குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் - தசரா திருவிழா 2019

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்  திருக்கோயில்
அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்  உடனுறை 
அருள்தரும் முத்தாரம்மன்திருக்கோயில்

உலகப் புகழ்பெற்ற ஆலயங்களில் மிகச்சிறந்த ஆலயமாகத் திகழ்வது “குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்  உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்” ஆகும். 

அமைவிடம்

இந்த ஆலயம் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படும் மைசூர் தசரா திருவிழாவைப்போலவே, மிகச்சிறப்புடன் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. 

பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்துவரும் அற்புத தெய்வமான அருள்மிகு முத்தாரம்மன் ஆலயம் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 

பெயர்க் காரணம்

குலசேகரன்பட்டினம் என்னும் திருப்பெயர் வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மாமன்னன் குலசேகரப் பாண்டியனிடம் நேரில்வந்து இங்குள்ள முத்தாரம்மன் திருக்காட்சி அருளியதால், இந்த ஊருக்கு “குலசேகரப்பட்டணம்” என்னும் பெயர் உருவானது என்றும் சிலர் கூறுகிறார்கள். 

உடலில் ஏற்படும் அதிக வெப்பத்தால் தோன்றுகின்ற முத்துப்போன்ற சிறிய புண்களை குணப்படுத்துவதால் ‘முத்தாரம்மன்’ என்று இங்குள்ள அம்மைக்கு பெயர் ஏற்பட்டது என்றும் சிலர் கருதுகிறார்கள். கண்ணைப் பறிக்கும் முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால், இந்தத் தெய்வத்திற்கு ‘முத்தாரம்மன்’ என்ற பெயர் நேரிட்டது என்பதும் சிலரது கருத்தாகும். 

மிகப்பெரிய கொடிய செயல்களிலிருந்து பக்தர்களைக் காப்பதால், குலசை முத்தாரம்மன் திருக்கோயில் உலக அளவில் புகழ்பெற்று திகழ்கிறது. புத்தி சுவாதீனம் அடைந்து மனநோயால் பாதிக்கப்பட்ட மக்களும், இங்குள்ள முத்தாரம்மனை வழிபட்டு நோய் குணமாகி செல்கிறார்கள். 

இந்த மனித வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ‘புதன்’ ஆகும். கன்னி ராசியில் புரட்டாசி மாதத்தில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், தொழிலில் அபிவிருத்தி ஏற்படுவதற்கும், மனநிலையில் நல்ல மாற்றம் உருவாகுவதற்கும் அடிப்படை அதிபதியாக ‘புதன்’ அமைந்துள்ளார். 

வேண்டியது நிறைவேறும்

புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வது மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எனவேதான், இந்தச் சிறப்புமிக்க காலத்தில், புரட்டாசி மாதத்தில் மனமுருகி அம்மனை வழிபட்டால், வாழ்வில் மேன்மைகள் நிறையும். அன்னையிடம் கேட்ட அத்தனை வேண்டுதல்களும் நிறைவேறும். 

பக்தியுடன் நினைத்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் எண்ணியபடி நன்மைகள் கிடைக்கும். இதனால்தான், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவிற்கு எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் இலட்சக்கணக்கில் வந்துகூடுகிறார்கள். 



முதல்நாள் திருவிழா 
(29.09.2019 ஞாயிற்றுக்கிழமை)

தூத்துக்குடி மாவட்டம் குரசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இத்திருவிழாவின் முதல் நாளான 29.09.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட யானையின்மீது திருவிழா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதன்பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் கடலில் புனித நீராடி, கோவில் அர்ச்சகரிடம் காப்பு கட்டிக்கொண்டனர். 




முதல்நாள் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் காப்புக் கட்டிச் சென்றனர். பின்னர், பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்க புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் நீராடி புனித நீர் எடுத்துச் சென்றனர். 

முதல்நாள் திருவிழாவில், முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அப்போது, முத்தாரம்மனின் திருக்கோலம் துர்க்கையின் வடிவமாக அமைந்திருந்தது.

Post a Comment

புதியது பழையவை

Sports News