“கீழடி-ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளை தெளிவாக வெளியிட வேண்டும்” - பன்னாட்டு கருத்தரங்கில் வேண்டுகோள்

“கீழடி-ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளை தெளிவாக வெளியிட வேண்டும்” - பன்னாட்டு கருத்தரங்கில் வேண்டுகோள்

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று, ஜெர்மனி தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர்.க.சுபாஷினி தெரிவித்தார். 

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் ‘தொல்லியல் நோக்கில் உலகத்தமிழர் பண்பாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் அவர் பேசியதாவது : “தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழாய்வின்போது கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் வகையில், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும். அது தொடர்பான தகவல்களை எல்லாம் திரட்டி பதிப்பிக்க வேண்டும். கீழடி குறித்த விஷயங்கள் வெளியே வந்திருக்கும் அளவுக்கு, ஆதிச்சநல்லூர் குறித்த அதிகமான விரிவான தகவல்கள் வெளியே வரவில்லை. ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் ஏன் மூடப்பட்டது என்று தெரியவில்லை. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று, மாணவர்கள் போராட முன்வர வேண்டும். இங்கு நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஜெர்மனியிலுள்ள ஏசியன் ஆர்ட்ஸ் அருங்காட்சியகத்தில் பெட்டிக்குள் முடங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார் அவர். 








மேற்குவங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.கோ.பாலச்சந்திரன் பேசியதாவது: “தொல்லியல் துறைக்கு அரசுகள் அளிக்கும் தொகை குறைவு. தற்போது கீழடியில் அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அவை போதுமானவை அல்ல. அங்கு கிடைத்த தங்க ஆபரணங்கள் எந்த ஆழத்தில் கிடைத்தன என்பன போன்ற தகவல்கள் ஆய்வு அறிக்கையில் இடம்பெறவில்லை. அகழ்வாராய்ச்சியில் அரசியல் உள்ளது. அதை எதிர்கொள்ள வேண்டும். வாக்கு வங்கிக்காக இந்த விவகாரத்தில் எதையும் செய்யக்கூடாது. ஒரே நாடு, ஒரே மொழி என்றால் இந்தியாவின் இறையாண்மை சிதைந்துவிடும்” என்றார் அவர்.


மலேசிய புத்ரா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர்.நாராயணன் கண்ணன் ஆய்வுரை நிகழ்த்தினார். தொல்தமிழ் ஆய்வுக்கோவை நூலை கல்லூரி தாளாளர் திரு.த.இ.செ.பத்ஹ§ர் ரப்பானி வெளியிட்டு தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் திரு.மு.முஹம்மது சாதிக் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு அமர்வுகளாக கருத்தரங்கு நடைபெற்றது. முனைவர்.நெல்லை கவிநேசன், வரலாற்று ஆய்வாளர் திரு.செ.திவான், தொல்லியல் நூலாசிரியர் திரு.அமுதன் என்ற தனசேகரன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு.சி.சூர்யகுமார், முனைவர்.செல்வநாயகி ஸ்ரீதாஸ், எழுத்தாளர் திரு.முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் திரு.கா.பொ.ராசேந்திரன் நிறைவுரை ஆற்றினார். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் திரு.ச.மகாதேவன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் திரு.தமிழினியன் நன்றி கூறினார். 

Post a Comment

புதியது பழையவை

Sports News