ஆனந்தம் தரும் ஆத்திசூடி-12 - புலவர் சங்கரலிங்கம்





ஆனந்தம் தரும் ஆத்திசூடி-12

புலவர் சங்கரலிங்கம் ,மதுரை.

"லீலை இவ் வுலகு"

இறைவன் என்ன நடத்துகிறார்? என்பதை நாம் அறிவதில்லை. இறைவன் திருவிளையாடல்களின் உள்ளார்ந்த பொருளையும் நாம் உணர்ந்து கொள்வதில்லை.

அது ஒரு அழகிய கிராமத்து  ஆற்றங்கரை. மூன்று சிறுவர்கள் அங்கிருந்த பிள்ளையார் சிலை முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். 



திடீரென்று அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம். பிள்ளையாருக்கு மூவரில் யாரை அதிகம் பிடிக்கும் என அறிவதில். இறுதியில் ஒரு முடிவெடுத்தனர். 

"பிள்ளையாரின் முன்னே உள்ள ஒரு சிறிய பொந்தில் கையை விட்டு நாம் வேண்டியதைக் கேட்போம். யாருக்கு வேண்டியது கிடைக்கிறதோ அவரைத்தான் பிள்ளையார் மிகவும் விரும்புகிறார்" என முடிவெடுத்தனர். முதலாமவன் கையை உள்ளே விட்டு கண் மூடி பிள்ளையாரை வேண்டிக் கொண்டான். உள்ளே ஒரு சிறிய தேள் இருந்தது. அதை இவன் விரல் நசுக்கியதால் அது கடித்தது.

" கத்தினால் நண்பர்கள் முன்னால் தோற்று விடுவோம் "என எண்ணி கையை வெளியே எடுத்து" பிள்ளையார் எனக்கு வேண்டியதைத் தந்து விட்டார் "-எனக் கூச்சலிட்டவாறே ,அந்த இடத்தை விட்டு ஓடி விட்டான். 

இரண்டாவது சிறுவன் பொந்தின் உள்ளே கையை விட்டான். அதே தேள் கடி. அதே வலி. அவமானம் கருதி வெளியே சொல்லாமல் தனக்கு வேண்டியது கிடைத்ததாகக் கூறி ஓடி விட்டான். 

கடைசி சிறுவன் கையை விட்டான். கண்ணை மூடி பிள்ளையாரை ஆவலுடன் வேண்டினான். உள்ளே இருந்த தேள் முதல் இரண்டு சிறுவர்களால் நசுக்கப்பட்டு இறந்திருந்தது. 

வெகு நேரமாகியும் எதுவும் கிடைக்காததால் பிள்ளையாருடன் கோபித்துக்கொண்டு இனிமேல் உன்னைக் கும்பிடவே மாட்டேன் என அந்த இடத்தை விட்டு அகன்றான்.  

நம்மில் பலரும் இந்த சிறுவனைப் போலத்தான். கடவுள் நமக்கு என்ன செய்கிறார் என்று சரியாக உணராமல் அவர் மீது கோபம் கொள்கிறோம். இதைத்தான் பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் 'லீலை இவ்வுலகு' என்கிறார்.
                                                  ----------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News