வெற்றி படிக்கட்டுகள் - தொடர்-4 - தவறுகளை தவிர்ப்போம்...

வெற்றி படிக்கட்டுகள்
தொடர் - 4

தவறுகளை தவிர்ப்போம்...
"தமிழக மாணவர் வழிகாட்டி" மாத இதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் தொடர் "வெற்றி படிக்கட்டுகள்". அந்தத் தொடர்க் கட்டுரையின் முழு வடிவத்தை இப்போது காணலாம்.

வகுப்பில் ஆசிரியர் உறுதியாகச் சொன்னார். 

“நாளைக்கு இந்த ஹோம் ஒர்க்கை செய்துகொண்டு வராதவர்களுக்கு எனது வகுப்பின் உள்ளே வர அனுமதியில்லை” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

ஆசிரியரின் இந்த புதிய முடிவு மாணவர்கள் மத்தியில் பல்வேறு எண்ண அலைகளை எழுப்பியது. 

“வரவர இந்த சார் ரொம்ப மோசமாகிக்கிட்டே வாராங்க. ஹோம் வொர்க், பனிஷ்மெண்ட் என்று பாடா படுத்துறாரு” என்றான் மாணவன் பாலு.

“ஹோம் வொர்க் செய்கிறதுல என்னடா கஷ்டம் இருக்குது? அரை மணிநேரம் ஒதுக்கினால், அத்தனை ஹோம் வொர்க்கையும் செய்து முடித்துவிடலாம்” என்றான் நண்பன் கோபி. 

“வகுப்பில் கணக்குகளை செய்வதற்குப்பதில், வீட்டிற்குப்போய் எழுதச் சொல்வது நமக்கு தண்டனை வழங்குவதுபோல் அல்லவா இருக்கிறது” என்று கோபத்தோடு சொன்னான் கோபாலன். 

“இந்த சாரை இப்படியேவிட்டால் சரிபடாது. நாளைக்கு யாரும் ஹோம் வொர்க் செய்யக்கூடாது” என்று மற்றவர்களையும் மிரட்ட ஆரம்பித்தான் மகேஷ்.

“ஹோம் வொர்க் மட்டும்தான் செய்யச் சொன்னாங்க. இது நமக்கு நல்லதுதானே?” என்றான் பீட்டர். 

இப்படி மாணவர்களுக்குள் குழப்ப நிலை நிலவியது. 

ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு ஏதோ சொல்லி வைத்தார்கள். சிலர் திட்டினார்கள். இன்னும்சிலர் திட்டமிட்டு அவரைப் பழிவாங்க முயற்சிகளை மேற்கொண்டார்கள். 

இதுபோன்ற நிகழ்வுகள் ஒருசில பள்ளிகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. 

மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் போற்றப்படும் குருவை எரிச்சலுடனும், ஏளனமாகவும் பார்க்கும் அவலநிலை இப்போது அதிகமாக அரங்கேறி வருகிறது. 

பள்ளி-கல்லூரிகளில் நிகழும் நல்ல நிகழ்வுகளைக்கூட எதிர்மறை மனப்பாங்கோடு (Negative Attitude) பார்க்கும் மனநிலையில் சிலர் உலாவருகிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எதனால் உருவாகின்றன? என்பதைப்பற்றி சற்று கூர்ந்து கவனித்தால், அதற்கு காரணம் எளிதில் புரியும். 

மனித உடலிலுள்ள முக்கியமான 5 உறுப்புகள் இதற்கு காரணமாக அமைகின்றன. அதாவது - மெய், வாய், கண், மூக்கு, செவி - என்னும் ஐம்புலன்கள் (Five Senses) ஒருவரின் புரிந்துகொள்ளும் திறனை தீர்மானிக்கின்றது. உடலால் உணரப்படும் உணர்வுகளையும், வாயால் உணரப்படும் சுவைகளையும், கண்ணால் பார்க்கப்படும் நிகழ்வுகளையும், மூக்கால் உணரப்படும் வாசனைகளையும், காதால் கேட்கப்படும் தகவல்களையும் அடிப்படையாகக்கொண்டு நாள்தோறும் எண்ணங்கள் மனிதர்கள் மனதில் உருவாகின்றன. 

இந்தக் எண்ணங்களின் அடிப்படையில்தான் சில முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“திடீரென எனக்கு வியர்வை அதிகமாக வருகிறது. தலை சுற்றல்போல் தெரிகிறது” என்று சொல்லிய ரமேஷ், தனக்கு காய்ச்சல் வரும் அறிகுறி தோன்றுவதாக கருதுகிறார். 

“சாம்பாரில் உப்பு குறைவாக இருக்கிறது” என்பதை உணவை வாயில் வைத்தவுடனே புஷ்பா உணர்ந்துகொண்டாள். வாயின் சுவை அவளுக்குள் ஓர் கருத்தை உருவாக்கியது. 

“டி.வி.யில் ஆபாச படமாகப் போடுகிறார்கள்” என்று டி.வி. பார்த்து கருத்தைச் சொன்னாள் கவிதா. கண் பார்வை அவளுக்குள் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது. 

“எங்கோ இருந்து வாசனை வீசுகிறது. நம் நண்பர் ராமநாதன் நன்றாக சென்ட் போட்டிருக்கிறார்” என்று தனது மூக்கால் உணர்ந்த வாசனை உணர்வின்மூலம் நண்பரின் நிலையை எடைபோட்டார் பாஸ்கர். 

“ஊரில் எங்கோ கோவில் திருவிழா நடக்கிறது. காலையிலிருந்து பக்தி பாடல்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்” காதில் விழுந்த ஒலியை வைத்து, என்ன நிகழ்வு நடக்கிறது? என்பதை அசோக் உணர்கிறார். 

ஐம்புலன்கள் தருகின்ற உணர்வுகளின்மூலம் நிமிடத்திற்கு நிமிடம் வெவ்வேறு எண்ணங்களை ஒருவர் தனது மனதிற்குள் உருவாக்கிக் கொள்கிறார். இந்த எண்ணங்கள்தான் அவரின் செயல்பாட்டிற்கு அடிப்படையாக அமைகிறது. 

“வா...” என்று ஒருவரை அழைக்கும்போதே, அந்த அழைப்பை அன்போடு ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு. “மரியாதை இல்லாமல் பேசுகிறார்” என்று கூச்சல்போட்டு எதிர்ப்பவர்களும் உண்டு. இங்கு - ஒரே எழுத்து கேட்பவரின் மனநிலைக்குஏற்ப அர்த்தங்களை மாற்றிவிடுகிறது.

இதனால்தான், ஒருவர் வாழ்க்கையில் ஐம்புலன்கள் தருகின்ற உணர்வுகளை நல்லமுறையில் கையாளப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனை “புலன் உணர்வுப் புரிதல்” (Perception) என்றும் அழைப்பார்கள்.

இளம்வயதில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது புலன் உணர்வுப் புரிதல் அல்லது புரிந்துகொள்ளும் திறனை நல்லமுறையில் சிறந்ததாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்களது எண்ணங்கள் சிறப்பானதாக மாறும்.

ஒருவரின் புலன் உணர்வுப் புரிதல் அல்லது புரிந்துகொள்ளும் திறனை தீர்மானிப்பதில் - அவரின் தேவைகள், பழக்கவழக்கங்கள், கடந்தகால அனுபவங்கள், வாழ்க்கை நெறிகள், மனநிலைகள் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒருவரது நிறைவேறாத தேவைகள் அல்லது எதிர்பார்த்த நோக்கங்கள் ஒருவரின் புலன் உணர்வுப் புரிதலை தீர்மானிக்கின்றன. 

இதைப்போலவே, ஒரு பொருளின் குணம், செயல்பாடுகள், தோற்றம், தகவல் தொடர்புகள் போன்றவைகளும் புலன் உணர்வுப் புரிதல் திறனை நிர்ணயிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன. ஒரு பொருளின் புதுமை, அசைவுகள், அவை எழுப்பும் ஒலிகள், அவற்றின் அளவு, நெருக்கம், ஆகியவையும்  ஒருவரின் புலன் உணர்வுப் புரிதல் திறனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

ஒரு சம்பவம் நிகழும் சூழ்நிலை (Situation) அல்லது சுற்றுப்புறச்சூழல் (Environment) போன்றவையும் புலன் உணர்வுப் புரிதலுக்கு துணை நிற்கின்றன. குறிப்பாக - சமூகச்சூழல், கட்டமைப்புச் சூழல், பண்பாட்டுச் சூழல், அமைப்புச் சூழல் போன்றவைகளுக்கும் புலன் உணர்வு புரிதலுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 

இதன்மூலம், உணர்வுகளைப் புரிந்துகொள்பவர் (Perceiver), புரிந்துகொள்ளுதலை முடிவு செய்யும் பொருட்கள் (Perceived), அதற்கான சூழல்கள் (Situation) ஆகியவை ஒருவரின் புரிதலுக்கு அடிப்படையாக அமைவதை உணர்ந்துகொள்ளலாம். 

தவறாகப் புரிந்துகொள்ளுதல் சிலநேரங்களில் பலரது வாழ்க்கையை சிக்கல் நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. எனவே - புரிந்துகொள்ளும் திறனில் ஏற்படும் தவறுகள் (Errors in Perception) எவை? என்று முதலிலேயே அடையாளம் காண வேண்டும்.

ஒரேயரு காரணியை வைத்துக்கொண்டு ஒருவரது குணநலன்களை கணிப்பது பலநேரங்களில் தவறான முடிவாக மாறிவிடும். 

கோவிலில் அன்னதானம் செய்ய வேண்டுமென்று விரும்பி, தனது வேண்டுதலை நிறைவேற்றினார் பத்மநாபன். அவரை சிலர் ‘அன்னதான பிரபு’ என்று புகழ்ந்தார்கள். வேறுசிலர் ‘போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆசாமி’ என்று அவரை போட்டுத் தாக்கி நோகடித்தார்கள். 

“இவர் எப்போதும் இப்படித்தான். மாதந்தோறும் ஒரு பானை பொங்கல் வைத்து, தன்னை வள்ளல் என்று மற்றவர்கள் சொல்வதற்காக தம்பட்டம் அடிக்கிறார்” என்றும் விமர்சனம் செய்தார்கள். 

ஆனால், பத்மநாபனின் உண்மையான நோக்கம் - இறைவனின் பெயரால் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான். அவரது நல்ல உள்ளத்தை சிலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.  

பத்மநாபனின் ஒரு செயலை வைத்து அவர் இப்படிப்பட்டவர்தான் என்று தவறாக எண்ணிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதேபோல், சிலர் தகவல்களை முழுவதும் பெற்றுக்கொள்ளாமல் அரைகுறை தகவல்களின் அடிப்படையில், தவறான புரிதலை மேற்கொண்டு சிக்கலை சந்தித்த அனுபவங்களும் உண்டு. 

தனக்குக் கிடைத்த அனுபவம் (Experience), தனது மனநிலை (Attitude),பின்னணிகள் (Backgrounds)விருப்பம் (Interests) ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றை புரிந்துகொள்வதில் பல்வேறு பிரச்சினைகளும் உருவாகிவிடுகின்றன. 

“தனக்கு ஒரு பலன் கிடைக்கவில்லையென்றால் கந்தசாமி ஒரு சிறு துரும்பைக்கூட தூக்கமாட்டார்” என்று ஒருவருக்குக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், “தனக்கும், அவ்வாறுதான் நிகழும்” என்ற தவறான புரிதல், தவறான எண்ணங்களுக்கு அடிப்படையாக மாறிவிடுகிறது. 

பொதுவாக - தவறுதலாக புரிந்துகொள்வதை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சில-

1.தேவையான அளவு தகவல்தொடர்பை மேற்கொள்ள வேண்டும். தகவல்கள் சரியாகக் கிடைக்காவிட்டால் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, தகவல்களை சேகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

2.எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் (Positive Feeling) கொண்டிருப்பது நல்லது. நேர்மறையான எண்ணங்கள்தான் நேர்மறையான மனப்பாங்கை (Positive Attitude) உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைகிறது. 

3.எந்தத் தவறும் புரிதலில் ஏற்படாதவாறு துல்லியமாக உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். திறந்த உள்ளத்தோடு தகவல்களைப் புரிந்துகொள்வதன்மூலம் பிரச்சினைகள் இல்லாமல் உற்சாகத்தோடு செயல்பட இயலும்.

4.வெளிக்காரணிகளான (External Factors) இயற்கை, சூழல் போன்றவைகளை அறிந்துகொண்டு அவற்றிற்கு ஏற்றவாறு தகவல்களை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர், அந்தத் தகவல்களை ஒருங்கிணைத்து சரியான முறையில் அர்த்தம் தெரிந்துகொள்ள பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

5.உணர்வுகளுக்கு அர்த்தங்கள் புரிந்தபின்பு, முன்னுரிமை கொடுத்து தேவையான நல்ல உணர்வுகளை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், நினைத்த செயல்கள் நிறைவேறும். 

எந்தச்சூழலிலும் தவறாகப் புரிந்துகொள்வதை தவிர்க்க வேண்டுமென்றால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் மிகவும் உதவியாக அமையும்.

புரிதலில் ஏற்படும் தவறுகளை தவிர்த்துக்கொண்டால், வெற்றிப் படிகட்டுகளில் எளிதில் முன்னேறலாம்.  

Post a Comment

புதியது பழையவை

Sports News