வெற்றிப் படிக்கட்டுகள் - தொடர்-2 - சிறந்த குறிக்கோள்கள்...

"வெற்றிப்படிக்கட்டுகள்" 
தொடர் - 

"தமிழக மாணவர் வழிகாட்டி" மாத இதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் தொடர் "வெற்றி படிக்கட்டுகள்".அந்தத் தொடர்க் கட்டுரையின் முழு வடிவத்தை இப்போது காணலாம்.

2.சிறந்த குறிக்கோள்கள்...

சிறந்த குறிக்கோள்களை தேர்ந்தெடுப்பதன்மூலம் வாழ்க்கையில் பலவித நன்மைகளைப் பெறலாம். 

நல்ல குறிக்கோள் கொண்டவர்கள் எப்போதும் உற்சாகமாக காணப்படுவார்கள். தனது செயல்திறனை (Performance) வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்படுவார்கள். தன்னம்பிக்கை (Self Confidence) நிறைந்தவர்களாக உலா வருவார்கள். தங்கள் கவலைக்ககான காரணத்தை கண்டுபிடித்து, கவலை நீக்கி மகிழ்வுடன் வாழ பழகிக்கொள்வார்கள். எப்போதும் மனநிறைவோடு (Satisfaction) இருப்பார்கள். வாழ்க்கையில் சாதனைகள் குவித்து மற்றவர்களின் நன்மதிப்பையும் பெறுவார்கள். 

எனவே, “நல்ல குறிக்கோள்கள் எனக்குத் தேவை” என்ற உணர்வை இளம்வயதிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நெஞ்சில் நிறைத்துக்கொள்ள வேண்டும்.

சிறந்த குறிக்கோள்களை உருவாக்குவது எப்படி? என்பது சில இளைய உள்ளங்களின் மனதில் இன்றும் கேள்விக்குறியாக இருக்கிறது.

எப்போதும் ‘நேர்மறை மனப்பாங்கு’ (Positive Attitude) கொண்டவர்களால் சிறந்த குறிக்கோள்களை எளிதில் உருவாக்க முடியும்.

தேர்வு நடைபெறும் நாட்களில் சிலர் பரபரப்போடு காணப்படுவார்கள். பதற்றத்தோடு நடுங்குவார்கள்.

“நான் இந்தத்தேர்வில் தோல்வியடைந்துவிட்டால்... என் வீட்டில் திட்டுவார்களே” என்றும் சிலர் கவலைப்படுவார்கள்.

இதனால்தான் ஒரு திரைப்படப் பாடலில்கூட, “நான் தோற்றுப்போனவன் என்று அஞ்சியே, என் தேர்வையெல்லாம் ஒத்திவைக்கிறேன்” என்ற உவமையை மிகவும் உற்றுக் கவனித்து எழுதியிருப்பார் கவிஞர்.

“எனக்கு நிச்சயம் அரியர் விழுந்துவிடும்” என்ற பயம் தொற்றுநோயாய் உடல் முழுவதும் பரவி சிலரை செயல்பட இயலாத நிலைக்கும் தள்ளிவிடும்.

இந்தப் பயத்தைப்போக்கவே “அரியர்” (Arrear) எனப்படும் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்ணின் தோல்வி நிலையைக்கூட சில பல்கலைக்கழகங்கள் “நேர்மறை உணர்வுகள்” (Positive Feelings) ஏற்படும் விதத்தில் மாற்றிவிட்டன. “அரியர்” என்பதற்குப்பதில் இப்போது “ரீ அப்பியர்” (Re-Appear) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். “மறுபடியும் தேர்வை சந்தித்தவர்” என்ற நம்பிக்கை வார்த்தைகளாக அவற்றை மாற்றிவிட்டது “நேர்மறை மனப்பாங்கு” (Positive Attitude) என்பதற்கு சான்றாக அமைகிறது அல்லவா?

தமிழக அரசில் முன்பெல்லாம் “இலவசம்” என்னும் வார்த்தையை பெருமளவில் பயன்படுத்துவார்கள். இலவசத்தை பெறுபவர்கள் எல்லாம் பரம ஏழைகள் என்றே முத்திரைக் குத்தினார்கள். ஆனால், தற்போது இலவசம் என்ற சொல் “விலையில்லா” (Priceless) என உருமாறிவிட்டது. “விலையில்லா மடிக்கணினி” (Priceless Laptop) என்று சொல்வதன்மூலம் ‘ஏழ்மை’ என்றும் சிந்தனையை மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது “நேர்மறை எண்ணத்திற்கு” சான்றாக அமைகிறது அல்லவா. 

நேர்மறை எண்ணத்தோடு செயல்படுகின்ற எண்ணம் மட்டும் போதாது. பயன்படுத்துகின்ற சொற்களிலும் நேர்மறை உணர்வுகள் இழையோட வேண்டும். 

“நான் வாழ்க்கையில் தோற்றுப்போய்விட்டேன் சார்”.

“இன்னும் எத்தனை நாள் நான் உயிரோடு இருக்கப்போகிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை”.

“பிரச்சினைகள் நிறைந்த எங்கள் வீட்டில் இருப்பதைவிட எங்கேயாவது ஓடிப்போய்விடலாமா என்று நினைக்கிறேன்”.

-இதுபோன்று சிலர் எதிர்மறை வார்த்தைகளை வாக்கியங்களாக்கி, சிலர் தங்கள் வாழ்க்கையின் இனிய பக்கங்களைப் புரட்டிப்போட்டுவிடுகிறார்கள். 

இப்படிப்பட்ட சிந்தனைகளை மாற்றி “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது” என்று எண்ணுவது நல்லது. 

“இதோடு என் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன். கடவுள் என்னைக் காப்பாற்றினார்”. 

“கடுமையான காய்ச்சலில் துடித்தேன். என் நண்பன் எனக்கு உதவினான்” - என்று சொந்தமாய்வந்த சோகத்தைக்கூட, பந்தம் வளர்க்கும் வார்த்தைகளாக மாற்றியவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

எனவே, எண்ணுகின்ற எண்ணங்களிலும், பேசுகின்ற வார்த்தைகளிலும் நேர்மறை மனப்பாங்கு பிரதிபலிக்கும்வகையில் செயல்படுவது சிறந்த குறிக்கோளை நிர்ணயிக்க உதவியாக அமையும். 

செய்கின்ற செயல்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? முதலில் செய்ய வேண்டிய செயல் எது? அடுத்து செய்ய வேண்டியது எது? அவசரமானது எது? அவசியமானது எது? மிகவும் தேவையானது எது? தேவையற்றது எது? என்பதை இனம்காண முடியாமல் தவிப்பவர்கள் குழப்பத்தின் பிடியில் சிக்கி சிதறுகிறார்கள். 

இதைப்போலவே, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எதனால் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? ஒருவரை எப்படி அணுக வேண்டும்? போன்ற அடிப்படை அறிவை வளர்க்கத் தவறியவர்கள் செய்கின்ற செயலுக்கு முன்னுரிமை (Priority) கொடுப்பதில் தடுமாறுகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் குறிக்கோள்களில் எந்தக் குறிக்கோளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள், தங்களது குறிக்கோள்களை சிறந்ததாக மாற்றிவிடுகிறார்கள். 

எந்தக் குறிக்கோளை நிர்ணயித்தாலும், அதனை மிகவும் தெளிவாக, சுருக்கமாக முதலிலேயே புரிந்துகொண்டவர்கள் அந்தக் குறிக்கோளை நிறைவேற்றும்போது மனநிறைவுப் பெறுகிறார்கள். எனவே, ஒரு குறிக்கோளை எந்த நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும்? எந்த காலத்திற்குள் (நேரம்) செய்து முடிக்க வேண்டும்? குறிக்கோளை நிறைவேற்ற எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும்? போன்றவற்றையும் முதலிலேயே தெளிவாகத் தெரிந்துகொண்டால், குறிக்கோளை நிறைவேற்றுவது எளிதாக அமையும். 

முதலிலேயே மிகப்பெரிய குறிக்கோளை நிர்ணயித்துவிட்டு, அதனை எப்படி நிறைவேற்றுவது? என்பதில் சிலர் தடுமாறுகிறார்கள். பெரிய குறிக்கோளை நிர்ணயித்தாலும், அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் சின்னஞ்சிறிய குறிக்கோள்களையும் தீர்மானித்துவிட்டு அந்த சிறிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இதைப்போலவே, அந்தக் குறிக்கோள்கள் நிறைவேற்றக்கூடியதாகவும் அமைய வேண்டும்.

பள்ளியில் படிக்கும்போதே, “நான் நிலவில் சென்று குடியேற வேண்டும். இதுதான் எனது வாழ்க்கையின் குறிக்கோள்” என்று குறிக்கோளைதீர்மானிப்பதில் தவறில்லை. ஆனால், பள்ளியில் படிக்கும்போதே அறிவியலில் நாட்டமில்லாமலும், கல்லூரியில் சேரும்போது வணிகவியல் பாடத்தில் சேர்ந்து படிப்பதும், படித்து முடித்தப்பின்பு ஒரு மளிகைக்கடையில் கணக்கராக சேர்ந்து கொள்வதும், அவரின் வாழ்க்கை குறிக்கோளை நிறைவேற்ற உதவாது என்பதை யாரும் எளிதில் புரிந்துகொள்வார்கள். 

அதேவேளையில், அவரது குறிக்கோளை நிறைவேற்ற பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் பாடத்தில் அதிக விருப்பம் கொள்வதும், பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் மிக அதிக மதிப்பெண்கள் பெறுவதும், அறிவியல் சம்பந்தப்பட்ட மேற்படிப்பில் சேர்ந்து படிப்பதும், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதும், அந்த ஆய்வில்கூட மிக முன்னணியில் இருந்து புத்தாக்க சிந்தனையோடு செயல்படுவதும், அவர் நிலாவில் சென்று குடியேறும் குறிக்கோளுக்கு ஓரளவாவது உதவியாக இருக்கும் அல்லவா?. 

எனவேதான், மிகப்பெரிய குறிக்கோள்களை சின்னஞ்சிறியதாய் பிரித்து, அந்தக் குறிக்கோளையும் தேவையான நேரத்தில் நிறைவேற்றுவதன்மூலம் சிறந்த குறிக்கோள்களை நிர்ணயித்து வெற்றி காணலாம். 

படிக்கும் காலத்தில் ஒவ்வொரு சூழலில் வாழும்போதும் வெவ்வேறு விதமான குறிக்கோள்கள் நெஞ்சில்வந்து விழுகின்றன. 

ஒரு மளிகைக்கடையை நடத்தி, மாட மாளிகைக் கட்டிய ஒருவரைப் பார்த்தால், “படித்து முடித்ததும் மளிகைக்கடை வைப்பதுதான் எனது குறிக்கோள்” என எண்ண தோன்றும். 

சிறிதுநாட்கள் சென்றபின்பு, ஒரு ஹோட்டல் முதலாளியைப் பார்க்கும்போது “நட்சத்திர ஹோட்டலை நான் கட்டி முடிப்பேன்” என்ற குறிக்கோள் நம்மை அறியாமலேயே மனதில் வந்து நிழலாடும். 

இன்னும் கொஞ்சநாள் கழித்து, “24 மணி நேரமும் எவன் வேலை செய்வான்? ஒரு பள்ளியில் ஆசிரியராகப் போய்விடலாம்” என்று மனம் அலைபாய்ந்து குறிக்கோளை மாற்றும். 

இன்னும் கொஞ்சகாலம் நகர்ந்தால், “எவரிடமும்போய் அடிமைத் தொழில் செய்யமாட்டேன். சும்மா இருந்து பணம் சம்பாதிப்பதுதான் எனது வேலை” என்று மகிழ்வான குறிக்கோள் மனதுக்குள்வந்து துள்ளாட்டம்போடும். 

இப்படிப்பட்ட குழப்பமான சிந்தனைகளை குறிக்கோள் என்று எண்ணி சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். 

இதனை தவிர்க்கும் விதத்தில், வாழ்க்கையில் குறிக்கோள் என்று எதைத் திட்டமிட்டாலும், அந்தக் குறிக்கோளை முதலில் ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக்கொள்ள வேண்டும். பின்னர், அந்தக் குறிக்கோளை அடைவதற்கு உதவியாக அமையும் துணை குறிக்கோள்களையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர், இந்தக் குறிக்கோளை நம்மால் நிறைவேற்ற முடியுமா? என்பது பற்றியும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். 

நாள்தோறும் குறிக்கோள்கள் பற்றிய சிந்தனையை வளர்த்து அதன் நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து அதன்பின்னர், அந்தக் குறிக்கோளை வாழ்க்கை குறிக்கோளாக நிறைவேற்ற இயலுமா? என்பதை முடிவுசெய்ய வேண்டும். தீவிரமாக ஆலோசனை செய்தபின்பு, அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களையும், அதனை எதிர்கொள்ளும் முறைகளையும் தெள்ளத்தெளிவாக இனம்கண்டுகொண்டால், நிர்ணயித்த குறிக்கோளை நிறைவேற்றும் ஆற்றல் தானாக உருவாகும்.

நிறைவேற்ற முடியாத குறிக்கோள்கள் கொண்டவர்கள் கண்கள் இல்லாத மனிதர்களைபோல தவிக்க நேரிடும் என்பதை உணர்ந்துகொண்டு, சிறந்த குறிக்கோள்களை வாழ்க்கையில் தீர்மானிக்க பழகிக்கொள்வது வெற்றிப் படிகட்டுகளில் முன்னேறிச்செல்ல நிச்சயம் உதவும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News