வெற்றிப் படிக்கட்டுகள்-தொடர்-10 - நல்லநேரம் நம் கையில்...

வெற்றிப் படிக்கட்டுகள்
தொடர்-10
10.நல்லநேரம் நம் கையில்...
"தமிழக மாணவர் வழிகாட்டி" மாத இதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் தொடர் "வெற்றி படிக்கட்டுகள்". அந்தத் தொடர்க் கட்டுரையின் முழு வடிவத்தை இப்போது காணலாம்.

“எனக்கு படிக்கவே நேரம் இல்லை. ஹோம் ஒர்க், டியூஷன், கோச்சிங் கிளாஸ், ரிவிஷன் டெஸ்ட், கிளாஸ் டெஸ்ட் என்று எனது நேரம் முழுவதும் போய்விடுகிறது” என்று வருத்தப்பட்டான் பள்ளி மாணவன். 

“எனக்கு வீட்டில் வேலை செய்யவே நேரம் போதவில்லை. காபி, டிபன், மதிய உணவு என எனது கணவருக்கும், பிள்ளைகளுக்கும் சேர்த்து தயாரிக்கும்போதே மிகவும் களைத்துப் போய்விடுகிறது” இது ஒரு மனைவியின் மன உளைச்சல். 

“ஆபீசுக்குப்போய் ஆயிரம் வேலைகளைச் செய்துவிட்டு வீட்டுக்குவந்து நிம்மதியாக இருக்கலாம் என்றால், இங்கும் வேலைக்காரனாக மாறவேண்டிய சூழல். எங்கே நேரம் இருக்கிறது? ஓய்வே இல்லை” என்று விரக்தியின் விளிம்பில் நிற்கும் கணவர். 

-இப்படி பல குடும்பங்களில் வேதனைகளின் வெளிப்பாடுகள். கவலைகளால் கண்ணீர் மழை. 

குடும்பங்களில் தோன்றும் இந்த வேதனைக்கும், சோதனைக்கும் காரணங்கள் என்ன? என்று சிந்தித்துப் பார்த்தால், சில உண்மைகள் நமக்குத் தெளிவாகும். 

“நேரம் போதவில்லை” என்று கவலைப்படும் கூட்டம் ஒருபுறம். ஆனால், “நேரம் போகவில்லை” என்று வருத்தப்படுபவர்கள் இன்னொருபுறம். 

“நேரமே இல்லை” என்று கவலைப்படுபவர்களில் பலர், தங்கள் நேரத்தை ஒழுங்காகத் திட்டமிடாதவர்களாகத்தான் இருப்பார்கள். எந்த நேரத்தில், எந்த வேலையை? எப்படி செய்ய வேண்டும்? என்பதை முன்கூட்டியே தெரிந்தவர்களும், எவ்வளவு நேரத்திற்குள் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டும்? என்பதை திட்டமிட்டுக் கொண்டவர்களும், “நேரமில்லை” என்று கவலைப்படுவதில்லை. 

சரியாக நேரத்தை திட்டமிட்டு செலவிட்டால், வீணாகும் நேரத்தை குறைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. குறிப்பாக- பள்ளி, மாணவ-மாணவிகள் இளம்வயதிலேயே தங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவழிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நேரத்தைத் திட்டமிட்டு செலவழிக்கும்போது பாடப்புத்தகங்கள் படிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கலாம். படிப்பில் அதிக கவனம் செலுத்தலாம். நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளலாம். பதற்றத்தைத் தவிர்த்து அமைதியான சூழலை உருவாக்கலாம். எந்த குறிக்கோளுக்காக செயலாற்றுகிறோமோ அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவது மிக எளிதாக அமையும். 

ஆனால், அதேவேளையில், நேரத்தை திட்டமிடாமல் இருப்பவர்கள் படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தச்செயலில் ஈடுபட்டாலும், அந்தச் செயலை சிறப்பாக செய்துமுடிக்க முடியாமல் திணறுவார்கள். தனது செயல்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாமல் திண்டாடுவார்கள். இதனால், அவர்களை யாரும் மதிப்பதில்லை. “சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாதவன்” என்ற பட்டமும் இவருக்கு கிடைக்கும். 

“எவ்வளவுதான் திட்டமிட்டாலும் எனது செயல்களை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லையே” என்ற ஏக்கம் பலரிடம் இன்றும் காணப்படுகிறது. இந்தக் கவலையைப் போக்க முதலிலேயே சில “நேரத்திருடர்”களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். 

நம்மை அறியாமல் நமது பாக்கெட்டிலிருந்து பணத்தைத் திருடும் திருடர்களைப்போல, நேரத்திருடர்கள் சிலர் நம்மை நெருங்கிவந்து நமது நேரத்தை திருடிச் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் திருடிச் சென்றபின்பு “அய்யோ அவன் வந்து பேசிக்கொண்டிருந்ததால், என்னால் ஒரு வேலையையும் செய்யமுடியவில்லை” என்று அடுத்தவர்கள்மீது பழியை அள்ளிப்போடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனைத் தவிர்க்க “நேரத்திருடர்”களை அடையாளம் கண்டுகொள்வது நல்லது. 

நேரத்திருடர்கள் வரிசையில் முதலிடம் பிடிப்பது “செல்போன்”. இந்த செல்போன்தான் சும்மா இருப்பவர்களைக்கூட, ஏதாவது செய்யத் தூண்டுவிடுகிறது. தேவையில்லாத நேரத்தில் ‘சிணுங்கி’ நமது சிந்தனையை சின்னாப் பின்னாப்படுத்திவிடுகிறது. தேவையில்லாத அழைப்புகள்வந்து தொந்தரவுசெய்து நமது நேரத்தை அப்படியே விழுங்கிவிடுகிறது. 

தேவையில்லாத போட்டோக்களை எடுக்கவும், அந்த போட்டோக்களில் தேவையற்ற மாற்றங்களைச் செய்து பகிர்ந்துகொள்வதும், இப்போது ‘மீம்ஸ்’ என்ற பெயரில் கேலி செய்யும் புகைப்படமாக வலம்வருகிறது. தன்னையே ‘செல்பி’ எடுப்பதும், அதனை தானே ரசிப்பதும், ஒரு கலையாகவே இப்போது மாறிவிட்டது. செல்போனில் பேசுவதை பதிவுசெய்து அதனை பதிவேற்றுவதும், அதன்மூலம் சிக்கலை உருவாக்குவதும் சிலருக்கு கைவந்த கலையாகிவிட்டது. தேவையற்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்து, பலரின் மனதை புண்படுத்துவதும் சிலரின் வாடிக்கையான செயலாக மாறிவிட்டது. 

“எஸ்.எம்.எஸ்.”, “இ-மெயில்”, “பேஸ்புக்”, “வாட்ஸ்அப்” என பல்வேறு நிலைகளில் தேவையற்ற தகவல் தொடர்புகளை தாறுமாறாக உருவாக்கவும் செல்போன் பயன்பட ஆரம்பித்துவிட்டது. பாட்டு கேட்கவும், சின்னத்திரை, பெரிய திரை நிகழ்வுகளைப் பார்க்கவும் வசதிகளை உருவாக்கித்தரும் செல்போன், ஆறாவது விரலாக நமது உடலோடு சேர்ந்துவிட்டதால், இதனை தவிர்க்க இயலாத பொருளாக பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்த செல்போன் பலரின் நேரத்தைத் திருடுவதை உணர்ந்துகொள்பவர்கள், தேவையான நேரத்தில் செல்போனை பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் தங்களின் நேரத்தை திட்டமிட்டுக்கொள்கிறார்கள். 

நேரத்திருடர்கள் வரிசையில் “தொலைக்காட்சிப் பெட்டி”யும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்போதும் தொடர்களைப் பார்ப்பதற்கும், விவாதங்களை ரசிப்பதற்கும், செய்தி என்ற பெயரில் தேவையற்ற தகவல்களை உள்வாங்கிக் கொள்வதற்கும் டி.வி. உறுதுணையாக அமைகிறது. இதன்மூலம், நாள்தோறும் பல மணி நேரங்கள் பாழாய்போய்விடுகிறது என்பதை சிலர் உணராமல் இருப்பதால், அவர்களின் நேரம் வீணாகிறது. 

எதற்கெடுத்தாலும் “நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்” என்று இன்று செய்யவேண்டிய செயல்களை தள்ளிப்போட்டுக்கொண்டு காலத்தைத் தள்ளுபவர்கள் சிலர். வாழ்க்கை முழுவதும் இத்தகைய “தள்ளிப்போடும் மனப்பான்மை” (Procrastination) கொண்டவர்கள் தங்களின் வேலையைச் செய்துமுடிக்க நேரமில்லாமல் திண்டாடிப் போய்விடுகிறார்கள்.

முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்களில் பலர் குழப்பமான மனநிலையோடு உலா வருகிறார்கள். ஒரு சின்ன பிரச்சினை நிகழும்போதுகூட, “எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. என்ன செய்யணும்னே தெரியல. இதுக்கு என்ன முடிவு?” என்று மனதைக் குழப்பி பதற்றத்தை அதிகரிக்கும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் “நேரமில்லை” என்றே சொல்லித்திரிவார்கள். 

அழையா விருந்தாளியாக வந்துகூட சிலர் நமது நேரத்தைத் திருடுவார்கள். 

“உங்க வீடு கோயிலுக்குப் பக்கத்தில் இருப்பதால் உங்களை பார்க்க வந்தேன்”. 

“எனக்கு நேரம் போகவில்லை. சும்மா உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கலாம்னுதான் வந்தேன்”.

“உங்கக்கிட்ட பேசினா நேரமே போறது தெரியல. ஜாலியா இருக்கு” 

-இவ்வாறு பலவாறு பேசி, தேவையற்ற கலந்துரையாடலுக்கு களம் அமைப்பவர்களும் உண்டு. 

“என்ன நோக்கத்திற்காக பேசுகிறோம்?” என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் தன்னிடம் வரும் அழையா விருந்தாளிகளிடம், தங்கள் நேரத்தைத் தொலைத்துவிட்டு கண்ணீர் வடிப்பவர்களும் உண்டு. 

தெளிவான தகவல்கள் இல்லாமலும், போதுமான தொழில்நுட்ப அறிவு இல்லாமையாலும், சரியான தகவல்கள் தொடர்பை அமைத்துக்கொள்ள இயலாமலும், தேவையற்ற சந்திப்புகளை நிகழ்த்துவதாலும், நமது நேரம் பாழாய்ப்போய்விடுகிறது என்பதை உணராதவர்கள் “நேரமில்லை” என்று கூச்சல் போடுகிறார்கள். 

எல்லாவற்றிற்கும் ‘ஆமாம்சாமி’ போடுபவர்களும், நேரமில்லாமல் தவிக்கிறார்கள். 

“சரி சார்”, “முடிச்சிடுவோம் சார்” என்று எதற்கெடுத்தாலும் “ஆமாம்” போடுபவர்கள் பின்னர் “தெரியாத்தனமாக ஒத்துக்கொண்டே இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டேன்” என்று புலம்புகிறார்கள். 

“நேரம் இல்லை” என்று கவலைப்படுபவர்கள் மேலே குறிப்பிட்ட சிக்கல்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், நேரத்தை ஒழுங்காக திட்டமிடுவதற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ளலாம். 

நேரத்தை திட்டமிட விரும்புபவர்கள் முதலில் தனியாக “திட்டமிடல் குறிப்பு” (Planner) ஒன்றை தயாரித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக - நாள்தோறும் செய்ய வேண்டிய முக்கிய செயல்களை முதலில் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர், ஒவ்வொரு செயலுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்? என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். தூக்கம், குடும்ப செயல்கள், உணவு உண்ணுதல், ஆடைகளை துவைத்தல், விளையாட்டு, உடற்பயிற்சி, ஓய்வுநேரம், டி.வி.பார்த்தல், சமூக விழாக்களில் கலந்துகொள்ளுதல், படித்தல், பயிற்சிகளில் கலந்துகொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்களுக்காக நாள்தோறும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்? என்பதை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு செயலை செய்துமுடிக்க எவ்வளவு நேரம் செலவாகும்? என்பதை திட்டமிட முடியும். 

“நாள் செயல் அட்டவணை” (Daily Activities Chart) ஒன்றை தயாரித்து முடித்தப்பின்பு, ஒவ்வொரு வாரமும் அந்த குறிப்பிட்ட செயலுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்? என்பதையும் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இதனை “வார செயல் அட்டவணை” (Weekly Activities Chart) என்று குறிப்பிடுவார்கள். 

பொதுவாக, ஒரு நாள் செய்ய வேண்டிய செயல்களை அதற்கு முந்தைய நாள் இரவுக்குள் முன்னுரிமைகொடுத்து (Priority) வரிசைப்படுத்தி, ஒரு சிறிய தாளில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் ஒவ்வொரு செயல் நிறைவு பெற்றதும், செயலை செய்து முடித்ததற்கான அடையாளத்தையும் குறித்துக்கொண்டே வந்தால், எத்தனை செயல்களை வெற்றிகரமாக செய்துமுடித்திருக்கிறோம் என்றும் தெரிந்துகொள்ளலாம். இதனை “To Do List” என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு செய்யவேண்டிய செயல்களை முன்கூட்டியே பட்டியலிட்டபின் செயலில் இறங்குவது நேர மேலாண்மைக்கு அழகாகும். 

“முடியாது” அல்லது “இல்லை” அல்லது “நோ” (No) என்று சொல்வதற்கு பழகிக்கொள்வது நேர மேலாண்மையின் (Time Management) மிக முக்கியமான யுக்தியாகும். ஏனென்றால் “எல்லா செயல்களையும் நானே செய்து முடிக்கிறேன்” என்று ஏற்றுக்கொண்டு முடிவில், “என்னால் முடியாது” என்று விலகி ஓடுவது மிகப்பெரிய பின்னடைவை வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும். இதனால்தான், நம்மால் செய்துமுடிக்க முடியாத செயலில் இறங்காமல், “இயலாது” என்று முதலிலேயே சொல்லிவிடுவது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு மிகவும் உதவும். 

அமைதியாகவும், பொறுமையாகவும், சூழ்நிலைக்குஏற்ப மாற்றிக்கொள்ளும் வகையிலும் செயல்படுவது நேரத்தை மிச்சப்படுத்தி சிறந்தமுறையில் செயலாற்றுவதற்கு துணையாக அமையும். 

நேர மேலாண்மைப்பற்றி சிந்தித்து செயல்படுவது வாழ்க்கைக்கு மிகவும் பக்கபலமாக அமையும். திட்டமிட்டு செயலாற்றினால் எந்த செயலிலும் மிகச்சிறந்த வெற்றியைப் பெறலாம். 

Post a Comment

புதியது பழையவை

Sports News