வேண்டாமே பயம்...

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்-10 

வேண்டாமே பயம்...

பள்ளிக்குச் சென்றுவிட்டு திரும்பிய மகளிடம் அம்மா கேட்டாள். 

“அடுத்த வாரம் உனக்கு ஆண்டுத்தேர்வு நடக்குமே?... நீ... பிரிப்பேர் (Prepare) பண்ணிட்டியா?” - இந்தக் கேள்வி மகள் திவ்யாவை திரும்பிப்பார்க்க வைத்தது. அம்மாவை பார்த்து அமைதியானாள். 

“ஏன்... இப்படி அமைதியாயிட்டே?” - அம்மா கேட்டதற்கு சிறிது நேர மௌனத்திற்குப்பிறகு திவ்யா பதில்சொல்ல ஆரம்பித்தாள். 

“அம்மா... எனக்கு இந்த எக்ஸாமை நினைத்தாலே பயமா இருக்கிறது. பிளஸ் 2 வில் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடம் எடுத்துப் படிப்பவர்கள், மிக நன்றாகப் படித்தால்தான் நல்ல மார்க் எடுத்து படிக்கமுடியும் என போனவருடமே என் தோழிகள் சொன்னார்கள். இப்போது தேர்வை நினைத்தாலே பயமாக இருக்கிறது. பாஸ் பண்ணுவேனா? என்பதுகூட எனக்கு சந்தேகமாகிவிட்டது” - என தனது பயத்தை சந்தேகமாக்கி வெளிப்படுத்தினாள். தேர்வுநேரம் நெருங்கியதுமே பய வடிவில் சந்தேகம் திவ்யாவுக்கு உருவாகிவிட்டது. 

பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தன. 

“எவ்வளவு மார்க் உனக்குக் கிடைக்கும்?” - பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டார்கள். 

“ஏதோ சுமாராகத்தான் மார்க் கிடைக்கும். ரிசல்ட் வரட்டும் பார்ப்போம்” - என திவ்யா பதில் கொடுத்தாள். 

மீண்டும் பயத்துடன் கூடிய சந்தேகம்.    

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

தேர்வில் குறைந்த மதிப்பெண்களை திவ்யா பெற்றிருந்தாள். 

“பிளஸ் 2வில் உனது மார்க் ஏன் குறைந்துவிட்டது?” - உறவினர்களும் ஊர்க்காரர்களும் கேட்டார்கள். முதலில் திவ்யாவுக்கு வருத்தமாக இருந்தது. பின்பு பழகிப்போனது. 

அடுத்து என்ன செய்யவேண்டும்?

கேள்விக் கொக்கி மனதை நெருடியது. 

“திவ்யா எந்தக் காலேஜில் படிக்கப்போகிறாய்?” தெரிந்தவர்கள் பலரும் கேட்க ஆரம்பித்தார்கள். 

“இந்த 645 மார்க்குக்கு கல்லூரியில் இடம் கிடைக்குமா?”- திவ்யாவுக்கு குழப்பம் ஏற்பட்டது. சந்தேகம் உருவானது பயமும் அதிகரித்தது. 

கல்லூரிக்கு விண்ணப்பம்போட அப்பாவோடு சென்றாள். 

“இதெல்லாம் ஒரு மார்க்கா சார்? 1000 மார்க்குக்குமேல் எடுத்தவங்களுக்கே எங்களால் அட்மின் கொடுக்க முடியவில்லை. நீங்கள் எந்த நம்பிக்கையில் எங்கள் கல்லூரிக்கு வந்தீர்கள்?” - தரமான அந்தக் கல்லூரியின் அலுவலக மேலாளர் ஏளனமாய் சிரித்தார். 

அப்பா அமைதியாய் நின்றார். 

“எனது மதிப்பெண்களால் என் அப்பாவுக்கும் அவமானம் வந்துவிட்டதே” - திவ்யா கவலைப்பட்டாள். கவலை அதிகமானதும் பயம் அதிகமானது. கல்லூரியில் இடம் கிடைப்பதில் சந்தேகமும் உருவானது. 

சில நாட்களில் அந்த தரம்வாய்ந்த கல்லூரியில் “இடம் இல்லை” என அறிவித்துவிட்டார்கள். 

மீண்டும் அவளுக்கு கவலை. கண்ணீர்த் துளிகள். 

ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ‘டிப்ளமோ’ படிப்பில் சேர்த்தார்கள். அஞ்சல்வழி பட்டப்படிப்பிலும் திவ்யா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். 

“இந்தப் படிப்புக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா?” அந்தப் படிப்புகள் பற்றி மீண்டும் சந்தேகம் அவளுக்கு எழுந்தது. குழம்பினாள். அதிகமாய் பயந்தாள். 

மூன்று வருடத்தில் திவ்யா பட்டதாரி ஆனாள். கம்ப்யு+ட்டர் படிப்பையும் முடித்திருந்தாள்.    

இப்போது “இண்டர்வியூ” நேரம். வேலையில்லாப் பட்டதாரிகள் ஆயிரமாய் குவிந்திருந்தார்கள். 

“என்னை நிச்சயம் செலக்ட் செய்ய மாட்டார்கள்”. “எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதல்லவா?” - என இண்டர்வியூ நேரத்தில் நினைத்தாள் திவ்யா. 

பயம் ‘பக்’கென பற்றிக்கொண்டது. சந்தேகம் சகோதரனாகிவிட்டது. குழப்பம் மனதுக்குள் ‘கும்மாளம்’ போட்டது. 

‘திவ்யா’வைப்போல இன்று சில மாணவிகளும், மாணவர்களும் மனங்களில் தேவையில்லாத பயத்தையும், சந்தேகத்தையும் நிரப்பி தங்கள் வாழ்க்கையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தக் குழப்பம் தேவைதானா? 

ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டோம். உட்கார்ந்தபின்பு ‘இந்த பஸ் சரியான நேரத்துக்கு போகுமா? டிரைவரைப் பார்த்தால் கிழவர்போல் இருக்கிறார். இவர் ஒழுங்காக பஸ்ஸை ஓட்டுவாரா? கண்டக்டர் அவ்வளவு சுறுசுறுப்பில்லை. டிக்கெட் கொடுத்து முடிப்பதற்கே அரைமணி நேரம் எடுத்துக்கொள்வார் போலிருக்கிறதே? இப்பவெல்லாம் பழையப் பஸ்களுக்கு புதுசா பெயிண்ட் அடிச்சிடுறாங்க? இந்தப் பஸ் மதுரைவரை ஒழுங்காகப் போகுமா? வழியில் ஸ்டாப் இல்லாமல் பஸ் போகுமா? இப்படி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் விதவிதமாக சிந்தித்து விநோதமான கேள்விகளையும் எழுப்பி பயணத்தைத் தொடர்ந்தால் பஸ் பயணம் எப்படி இருக்கும்? இல்லாத வேதனைகளை கற்பனைமூலம் இழுத்துவந்து மனதில் போட்டு சோதனைகளாகச் சொந்தங் கொண்டாடுவது ஏன்? 

இந்த சோகங்களுக்கெல்லாம் எதிர்மறை எண்ணங்கள்தான் (Negative Thoughts) அடிப்படை காரணமாக அமைகிறது. இந்த எண்ணங்கள் பல நேரங்களில் பயத்தை உருவாக்கிவிடுகிறது. சந்தேகத்தை கிளப்பி விடுகிறது. அவதூறுச் சேற்றையும் அள்ளி வீசுகிறது.  

மாணவி திவ்யாவிடம் ‘உனக்கு ஏன் இண்டர்வியூவில் வேலை கிடைக்கவில்லை’ எனக் கேட்டார்கள்.  

“இதுக்கு முக்கிய காரணம் எங்க ஸ்கூல்தான். அங்குள்ள அமுதா டீச்சர் மார்க் போட மாட்டாங்க. கணக்கு ஆசிரியர் ரொம்ப கண்டிப்பானவர். அவர் கண்டிப்பாக இருந்ததால்தான் எனக்கு கணக்குப் பாடம்மேல் விருப்பம் இல்லாமல் போய்விட்டது. எங்கள் கிளாஸ் டீச்சர் நான் வகுப்புக்கு முதல் பீரியடுல லேட்டாகப் போனால் வகுப்புக்கு உள்ளே விடமாட்டாங்க. இதனாலேயே எனக்கு 20 நாள் பாடம் புரியாமல் போச்சுது. நான் ரொம்ப ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது அப்பா ஐந்தாம் கிளாஸ் படித்தவர். அம்மா ஸ்கூல் வாசனையே இல்லாதவங்க. நான்தான் மூத்தப்பொண்ணு. எங்க ஊர் குக்கிராமம். பிறகு என்னால் எப்படி நன்றாகப் படிக்க முடியும்” - இப்படி ஏராளமான காரணங்களை தாராளமாக மனதிற்குள் போட்டுவைத்து பலரையும் குற்றம் சாட்டுவதற்கு திவ்யா தயாராக இருந்தாள். 

ஆனால் - ஒன்றைமட்டும் ‘திவ்யா’ மறந்துவிட்டாள். இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் அவளேதான் என்பதை திவ்யா உணர தவறிவிட்டாள். 

தனது பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் எங்கே இருக்கிறது என்று வெளியே தேடிய திவ்யா, அந்தக் காரணம் தன்னிடம்தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டாள்.    

அதாவது - தேர்வு நேரத்தில் தான் வெற்றி பெறுவேனா? வெற்றிபெற மாட்டேனா? என்பதில் திவ்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றபின் கல்லூரியில் சேர இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று குழப்பம் ஏற்பட்டது. கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்தபின் தனக்குப் பட்டம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் உருவாகிவிட்டது. பட்டம் பெற்றபின்பு தனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சிக்கல் திவ்யா மனதிற்குள் உருவானது. வேலை கிடைக்காததால் குழப்பமும் பயமும் அதிகரித்தது. இதனால்தான் தனது பிரச்சினைகளுக்கு “தான் காரணமில்லை” என்று நம்பினாள் தனக்கு வேலை கிடைக்காததற்கு மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லி பிறர்மீது பழி போட்டு தப்பிவிட நினைத்தாள். 

இளம்பெண் திவ்யாவைப்போலவே இன்று சிலர் தங்களது இளைய வயதில் தனது இயலாமைக்கும், தோல்விக்கும் பிறர்தான் காரணம் என குற்றம்சொல்கிறார்கள். தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் தனது எண்ணங்களும், செயல்பாடுகளும் என்பதை மறந்து அடுத்தவர்கள்மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுகிறார்கள். அனல் வார்த்தைகளை கொட்டித் தீர்க்கிறார்கள். 

இந்த மனநிலை கொண்டவர்கள் தனது வாழ்க்கையில் தவறு நிகழும்போது தன்னைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை. திவ்யா தன்னுடைய பிரச்சினைகளுக்கு அடிப்படைத் தீர்வாக எது அமையும்? என்பதை சற்றி விரிவாக சிந்தித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்ததால் பிரச்சினைகள் வேகமாக வளர்ந்துவிட்டது.     

வாழ்க்கையில் பிரச்சினைகள் உருவாகும்போது அந்தப் பிரச்சினைகளுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று வரிந்துகட்டிக்கொண்டு, வார்த்தைகளில் உணர்ச்சிகளை தேக்கி எரிச்சல்படுவதை தவிர்த்துவிட்டு, தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டும். தனக்குள் சந்தேகத்தையும், பயத்தையும் உருவாக்கிக்கொண்டு செயல்களைச் செய்யும்போது வெற்றியடைய வேண்டிய செயல்கள் தோல்வியில்போய் முடிகிறது.  

திவ்யா வாழ்க்கையில் எதிர்பார்த்தவைகளெல்லாம் நிறைவேறும்போது அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்த்தவைகள் நிறைவேறாமல் தோல்வி ஏற்படும்போது தன்நிலை உணராமல் அடுத்தவர்கள்மீது கோபப்படும் அல்லது வருத்தப்படும் அநாவசியமான சூழல் உருவானது. 

தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தோல்லி நமக்கு வெற்றி கிடைக்காமல் செய்துவிடலாம். ஆனால் அந்தத் தோல்வி தரும் பாடம் அது நம்மைத்தவிர மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. அந்தப் பாடங்களை அல்லது படிப்பினை ஒழுங்காக புரிந்து வாழ்க்கையை சீரமைத்துக்கொண்டால் நல்ல வாழ்க்கை வாழ இயலும். 

வாழ்க்கை என்பது பிறப்பு (Birth), மற்றும் இறப்பு (Death) இவை இரண்டும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள் கொண்ட ஒரு விளையாட்டாகும். இந்த இரண்டு எல்லைகள் கொண்ட விளையாட்டில் நாம் எப்போதும் வெற்றிபெற இயலாது என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும். இருந்தாலும் அந்த விளையாட்டில் நாம் எப்படி பங்கு எடுத்துக் கொண்டோம் என்பது மிக முக்கியமானது. அதுவே நம் வாழ்க்கையில் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் சந்தேகமும், பயமும் கொண்ட வாழ்க்கையை நிரந்தரமாய் நீக்கிவிடலாம். தன்னம்பிக்கையோடு வாழலாம். மற்றவர்களையும் மகிழ்விக்கலாம். 

Post a Comment

புதியது பழையவை

Sports News