஞர் சமுதாயத்திற்கு இவர் தந்துவரும் வழிகாட்டுதல் என்னும் பெரும்பணி பாராட்டி மகிழத்தக்கது.
 
போட்டித்தேர்வுகள் குறித்து தொடர்ந்து இவர் வழங்கிடும் ஆலோசனைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அவை தொடர்பாக நூல்களைப் படைத்திருக்கிறார். அதில் “ஐ.ஏ.எஸ் .கனவல்ல நிஜம்” என்ற புத்தகம் தனித்துவமானது. “மாணவர்கள் பிரச்சினைகள் தீர்வுகள்”, “உனக்குள்ளே உலகம்”, “வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்”, “ஆளுமைத்திறன்”, “பழகிப் பார்க்கலாம் வாங்க” உட்பட 50க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவரின் சில புத்தகங்கள் நெல்லை மனோன்மணியம், கரைக்குடி அழகப்பா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங்களாக இருக்கின்றன. இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்தவர்கள் டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். காலச்சூழலுக்குஏற்ப வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான அம்சங்களைப் பாடத்திட்டங்களில் சேர்ப்பதில் இவர் நிபுணராக திகழ்கிறார். நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை வகுப்பதில் கவிநேசனின் பங்களிப்பு முக்கியமானது.
 
விளம்பரம்பற்றி ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். அவற்றின் வழியாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயனளிக்கும் தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருபவர்.
 
பொதுவாக, ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் சலிப்புக்கு ஆளாகிவிடுவார்கள். அதிலும் ஓய்வுபெறும் வயதை நெருங்குபவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால், 50 வயதைத் தாண்டிய பேராசிரியர் கவிநேசனின் புன்முறுவல் நிறைந்த முகமும், சுறுசுறுப்பான செயல்பாடுகளும் பக்கத்தில் இருப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் சிறப்பு வாய்ந்தவை. கல்லூரியில் பொறுப்பான வேலை, தமிழகம் முழுக்க சுற்றிவந்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல், புதியனவற்றைப் படித்து மேம்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தேவையானவற்றை எழுதிக் குவித்தல், குடும்பத்தை, நண்பர்களைக் கொண்டாடுதல் என எப்போதும் மகிழ்ச்சியோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலாளர். எது நடைமுறைக்குச் சாத்தியப்படுமோ அதைப்பற்றி மட்டுமே பேசுவார். அதையே செய்வார். எப்போதுமே ஒரு நிறைகுடமாக திகழ்பவர்.
 
தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கல்வியாளராக, வலிமையான ஆளுமையாக இருந்தாலும் எளிமையும், இனிமையும் இவரிடம் குடிகொண்டிருக்கும். இத்தனைக்கும் மிகப்பெரிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். நாராயணராஜன் என்ற இயற்பெயரைக்கொண்ட நெல்லை கவிநேசனின் தந்தை தென் மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவராக திகழ்ந்த எஸ்.சௌந்தரபாண்டியன். 1967ல் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தபோது, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்.எல்.ஏ. ஆனவர் சௌந்தரபாண்டியன். இன்றைக்கும் இவரது நெருங்கிய உறவினர்கள் அரசியலில் உச்ச பதவிகளில் இருக்கிறார்கள். எனினும் அதற்கான எந்தச் சுவடும் இவரிடம் தெரியாது. குடும்பத்துச் செல்வாக்கிற்கு அப்பால், தமிழக கல்வித்துறை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
 
இப்படி நெல்லை கவிநேசனின் சிறப்பியல்புகளை, சலிப்பில்லாத உழைப்பை, அதனால் அவர் பெறும் புகழை தனி புத்தகமாகவே எழுதலாம். இத்தகைய வெற்றிக்கு அடிப்படையாக திகழ்வது அவரது திட்டமிடலும் நேர நிர்வாகமுமே. “எதற்கு எவ்வளவு நேரம் என்பது போக, எது முதலில் எது முக்கியமானது என்பதைத் தேர்வு செய்தலே தலைசிறந்த நேர நிர்வாகம்” என்கிறார் கவிநேசன். ஆமாம்... எவ்வளவு திறமைசாலியாக, உழைப்பாளியாக, திட்டமிடுபவராக இருந்தாலும் நேர நிர்வாகமே வெற்றிக் கோட்டையில் நம்மை உட்கார வைக்கும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். அதனால்தான், “போதிப்பவர்கள் சாதிப்பதில்லை” என்ற பழைய மொழியை உடைத்து எறிந்து நெல்லை கவிநேசன், போதிப்பதிலும் நமக்கெல்லாம் பாடமாக நிற்கிறார்.

-காவிரிக் கதிர், 2018 ஜனவரி மாத இதழில் திரு.கோமல் அன்பரசன் அவர்கள்.
 




  டாக்டர் எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) 
 
டாக்டர் எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) அவர்கள் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாக இயல்துறையில் கடந்த 32 ஆண்டுகளாகப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். தற்போது துறைத் தலைவராகவும் விளங்குகிறார். எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் விளம்பரம் பற்றி ஆய்வுசெய்து பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார். இவரது மேற்பார்வையில் பேராசிரியர்கள் மேலாண்மைத் துறையில் டாக்டர் பட்டங்களும் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகளை இவர் வழங்கியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர் முன்னேற்ற கட்டுரைகளை ‘தினத்தந்தி’ போன்ற இதழ்களில் எழுதி இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
 
2011ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு இதழ்கள் பதிப்பாளர் சங்கம்’ இவருக்கு “பயனெழுத்துப் படைப்பாளி” என்ற விருதை வழங்கியுள்ளது. 2016ம் ஆண்டு “ஸ்ரீ மகா ஸ்வாமிகள் விருது” இவரது கல்வி மற்றும் சமூகப் பணி சாதனைகளைப் பாராட்டி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு அரிமா சங்கம், மாணவர்கள் தன்னம்பிக்கை பெற உதவி புரிந்ததற்காக இவருக்கு “சாதனைச் செல்வர்” என்ற கௌரவ விருதினை வழங்கியுள்ளது. இவர் தலைமையில் பேராசிரியர்கள் குழு எழுதிய ‘Personality Development’ என்னும் ஆங்கில நூலை திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்தநூல் தற்போது பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, நெல்லை கவிநேசன் எழுதிய “வெற்றி தரும் மேலாண்மை” என்னும் நூலை “மிகச்சிறந்த நூல்” என தேர்ந்தெடுத்து 2018ஆம் ஆண்டு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்துள்ளது.
 
இவரது நூல்களில் சில “கவிதை உறவு” அமைப்பின் ‘சிறந்த நூல்களுக்கான விருது’களைப் பெற்றுள்ளது. “நெல்லை கவிநேசனின் சட்டம் சந்தித்த பெண்கள்-ஓர் பார்வை” என்ற தலைப்பிலும், “நெல்லை கவிநேசன் படைப்புகள்” என்ற தலைப்பிலும் இவரது நூல்கள் எம்.பில். பட்டத்திற்காகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Post a Comment