தொட்டிலோசை'

 

கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் 

''தொட்டிலோசை' 



கவிதை நூல் அறிமுகம்

முனைவர் வ. ஹரிஹரன்

தமிழ்ப் பேராசிரியர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி ,

மேலநீலிதநல்லூர் 

 9486556884

" தாய்க்காக முதன் முதலில் அம்மாவுக்கு' என்ற ஒரே ஒரு கவிதைதான் நான் எழுதி இருக்கிறேன். பெற்ற தாய்க்கு ஒரு கவிதை நூலையே படைத்திருக்கும் நெல்லை ஜெயந்தாவின் பாச உணர்வும் பண்பு நலனும் பெரிதும் பாராட்டுக்குரியன" என்று கவிப்பேரரசு வைரமுத்து தன் அணிந்துரையில் ''தாய்க்கு ஒருவன் தமிழூட்டுகிறான்' என்று விந்துரைத்துள்ளார். 

   நெல்லை ஜெயந்தா நெல்லை மாவட்டம் தேவநல்லூரில் பிறந்து வளர்ந்த சிறந்த கவிஞர்.''தொட்டிலோசை''    என்ற பெயரில் தன் தாய் லெட்சுமி அம்மாவின் பாசப் பிணைப்பைக் கவிதை வடிவில் டிசம்பர் 2021 இல் நூலாக்கித் தந்துள்ளார். 

பழம்பெரும் கவிஞர்கள் தாய்க்காக ஓரிரு கவிதைகள் எழுதி இருப்பார்கள். இவர் தன்னுடன் வாழ்ந்து வரும் தாய் லெட்சுமி அம்மாவைப் பற்றிய தனி கவிதைத் தொகுதி (110 பக்கங்கள்) வெளியிட்ட பெருமைக்குரியவர். கெட்டி அட்டையுடன் ஒவ்வொரு பக்கத்திலும் பல வண்ணப் படங்களுடன் பதிப்பித்து தான் நடத்தி வரும் வாலி பதிப்பகம் மூலம் வெளியிட்டார். (ரூ150/-) 

 இதில் விசேஷம் என்னவென்றால் சுப்ரமணிய பாரதி தொடங்கி ,கலைஞர் மு கருணாநிதி, கவிஞர்கள் வாலி, சிற்பி, கவிக்கோ அப்துல் ரகுமான், நா. காமராசன்,  மு மேத்தா, ஏர்வாடி ராதாகிருஷ்ணன்,  அப்துல் காதர், அறிவுமதி ஆகியோர் தத்தமது அன்னையர் குறித்து அவரவர் எழுதிய கவிதைகளையும் ஆங்காங்கே இந்நூலில் தந்துள்ளார். 

          " அம்மா! 

           என்னையே எனக்கு 

         பரிசாகப் பெற்றுத் தந்த      

         உனக்கு இது என் பரிசு! "என்று சொல்லி நூலைத்தொடங்குகிறார். 


           "அம்மா! இறைவன் கூட

             ஏமாந்து விடுகிறான் 

             உன்னைப் படைப்பதாக         

              நினைத்துக் கொண்டு 

         தன்னைப் படைத்து விட்டானே!" என்று தன் தாயின் புகைப்படத்துடன் கூடிய கவிதையைப் பதிவு செய்துள்ளார்

       " அம்மா! 

         கவிதைகள் பாடி 

         பெருமை சேர்க்க 

         நினைத்தேன் உனக்கு! 

         ஆனால் உன்னைப்

         பாடியதால் பெருமை சேர்ந்தது

          என் கவிதைகளுக்கு! "    என்று  இந்நூலை நிறைவு செய்துள்ளார். 

           "அம்மா! 

            நீ தவமிருந்ததால்

            நான் வாங்கிக் கொண்ட

            வரம் நீ! "  (பக்கம் 29) 

       கவிஞர் சின்ன வயசுல தனது தாயார் வாங்கி படித்த நாவல்கள் இலக்கிய நூல்களை எடுத்துப் படித்து ஆர்வமாகி புத்தகங்கள் வாசிக்கும் நல்ல பழக்கத்தைக் கைக் கொண்டதாக தனது பேட்டியில் (கவிஞர் நெல்லை ஜெயந்தா, கலைஞன் பதிப்பகம்,சென்னை வெளியீடு) கூறியிருப்பார். 

அதையே தம் கவிதைவழி வழிமொழிகிறார். 

        " தாய்ப் பாலில் கலப்படம் 

          இல்லை என்பது பொய்! 

          என் தாய்ப்பாலில் 

          கலப்படமாய்த் தமிழ்

          இருந்தது என்பதே

          மெய்! " (ப.33)      என்கிறார். 

          "அம்மா! 

           உன் கண்களை

          என் இமைகளாக்குவாய்! 

           என் கண்களால்

           நீ உறங்குவாய்! 

           இது என்ன தாய்மையின்

           கண்ணாமூச்சியா?! " (ப37) 

          " கடவுளைப் பார்த்து

           கன்னத்தில் போட்டுக் கொள்ளச்   

           சொல்லுவாய்!    

           கன்னத்தில் போடுவேன் 

           ஓரக்கண்ணால் உன்னைப்

           பார்த்து! "(ப.46) 

இப்படி ஒரு சில கவிதைகள் மட்டுமே அல்ல அனைத்தும் எளிய தமிழில் அழகியலுடன் கூடிய பாசப் பிரபஞ்சத்தைப்   படைத்து நமக்குத் தந்துள்ளார். 

   இன்னொரு கவிதை சொல்லியே ஆகவேண்டும். மீதி கவிதைகளை நீங்கள் ஒரு நூலை வாங்கிப் படித்து அறிந்து கொள்ளுங்கள்

        "அம்மா அன்று நம் 

         கிராமத்து வீட்டில் 

         மாவரைக்கும் எந்திரம் 

         சலவை எந்திரம் 

         குளிர்சாதனப்பெட்டி 

         மின்சார அடுப்பு

         எரிவாயு அடுப்பு  

        என்றெதுவுமில்லை     

         நீயே எல்லா வேலைகளையும்

         முடித்து விட்டு   எங்களோடு   

          வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு     

          இருப்பாய்!   

           இன்று எல்லா   

           எந்திரங்களும் என் வீட்டில் உண்டு.

           ஆனால் உன் போல்   

            பிள்ளைகளோடு பேசிக் 

           கொண்டிருக்க முடியாமல்

           என் வாழ்க்கை 

            எந்திர மயமாகி

            விட்டது! (பக்78& 79)  

என்று எந்திரமயமாகிப்போன இன்றைய மனித வாழ்வில்

இதுபோன்ற வாழ்வியல் அனுபவங்களை எதார்த்தமான சொற்களின் தூரிகை கொண்டு எழுதியுள்ளார்.. வாழும் போது தன் மகனால் எழுதப்பட்ட 'தொட்டிலோசை' கேட்டு மகிழும் வாய்ப்பு பெற்ற நெல்லை ஜெயந்தாவின் தாயார் திருமதி லெட்சுமி அம்மையார் கொடுத்து வைத்தவர். 

ஈன்றபொழுதினும் பெரிது மகிழ்வார்கள் என்பது திண்ணம். 

                  

 நூல் தேவைக்கு;

வாலி பதிப்பகம் சென்னை.89 வெளியீடு

9940508595

                                                                       ---------------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News