"அருட்பெருஞ்சோதி– தனிப்பெருங்கருணை” அருட்கவி வள்ளலார்

 


"அருட்பெருஞ்சோதி– தனிப்பெருங்கருணை” 

அருட்கவி வள்ளலார் 


- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி.


ஆன்மீகவாதி என்று போற்றப்படும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் இலக்கியவாதி,   கல்வெட்டு ஆராய்ச்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, புரட்சியாளர், ஜீவகாருண்யர், தீர்க்கதரிசி, ரசவாத வித்தகர், அருளாசிரியர், இதழாசிரியர், இறையன்பர், உரையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சித்தமருத்துவர், சிறந்த சொற்பொழிவாளர், ஞானாசிரியர், தீர்க்கதரிசி, நூலாசிரியர், பசிப் பிணி போக்கிய அருளாளர், பதிப்பாசிரியர், போதகாசிரியர், தமிழ்மொழி ஆய்வாளர், தமிழ்மொழி பற்றாளர், பண்பாளர் என பன்முகத்தன்மையோடு விளங்கியவர் .மொத்தத்தில்  வள்ளலார் தமிழுலகிற்கு இறைவன் அளித்த நன்கொடை 

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடி போக அவதரித்த இறை நெறியாளர். மானுடம் பயனுற வழிமுறை கட்டியவர். 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்று மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்காகவும் மனம் உருகினார்.  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்  என்பதை கொள்கையாக கொண்டவர்.  பசியால் வாடுவோரின் பசி தீர்க்க அன்று அவர் மூட்டிய தீ இன்றும் அணையாஅடுப்பாக எரிந்துகொண்டிருக்கிறது வடலூரில்.   அவரின் கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் பலரும் அன்னதானம் செய்து வருகிறார்கள்.

சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில், ராமைய்யா பிள்ளைக்கும், சின்னம்மைக்கும் மகனாக 5.10.1823ல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணிக்கு அவதரித்தவர் “இராமலிங்க அடிகளார்”.

சபாபதிப்பிள்ளை, பரசுராமப்பிள்ளை,சுந்தரம்மாள், உண்ணாமுலை அம்மாள் என்ற நால்வருக்கு பின் ஐந்தாவதாக பிறந்தவர் வள்ளலார்.  

 இவர் சிறு குழந்தையாய் இருந்த போதே இவர் ஒரு தெய்வ பிறவி என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இவர் ஐந்து வயது குழந்தையாக இருந்த போது இவரது பெற்றோர் சிதம்பர கோவிலல் நடராஜரின் தரிசனத்தை காணும் போது, அந்த நடராஜ பெருமானுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்டு மகிழ்ச்சியில் சிரித்தார் இராமலிங்க அடிகளார். அப்போது அக்கோவிலின் அர்ச்சகர்கள் குழந்தை ராமலிங்கத்தை கண்டு அவர் ஓரு தெய்வ குழந்தை என அவரது பெற்றோரிடம் கூறினர்.

வள்ளலார் எட்டு மாத குழந்தையாக இருந்தபோது ராமையாப்பிள்ளை காலமானார். சென்னையில் குடியேறி தனது அண்ணனின் வளர்ப்பில் வாழலானார் ராமலிங்கம்.

இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.

இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்

என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.


இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.

இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார். மிகவும் தீவிர ஆன்மிக தேடலில் ஈடுபட்டிருந்த இராமலிங்க அடிகளார் முருகப் பெருமானின் அருளால் ஞானமடைந்தார்.

எல்லோரையும் போல கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் வள்ளலார் இல்லை.  அவர் ஓதாது உணர்ந்தவர்.  அப்போது அதை உணராவிட்டாலும், அதன்பின்னர் தனது தம்பி சாதாரண பிறப்பு கிடையாது.  இப்பூமிக்கு வந்த அதிசய பிறவி என்பதை அண்ணனும், குடும்பத்தினரும் உணர்ந்துகொண்டனர்.

மற்றவர்களுக்கு கற்றுத்தரும் ஞானம் உள்ளவர் என்பதை ஆசிரியரே உணர்ந்து, சபாபதியிடம் கூறினார்.

குடும்பத்தினரின் புரிதலுக்கு பின்னர் முழுமையாக 12வயது முதல் அருள் வாழ்க்கையை தொடங்கினார் வள்ளலார். திருவொற்றியூர், பாடி, திருமுல்லைவாயல், திருவள்ளூர், திருத்தணி என்று பல தலங்களுக்கும் சென்று பாடினார். அவர் பாடிய 6 ஆயிரம் பாடல்கள் 6 திருமுறைகளாக தொகுக்கப்பட்டு வந்திருக்கும் ‘திருவருட்பா’ நூல் தமிழுக்கு கிடைத்த பொக்கிசம்.

தமிழ் வித்வான், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், நூல் ஆசிரியர், நூல் பதிப்பாளர் என்று சென்னையில் பல பரிமாணங்களை காட்டியவர் 1858ல் சென்னையை விட்டு புறப்பட்டு, போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில்  மயிலாப்பூர், அச்சிறுபாக்கம், புதுச்சேரி வழியாக நடந்து சென்று சிதம்பரத்தை அடைந்தார்.

மக்களின் பசிப்பிணியே சமுதாயத்தில் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்றறிந்து பசித்த மக்களுக்கு அன்ன தானம் இடும் “சத்திய ஞான சபையை” வடலூரில் நிறுவினார். இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என அன்புடன் அழைக்கப்பட்டார்.

ஒரு சமயம் வள்ளலாரை புகைப்படம் எடுக்க விரும்பிய சிலர் எத்தனை முறை புகைப்படம் எடுத்தும் அவரின் உருவம் அதில் பதிவாகவில்லை. இதற்கு காரணம் வள்ளலார் பெற்ற “ஒளி தேகத்தை” அந்த புகைப்பட கருவியல் பதிவு செய்ய முடியவில்லை. பின்பு தனது அடியவர்களின் ஆசைக்காக சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்தார் வள்ளலார், அதன் பிறகு புகை படம் எடுத்துக்கொள்ளுமாறு கூறியபோது அவரது உருவம் அதில் பதிவாகியது.



அன்பையும், இரக்கத்தையும் வாழ்வின் அடிப்படையாக கருத வேண்டும்.  கோபம், சோம்பல், பொறாமை, பொய், கடுஞ்சொல் முதலானவற்றை அறவே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார்.  பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலம் சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் எழுப்பி,  ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் நீங்கி சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடு பட்டார். சாதி, மத,சாஸ்திரங்களால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் கண்டு கண்டித்து, இந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் பேசிய வள்ளலார், எல்லோரும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தனி இயக்கத்தையும் தனிக்கொடியையும் கொண்டு வந்தார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.


மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து இராமலிங்க அடிகள் 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. 

இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.

ஒரு முறை வடலூரிலுள்ள சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம் ஸ்தாபிக்க, அதற்கான மரத்தை வாங்க வள்ளலார் தனது சீடர்கள் சிலரை சென்னைக்கு அனுப்பிவைத்தார். சென்னைக்கு ரயிலில் வந்து இறங்கிய அந்த சீடர்கள் வள்ளலார் அவர்களிடம் முன்பே கூறிய அந்த குறிப்பிட்ட மரக்கடைக்கு சென்றனர். அப்போது அச்சீடர்கள் காணும் வகையில் “சூட்சம” வடிவில் தோன்றிய வள்ளலார் ஒரு மரத்துண்டின் மீது நின்று, கொடிமரத்துக்கான மரம் அதுதான் என அடையாளம் காட்டினார். இந்த அதிசயத்தை கண்ட அந்த சீடர்கள் வடலூர் திரும்பிய பின்பு இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கூறினர். அப்போது அங்கிருந்தவர்கள் வள்ளலார் அந்த சீடர்களுக்கு சென்னையில் காட்சியளித்த அதே நேரத்தில், இங்கு வடலூரில் தங்களுக்கு ஆன்மீக போதனைகளை வழங்கி கொண்டிருந்ததாக கூறினர். இதை கேள்விப்பட்ட அனைவரும் வள்ளலாரின் யோக ஆற்றலை எண்ணி வியந்தனர்.


வள்ளலாரின் முக்கிய உபதேச மொழிகள்:

1. ‘அருட்பெருஞ்சோதி’ – இந்த பிரபஞ்சம் தழுவிய சோதியே அனைத்தையும் உருவாக்கியது.

2. ‘தனிப்பெருங்கருணை’ – அருட்பெருஞ்சோதி, இறைவனின் தனிப்பெருங்கருணையால் பஞ்சபூதங்கள் உருவாக்கப்பட்டு உயிர்களுக்கு வேண்டிய அனைத்தும் புவியில் அளிக்கப்படுகின்றன.

3. ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ – உலகில் அனைத்து உயிர்களுக்கும் இறைவனால் சமமான உரிமைகள் அருளப்பட்டு, காக்கப்பட்டு, பக்குவ நிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

4. எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை. உயிரைக் கொல்வது இறைவன் முன் ஏழுவகைப் பிறவியிலும், தண்டனைக்குரிய குற்றமாகும். அக்குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். யாரும் தப்பமுடியாது. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தண்டனை தீரும்வரை துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும்.

5. ஞானமே மனிதனை துன்பத்திலிருந்து விடுவித்து, அமைதியைக் கொடுக்கும்.

6. ஆன்ம நேயம் அமைதிக்கு வழிகாட்டும்.

7. சீவகாருண்யமே நமது வாழ்க்கைமுறையாக அமைய வேண்டும்.

8. சன்மார்க்க கோட்பாடுகள் அனைத்தும் பிணி,மூப்பு,மரணமில்லாத பெரு வாழ்வைக் காட்டும்.

9. சன்மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்கள் முத்தேக சித்திகளைப் பெற்று அழியாது, ஊனுடம்பிலோ,ஒலியுடம்பிலோ அல்லது ஒளியுடம்பிலோ ஞான தேகத்துடன் நிலைத்த வாழ்வைப் பெறுவார்கள்.

10. மனிதனின் இறுதிநிலை இறப்பது அல்ல. ஒளியில் கரைந்துவிடுவதே! இறைவன் ஒளிவடிவமாக இருப்பதால் இறைவனிடமிருந்து வந்த உயிர்கள் இறைவனிடமே ஒளிவடிவில் ஒளி அணுக்களாகச் சென்றடையும். ஆன்ம அணுக்கள் ஒளிவடிவத்தில் இருக்கின்றன.

செய்ய கூடாத செயலாக வள்ளலார் கூறுபவை : 

1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே

2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே

3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே

4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே

5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே

6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே

7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே

8. குருவை வணங்கக் கூசி நிற்காதே

9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே

இராமலிங்க அடிகள் கொள்கைகள்

1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்

2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்

3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது

4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது

5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது

6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்

7. புலால் உணவு உண்ணக்கூடாது

8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

9. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது

10. மத வெறி கூடாது.

எம்மத நிலையும் நின் அருள்

நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன்

எந்தாய்

—திருவருட்பா, ஆறாம் திருமுறை ,3639

அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.

அடிகளார் 1851ஆம் ஆண்டு ஒழுவில் ஒடுக்கம் என்ற நூலையும்,1855-இல் தொண்டமண்டல சதகம் என்ற நூலையும்,1857 இல் சின்மய தீபிகை என்ற மூன்று நூல்களை பதிப்பித்துள்ளார். மேலும், அவர் ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவையும், மனுமுறைகண்ட வாசகம் மற்றும் சீவகாருண்ய ஒழுக்கம் என்ற மூன்று நூல்களை இயற்றி வெளியிட்டுள்ளார். அடிகளார் 1865 ஆம் ஆண்டு ‘’சுத்த சன்மார்க்க சங்கத்தையும்’’, 1867இல் ‘’சத்திய தருமச்சாலையையும்’’, 1870இல் ‘’சித்திவளாகத்தையும்’’ மற்றும் 1872 ஆம் ஆண்டு ‘’சத்திய ஞான சபையையும்’’ தோற்றுவித்தார். 

திருவருட்பா

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.  ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவானது ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்தும் இறை உணர்வின் உந்துதலால் அருள்நிலையில் பாடப்பட்டவையாகும். எனவே திருவருட்பா என பெயர்ப்பெற்றது. இப்பாடல்கள் அனைத்தும் ஒன்பது வகையான இலக்கணங்களைக் கொண்டுள்ளது.அவை, எண்ணிலக்கணம்,  எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம்,  அணியிலக்கணம், உரையிலக்கணம், புணர்ச்சியிலக்கணம் மற்றும் ஒற்றிலக்கணம் என்பனவாகும்.

அடிகளார் அருளிய திருவருட்பாவின் பாடல்கள் அனைத்தும் மனிதனுக்கு ஞானத்தைப் புகட்டி மனிதனை மன்+இதன் = மனிதன், ஆக ஆக்க வல்லவை. அடிகளார் சாதி,மதம்,மொழி,தேசம் போன்ற அனைத்து வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு, அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே குருவருள் நெறி என்றார். அனைத்து உயிர்களும் இறைவனின் குழந்தைகள். அவற்றை சமமாக பாவிப்பதும், கருணையால் உபசரிப்பதும் மட்டுமே திருவருளுக்கு உகந்தது என்றார். ‘’சீவகாருண்யமே முக்தி என்ற வீட்டின் திறவுகோல்’’ எனவே, உயிர்களை பசியிலிருந்து காப்பதும், பிணியிலிருந்து விடுவிப்பதும், இயலாதோரை பேணிக்காப்பதும் இறைத் தொண்டு எனப் புகட்டினார். மேலும், அத்தொண்டே சன்மார்க்கத்தாரின் தலையாய கடமை எனக் கூறினார்.

1874ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி (திருமுக ஆண்டு தை 19) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு ஒளிவடிவம் பெற்று இறையோடு கலந்தார். இறைவன் ஒளிவடிவில் இருப்பதால், அடிகளார் அந்நிலையை ஏற்றார்  என்பது அவருடைய பாடல்கள் மூலம் நமக்கு விளங்குகிறது.


                                           ------------------------------------------------------- 



1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News