பொதுஅறிவை வளர்ப்பது எப்படி?-8

பொதுஅறிவை வளர்ப்பது எப்படி?
- நெல்லை கவிநேசன்

பொதுஅறிவு என்பது வரலாறு, புவியியல், அறிவியல், சமூகவியல், அரசியல், தொழில்நுட்பவியல், பொருளியல் என பல்வேறு துறை சார்ந்த தகவல்களின் தொகுப்பாக அமைகிறது. மேலும், மனித வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் தொடர்புடைய தகவல்களின் தொகுப்பாகவும் இது திகழ்கிறது. ஒருவர் எந்த அளவுக்கு பொதுஅறிவு கொண்டவராக திகழ்கிறாரோ அந்த அளவுக்கு அறிவு கூர்மையுடனும், பிரச்சினையைத் தீர்க்கும் திறனுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ இயலும். ஒரு மனிதரின் வளர்ச்சிக்கும், சமூகத்தோடு இணைந்து வாழும் பயிற்சிக்கும், நல்ல குடிமகனாக வாழ வழிவகுக்கும் பயிற்சிக்கும் இந்தப் ‘பொதுஅறிவு’ அடித்தளமாக அமைகிறது. 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் ‘சிவில் சர்வீசஸ் தேர்வில்’ பொதுஅறிவுப் பாடம் (General Studies) முக்கியப் பங்கு வகிப்பதால், பொதுஅறிவு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்வது அவசியமாகும்.

பொதுஅறிவை வளர்க்க கீழ்க்கண்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

1. புத்தகங்களை வாசியுங்கள்
“வாசித்தல்” (Reading) என்பது பொதுஅறிவை வளர்ப்பதற்கு அடிப்படையாய் அமைகிறது. நாள்தோறும் பொதுஅறிவை வளர்ப்பதற்காக சுமார் 4 மணி நேரம் புத்தகங்களை வாசிப்பது நல்லது. புத்தகங்களை விலை கொடுத்து வாங்க இயலாத நிலையில் இருப்பவர்கள், பொது நூலகத்திற்குச் சென்று உறுப்பினராக சேர்வது நல்லது. நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்துவிட்டால் நிறைய புத்தகங்களை நூலகத்தில் இருந்து வாசிக்கலாம். முறைப்படி நூலகத்திலிருந்து புத்தகங்களை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்து வாசிப்பதும் நல்லது.

விலை குறைந்த புத்தகங்களை விலைக்கு வாங்கியும் படிக்கலாம். வீட்டில் தனியாக சிறு நூலகத்தை உருவாக்கிக்கொண்டு மாதம் 10 புத்தகங்களை வாங்கி சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இண்டர்நெட்மூலம் ‘இ-புக்’களை (E-Book) பதிவிறக்கம்செய்து (Download) படிப்பதன்மூலமும் பொது அறிவை வளர்க்கலாம். 

2. நாளிதளுக்கு சந்தா செலுத்துங்கள்
ஏதேனும் ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழை சந்தா செலுத்தி வீட்டுக்கு வரவழைக்கலாம். பொதுவாக, சுற்று வட்டார செய்திகள், மாவட்டச் செய்திகள், மாநிலச் செய்திகள், தேசியச் செய்திகள், உலகச் செய்திகள் என எல்லா வகையான செய்திகளையும் தாங்கி வருகின்ற நாளிதழ்கள் பொது அறிவை வளர்க்க உதவுகின்றன. 

அரசியல், விளையாட்டு, நாகரீகம், பண்பாடு, உணவு, மாறுபட்ட வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைத் தாங்கி நாளிதழ்கள் நாள்தோறும் வெளிவருகின்றன. எனவே, நாளிதழ்களை காலை நேரத்தில் வாசிப்பதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டு கதவுகளைத் தட்டி உள்ளேவரும் நாளிதழ்களை உங்கள் சோம்பேறித்தனத்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். 

அறிவுத் திறவுகோலாக அமைந்திருக்கும் நாளிதழ்களை வாசிப்பதன்மூலம், ஒருவர் உடனுக்குடன் தகவல்களை தெரிந்துகொண்டு, தனது பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள முடியும். 

3. மாத இதழ்களை படியுங்கள்
புத்தகக் கடையில் ஏராளமான வார, மாத இதழ்கள் அடுக்கடுக்காக அணிவகுத்து நிற்கும். இருந்தபோதும், எல்லா வார, மாத இதழ்களும் பொதுஅறிவை வளர்க்க உதவுவதில்லை. சில இதழ்களில் மட்டும் பொது அறிவுத் தகவல்கள் அதிகமாகக் காணப்படும்.

மாத இதழ்களை வாங்கி கையில் அல்லது பையில் வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவற்றை வாசிக்கத் தொடங்குங்கள். குறிப்பாக, நெடுநேரம் பஸ்ஸ§க்கு காத்திருக்கும்போதும், மருத்துவமனையில் டாக்டரைப் பார்க்க காத்திருக்கும்போதும் மாத இதழ்களை படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். 

4. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வு இதழ்களை வாசியுங்கள் 
கல்வி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளைத் தாங்கிய இதழ்கள் இப்போது அதிகமாக வெளிவருகின்றன. அந்த இதழ்களை (Journal) தொடர்ந்து வாசித்து வாருங்கள். ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் இந்த இதழ்கள்மூலம் தெரிந்துகொள்ளலாம். பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட கல்வி ஆய்வுகள் (Academic Research) பற்றிய கட்டுரைகளையும் வாசித்து பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளலாம். 

5.நண்பர்கள், உடன் பணிபுரிபவர்களிடம் நல்ல தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்
அறிவிற் சிறந்தவர்கள், படித்தவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். அந்த நல்ல நண்பர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். இந்த நட்பு, பொதுஅறிவை வளர்க்கும் விதத்திலும், புதுப்புது தலைப்புகளில் உரையாட உதவும் விதத்திலும் அமைய வேண்டும். நீங்கள் புதிதாக கற்றுக்கொண்ட தகவல்களை வாரந்தோறும் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். 

6.கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுங்கள்
பொதுஅறிவை வளர்க்கும் விதத்தில் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு அங்கு பரிமாறப்படும் தகவல்களை உற்றுக் கவனியுங்கள். அனுபவமிக்க கருத்தாளர்கள் கருத்துக்களை வழங்கும் முறை, அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் அனுபவங்களை கூர்ந்து கவனித்துக் கொள்ளுங்கள். குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். எல்லா கருத்துக்களும் முக்கியமாகத் தோன்றினாலும், அறிவை வளர்க்கும் விதத்தில் அமையும் கருத்துக்களை இனம்கண்டு மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். 

7.அறிவை வளர்க்கும் சமூகக் குழுக்களில் (Social Groups) இணைந்துகொள்ளுங்கள் 
பொதுஅறிவை வளர்ப்பதற்காகவே சில சமூகக் குழுக்கள் (Social Groups) பல இடங்களில் இயங்குகின்றன. அங்கு பல்வேறு செய்தித்தாள்களும், இண்டர்நெட் வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சமூகக் குழுக்கள் எங்கு உள்ளன? என்பதை அடையாளம் காணுங்கள். இந்தக்குழுவில் இணைந்துகொண்டு குழு உறுப்பினர்களோடு கலந்துரையாடுங்கள். இந்தக் கலந்துரையாடல் உங்கள் பொதுஅறிவை வளர்க்க உதவும். 

8. தொலைக்காட்சியைப் பாருங்கள்
தொலைக்காட்சியில் வழங்கப்படும் செய்திகள், செய்தி விமர்சனங்கள், செய்தி அலசல்கள் போன்றவைகள் பொதுஅறிவை வளர்க்க உதவுகின்றன. சி.என்.என். (CNN), இன்டியா டுடே  (India Today), நேஷனல் ஜியாகிராபிக் (National Geographic), டிஸ்கவரி சேனல் (Discovery Channel), பிபிசி (BBC) போன்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பல்வேறு பொதுஅறிவு தகவல்களை நாள்தோறும் வழங்கி வருகின்றன. இவற்றின் முக்கிய நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து வந்தால் ‘பொதுஅறிவு’ வேகமாக வளரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

இருந்தபோதும் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து அதிகமான நேரத்தை வீணாகப் போக்குவதை நிறுத்துவது நல்லது. 

9.தேடுபொறிகளை (Search Engines) பயன்படுத்துங்கள்
இண்டர்நெட்டில் நமக்குத் தேவையான பல இணையதளங்களைக் கண்டுபிடிக்க பல தேடுபொறிகள் (Search Engines) உள்ளன. கூகுள் (Google), யாகூ (Yahoo), பிங்க் (Bing) போன்ற பிரபல தேடுபொறிகள்மூலம் தேவையான தகவல்களை ஒருசில நொடிகளுக்குள் நாம் பெற்றுக்கொள்ள இயலும். தற்காலச் செய்திகள், செய்தியின் பின்னணி மற்றும் போக்கு (Trend)போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமல்லாமல், பொது அறிவுத் தகவல்களை விரல் நுனியில் வைத்துக்கொள்ளவும் இந்தத் தேடுபொறிகள் பெருமளவில் உதவுகின்றன. 

உங்கள் செல்போனில் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், ‘அப்ளிகேஷன்’களை பதவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 

10. ஆசிரியர்களோடு நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் ஆசிரியர்களோடு நட்புறவை வளர்த்துக்கொண்டு செய்தித் தகவல்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள். பாட வேளை தவிர மற்ற நேரங்களிலும் பொது அறிவை வளர்க்கும் விதத்தில் ஆசிரியர்களோடு உரையாடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் நேரில் ஆசிரியரை சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி, இ-மெயில் (E-mail), வாட்ஸ்-அப் (WhatsApp) மூலம் நேரடியாகச் சந்திக்கும் நேரத்தை ஆசிரியரிடம் கேட்டுப் பெற்று பொதுஅறிவு வளர்ச்சிக்கான கலந்துரையாடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

இவை - சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பொதுஅறிவுத் தகவல்களை சேகரிக்க பெருமளவில் உதவி புரியும். 

சிவில் சர்வீசஸ் தேர்வில் பொதுஅறிவுப் பாடத்திலிருந்து கேள்விகள் நான்கு நிலைகளில் கேட்கப்படும். அவற்றை - 
1. முதல்நிலைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் (Questions in Preliminary Examination)
2. முதன்மைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் (Questions in Main Examination)
3. கட்டுரைகளில் கேட்கப்படும் கேள்விகள் (Questions in Essay) 
4. நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்(Questions in Interview)   
- என 4 வகையாகப் பிரிக்கலாம்

முதல்நிலைத் தேர்வில் கேட்கப்படும் பொதுஅறிவுக் கேள்விகள் -  “கொள்குறி வினா வகை” (Objective Type) அமைப்பில் அமையும். அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கு தேவையான அடிப்படை அறிவு தேர்வு எழுதுபவரிடம் உள்ளதா? இல்லையா? என்று ஆய்வு செய்யும் விதத்தில் கேள்விகள் அமைக்கப்பட்டு இருக்கும். 

முதன்மைத் தேர்வுக்கான பொதுஅறிவுக் கேள்விகள், தேர்வு எழுதுபவரின் - புரிந்து கொள்ளும் திறனையும் (Understanding Skill), எழுதும் திறனையும் (Writing Skill), சுருக்கமாக, தெளிவாக ஒரு கருத்தை விவரிக்கும் திறனையும் ஆய்வு செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். 
  
கட்டுரையில் கேட்கப்படும் கேள்விகள், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி தேர்வு எழுதுபவர் முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறாரா? என்பதை ஆய்வு செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 

நேர்முகத்தேர்வுக் கேள்விகள், தேர்வில் கலந்து கொள்பவர் சிறந்த முறையில் தகவல்களை தெரிவிக்கும் திறன் (Communication Skill) கொண்டவரா? என்பதையும், சிறந்த ஆளுமை பண்புகள் (Personality Traits) அவரிடம் உள்ளதா? என்பதையும் அடையாளம் கண்டு கொள்ளும் விதத்தில் அமைக்கப்படும்.

இதனால்தான் ஒரு “ஒருங்கிணைந்த முறை”யோடு (Integrated Approach) பொதுஅறிவுத்தேர்வுத் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். அதாவது முதல்நிலைத் தேர்வின் பொதுஅறிவுப்பாடத் தேர்வு தயாரிப்பில் ஈடுபடும்போதே முதன்மைத் தேர்வின் பொதுஅறிவுப் பாடம், கட்டுரைத்தாள் (Essay Paper), நேர்முகத் தேர்வு ஆகிய மற்ற பாடத் தேர்வுகளுக்கு சேர்த்து ஒரே நேரத்தில் தேர்வுத் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும்.  

Post a Comment

புதியது பழையவை

Sports News