திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 2

திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா இரண்டாம் திருநாளான திங்கள்கிழமை (11.02.2019) இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி ௨லா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசிப் பெருந்திருவிழா 2ம் நாளான (11.02.2019) அன்று காலை சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்ககேடயச் சப்பரத்திலும் அருள்மிகு தெய்வானை அம்பாள் சின்ன பல்லக்கிலும் உற்சவம்.
 


இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.

இலக்கியத்தில் திருச்செந்தூர்

பல தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புகழ்மிக்க பக்தி இலக்கியமான திருமூருகாற்றுப்படையில் - “அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே” - என நக்கீரர் குறிப்பிட்டுள்ளார்.

“திருமணி விளக்கின் அலைவாய்ச்
  செருமிகு சேய்” -
என அகநானூறும்,

“வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில்
  நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுரை” -
என புறநானூறும்,

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
  ஏரகமு நீங்கா இறைவன்” -
எனச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது.

திருநாவுக்கரசர் அருளிய தேவாரப் பதிகத்தில் - (அப்பர் திருமறைக்காடு திருத்தாண்டகம்)
 “நஞ்செந்தில்மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
 மறைக்காடுறையும் மணாளன் தானே” -
எனச் திருச்செந்தூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வரை வயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல்
 திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்” -
எனப் பழம்பாடல் ஒன்றும் திருச்செந்தூர்முருகனின் புகழ்பாடுகிறது.

“பருமணி வயிரமுத்தம் பலவளம் பிறவும் ஆழித்
  திரைஎறி அலையாய் ஆகும் செந்தி மாநகரம்” -
எனக் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் திருச்செந்தூரின் சிறப்பைச்  சுட்டிக்காட்டினார்.

“சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீண்
  டீரலை வாயிடு மெஃக மேந்தியே
  வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீ இச்
 சீரலை வாய்வரு சேயைப் போற்றுவோம்” -
எனக் கந்தபுராணம் திருச்செந்தூர் முருகனைப் போற்றுகிறது.

“சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்” - என்று முதுமொழியிலும் உள்ளது. 

“மகாபுனிதம் தங்கும் செந்தில்
  கயிலைமலை அனைய செந்தில்” -
எனத் திருப்புகழில் திருச்செந்தூர்பற்றி அருணகிரிநாதர் கூறியுள்ளார். 


தொடரும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News