விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - 1

விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
- நெல்லை கவிநேசன்

விரும்பிய படிப்பை குழப்பம் இல்லாமல் தேர்ந்தெடுக்க எளிய வழி ஒன்று உள்ளது. 

கீழே குறிப்பிட்டுள்ள 5 முக்கிய காரணிகளை மனதில் நிறுத்தி, நன்கு ஆராய்ந்து அதன்பின்னர் முடிவுகளை மேற்கொண்டால் சிறந்த படிப்பை எளிதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

1.உங்கள் குறிக்கோள் (Your Goal)  
2.உங்கள் விருப்பம் (Your Interest)
3.உங்கள் பெற்றோரின் விருப்பம் (Your Parent’s Interest)
4.உங்கள் குடும்ப நிதி நிலைமை (Your Family Financial Position)
5. உங்கள் மதிப்பெண்கள் (Your Marks)

- இந்த 5 காரணிகளும் ஒவ்வொருவருடைய குடும்பப் பின்னணிக்கு ஏற்ப (Family Background) மாறுபடும்தன்மை கொண்டவை ஆகும். எனவே இவற்றை நன்கு ஆராய்ந்து அதன்பின்னர் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். 

1. உங்கள் குறிக்கோள் (Your Goal)  
வாழ்க்கையில், உங்கள் குறிக்கோள் (Goal) எது? என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அந்த குறிக்கோளை அடைவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு துணை நிற்கிறதா? என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

2. உங்கள் விருப்பம் (Your Interest)
ஆர்வமில்லாமல் ஒரு பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து ஒருவர் படித்தால் அந்தப் படிப்பில் அவரால் நிச்சயம் வெற்றி காண இயலாது. எனவே-உங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பது நல்லது. 

3.உங்கள் பெற்றோரின் விருப்பம் (Your Parent’s Interest)
விரும்பியப் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்களின் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடம் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், உங்கள் பெற்றோரிடம் மனம்திறந்து முன்கூட்டியே நேரடியாக சொல்லிவிட வேண்டும். அதனை தவிர்த்து, மேற்படிப்பில் சேர்ந்தபின்பு “நீங்கள் சொன்னதால்தான் இந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். அதனால்தான் மதிப்பெண்கள் குறைந்துவிட்டது”-என்று பெற்றோர்களின்மீது வீண் பழிபோடுவது நல்லதல்ல. 

4.உங்கள் குடும்ப நிதி நிலைமை (Your Family Financial Position)
குடும்பத்தின் நிதி நிலைமை சரியாக அமையாவிட்டால், விரும்பிய குறிப்பிட்ட ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு ஒருவரால் இயலாத சூழ்நிலை ஏற்படலாம். அதாவது, சில பாடங்களைப் படிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகலாம். குடும்ப நிதிநிலைமை அதற்கு ஏற்றவாறு அமையாவிட்டால், வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்து மேற்படிப்பை மேற்கொள்வது நல்லது. 

5. உங்கள் மதிப்பெண்கள் (Your Marks)
சில மாணவ-மாணவிகள், மிகக் குறைந்த மதிப்பெண்களை பெற்றபின்பும், மிகச்சிறந்த அதிக உழைப்பு தேவைப்படும் படிப்புகளில் சேருவதற்கு ஆசைப்படுவார்கள். இதன்மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகிவிடும். எனவே, தேர்ந்தெடுக்கும் படிப்பில் சேருவதற்குமுன்பு இப்போதுள்ள கல்வித் தகுதியின் துணையோடு மேற்படிப்பில் சிறப்பிடம் பெற இயலுமா? என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர்தான் குறிப்பிட்ட பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். 

தேவை அறிந்து படிப்போம்...

ஹோட்டலுக்கு செல்கிறோம். 

விதவிதமான உணவு வகைகள் அங்கு உள்ளன. பலவிதமான இனிப்பு வகைகளும் இருக்கின்றன. கார வகைகளில் வித்தியாசமாக எத்தனையோ ரகங்கள் உள்ளன. ஹோட்டலில் எல்லா உணவு வகைகளும் இருக்கிறது என்பதற்காக ஏதேனும் ஒரு உணவை நமக்கு விருப்பமில்லாமல் நாம் வாங்கி உண்ணமாட்டோம். நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைத்தான் நாம் தேர்ந்தெடுத்து உண்ணுகிறோம்.

இதைப்போலத்தான் எத்தனையோவிதமான படிப்புகள் இருந்தாலும் நமக்கு ஏற்ற படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பதுதான் வாழ்க்கையில் சிறப்பு பெறுவதற்கு சிறந்த வழியாகும். 

Post a Comment

புதியது பழையவை

Sports News