கல்லூரி நாள் விழா

 

திருச்செந்தூர் 

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி 

கல்லூரி நாள் விழா



திருச்செந்தூர்:

“மாணவிகள் திறமையை வளர்த்துக் கொண்டால் உயர்ந்த பதவியை அடைய முடியும்” என்று திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழாவில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் பேசினார்.

கல்லூரி நாள் விழா

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் நேற்று 11-ம் ஆண்டு கல்லூரி நாள் விழா நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திறமையை வளர்த்து...

கொரோனா தொற்று அதிகம் இருந்த காலக்கட்டங்களில் மாணவிகளாகிய நீங்களும், மருத்துவ துறையில் பணியாற்றும் நாங்களும் அதிக அளவு உழைத்தோம். அதனால்தான் சில உயிர்களை இழந்தாலும், பல உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.
நீங்கள் கல்லூரியில் படிக்கும் போதே பல சேவைகளாற்றி வருகிறீர்கள். அதற்கு கடவுள் உங்களுக்கு பல வளங்களை வழங்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாணவிகளாகிய நீங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பெரிய பதவிகளில் இருக்க முடியும். செவிலியர்களின் பணி மகத்தானது. இந்த கல்லூரியில் படித்த நீங்கள், செல்லும் இடங்களில் எல்லாம் தாங்கள் படித்த நிறுவனத்தின் பெயரையும், பெற்றோர்களின் பெயரையும், நம்முடைய பெயரையும் காப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி முதல்வருக்கு தங்க பதக்கம்

பின்னர் அவர், முனைவர் பட்டம் பெற்ற கல்லூரி முதல்வருக்கு தங்கப்பதக்கமும், பாடப்பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக தேர்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.
முன்னதாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், சிறப்பு விருந்தினர் டாக்டர் பொற்செல்வனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயகுமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஒய்ஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், டாக்டர்கள் மெர்வின் தேவதாசன், அம்பிகாபதி திருமலைச்சாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணியன், சேது குற்றாலம் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.  கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி நன்றி கூறினார்.
--------------
நன்றி:

 தினத்தந்தி 




Post a Comment

புதியது பழையவை

Sports News