வெற்றி படிக்கட்டுகள் - தொடர்-6 - தயக்கம் தவிர்போம்...

வெற்றி படிக்கட்டுகள்
தொடர் - 6
"தமிழக மாணவர் வழிகாட்டி" மாத இதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் தொடர் "வெற்றி படிக்கட்டுகள்". அந்தத் தொடர்க் கட்டுரையின் முழு வடிவத்தை இப்போது காணலாம்.


6. தயக்கம் தவிர்போம்...

திடீரென செல்போன் சிணுங்கியது. 

எதிர்முனையில் என்னிடம் படித்த கல்லூரி மாணவனின் தந்தை அழைத்தார். 

“சார்... நீங்கள்தானே நெல்லை கவிநேசன். நான் உங்கள் மாணவன் சுந்தரத்தின் தந்தை பேசுகிறேன்” - என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரது பிரச்சினையையும் அறிமுகப்படுத்தினார்.

“இப்போது என் மகன் சுந்தரம் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டான். திடீரென போனவாரம் என்னிடம் வந்து, நான் எம்.பி.ஏ., படிக்கப் போகிறேன் என்று சொன்னான். மூன்று வருடமாக தனது மேற்படிப்புப்பற்றி எதுவும் பேசாதவன் இன்று இப்படிச் சொல்கிறான். நான் என்ன செய்யலாம்?” - என்று கேள்விக் கொக்கியை வீசினார் அப்பா. 

“அய்யா... இது உங்கள் மகனின் வாழ்க்கை. செல்போனில் பேசி எளிதில் முடிவெடுக்க முடியாது. அதுவும் உங்கள் பையன் அருகில் இல்லாமல் கண்டிப்பாக ஆலோசனைகளை என்னால் தர இயலாது” என்று சொல்லிப் பார்த்தேன். 

அவர் கேட்டபாடில்லை. மீண்டும் தொடர்ந்தார். 

“சார்... நம்ம ஊரைச்சுற்றி எத்தனையோ காலேஜ்ல எம்.பி.ஏ., படிப்பை நடத்துறாங்க. இவன் கோயம்புத்தூரில்போய் எம்.பி.ஏ., படிக்கணும்னு சொல்றான். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் பிரண்ட்ஸ் எல்லாம் கோயம்புத்தூரில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று மந்திரம்போட்டு அவனை குழப்பிவிட்டார்கள். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இப்போதுள்ள பிள்ளைகள்கிட்ட எதைச் சொன்னாலும் குற்றமாகிவிடுகிறது” என்று தனது வேதனையையும், அதைத்தொடர்ந்து நிழலாடும் சோதனையையும் தெளிவாக்கினார்.

எனக்குள் வருத்தமாக இருந்தது. 

ஒரு கிராமப்புறத்தந்தையின் வேதனையை என்னால் உணர முடிந்தது. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமத்தில் வாழும் அவரை, மகனை அழைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொன்னேன். 

சில மணிநேரங்கள் பஸ் பயணத்தை முடித்துவிட்டு, தனது மகன் சுந்தரத்தோடு வந்தார் அவர். 

மாணவன் சுந்தரம் குழப்பத்தின் உச்சியில் இருப்பதை அவனது முகம் வெளிச்சம்போட்டுக் காட்டியது. 

“சுந்தரம் எம்.பி.ஏ., படிக்க விரும்புகிறீங்களா?” என மெதுவாகக் கேட்டேன். 

“ஆமாம் சார். எம்.பி.ஏ., படிப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம்”- என்றான் சுந்தரம். 

“தம்பி... உங்கள் இலட்சியம் மிகவும் உயர்ந்தது. உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், எம்.பி.ஏ., படிக்க வேண்டுமென்று எப்போது நீங்கள் முடிவு செய்தீர்கள்?” எனது கேள்வி அவனை சிந்திக்க வைத்தது. 

“சார்... நான் பிளஸ் டூ படிக்கும்போதே முடிவுசெய்துவிட்டேன். எம்.பி.ஏ., படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்று எங்கள் பள்ளியின் காமர்ஸ் டீச்சர் சொன்னாங்க. அதனால் அப்போதே எம்.பி.ஏ.,மீது தீராத ஆசை” என்றான். 

சுந்தரம் தனது இலட்சியத்தை தெளிவாக்கினான்.

"உங்கள் வாழ்க்கை இலட்சியத்தைப்பற்றி உங்கள் அப்பாவிடம் சொன்னீர்களா? உங்கள் குடும்பத்தில் யாரிடமாவது தெரிவித்திருக்கிறீர்களா? உங்கள் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறீர்களா? ஆசிரியர்களிடம் கலந்து பேசியிருக்கிறீர்களா?” என்ற எனது தொடர் கேள்விகளுக்கு “இல்லை” என்ற ஒரே பதிலைத்தந்து அமைதி காத்தான் சுந்தரம். 

“சார்... எம்.பி.ஏ., படித்தால் வேலை கிடைக்குமா?. கோயம்புத்தூரில் நண்பர்களோடு படித்தால்தான் சந்தேகங்களை கேட்டுத் தெளிவாக்கி பர்ஸ்ட் கிளாஸ்ல் பாஸ் ஆகலாம் என்கிறான். இது உண்மையா?” மகனின் விருப்பத்தைப் புரியாத தந்தையாக குழம்பினார் அவர். 

“சுந்தரம், உங்கள் விருப்பம் நல்லதுதான். எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா? அதில் எத்தனை சதவிகித மதிப்பெண்கள் பெற்றீர்கள்?” என்ற எனது கேள்விக்கு சுந்தரத்தின் தந்தை பட்டென பதில் தந்தார். 

“சார்... இப்போ எம்.பி.ஏ., படிப்பில் நுழைவுத்தேர்வு இல்லாமலேயே அந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்கிறார்களாம். அதற்கு டொனேஷன் கொடுத்தால் போதும்” என்று இப்போதுதான் சொல்கிறான். நான் என் மகள் திருமணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். விவசாயத்தொழில் இப்போது இலாபகரமாக இல்லை. நானே பணக் கஷ்டத்தில் இருக்கிறேன். இவன் இந்தநேரத்தில் இப்படிச் சொன்னால் நான் எங்கு போவேன்” என்று சொல்லிக்கொண்டே பொங்கிவந்த அழுகைக்கு தடைப்போட்டுத் தோற்றார். 

“சுந்தரம் உங்கள் குடும்பத்தின் நிதிநிலையைப்பற்றி நீங்கள் சிந்தித்தீர்களா? அப்பாவின் வேதனையைப் புரிந்துகொண்டீர்களா?. இந்தச்சூழலில் 45 சதவீதம் மதிப்பெண்களைப்பெற்ற உங்களால் எம்.பி.ஏ., படிக்க முடியுமா? கோயம்புத்தூரில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?” என நான் கேட்டபோது சுந்தரத்தால் பதில் சொல்ல முடியவில்லை. 

நீண்டநேர ஆலோசனையோடுகூடிய கலந்துரையாடலுக்குப்பின்பு, பல்கலைக்கழகத்தில் ‘டான்செட்’ (TANCET) நுழைவுத்தேர்வு எழுதி எம்.பி.ஏ., படிப்பில் சேர முடிவு செய்தான் சுந்தரம். 

சுந்தரம் வாழ்வில் பிரச்சினை வர காரணம் என்ன? 

பிளஸ் 2 படிக்கும்போதே தனது இலட்சியத்தை முடிவுசெய்த சுந்தரம், பெற்றோரிடம் தனது எதிர்காலத் திட்டம் பற்றிய விளக்கங்களை தெரிவிக்காமல் இருந்ததுதான் இப்போதைய பிரச்சினைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

“எம்.பி.ஏ., படிக்கப் போகிறேன்” என அப்பாவிடம் சொன்னால் மறுப்பார்கள். மற்றவர்களிடம் சொன்னால் அப்பாவிடம் தெரிவிப்பார்கள். நண்பர்களிடம் சொன்னால் சிரிப்பார்கள்” என்று தனக்குத்தானே எண்ணி, தனது முடிவை மற்றவர்களிடம் தெரிவிக்கத் தயங்கினான் சுந்தரம். 

ஏராளமான இளைஞர்கள் தாங்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை தெளிவான முறையில் பிறரிடம் தெரிவிக்கத் தயங்குவதால், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். எனவேதான், “அசெர்ட்டிவ் கம்யூனிகேஷன்” (Assertive Communication) என்பது இன்றைய காலகட்டத்தின் முக்கியமான தேவை என்று உளவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். 

ஒருவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்போது தனது உரிமைகளையும் மற்றவர்களது உணர்வுகளையும், உரிமைகளையும் பாதிக்காத அளவுக்கு வெளிப்படுத்தும் திறன் பெற்றிருந்தால் அதனை “உறுதியான தகவல்தொடர்பு” (Assertive Communication) என அழைக்கிறார்கள்.

தனது உணர்வை வெளிப்படுத்தத் தெரியாமலும், தனக்குள்ள உரிமையை தந்தையிடம் நிலைநாட்ட அறியாத காரணத்தினாலும், மாணவன் சுந்தரம் வாழ்க்கையில் சிக்கல்கள் உருவானது. 

தனது தந்தையிடம் நேரடியாகவே திறந்த மனதோடு உண்மை நிலையைத் தெரிவித்து தனது தேவையை பிளஸ் 2 படிக்கும்போதே தெரிவித்திருந்தால், அவனது தந்தை அவன் எம்.பி.ஏ., படிப்பதற்கான செலவுகளை ஏற்க தயார்நிலையில் இருந்திருப்பார். ஆனால், அப்பா என்ன நினைப்பாரோ? என்று பயந்து, நடுங்கி தனது எண்ணத்தை தந்தையிடம் பகிர்ந்துகொள்ளத் தவறிய சுந்தரத்தின் நிலையைப்போல சில மாணவ-மாணவிகளின் நிலையும் மாறிவிடுவதைப் பார்க்கலாம். 

எனவே, பெற்றோர்-பிள்ளைகளின் உறவுகளை வளர்ப்பதற்கு “உறுதியான தகவல்தொடர்பு” என்னும் “அசெர்டிவ் கம்யூனிகேஷன்” (Assertive Communication) தேவை. இதனை வளர்த்துக்கொள்ள சில முயற்சிகளை மேற்கொள்ள பழகிக்கொள்வது நல்லது. இதோ சில வழிமுறைகள்-

சின்னஞ்சிறு வயதிலேயே உங்கள் விருப்பத்தை தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். 
உங்கள் எண்ணங்களைப்பற்றி சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.
“மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ?” என எண்ணி உங்கள் கருத்தை வெளிப்படுத்த தயங்காதீர்கள்.   
உங்கள் கருத்தின்மீது நல்ல நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். 
சிறந்த முறையில் ஆலோசனைசெய்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 
மற்றவர்கள் சரியான முறையில் நடந்துகொள்ளாவிட்டாலும் கோபப்படாதீர்கள். அவர்கள் புரிந்துகொண்டு செயலாற்றும்படி நடந்துகொள்ளுங்கள். 
உங்களுக்கு உதவி தேவைப்படும்போது அதனை மற்றவர்களிடம் கேட்பதற்குத் தயங்காதீர்கள். 
கண்ணோடு கண்பார்த்து நேருக்குநேர் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 
எந்தச்சூழலிலும் வெறுப்பைக்காட்டாமல் நிகழ்வுகளில் ஆர்வத்தைக் காட்டுங்கள். 
கூர்ந்து கவனிக்கப் பழகுங்கள். அப்போதுதான் நீங்கள் சரியான பதிலை வழங்க இயலும். 
வெட்கப்படுதல், சோம்பேறியாக இருத்தல், முடிவெடுக்க முடியாத நிலை, தன்னம்பிக்கையற்ற தன்மை போன்ற தடைகளைத் தாண்டும் விதத்தில் உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். 
மிக வேகமாக செயல்படுவதைவிட, விவேகமான முறையில், நிதானமாக செயல்பட்டு வெற்றி காண முயற்சி செய்யுங்கள். 


பெற்றோர்-பிள்ளைகள் உறவுகள் மேம்பட “உறுதியான தகவல்தொடர்பை” (Assertive Communication) வளர்த்துக்கொண்டால் இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். 

Post a Comment

புதியது பழையவை

Sports News