தினத்தந்தியின் வெற்றி - தமிழர்களின் வெற்றி

தினத்தந்தியின் வெற்றி - தமிழர்களின் வெற்றி
– நெல்லை கவிநேசன்


தமிழர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து தமிழை வளர்த்த ஒரு சிறந்த நாளிதழ் “தினத்தந்தி” ஆகும். பாமரர்களும் படித்து, புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிய தமிழில் செய்திகளை வெளியிட்ட முதல் நாளிதழ் "தினத்தந்தி" என்பது குறிப்பிடத்தக்கது. "தினத்தந்தி, தமிழின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எந்த அளவுக்கு உதவி இருக்கிறது" என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டாலும், அறிஞர்கள் பார்வையில் “தினத்தந்தி” செய்துள்ள மகத்தான சாதனைகளை இப்போது பார்ப்போம்.

1942ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆவது நாள் மதுரையில் “தந்தி” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு, நவம்பர் 1ஆம் தேதி அது வெளிவந்தது. பின்னர் - சென்னை, சேலம் ஆகிய இடங்களில் பதிப்புகள் தொடங்கப்பட்டு 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தினத்தந்தி’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இப்போது சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சாவூர், திண்டுக்கல், திருப்பூர், புதுச்சேரி, பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களிலிருந்து வெளிவருகிறது. மேலும், துபாய் மற்றும் கொழும்பு ஆகிய நாடுகளிலிருந்தும் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.


கலைஞர் வாழ்த்து

"முன்பெல்லாம் “தந்தி” வந்தால்
பட்டிக்காட்டார் பதறிப்போய் அது
என்னவென்று அறிவதற்குத் துடியாய்த்
துடிப்பார் - இன்றோ
கண்ணிரண்டை விரித்தவாறு
கடையண்டை கூடுகிறார் “தந்தி”வரும்; திசைநோக்கி"
- என்று கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வாழ்த்தப்பெற்றது தினத்தந்தி நாளிதழ் ஆகும்.

“மனிதனுக்கு இளமை குன்றும்.  ஆனால், செய்தித்தாள் என்றும் இளமையோடு இருக்க வேண்டும்” என்ற அற்புத கருத்தை மக்களுக்குச் சொன்னவர் தினத்தந்தியை உருவாக்கிய தமிழர்தந்தை சி.பா.ஆதித்தனார் ஆவார்.


பேரறிஞர் அண்ணாவின் பார்வையில்…

பேரறிஞர் அண்ணா அவர்கள் “தினத்தந்தியின் வெற்றிக்குக் காரணம் என்ன?” என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்கள். மேலும் – "தினத்தந்தியைப் போலவே வேறு எந்தப் பத்திரிகையாவது செய்திகளை வெளியிட முயற்சி செய்தால், அவர்களுக்கு என்ன நேரிடும்?" என்பதையும் அறிஞர் அண்ணா இப்படி குறிப்பிடுகிறார்.

“எந்தப் பத்திரிகையாவது தினத்தந்தியிலே வருகிற தலைப்பையே போட்டு நாமும் பத்திரிகை விற்பனையை அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணுவார்களேயானால், என்னுடைய நண்பனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் அவர்களுக்கும் ஏற்படும். ஏனென்றால், தலைப்பு மட்டுமல்ல, அந்தப் பத்திரிகையினுடைய வெற்றிக்குக் காரணம்; செய்திகளில் சூடு இருப்பது மட்டுமல்ல, அந்தப் பத்திரிகையின் வெற்றிக்குக் காரணம்; உடனுக்குடன் செய்திகளைத் தருவது மட்டுமல்ல அந்தப் பத்திரிகையின் வெற்றிக்குக் காரணம்; எதை, எந்த முறையில் அமைத்தால் பெரும் நட்டம் ஏற்படாமல் இருக்கும்? என்ற வியாபாரத்திறமை மட்டுமல்ல, அந்தப் பத்திரிகையின் வெற்றிக்குக் காரணம்; இந்த அத்தனையும் சேர்ந்த ஒட்டு மொத்த
ம்தான் அந்தப் பத்திரிகையின் வெற்றிக்கு காரணமே தவிர, வேறொன்றுமில்லை” என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்து ஆகும்.

காரணம் என்ன?

ஒருமுறை நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் “தமிழர்  தந்தை” சி.பா.ஆதித்தனார் அவர்களை தினத்தந்தி அலுவலகத்தில்  நேரடியாக சந்தித்தார். அப்போது “தினத்தந்தியை நீங்கள் நடத்துவதன் காரணம் என்ன? எனக் கேட்டார். அதற்கு தமிழர் தந்தை “சாதாரணமாக தங்களுக்குத் தெரிந்ததைப் பிறருக்கு சொல்லுவதற்காக பத்திரிகைகளை நடத்துவார்கள். சிலர் என்ன நடந்ததோ, நடந்ததை எடுத்துச் சொல்வதற்கு இதழ்கள் நடத்துவார்கள். சிலர் மக்கள் எதை எதிர் பார்க்கின்றார்களோ, எதை விரும்புகிறார்களோ அதற்காகப் பத்திரிகை நடத்துவார்கள். நான் மூன்றாவது சொன்ன பத்திரிகையை நடத்தத்தான் முன் வந்திருக்கின்றேன்” என்றார்.

தமிழரின் வெற்றிக்கு காரணம்…

“எனக்குப் பாகற்காய் கூட்டு, வெண்டைக்காய் சாம்பார்தான் பிடிக்குமென்றால் வாசகர்களுக்கும் அதுதான் பிடிக்கும். அதைத்தான் விரும்புவார்கள் என்று நினைப்பது தவறு. அவர்களுக்கு வெங்காய சாம்பார்தான் பிடிக்குமென்றால் அவர்களுக்குப் பிடிக்காத பாகற்காய் குழம்பை நான் சமைத்துப்போட்டால் சமையலும் வீண்: சாப்பிடுகிறவர்களுக்கும் திருப்தி இருக்காது. ஆகவேதான் மக்களுடைய விருப்பத்தை அறிந்து பத்திரிகை நடத்துகின்றேன்” என்று தமிழர் தந்தை அவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் விளக்கினார்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தினத்தந்தி நாளிதழ் தமிழின் வளர்ச்சிக்கு எந்த அளவிற்குப் பயன்பட்டது? என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

“தமிழின் வளர்ச்சிக்காக, தமிழனுடைய நல்வாழ்வுக்காக, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, எந்த முயற்சியை அல்லது எந்தக்கிளர்ச்சியை யார், எப்பொழுது நடத்தினாலும், அதற்கெல்லாம் இந்தத் “தினத்தந்தி” துணையாக நின்றிருக்கிறதே தவிர, தொந்தரவாக இருந்தது கிடையாது என்பதை நான் அனுபவித்து இருக்கின்றேன். எல்லை கிளர்ச்சிகளை நான் எடுத்து நடத்தியபோது அதிலே நாம் வெற்றிபெற முடிந்தது என்றால் அதற்குத் தினத்த
ந்தியினுடைய உதவி பேரூதவியாக அமைந்து இருந்தது என்பதை நான் நன்றாக பார்த்திருக்கிறேன்” என அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொன்னவர் சிலம்புச் செல்வர்.

தமிழரின் குரல்

தமிழ்ப்பேரறிஞர் டாக்டர்.மு.வரதராசனார் அவர்கள் “தினத்தந்தி தமிழுக்காகக் குரல் கொடுக்கின்ற ஒரே பத்திரிகை” என்று பாராட்டியிருக்கிறார். அவர் தினத்தந்தியின் சிறப்பைச் சொல்லும்போது “தினத்தந்தி” பத்திரிக்கை - தமிழ்நாட்டிற்கு ஏதேனும் இன்னல் என்று வரும்போது, தமிழ்மொழிக்கு இடையூறு என்று வரும்போது தயங்காமல் குரல் கொடுக்கின்ற ஒரு பத்திரிகை. ஒரு நாட்டுத்தொண்டன், மொழித்தொண்டன், கடமை உணர்ச்சியோடு குரல் கொடுப்பதைப்போல, இந்தப்பத்திரிக்கை என்றென்றும் குரல் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறது. அதற்காக நாமெல்லாம் நன்றி உணர்ச்சியோடு கடமைப்பட்டிருக்கின்றோம்” என தினத்தந்தி சேவையைப் பாராட்டியுள்ளார்.

தினத்தந்தியின் தமிழ்

‘தினத்தந்தியின் தமிழ்’ பற்றி தமிழர்தந்தை கொண்டுள்ள கருத்து சற்று வித்தியாசமானது ஆகும். அதுபற்றி தமிழர் தந்தை குறிப்பிடும்போது “தினத்தந்தியின் தமிழ்” என்று ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு நான் விளக்கம் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். நாள் இதழ் என்பது ஓர் இலக்கிய ஏடு அல்ல. திருக்குறள் அல்ல. அந்த அளவுக்கு நாங்கள் திருக்குறள் தொடங்கவில்லை. நாளிதழ் என்பது எது மாதிரி என்றால் காலையில் பூத்து, மாலையிலே வாடிப்போகும் மலரைப் போன்றது. நாளிதழை அவசர அவசரமாக படிக்க வேண்டி இருக்கிறது என்று மாண்புமிகு அமைச்சர்கள் முத்துசாமியும், நெடுஞ்செழியனும் சொன்னார்கள். அவர்கள் வீட்டில் இருந்து கோட்டைக்குப்போகிற வழியில் காரில் படித்து முடித்துவிடும் அளவுக்கு தினத்தந்தி இருக்கிறது. அதிலே இலக்கியத்தைப் புகுத்தத் துணிந்தால் என்ன ஆகும்? என்று நினைத்துப் பாருங்கள். “மதுரைக்குப் போகிறேன்” என்று எழுத முடியுமே தவிர “நான்மாடக்கூடலை நண்ணினேன்” என்று எழுதினால் என்ன ஆகும்?

‘தினத்தந்தி தமிழ்’ என்பது பேசுகின்ற தமிழ் பேச்சுத் தமிழ் - உயிர்த் தமிழ். இப்போது சிறப்பாகக் கருதப்படவில்லையானாலும் ஆங்கில இலக்கிய வரலாற்றைப் பார்க்கும்போது ஒரு காலத்தில் ஆங்கிலம் அப்படித்தான் இருந்தது. 16ஆவது நூற்றாண்டில் எழுத்து வழக்கை மட்டுமே ஆங்கிலம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பேச்சுவழக்குத்தான் ஆங்கிலத்துக்கு வளத்தையும், வளர்ச்சியையும் கொடுத்திருந்தது. அதேபோல் பேச்சுத் தமிழ், உயிர்த்தமிழ்தான் என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் சொல்வார்கள். அப்போது தினத்தந்தி எழுதுவது நல்ல தமிழ் என்று கூறுவார்கள். இதை எண்ணியே நான் ஒருவாறு என்னை மனநிறைவு செய்துகொள்ள விரும்புகிறேன்” – என தமிழர் தந்தை தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.


தினத்தந்தியின் லட்சியம்


மேலும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தியின் இலட்சியம் என்ன? என்பதை கூறும்போது, “ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகத்திலும் பத்திரிகை தொடங்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி சொன்னார். இது ஒரு நல்ல கருத்து. ஆனால், அங்கேயும தினத்தந்தி போன்ற பத்திரிக்கை தொடங்க வேண்டுமானால் ஓர் இலட்சியம் இருக்க வேண்டும், வெறுமனே அதிலே சம்பாதிப்பதற்கு என்று யாராவது கருதினால் அது என்னையோ அல்லது என் குடும்பத்தையோ அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருளாகும். நீங்கள் யாராவது ஏதோ “தினத்தந்தி”க்கு விற்பனை ஒன்றுதான் அதன் இலட்சியம் என்று எண்ணிக்கொண்டு இருந்தால் அது தவறு, என்பது அதைத்தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்றைக்காவது தமிழுக்கு எதிராக ‘தினத்தந்தி’ போயிருக்கிறதா? அல்லது தமிழ் இனத்திற்கு எதிராக எழுதியிருக்கின்றோமா? அல்லது தமிழ்நாட்டுக்கு அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக என்றைக்காவது ஒருநாள் தினத்தந்தி எழுதி இருக்குமா? எழுதி இருக்காது. “தினத்தந்திக்கு ஓர் இலட்சியம் இருப்பதால்தான் தொடர்ந்து நடத்த முடிந்தது” என்று குறிப்பிடுகிறார்.

ஆதித்த சூரியன்
கவியரசு வைரமுத்து அவர்கள் தினத்தந்தியைப்பற்றி எழுதிய கவிதையில் –
“இந்த
  ஆதித்த சூரியன்
  உதித்த பிறகுதான்
  ஆகாயச் சூரியனே
  உதிக்கிறது!” 
– என்று தினத்தந்தியின் சிறப்பைக் குறிப்பிட்டிருக்கின்றார்.


முதல் ஏடு

தினத்தந்தியைப்பற்றி நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் “எளிமையும், இனிமையும் நிறைந்த பைந்தமிழைப் பாமரரும் படித்து மகிழும் வகையில், முன்தோன்றிய முதல் ஏடு “தினத்தந்தி” என்றால் அது மிகையாகாத ஓர் உண்மை” என மகிழ்கிறார்.

பத்திரிக்கை உலகப்புரட்சி

“தமிழ் உலகம் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும் நன்கு உணர்ந்து கொள்ளுமாறு பத்திரிகை உலகில் பெரும் புரட்சியை உண்டாக்கி, தந்தி பேப்பரை படிக்காத தமிழரே இல்லை என்றுகூட சொல்லும் அளவிற்கு செயற்கரிய செயலைச் செய்தவர் ஆனபடியால், தமிழர் தலைவராகத் திகழ்ந்தார்கள்” என திருக்குறள் முனுசாமி அவர்கள் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களைப் பாராட்டியிருக்கின்றார்கள்.

செயற்கரிய செய்த பெரியார்
தந்தை ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் “தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனார் அவர்களை “செயற்கரிய செய்த பெரியார்” எனப் பாராட்டுகின்றார்.

“செயற்கரிய செய்த பெரியார் ஆதித்தனார். யாரும் செய்யாத அரிய செயல்களை அவர் செய்திருக்கின்றார். இதை நான்தான் நன்கு உணர்கின்றேன். முன்பு தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை கிடையாது. ஒருசிலர் ஆரம்பித்த பத்திரிகைகளும் தலைதூக்க முடியாமல் அழிந்தன. ஆதித்தனார் ஒரு பத்திரிகை தொடங்கினார். மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாக வேரூன்றிவிட்டது. இது எவ்வளவு பெரிய செயல் என்று எனக்குத்தான் தெரியும். நாமும் பத்திரிகை நடத்தலாம் என்ற துணிவை மற்றவர்களுக்குக் கொடுத்தவர் ஆதித்தனார்தான். ஆகவேதான் ஆதித்தனாரை செயற்கரிய செய்த பெரியவர் என்று சொல்லுகின்றேன்” என தந்தை பெரியார் கூறினார்.

“எளிய மக்கள் மட்டும் அல்ல: ஆங்கிலப் பத்திரிகை படிக்கிற எல்லோருக்கும் தினத்தந்தியையும் சேர்த்துப் படித்தால்தான் திருப்தி என்ற நிலை: இதுவும் தினத்தந்தியின் வளர்ச்சியில் ஒரு சாதனை” என ஆனந்த விகடன் இதழின் முன்னாள் பத்திரிக்கை ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.


முயற்சியின் முத்திரை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தினத்தந்தியின் வளர்ச்சிபற்றி தெளிவுபடுத்தும்போது “தினத்தந்தியின் மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக, மூலகாரணமாக அமைந்தவர் ஆரம்பகட்டத்தில் அதற்கு உரிமையாளரான உயர்திரு.ஆதித்தனார் அவர்கள். நிலையான வளர்ச்சி என்பது என்னவென்று நான் என் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். காற்றிலே எம்பும் காகிதமாக, புயலிலே உச்சிக்கு வந்துவிடுவது வளர்ச்சியல்ல. காற்று அடங்கியதும் காகிதம் கீழேவிழுந்துவிடும் என்பது மறுக்க முடியாதது. ஆனால், ஆரம்பகாலத்திலேயே குறுக்கிட்ட இன்னல்களைச் சமாளித்து எதிர்ப்புகளுடன் போராடி, இரவு-பகலாக உழைத்து, ஒவ்வொரு நாளும் பத்திரிரக்கை கொண்டுவருவதை ஒரு வெற்றியாகக்கருதி, கொஞ்சம் கொஞ்சமாக, அணுஅணுவாக உயர்ந்து, உழைப்பின் சின்னமாக இன்று “தினத்தந்தி” விளங்குகின்றது என்று நான் அறிவேன். இது நிலையான வளர்ச்சி. இதற்கு இறக்கம் என்பது என்றுமே கிடையாது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஆகவே “தினத்தந்தி” புயலில் பறந்த காகிதமல்ல – முயற்சியின் முத்திரை!” என்றார்.

எளிமையின் இலக்கணம்
எழுத்தாளர் சுஜாதா அவர்கள், “திரு.ஆதித்தனாரால் துவக்கப்பட்டு அவர் குடும்பத்தினரால் சிறப்பாகத் தொடரப்படும் “தினத்தந்தி” தமிழ்நாட்டில் ஒரு மவுனமான புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை இப்போது எல்லோரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். செய்தி பத்திரிகை படிப்பது மெத்தப் படித்தவர்கள் மட்டும் செய்கின்ற காரியம் என்பது போய்விட்டது. சற்றே தமிழ் தெரிந்தவர்களும் படிக்குமாறு தமிழை எளிமைப்படுத்தி, கொஞ்சம் பரபரப்பு சேர்த்து, குழப்பம் இல்லாத வகையில் செய்திதரும் உத்தியைத் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் முதலில் கொண்டுவந்தவர் ஆதித்தனார்தான்” என்று தமிழர் தந்தை ஆதித்தனார் அவர்களின் சிறப்பைப் பாராட்டுகிறார்.

துணிச்சலுக்கு அடையாளம்
“திரைப்பட இயக்குநர் பாரதிராஜா “தினத்தந்தியின் இன்றைய வளர்ச்சி நிலைபற்றி சுட்டிக்காட்டும்போது, “தந்தை தொட்ட பணியைத் தலைமேல் கொண்டு நடத்துவது மட்டுமில்லாமல் அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நிறுவனத்தை நடத்தும் மேன்மைமிக்கவர், பா.சிவந்தி ஆதித்தனார். எழுத்துக்கோர்க்கவும் தெரியும்: எழுத்துவகை அளவும் தெரியும் என்று நிரூபித்து, நிலைத்து, நிமிர்ந்து நிற்பவர் சிவந்தியார். சில ஆண்டுக்குமுன் சீர்திருத்தத் தமிழில் நடைமாற்றம் கொண்டுவந்தது அவரது துணிச்சலுக்கு அடையாளம். திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் உலக அனுபவமும், விளையாட்டுத்துறையில் அவரது ஆர்வமும், இன்று தினத்தந்தியை சர்வதேச தரமிக்க பத்திரிரக்கையாக ஆக்கியிருக்கிறது. இன்று பங்கு மார்க்கெட், தொலைக்காட்சி, விமர்சனங்கள், விளையாட்டுத்துறைச் செய்திகள், செய்தி விமர்சனக்கட்டுரைகள் என்று பல புதிய பகுதிகள் “தினத்தந்தியில்” தொடங்கப்பட்டிருப்பது, காலத்தோடு நடைபோடத் தயங்காத பத்திரிக்கை “தினத்தந்தி” என்பதற்கு எடுத்துக்காட்டு” என புகழாரம் சூட்டுகிறார்.

2 கோடியே 40 லட்சம் வாசகர்களைக்கொண்டு தமிழகத்தில் வெற்றி உலாவரும் தினத்தந்தி தமிழர் வாழ்வில் இரண்டறக்கலந்த இனிய நாளிதழாகும். இந்த தினத்தந்தியின் வெற்றி தமிழர்களின் வெற்றி என்பதை யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியாது.

தற்போது தினத்தந்தி அதிபர் திரு.எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் தினத்தந்தி, ஊடகத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. உலக நாடுகளிலும் பவனிவரும் தினத்தந்தி உலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கும் தன்னிகரற்ற சிறந்த ஊடகமாக திகழ்ந்து வருகிறது.

மேலும் : nellaikavinesan.com, https://twitter.com/nellaikavinesa1

2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News