ஏர்வாடியார் எப்போதும் எங்கள் பக்கம் - நெல்லை கவிநேசன்

ஏர்வாடியார் எப்போதும் எங்கள் பக்கம்
- நெல்லை கவிநேசன்

பிரபல எழுத்தாளர் ஏர்வாடி திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களுடன் நெல்லை கவிநேசன். 

உறவுகளை உணர்வுகளோடு நேசிக்கும் நல்ல உள்ளம். 

கவிதைகளை நல்ல கனிகளாக்கி உறவுகளுக்கு வழங்கும் இனிய இதயம். 

கூரிய சிந்தனைவாளால் சமூக, சமுதாய பிரச்சினைகளை அறுவை சிகிச்சைசெய்து குணமாக்கும் சமூக மருத்துவர்.

“யார் வாடினாலும், ஏர்வாடி நான் இருக்கிறேன்” என்று ‘அனுபவத்தேன்’ கலந்து, அதில் அன்பைக் குழைத்து, நட்பை ஒளிரும் நட்சத்திரம். 

“கவிதை உறவு” என்னும் மனிதநேய இலக்கிய இதழை 32 ஆண்டுகளாக மலரச் செய்த இலக்கிய மன்னர்.


‘பண்பின் சிகரம்’ ஏர்வாடி திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களை “ஏர்வாடியார்” என்றே நட்பு உள்ளங்கள் நாள்தோறும் அழைக்கின்றன.

கவிதை உறவு இதழின் கடைசிப் பக்கம் - ஏர்வாடியாரின் அனுபவத்தை அள்ளித் தெளிக்கும் “என் பக்கம்”. இதைப் படிப்பவர்களெல்லாம் “ஏர்வாடியார் என் பக்கம்” என்று உரிமையோடு சொல்லும் அளவுக்கு அந்தப்பகுதி எல்லா பக்கமும் சென்று, எல்லோரின் இதயங்களில் குடிபுகுந்து, இனிய வாழ்க்கை வாழ அனைவருக்கும் வழிகாட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

பல தொகுதிகளாக வெளிவந்துள்ள ஏர்வாடியாரின் “என் பக்கம்” பகுதியில் இடம்பெற்ற கட்டுரைகள், ஏர்வாடியாரின் உயர்ந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

ஒவ்வொரு “என் பக்கம்” கட்டுரைகளும் ஏர்வாடியாரின் அனுபவத்தில் விளைந்த முத்துக்களாக அமைகிறது. அந்த கட்டுரைகளில் சிலவற்றை ஆழ்ந்து கவனித்தால் ஏர்வாடியாரின் வாழ்க்கை நெறிகள் நமக்குப் புரியும்.

“எலிகளை என்ன செய்வது?” என்னும் தலைப்பில், வீட்டில் எலிகள் எப்படியெல்லாம் நல்ல நூல்களை நாசம் செய்கின்றன? என்பதை சுட்டிக்காட்டி, ஊழல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நாட்டை எப்படியெல்லாம் பிரச்சினையில் சிக்கவைக்கிறார்கள்? என்பதை படம்பிடித்துக் காட்டுகிறார். வீட்டு எலியைப் பிடிக்க முடியாமல் திண்டாடலாம். ஆனால், நாட்டு எலிகளான ஊழல் அதிகாரிகளை பிடிப்பதற்கு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்பது ஏர்வாடியாரின் ஏற்றம்மிகு கருத்தாகும்.

“நடுவில் சில நண்பர்களைக் காணவில்லை” என்னும் தலைப்பில், நட்பில் ஏற்படும் மாற்றங்களின் காரணங்களை அணுஅணுவாக ரசித்து வார்த்தைகளாக வளர்த்தெடுத்திருக்கிறார் ஏர்வாடியார். வயது அதிகரிக்கும்போது நட்பின் நிலைகளும் மாறுகின்றன. வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்போதும், மிகப்பெரிய பதவிகள் அலங்கரிக்கும்போதும் நட்பிற்குள் பல மாற்றங்கள் உருவாகிவிடுகின்றன. “மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற எண்ணத்தை மனதில்கொண்டு பழகியவர்கள் நட்பை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ‘நட்புக்கடல்’ என்று நண்பர்கள் பாராட்டும் பாக்கியத்தைப் பெற்றவர் ஏர்வாடியார் என்பதை இந்தப்பகுதி சிறப்புடன் வெளிக்காட்டுகிறது.

மகிழ்ச்சியும் மனநிறைவும் வாழ்க்கை நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உலக அளவிலான எடுத்துக்காட்டுகளோடு விளக்கும் “என் பக்கம்” கட்டுரை “மகிழ்ச்சி” ஆகும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி எப்படி உருவாகிறது? என்பதை கோடிட்டுக்காட்டி, “மனமிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்றும் சுட்டிக்காட்டுகிறார். மத்தியப்பிரதேசத்தில் “மகிழ்ச்சித் துறை” என்று ஒரு துறை இருப்பதையும் தெளிவாக்கி மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் ஏர்வாடியார்.

“சொல்லவே இல்லையே” என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை எதனை? ஏன்? எப்படி? எப்போது? யாரிடம் சொல்ல வேண்டும்? என்ற இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. “ஏர்வாடியிடம் சொல்லப்படுகின்ற எதுவும், காத்ரேஜ் பெட்டகத்தில் வைக்கப்படுவது போன்றது என்பார்கள் நண்பார்கள்” என்று அந்தக் கட்டுரையில் தனது நிலையைத் தெளிவாக்குகிறார் ஏர்வாடியார். “அநாவசியமாக கசிகின்ற செய்திகளை உள்வாங்கிக் கக்கும் குணத்தை வாழ்க்கையில் கடைபிடிப்பது நல்லதல்ல” என்பதை தனது வங்கிப்பணி நிகழ்வின்மூலம் உணர்ந்து கொண்டதையும் சுவைபட தெரிவிப்பதின்மூலம் ஏர்வாடியாரின் ‘வெள்ளை மனம்’ விளங்குகிறது.

“செல்லிடம் காக்க சினம்” என்னும் “என் பக்கம்” கட்டுரையில், ஏர்வாடியாரின் தெளிவான சிந்தனைகள் பூவாக மலர்ந்து மணம் வீசுகிறது. “பூவைப் பறித்தால் வாடிவிடும் என்பதற்காக செடியிலேயே அதை சிரிப்பதைப் பார்த்து சந்தோஷப்படுபவன் நான்” என மனம் திறந்து பேசுகிறார். “எல்லோரையும் அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்று என்னையே நான் வருத்திக்கொள்கிறேன்” என்றும், “சினக்கக் கூடாத இடத்தில் சினந்தால் சிதைந்து போய்விடுவோம்” என்பதை வான்மதி கல்லைக்கண்ணன் வாழ்க்கை நிகழ்வை சுட்டிக்காட்டியும் படம் பிடித்துக்காட்டுகிறார்.

“உதவியாளர்கள்” என்னும் தலைப்பில் இடம்பெற்ற ஒரு பக்க கட்டுரை, உதவியாளர்கள் வைத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும், சிறப்புகளையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. “நல்ல உதவியாளர்கள் கிடைக்க வாழ்க்கையில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என்பது ஏர்வாடியாரின் உணர்வில் கலந்த உண்மையாகும்.

“எழுத்தும் பேச்சும்” என்னும் என்பக்கம் கட்டுரையில் - “நல்ல பேச்சுக்கு இருக்கிற வரவேற்பைப்போல, வரவைப்போல நல்ல எழுத்துக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் இன்னும் நிறைய இருக்கிறது” - என்று தமிழக எழுத்தாளர்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறார்.

“தெரிந்து வைத்திருங்கள்!” என்னும் தலைப்பில் - “கோபுரமாய் உயர்ந்து புகழ்கொண்டிலங்கும் பெரியோர்களையும், தலைவர்களையும், நாடு போற்றும் நல்லவர்களையும், அறிஞர்களையும், ஆன்மிகச் செல்வர்களையும் நாம் அறிந்திருக்கிறோமா என்ன? நடிக நடிகைகளைத் தெரியுமளவு, விளையாட்டு வீரர்களை அறிந்த அளவு சமூகப் பெரியோர்களில் எத்தனை பேரை இன்றைய தலைமுறை அறிந்து வைத்துள்ளது - என்று குறிப்பிட்டு இளைய தலைமுறையினரின் இன்றைய நிலையைக்கண்டு வேதனைப்படுகிறார்.

“யாரும் யாருக்காகவும்” என்னும் பகுதியில் - “யாரிடத்திலும் நான் எதையும் எதிர் பார்ப்பதில்லை, என்பதால் எனக்குச் சில வெற்றிகள் கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் நான் எந்த வகையிலும் தோற்றவனில்லை. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதைப்போல, மரியாதையற்றுப் பெறுகிற எதிலும் மாண்பென்ன இருக்க முடியும்? விழுந்தால் எழுவதற்கும், இழந்தால் மீண்டும் பெறுவதற்கும் துணிவு இருக்கிறவனும், தொய்விலாது இயங்குகிறவனும், இயங்குவதிலேயே நிறைவும் பெறுவான்” - என தனது உள்ளம் திறந்து பேசி, தேவையற்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் உண்மை உணர்வோடு வாழ வழிகாட்டுகிறார்.

“அனுபவங்கள் பாடமல்ல” என்பது ஏர்வாடியாரின் அனுபவப்பாடம். அனுபவங்களைப் புறந்தள்ளுகிற நான், அன்பர்களை ஒருபோதும் அப்புறப்படுத்துவதில்லை. அனுபவங்களிலிருந்து மேலும் அனுபவம் பெறுவேனே தவிர, அனுபவங்கள் வாயிலாகத் தவறான பாடங்களை நான் கற்றுக்கொள்ளமாட்டேன். என்றாலும் கவனமாக இருப்பேன் - என்று அந்தக் கட்டுரையில் தனது மனதின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.

“யாரும்... யாருக்கும்...” என்னும் கட்டுரை - “ஆணவம் என்பது தன்னைப் பிறரினும் உயர்ந்தவராகக் காணும்போதும், கருதும்போதும் கண் விழித்துக் கொள்கிற ஒரு உணர்வு. இது ஒரு பலவீனமேயன்றி பலமல்ல... இவர்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம். வீழ்த்திவிடலாம். ஆணவமும், அகந்தையும் உள்ளவரோடு பழகுதல் எளிது. அவர்களைப் பாராட்டிவிட்டால் போதும், பெட்டிப் பாம்பாகி விடுவார்கள். புகழ்ந்துவிட்டால் போதும் புஸ்வானமாகிவிடுவார்கள். ஆணவமற்றவரை ஏமாற்றுவதுதான் மிகவும் சிரமம்” - என்று உளவியல் ரீதியாக ஆய்வுசெய்து தனது சிகரம் தொடும் சிந்தனைகளை வடிவமைத்திருக்கிறார்.

“வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் போன்றவர்கள்” என்பது ஆன்றோர்களின் வாக்கு. எழுபது ஆண்டு அனுபவங்களை “என் பக்கம்” என்ற தலைப்பில் கட்டுரையாக்கிய, ஏர்வாடியார், தனது வாழ்க்கை நெறிகளை ‘வாழ்வியல் நெறி’களாக மாற்றியிருக்கிறார்.

எளிமை, இனிமை, தெளிவு, தீர்வு என பல பண்புகளின் கூட்டுத்தொகையாக என் பக்கக் கட்டுரைகள் திகழ்கின்றன.

இளைஞர்களை வழிநடத்தவும், பெரியவர்களை பக்குவப்படுத்தவும், முதியவர்களை திடப்படுத்தவும் இக்கட்டுரைகள் இதமாக துணைநிற்கின்றன.

ஏற்கனவே - என் பக்கக் கட்டுரைகள் பலவற்றை “ஏர்வாடியாரின் என் பக்கம் கட்டுரைகள்” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து பேராசிரியை முருகேஷ்வரி எம்.பில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏர்வாடியாரின் எழுத்துக்களை ஆய்வுசெய்து 4 ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் (Ph.D.,) பெற்றுள்ளார்.

“என் பக்கம்” பகுதி - "ஏர்வாடியார் எப்போதும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்" என்பதை நிரூபிக்கும் சிறப்புப் பகுதியாகவே “கவிதை உறவு” இதழை அலங்கரிப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. 


பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிரபல எழுத்தாளர் ஏர்வாடி திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் “கவிதை உறவு” என்னும் மாத இதழை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், கட்டுரை, மேடைப்பேச்சு என பல்வேறு தளங்களில் பவனிவரும் இவரைப்பற்றி சமீபத்தில் வெளிவந்த நூல் “ஏர்வாடியம்”. இந்த உன்னத ஆளுமையை படம்பிடித்து நமது உள்ளங்கைக்குள்தரும் வித்தியாசமான நூல். 





“உலகை தமிழால் உயர்த்தும் உத்தமர்” என்று வார்த்தைச்சித்தர்
திரு.வலம்புரிஜான் அவர்களால் பாராட்டப்பெற்ற ஏர்வாடியார் பற்றிய இந்தநூல் 10 தலைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் உள்ளத்திற்கு மகிழ்வைத் தருகிறது. நெறிவாழ்க்கை பற்றிய தகவல்களை அள்ளி வழங்குகிறது.

வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தநூலை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிநிறைவுப்பெற்ற பேராசிரியர்கள் டாக்டர்.
திரு.இரா.மோகன் - டாக்டர்.திரு.நிர்மலா மோகன் தம்பதியினர் மிகச்சிறப்பாக உருவாக்கி, அற்புத படைப்பாக நமக்கு வழங்குகிறார்கள்.

அய்யா ஏர்வாடியார் அவர்கள் நீடு வாழ எங்கள் வாழ்த்துக்கள்.

Post a Comment

புதியது பழையவை