தமிழ் வளர்த்த தலைவர்கள் -4 -வீரமாமுனிவர்

தமிழ் வளர்த்த தலைவர்கள் -4 


தமிழை உலகறியச் செய்தவர்  வீரமாமுனிவர் 

  - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்.
  நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்,
  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், திருநெல்வேலி.

  இன்று தலை நகரத்திலும், பிற நகரத்திலும் வாழும் தமிழர்கள் தமிழ் பேசுவதை விட ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது வேதனையான உண்மை. பிற மொழிகளை வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே நேரம் தமிழ் மொழியை நன்றாக கற்று கொள்ளுங்கள்.. பிற மொழி நம் வளர்சிக்கு உதவும், தாய் மொழி தமிழ் நம்மை என்றும் வாழ வைக்கும். இது வார்த்தை ஜாலம் இல்லை, நடைமுறை உண்மை.. அதை உணர்த்தவே பிற நாட்டு பேரறிஞர்கள் தமிழுக்கு செய்த தொண்டுகளை உணர்த்தும் இந்த கட்டுரைகளை எழுதுகிறேன். 
பிற நாடுகளில் இருந்து இங்கு மத பணியாற்ற வந்த அறிஞர்கள் தங்கள் பணிக்காக தமிழை கற்க ஆரம்பித்தனர்.. ஆனால் தமிழ் அவர்களை முழுவதும் தனதாக்கி கொண்டது ..  அப்படி வந்த அறிஞர்களில் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஆவார். 

தமிழராக பிறந்தும் தமிழை பேச தயங்குபவர் மத்தியில், இத்தாலியில் பிறந்து தமிழகம் வந்து தமிழ் கற்று, காவியுடை அணிந்து தமிழுக்கு பெரும்பணி ஆற்றி "தேம்பாவணி" என்னும் பெரும் காவியம் படைத்த வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய பணி மிகவும் அளப்பரியது.தமிழ்நாட்டுத் துறவிகள் போல் காவி உடை அணிந்தும்,  புலால் உணவை நீக்கியும் வாழ்ந்தவர்.

சென்ற வாரம் ராபர்ட் கால்டுவெல் பற்றி பார்த்தோம். இந்தவாரம் வீரமாமுனிவரை அறிவோம். 




இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள கேசுதிகிலியோன்  என்ற சிற்றூரில் 1680 நவம்பர் 8 ல் பிறந்தார்

1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின்,  கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில்,  லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 ஜூனில் கோவா வந்து சேர்ந்தார். சில நாட்கள் கோவாவில் தங்கியவர்,  தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கேரளாவில்  கொச்சிக்கு வந்தார், பின்னர் அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கினார். அங்கிருந்து தமிழ்நாட்டின்  மதுரை அருகே உள்ள காமநாயக்கன்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.

தமிழகம் வந்த இடத்தில் மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார்,  அதற்காக தமிழ் கற்றார். அப்போது தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. தமிழில் ஆர்வம் அதிகரிக்கவே சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். 

தமிழ் நூல்கள் பல படித்தார்..வரலாறு, சமூகம், பண்பாடு, இலக்கியம், இலக்கணம், மருத்துவம், வாழ்வியல் என அனைத்து துறைகளிலும் எண்ணற்ற தமிழ்ச் சுவடிகளை தேடித்தேடி அலைந்து படித்தார் அதனாலே  'சுவடி தேடிய சாமியார்'  என்ற பட்ட பெயரும் இவருக்கு கிடைத்தது. 

தமிழ் மொழியில் உள்ள நூல்களை படிக்கும் போது மொழி வேறு பண்பாடு வேறு என பிரிக்க முடியதவாறு இருந்தது.. தமிழ் மீது தீராக்காதல் கொண்டார்.. விரைவிலேயே இலக்கியப் பேருரைகள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார். 

தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பின்னர் அது வடமொழி சொல் ஏன்பதை அறிந்தவர் வீரமாமுனிவர் என்று தன் பெயரை அழகு தமிழில் மாற்றிக்கொண்டார்.'

ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர் தமிழிலே தன்னை முழுவதுமாக ஐக்கிய படுத்தி கொண்டார்,  பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தார். தமிழின், தமிழர்களின் பெருமையை உலகறிய செய்தார். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல இனிதாவது யாதும் இல்லை என்று பிற்காலத்தில் பாரதி பாடினான்.. அந்த பாட்டின் வரிகள் வெறும் புகழ்ச்சி இல்லை, முற்றிலும் உண்மை என்பதை இவருடைய வரலாற்றை படிக்கும் போது உணர முடிகிறது. 

தமிழில் செய்யுள்கள் மட்டுமே நடைமுறையில் இருந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் 23 நூல்களை இயற்றினார் .திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்

தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகியவற்றை ஐரோப்பிய மொழிகளுக்கு மொழி பெயர்த்தவர் .அருணகிரி நாதரின் திருப்புகழ் தமிழ் தனித்துவமானது.. அதன் வரிகள் சொல்லும், பொருளும் விளையாடும் தமிழாகவே இருக்கும்.. இதை படித்து பொருள் உணர தமிழர்களுக்கே தனி திறமை வேண்டும். அதை இவர் படித்தார், பிற மொழிக்கு மொழி பெயர்த்தார் என்றால், இவருக்கு தமிழ் புலமை கற்று வந்ததா? இல்லை.. பிறவியிலேயே இறைவன் கொடுத்தது என்று தான் சொல்ல முடியும். 

வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். அதைத் தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். 

அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். "ஆ, ஏ" எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் காலத்தின் பயன்பாடுகளுக்கு ஏற்ப மாற்றினார்.  

சுவடிகளில் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் செயுள் வடிவில் எழுதும் போது சுருங்க கூறி விளங்க வைக்கும் விதமாக இருந்தன. எல்லா தரப்பு மக்களும் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரை நடையாக்கி எளிமை படுத்தினார். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே. 

நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித ஜோசப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. இதில் கதை மாந்தர்களின் பெயர்களையும் தமிழ் மொழிக்கு ஏற்ப மாற்றினார். உதாரணமாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றியுள்ளார். தமிழில் நன்கு புலமை பெற்றிருந்தால் தான் இப்படி மாற்ற முடியும். தேம்பாவணி மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது. 

தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. ‘தேம்பாவணி’ காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.  
சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்ததில் மாற்ற காப்பியப் புலவர்களை விட தனித்து விளங்குகிறார் வீரமாமுனிவர். 

தமிழ் இலக்கணத்தை விளக்க “தொன்னூல் விளக்கம்” என்ற நூலை எழுதினார். அதில் சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்பதை எளிமை படுத்தி அவருடைய நூலில் பேச்சுத்தமிழை முதன்முதலாக விவரித்தார்.




திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார். திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை ஆகிய  நூல்களை அப்போது படைத்தார்.

மருத்துவ நூல்கள்

உரைநடையிலே அதிக நூல்களை எழுதிய இவர் பாடல் வடிவில் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது.. அவை : 

நசகாண்டம், நவரத்தின சுருக்க மாலை, மகா வீரீய சிந்தாமணி, வைதிய சிந்தாமணி, சுரமஞ்சரி, பூவரசங்காய் எண்ணெய்,மேகநாதத்தைலம் கலிவெண்பா,  பஞ்சாட்சர மூலி எண்ணெய்(ஆனந்தகளிப்பு), சத்துருசங்கார எண்ணெய்(நொண்டிச் சிந்து), வீரமெழுகு, முப்புசூத்திரம்(நொண்டிச் சிந்து,)அனுபோகவைத்திய சிகாமணி, வீரிய சிந்தாமணி இரண்டாம் பாகம்,குணவாடகம், நிலக்கண்ணடாடி, போன்றவை ஆகும். 

1742 வரை  மதுரையில் பணியாற்றிய வீரமாமுனிவர்,  1746-47 ஆண்டுகளைக் கேரளாவில் உள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் தனது வாழ்நாளை அர்பணித்தார். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் தனது 67-வது வயதில் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.

இவரது எழுத்து, சிந்தனை, வாழ்க்கை முறைகளால் முழுமையான தமிழனகவே வாழ்ந்தார்.  தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவர். இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வு சிந்தனை, மருத்துவம், பண்பாட்டு சிந்தனை அனைத்திலும், அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் வீரமாமுனிவர் என்றும் நிலைத்து நிற்பார்.

                                                        -----------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News