படிக்காத பாடங்கள்

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-

படிக்காத பாடங்கள்

பாடங்கள் என்றால் அதனை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்வது என்று
சிலர் நினைக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று படிப்பது மட்டுமே பாடம் என்பதும் சிலரது கருத்தாகும். 

ஃபிரிகேஜி (Pre-KG) முதல் பிளஸ் 2 வரை தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் பள்ளியில் படிக்கிறார். அதன்பின்னர் பட்டப்படிப்பாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படிக்கிறார். பட்ட மேற்படிப்பாக 2 ஆண்டுகள் கல்லூரியில் காலத்தை செலவிடுகிறார். இப்படி கல்வி நிலையங்களில் இன்றைய இளைஞர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் கழிந்துவிடுகிறது. 20 ஆண்டுகளாக பல்வேறு பாடங்களை ஒரு இளைஞர் படிக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த பாடங்கள் மட்டுமே வேலை வாய்ப்பையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது என்பது பலரின் நம்பிக்கை. இருந்தபோதும் கல்வி நிலையங்களில் கற்ற கல்வியோடு பல்வேறு அனுபவ கல்வியைப் பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். 

இன்று வேலையில்லாப் பிரச்சினை (Unemployment Problem) உருவாகிக்கொண்டிருக்கிறது என்று ஒருபுறம் நாம் கவலைப்படுகிறோம். ஆனால் தங்கள் நிறுவனங்களில் பணிசெய்ய, வேலைக்கு ஏற்ற தகுதியான பணியாளர் இல்லை (Unemployable) என்ற கவலைதான் வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களிடம் இருக்கின்றன.

“நான் அந்தக் காலத்துல எஸ்.எஸ்.எல்.சிதான் படிச்சேன். படிச்சு முடிச்சதும் அந்த ஆபீஸ்ல கூப்பிட்டு வேலை கொடுத்தான்” – என்று ஒரு காலத்தில் சொல்லிப் பெருமைப்பட்டவர்கள் உண்டு. 

“நான் பி.காம். படித்தேன். வங்கியில் கிளார்க் வேலை தந்தார்கள். இப்போது மேனேஜராக இருக்கிறேன்” என்று மகிழ்பவர்களும் உண்டு. 

“சாதாரண பாலிடெக்னிக் டிப்ளமோதான் இன்றைக்கு என்னை பெரிய என்ஜினியர் ஆக்கிவிட்டது” - என்று சொல்பவர்களும் உண்டு.          

“அந்தக் காலத்தில் படித்து முடித்ததும் வேலை கிடைத்தது. டிகிரி இருந்தால் நல்ல வேலை தந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் M.A., Ph.D., படித்தாலும்கூட வேலை கிடைப்பதில்லை என்று விரக்தியின் விளம்பில்நின்று வேதனைப்படுபவர்களும் உண்டு. 

படித்தால் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்று இளைய வயதினர் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி அவர்களே தீர்ப்பு வழங்கி சிலர் நல்ல பாதையில் செல்கிறார்கள். சிலர் சோகமாய் தவிக்கிறார்கள். 

கல்வி நிறுவனங்களில் படிக்கும் பாடங்கள் வேலை வாங்கித் தருமா? அல்லது வேலை வாங்கித் தராதா? என்னும் குழப்பம் இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது. பள்ளி, கல்லூரிகளில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின்பும் சிலருக்கு வேலை கிடைக்காமல் இருக்க காரணம் என்ன? 

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்று - என்னிடம் பி.பி.ஏ., படித்து முடித்த மாணவன் கேசவன் வந்தார்.  

“சார் எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தாருங்கள். பி.பி.ஏ., பட்டத்திற்கு ஏற்ற ஏதேனும் ஒரு வேலை வாங்கித் தந்தால் எனக்கு நன்றாக இருக்கும்” என்று கேட்டார். 

பி.பி.ஏ., படித்த அந்த இளைஞர் நல்ல சுறுசுறுப்பானவர். கதை, கவிதை, கட்டுரை என தனது ஆவர்வத்தை அதிகமாக்கி, கல்லூரி அளவிலும் பல்கலைக்கழக அளவிலும் பரிசு பெற்றவர். இவருக்கு ஏற்ற வேலை எது? சிந்தித்துப் பார்த்தேன். சென்னையிலுள்ள ஒரு பிரபல மாத இதழின் ஆசிரியர் எனது நெருங்கிய நண்பர். அவர்தான் அந்த மாத இதழின் உரிமையாளரும் ஆவார். 

“கவிநேசன் உங்களுக்குத் தெரிந்த நல்ல பட்டதாரிகள் இருந்தால் அனுப்பி வையுங்கள். வேலை கொடுக்கிறேன்” என்று சொல்லியிருந்ததால் மாணவர் கேசவனை சென்னைக்கு அனுப்பி வைத்தேன். சென்னையில் அந்த மாத இதழ் அலுவலகத்தில் ஒருவாரம் வேலை செய்த கேசவன் திரும்பவும் வந்து நேரில் என்னை சந்தித்தார். 

“தம்பி கேசவா... பத்திரிக்கை வேலை எப்படி? என்று கேட்டேன்”.

சார் நான் இந்த வேலையை விட்டு விடலாம் என நினைக்கிறேன். சாரி சார்” என்றார் கேசவன்”. 

நான் ஆச்சரியமாகப் பார்த்தேன்.    

கேசவன் மீண்டும் தொடர்ந்தான். 
     
“நீங்க கொடுத்த லெட்டரோடு சென்னைக்கு போனேன். அந்த மாத இதழ் ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் மிகவும் சந்தோப்பட்டார். தம்பி இன்றைக்கே வேலைக்கு சேர்ந்துவிடு என்றார். நான் படித்த பாடங்களைப்பற்றி விரிவாகக் கேட்டார்”. “அக்கவுண்டன்சி படிச்சிருக்கிறீங்களா? ரொம்ப நல்லது. நம்ம அக்கவுண்ட் செக்ன்ல உங்களுக்கு வேலை கொடுத்துவிடலாம் என்றார். அக்கவுண்ட் செக்னில் இரண்டு நாள் வேலை பார்த்தேன். தம்பி இந்த பாலன்ஸ் ஷீட்டை (Balance Sheet) ரெடி பண்ணுங்க என்றார். உதவியாளரை அழைத்து நான்கு ஐந்து பெரிய கணக்கு புத்தகங்களை என் மேஜையில் கொண்டு வைக்கும்படி சொன்னார். மேஜை அருகே அந்த கணக்கு புத்தகங்களை பார்த்தவுடன் எனக்கு அழுகையாக வந்தது. பி.பி.ஏ., படித்திருக்கிறோம் நமக்கு தெரியாத அக்கவுண்டன்சியா என்று நினைத்து கணக்குகளை புரட்ட ஆரம்பிச்சேன். என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இந்த அக்கவுண்ட்களை எப்படி எழுதுவது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேர்வுக்காக கணக்குகள் செய்வதற்கும் நடைமுறை கணக்குகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அப்போதுதான் உணர்ந்தேன். 

“உன்னால முடியலைன்னா உடனே என் பிரண்ட்கிட்ட சொல்ல வேண்டியதுதானே நீ ஏன் வேலையை விட்டுவந்தாய்? அவர் ரொம்ப நல்லவர்” - என்றேன் நான். 

“அவர் ரொம்ப நல்லவர்தான். நான்தான் நல்லவனில்லை. அக்கவுண்டன்சி பாடத்தை நடத்தும்போது கவனிக்காமல் படம் வரைந்து கொண்டிருந்தேன். தேர்வு நேரத்தில் மட்டும் மனப்பாடம் செய்து வெற்றி பெற்றேன். இப்போது அதற்கு பலன் அனுபவிக்கிறேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன். பிறகு அடுத்த நாள் உங்கள் நண்பரான பத்திரிக்கை ஆசிரியரைப் பார்த்தேன். அவர் என்னை உற்சாகப்படுத்தினார். இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையைத் தருகிறேன் என்றார். தனது உதவியாளரை அழைத்து தம்பியை எடிட்டோரியலுக்கு கூட்டிட்டுப்போ என்றார். அங்கு போனவுடன் ஒரு பத்து பக்கத்தை கையில் கொடுத்து இந்த ஆங்கிலத்தை டிரன்ஸ்லேசன் செய்து தமிழில் தாருங்கள் என்றார். எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. முறைப்படி ஆங்கிலத்தைத் தொடர்ந்து வாசித்து பழகாததால் எனக்கு அதுவும் கடினமாகவே தோன்றியது. அன்று மாலையில் உங்கள் நண்பரைச் சந்தித்து எனக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என்று சொல்லிவிட்டு உடனே உங்களைத்தான் சார் பார்க்க வருகிறேன்” என்றான் கேசவன். 

“சரி... இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றேன் நான். 

சார் நான் படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் தொடர்பில்லாததுபோல நினைக்கிறேன். ஒரு பி.பி.ஏ., படித்த பட்டதாரி அக்கவுண்டஸ்களை அழகாக செய்வார் என்று நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை சரளமாக பேசும் திறமை அவருக்கு உண்டு என எண்ணுகிறார்கள். எந்த வேலையைக் கொடுத்தாலும் ஆர்வத்தோடு செய்து முடிப்பார் என்று நினைக்கிறார்கள். நம் பி.பி.ஏ., படிப்புக்கு சென்னையில் ரொம்ப மதிப்பிருக்கிறது. அந்த மதிப்புமிக்க படிப்பிற்கேற்ற திறமைகள் என்னிடம் இல்லை. நான் படிக்கின்ற காலத்தில் என்னுடைய திறமைகளை பாடத்தோடு இணைந்து வளர்த்துக்கொள்ள தவறிவிட்டேன்” என வருந்தினான் கேசவன். 

இந்த பட்டதாரி கேசவனின் வாழ்க்கை நிகழ்ச்சி இன்றைய இளைஞர்களுக்கு பாடமாக அமையும் என நினைக்கிறேன். 

படிக்கும்போது பாடத்தில் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்றால்போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். இப்போதெல்லாம் பாட மதிப்பெண்கள் தேவையான தகுதியாக (Qualifications) கருதப்பட்டாலும் தேவையான பண்புகளும் (Qualities), திறன்களும் (Skills) இருந்தால்தான் ஒருவருக்கு எளிதாக வேலை கிடைக்கும். 

இந்தப் பண்புகளும், திறன்களும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ - மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனைத்தான் வாழ்க்கைப் பாடங்கள் என கூறுகிறார்கள். புத்தகத்தில் படிக்கின்ற பாடத்தைவிட இந்த அனுபவ பாடங்கள்தான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும். 

இதனால்தான் தத்துவமேதை சாக்ரடீஸ் “Know Thyself” எனக் குறிப்பிட்டுள்ளார். “உன்னை நீ அறிந்திடுவாய்” என்பதுதான் இதன் அர்த்தமாகும்.    

வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு பாடங்களைச் சொல்லித் தருகிறது. அந்த அனுபவம் தரும் பாடங்களை நாம் அமைதியுடன் கவனித்து புரிந்து கொள்ள வேண்டும். 

வாழ்க்கைப் பாடங்களில் மிக முக்கியமானது நேரம் தவறாமை. இதனை ஆங்கிலத்தில் “Punctuality” என அழைப்பார்கள்.  

குறித்த காலத்தில் ஒரு செயலைத் தொடங்குவதும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு செயலை செய்து முடிப்பதும் காலந்தவறாமை என்னும் பண்பின் முக்கிய அம்சங்களாகும். இதனைத்தான் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிகளாக வழங்குகிறார்கள். 

பள்ளிநேரம் (School Time) என்ற ஒரு நேரத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு பாட பிரிவிற்கும் உள்ள நேரம், இடைவேளை நேரம், உணவு நேரம், பள்ளி முடியும் நேரம் - என நேரத்தை ஒழுங்காகத் திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி பள்ளியை நடத்துகிறார்கள். ஒவ்வொரு பாட வேளையிலும் எந்தெந்த பாடத்தை நடத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அந்த பாடத்தை எந்த ஆசிரியர் அல்லது ஆசிரியை நடத்துகிறார் என்பதையும் திட்டமிட்டு விடுகிறார்கள். எந்த அறையில் அந்தப் பாடம் நடத்தப்படும் என்பதையும் திட்டமிட்டு தெரிவித்து விடுவதால் எந்த குழப்பமும் இல்லாமல் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது.   

இப்படி திட்டமிட்டு நடத்தப்படுகின்ற ஒரு பள்ளியில் மாணவ-மாணவிகள் நாள்தோறும் வந்து பாடங்களை கற்பதற்கான ஆற்றலையும் உருவாக்கி விடுகிறார்கள். 

ஒரு மாணவன் அல்லது மாணவி பள்ளிக்கு ஒழுங்காக, வழக்கமாக சென்றாலே காலந்தவறாமை என்ற பண்பை வளர்த்துக் கொள்ளலாம். “காலந் தவறாமை” என்ற பண்பு கொண்ட மாணவ-மாணவிகளுக்கு 100 சதவீத வருகைப்பதிவுச் சான்றிதழ்” என்ற சிறப்புச் சான்றிதழை பள்ளி விழாக்களில் வழங்குகிறார்கள். 

இந்த விவரம் தெரியாமல் சிலர் “கோயில் திருவிழாவுக்கு விடுமுறை எடுத்தால் குறைந்தாபோய்விடும்” என்று எண்ணி பிள்ளைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்பாமல் விட்டுவிடுகிறார்கள். ஒருநாள் படிக்காத பாடத்தை பின்னர் படித்து சரிசெய்த விடலாம். ஆனால் “காலம் தவறாமை” என்னும் உணர்வை காலம் கடந்தபின்பு உருவாக்க முடியாதல்லவா!

தேர்வுகளை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதுவதற்கு மாணவ - மாணவிகளை எழுதப் பழக்குவது, வீட்டுப்பாடம் கொடுப்பது இவையெல்லாம் மாணவ - மாணவிகளிடம் காலந்தவறாமை உணர்வை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.   

“டீன் - ஏஜ்" எனப்படும் வளர் இளம் பருவத்தில் ஒரு மாணவன் அல்லது மாணவி மனதிற்குள் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். எது நல்லது? எது கெட்டது? எந்தச் செயல் சரியானாது? எந்தச் செயல் தவறானது? யார் நல்லவர்கள?; யாரெல்லாம் கெட்டவர்கள்? என்று பிரித்து அறிந்துகொள்ளும் திறன் சற்று குறைவாகவே இருக்கும். இதனால் சிலவற்றைப் பற்றிய முடிவுகள் எடுக்க இயலாமல் இந்தப்பருவத்தினர் திணறுவார்கள். புத்தகத்தில் படித்த தகவல்களுக்கும், நடைமுறையிலுள்ள தகவல்களுக்கும் இடையே வேறுபாடுகளைக் காணும்போது வளர்இளம்பருவத்தினரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இதனால்தான் அவர்கள் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு செயல்படுகிறார்கள். 

பல வருடங்களுக்குமுன்பு நான் கல்லூரியில் துணைப்பேராசிரியராக சேர்ந்த புதிதில், எனது வகுப்புக்கு ஒரிரு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவனை நான் வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை. அந்த மாணவனுக்கு என்மீது கோபம் அதிகமானது. வகுப்பு மாணவர்களில் சிலர் தாங்கள் தாமதமாக வருவதை அனுமதிக்க வேண்டும் என்று துறைத் தலைவருக்கு கோரிக்கை மனு எழுதினர்.

எங்கள் துறைத்தலைவர் என்னிடம் விசாரித்தபோது “சார் நான் கல்லூரியின் விதிமுறைகளைத்தான் பின்பற்றி நடக்கிறேன். வகுப்புக்கு தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காதது எனது தவறா? சார்?” என்று துறைத் தலைவரிடம் கேட்டேன். அவர் “உங்கள் எண்ணபடியே வகுப்பை நடத்துங்கள” என எனக்கு அனுமதி கொடுத்தார். அதனால்தான் இன்றும்  நான் “காலந்தவறாமை” என்னும் பண்பை, வகுப்பில்  மாணவர்களுக்கு என்னால் கற்றுக்கொடுக்க முடிகிறது. 

“தாமதமாய் வருவதற்கு அனுமதிக்க வேண்டும” என்று குரல் கொடுத்த மாணவன் சில வருடங்களுக்குபின்பு என்னை சந்தித்தான்.

“சார் நீங்கள் லேட்டாக வந்தவர்களை வகுப்புக்குள் அனுமதிக்காமல் இருந்தபோது எங்களுக்கு கோபமாக வந்தது. ஆனால் இன்று ஒரு மேலாளராக பணிபுரிகிற என்னால் அந்த காலந்தவறாமை பண்பை உணர முடிகிறது. நிறுவனத்தில் ஒரு துறைக்கு தலைமையேற்றிருக்கும் நான் ஒழுங்காக இருந்தால்தானே மற்றவர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்று நான் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்” என உணர்வுப்பூர்வமாக உணர்ந்து சொன்னார் அந்த மாணவர்.

அந்த மாணவனுடைய கருத்தும் சமீபத்தில் சென்னையில் நான் சந்தித்த இன்னொரு இளம் மேலாளர் விஜயராகவனின் கருத்தும் கிட்டதட்ட ஒன்றாகவே இருந்தது. 

விஜய ராகவன் என்ற அந்த இளம் மேலாளர். ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இளம் வயதுக்காரர் என்பதால் அவரால் அந்த நிறுவனத்தை எளிதில் நிர்வாகம் செய்ய முடியவில்லை. திணறிப்போன விஜயராகவன் அந்த தனியார் நிறுவன முதலாளியிடம் வந்து தனது பிரச்சினையைச் சொன்னார். அவரது முதலாளி நிதானமாக அவருக்கு ஆலோசனை வழங்கினார். 

“எந்த நிறுவனத்தையும் நாம் எளிதாக நிர்வகித்து விடலாம். அதற்கு எளிதான ஒரு வழியும் இருக்கிறது. அதாவது நம் நிறுவனத்தின் அலுவலகம் காலை 9 மணிக்கு திறக்கப்படுகிறது என்றால் அரை மணி நேரத்திற்கு முன்னதாக 8.30 மணிக்கே வந்துவிட வேண்டும். அதேபோல் மாலை 5 மணிக்கு அலுவலகம் முடிகிறது என்றால், அதன்பின்னர் குறைந்தபட்சம் அரை மணி நேரம் அலுவலகத்தில் இருந்து தாமதமாக புறப்பட வேண்டும். அப்போது அடுத்தநாள் செயல்பாட்டிற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு மேலாளராக இருக்கிற நீங்கள் அலுவலகத்திற்கு முதல் ஆளாக வர வேண்டும். அலுவலக நேரம் முடிந்தபின்பு கடைசி ஆளாக அலுவலகத்தைவிட்டுச் செல்ல வேண்டும். இதை ஒரு மாதம் பழக்கப்படுத்தி பாருங்கள். நீங்கள்தான் சிறந்த நிர்வாகி” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் முதலாளி. 

இன்று மிகச்சிறந்த மேலாளராக செயல்பட்டு சிறந்து விளங்குகிறார் விஜய ராகவன்.

காலந்தவறாமை பண்பை பள்ளி, கல்லூரிகளில் கற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். வெற்றியைக் குவிக்கிறார்கள்

Post a Comment

புதியது பழையவை

Sports News