ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்

தான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா  நிறுவனர்
திரு.பத்மசிங் ஐசக்


ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்

உலகப் புகழ்மிக்க திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது பி.பி.ஏ., பட்டப்படிப்பை முடித்தவர் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.ஏ.டி.பத்மசிங் ஐசக் அவர்கள். 

கல்லூரியில் படிக்கும் காலத்தில், தனது சொந்த ஊரான நாசரேத்திலிருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவிலுள்ள திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிக்கு சைக்கிள் மிதித்து தனது படிப்பைத் தொடர்ந்தவர் இவர். பள்ளிப்படிப்பை முடித்தப்பின்பு தனது படிப்பை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்? 

இதோ, அவர் எழுதிய “தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்!!” என்ற நூலில் அவரே குறிப்பிடும் தகவல்கள். [பக்கம் :46-48]

அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவராய், “அம்மா நான் அய்யா ஆதித்தனார் கல்லூரியிலே சேர்ந்து படிக்கிறேன்” என்றார், பத்மசிங் ஐசக்.

அந்தக் காலகட்டத்தில் நாசரேத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காலை நேரத்தில் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தினமும் சென்று படித்துவரலாம் என்பது அவர் எண்ணம்.

“சரி...! நீ என்ன பாடம் எடுத்து படிக்கப்போகிறாய்?” என்பது அம்மாவின் அடுத்த கேள்வியாக இருந்தது.

அதற்கு பத்மசிங் ஐசக்கிடம் பதில் தயாராக இருந்தது.  

“அப்பா இந்தியாவில் இருந்து இலங்கைக்குச்சென்று தொழில் செய்திருக்கிறார். தாத்தாவும் இலங்கையில் வியாபாரம் நடத்தியுள்ளார். சிறப்பாக அவர்கள் தொழிலை செய்து சம்பாதித்தால்தான் நம்மால் நாசரேத்தில் மதிப்பாக வாழ முடிந்தது. அப்பாவின் அருகில் இருந்து அவரது தொழில் நிர்வாகத்தை நான் கவனிக்காவிட்டாலும், அவர் ஒரு சிறந்த தொழில் நிர்வாகி என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. 

அப்பாவைப்போல் நீங்களும் திட்டமிட்டு குடும்பத்தை மேம்படுத்தும் தொழில் நிர்வாகிதான். பசுமாடுகளை தரம் பார்த்து வாங்குகிறீர்கள். ஒவ்வொன்றிலும் எவ்வளவு பால் கறக்கும் என்று மதிப்பீடு செய்கிறீர்கள். அதிகாலையிலே எழுந்து பாலை கறக்கிறீர்கள். அதை வீடு வீடாக விற்று பணத்தை வசூலிக்கிறீர்கள். ஆடுகள் ஈன்றதும் அதை வளர்த்து விற்கிறீர்கள். கோழிகளுக்கு சரியான உணவிட்டு, முட்டை இடவைத்து, அதையும் விற்று பணமாக்குகிறீர்கள். கடைவைத்து தொழில் நிர்வாகம் செய்பவரைவிட, நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே ஆடு, மாடு, கோழிகளை வைத்து சிறப்பாக தொழில் நிர்வாகம் செய்து பணம் சம்பாதித்து எங்களை வளர்க்கிறீர்கள். 

நீங்கள் நிர்வாகம் செய்வதைப் பார்த்து நானே வியந்துபோய் இருக்கிறேன். உங்கள் இருவரின் ரத்தமும் என்னிடம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் நான் தொழில் நிர்வாகம்பற்றி படிக்க பி.பி.ஏ., கல்வியில் சேரப்போகிறேன்” என்று, பத்மசிங் ஐசக் சொன்னதும், அம்மா அப்படியே மகனை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்தார். அப்போதே தானும் ஒரு தொழிலதிபராகிவிட்ட உணர்வு பத்மசிங்குக்கு வந்திருக்கிறது. நெகிழ்ந்துபோய்விட்டார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ. படிக்க சேர்ந்தார். தினமும் ரெயிலில் சென்றுகொண்டிருந்தார். கொஞ்ச காலத்திலே அந்த ரெயில் சேவை திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது. உடனே அம்மா ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுக்க, அதில் தினமும் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். தினமும் 32 கி.மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து கல்லூரிப் படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். அடாத மழை என்றாலும், கொளுத்தும் வெயில் என்றாலும் மழையிலும், வியர்வையிலும் நனைந்தபடி சைக்கிளில் பயணித்திருக்கிறார். வழியில் சைக்கிள் பல நாட்கள் பஞ்ச்சர் ஆகிவிட, சைக்கிளை தள்ளிக்கொண்டே சென்ற அனுபவமும் அவருக்கு கிடைத்திருக்கிறது. கஷ்டப்பட்டு படித்திருக்கிறார். ஆனாலும் ரசித்து அதை செய்திருக்கிறார். 

கல்லூரி பாடப்புத்தகங்களை படிப்பதைவிடவும், நூலகத்தில் தொழில் மேலாண்மை பற்றி புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். சிறந்த மாணவராகத் திகழ்ந்து, கல்லூரி படிப்பை பூர்த்தி செய்தார். 

தமிழர் தந்தை ஆதித்தனார் கல்லூரியில் 1968முதல் 1998ஆம் ஆண்டுவரை பி.பி.ஏ., வகுப்பில் “இண்டஸ்ட்ரியல் சைக்காலஜி” பாடம் நடத்தியவர், நாசரேத் அருகில் உள்ள வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த பேராசிரியர். திரு.லடிஸ்லாஸ் ரொட்ரீகோ (LADISLAUS RODRIGO). பத்மசிங் ஐசக்குக்கும் அவர் பாடம் நடத்தி இருக்கிறார். இப்போது அவருக்கு 75 வயது. 

பத்மசிங்கை பற்றிய நினைவுகள் இந்தப் பேராசிரியரிடம் பசுமையாய் இருக்கின்றன. 

“என்னிடம் அவர் மாணவராய் இருந்தார். முப்பது வருடங்கள் கழித்து சிறந்த தொழிலதிபராக அவர் உருவானபின்பு நான் அவரை சந்தித்தேன். எவ்வளவோ மாணவர்களுக்கு நான் பாடம் நடத்தியிருப்பதால், எல்லோர் முகத்தையும் என்னால் நினைவுப்படுத்தி வைக்க முடியவில்லை. ஆனால், முப்பது ஆண்டுகள் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலும் சென்னையில் தொழிலதிபராக பத்மசிங் ஐசக்கை பார்த்தபோது, கல்லூரி வகுப்பறை மாணவராக அவர் முகத்தை உற்றுப்பார்த்து அடையாளம் கண்டுகொண்டேன்.

அன்றைய மாணவர் பத்மசிங் ஐசக்குக்கும், இன்றைய தொழிலதிபர் பத்மசிங் ஐசக்கிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கூர்ந்து கவனிக்கிறார். பார்வையிலே எடை போடுகிறார். பண்பாக நடந்துகொள்கிறார். நல்ல தொழிலதிபர் என்பதைவிடவும், அவர் நல்ல மனிதர்.

ஒரு மாணவரின் வெற்றியில் ஆசிரியருக்கு பங்கு இருக்கத்தான் செய்யும். நான் அவருக்கு என்ன பாடங்களை தினமும் நடத்தினேன் என்பது நினைவில் இல்லை. ஆனால், படிக்க வேண்டிய எல்லா பாடங்களையும் அவர் கல்லூரியில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் நன்றாக கற்றிருக்கிறார். அதனால்தான் இவ்வளவு உயர்வை அடைந்து, இப்போது மாணவ சமூகத்திற்கே ஒரு பாடப்புத்தகமாகும் தகுதியை அடைந்திருக்கிறார்” என்று உணர்ச்சிப்பூர்வமாக சொல்கிறார். 

பேராசிரியர் கணிப்பு உண்மைதான்! பத்மசிங் ஐசக் வளரும் தலைமுறைக்கு நல்ல பாடம்தான்!!

பொதுவாக தொழில் நிர்வாகம்பற்றி படிக்கும் பலரும், வெற்றிபெற்ற தொழிலதிபராக உருவாகுவதில்லை. பத்மசிங் ஐசக் “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்பதுபோல, கல்வியை தெளிவாக கற்று, முறையாக வளர்த்து, சரியா முயன்று, கடுமையா உழைத்து சிறந்த தொழிலதிபராகி இருக்கிறார். அவரது வாழ்க்கையை படிப்பது, தொழிலதிபராகுவதற்கான வாய்ப்பு.


2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பி.பி.ஏ. பயின்றோர் கழக விழாவில்கலந்துகொண்டபேராசிரியர்.லடிஸ்லாஸ் ரொட்ரீகோ பாராட்டுப் பெறும்நிகழ்வு


பி.பி.ஏ. பயின்றோர் கழக நிகழ்வில் சில துளிகள் 


3 கருத்துகள்

  1. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் எம் கல்லூரியில் பயின்றவர்களை உலகிற்கு அறிமுகம் செய்த திரு
    நெல்லை கவிநேசன் அவர்களுக்கு வேதியியல் குத்தாலிங்கத்தின் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News