புலவர் பிசிராந்தையார் - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்

 

பாட்டாகவும் ,பாட்டின் பொருளாகவும் 

விளங்கிய 

புலவர் பிசிராந்தையார் 

- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 

திருநெல்வேலி.


சங்கத் தமிழ் வளர்ந்த பாண்டிய நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில், ‘ஆந்தையார்’ என்னும் அருந்தமிழ்ப் புலவர் வாழ்ந்தார். உண்மை ஞானமும் உயரிய ஒழுக்கமும் உடைய இவர், ஊரோடு இவர் பெயரையும் சேர்த்துப் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார்.

இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. அவை அகநானூறு 308, நற்றிணை 91, புறநானூறு 67, 184, 191, 212 ஆகியவை.. மற்ற பாடல் குறிப்புகள் கிடைக்க வில்லை .. இந்த ஒருசில பாடல்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள நிறைய உள்ளன.

மதுரையை ஆண்ட பாண்டியன் அறிவுடை நம்பி அறிவிற் சிறந்தவனாக விளங்கியதால் அறிவுடை நம்பி என்று அழைக்கப்பட்டான்,. இவன் புறநானூற்றில் 188 வது செய்யுளை இயற்றியுள்ளான். இருப்பினும் சற்று மதி மயங்கி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை.

அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்க சரியானயாவர் பிசிராந்தையார் தான் என்று அனைவரும் கருதினர். அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறும் வகையில் படலை பாடி விளக்கினான். பிசிராந்தையார் கருத்துக்கு கருத்துக்கு செவிசாய்த்தான் மன்னன். பிசிராந்தையார் பாடிய புறநானூறில் அமைந்துள்ளது, 

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

10 யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

தமிழ் இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு நூலில் உள்ள இந்த பாடலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும் போது மேற்கோள் காட்டி பேசினார் 

வரி எப்படி வசூலிக்க வேண்டும் என்ற முறையை மிக அழகாக அனைவரும் புரியும் வண்ணம் எளிமையாக இந்த பாடலில் விளக்கப்பட்டுள்ளது. 

பாடலின் விளக்கம் : விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

பாண்டியன் அறிவுடைநம்பி குடிமக்களைக் கொடுமைப்படுத்தி அதிகமாக வரி தண்டித்ததை அவனுக்கு புரியும் படி விளக்கினார். “விளைந்த நெல்லை அறுத்து அரிசியாக்கி உணவுக் கவளமாக ஊட்டினால் அது யானைக்கு உணவாகப் பல நாட்களுக்கு வரும். நெல்வயலில் புகுந்து யானை தானே தின்றால் உண்பதைவிட அதன் கால்மிதியில் அழிவது அதிகமாக் அல்லவா?” என்ற உவமை மன்னனைத் திருத்தியது.   

பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். ஆந்தையார் என்பது இவர் பெயர். ஆந்தையார் என்னும் பெயர் ஆதன் தந்தை என்னும் பெயர்களின் கூட்டுச்சொல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

 இவர் காலத்து பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி.  கோப்பெருஞ்சோழன், பாண்டியன் அறிவுடைநம்பி, ஆகியோரைப் பாடியுள்ளார். 

இவர் வாழ்ந்த காலத்தில் சோழ வளநாட்டில் ‘அறந்துஞ்சும் உறந்தை’ என ஆன்றோரால் சிறப்பிக்கப் பெற்ற உறையூரைத் தலைநகராகக் கொண்டு கோப்பெருஞ்சோழன் செங்கோல் செலுத்தி வந்தான். அரசனாயினும் சிறந்த ஞானியாக, செந்தமிழ்க் கவிஞனாக, புலவர்களோடு பழகுவதிலும் அவர்தம் பாடல்களைக் கேட்பதிலும் பெருவிருப்புடையவனாக விளங்கினான் கோப்பெருஞ்சோழன்.

இவனைப் பிசிராந்தையார் நேரில் கண்டதில்லை. ஆனால் அவனுடைய அரும்பெருங்குணங்களை எல்லாம் தமது ஊரில் இருந்தபடியே அறிந்து அவன்பால் பிரியா நட்புக் கொண்டார். சோழ மன்னனும் புலவரின் உள்ளத்தைப் பற்றிக் கேள்வி வாயிலாக, செவிவழியாக உணர்ந்து மனத்தோடு தொடர்பு உடையவனாக இருந்தான்.

இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் தரும் செய்திகள் பல.

அன்னச்சேவலே! குமரித்துறையில் அயிரைமீனை விழுங்கிவிட்டு வடமலைக்குப் பறந்து செல்லும்போது, இடையில் உறையூருக்குச் சென்று, "பிசிராந்தையார் வளர்ப்புப் பறவை நான் (பிசிராந்தை அடியுறை) என்று சொன்னால் அரசன் கோப்பெருஞ்சோழன் உன் பேடைப்பறவை அணிந்துகொள்ள அணிகலன்கள் தருவான்" என்று ஒரு பாடலில் இவர் குறிப்பிட்ட உவமை கோப்பெருஞ்சோழன் மீது இவர் கொண்டிருந்த பற்றியும் நாட்டின் வளத்தையும் அழகாக விளக்குகிறது. 

சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை. 

இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழன் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.

இதைத் தொடர்ந்து மன்னனுக்கும் இரத்த உறவுகளாகிய புதல்வர்களுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை. ‘புல்லாற்றூர் எயிற்றியனார்’ என்ற புலவரின் அறிவுரையை அறவுரையைக் கேட்ட அரசன் துறவு பூண்டு, உறையூரில் அரங்கம் என்ற இடத்தில் ஓர் ஆற்றங்கரையில் மரநிழலில் உண்ணாநோன்பு இருந்து பிறவி வீடு பேற்றைப் பெற முடிவு செய்தான். அதற்காக வடக்கிருந்தான். உண்ணாமல், உரையாடாமல் வடக்கு நோக்கி அமர்ந்து நோன்பு இருத்து உயிர் துறத்தலை வடக்கிருத்தல் என்று கூறுவார்கள்.

பிசிராந்தையார்

அரசனைப் பிரிய முடியாத சான்றோர்களும், புலவர்களும் அவனைச் சுற்றி அமர்ந்தார்கள். அப்போது அரசன், அவர்களை நோக்கி “என் ஆரூயிர் நண்பர் பிசிராந்தையாரும் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்குங்கள்” என்று சொல்லி அவருடைய வருகையை எதிர்நோக்கி இருந்தான்.

அதற்கு ஆன்றோர்கள், “அரசே! அவர் உன்னை ஒரு பொழுது கூட நேரில் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை, பழகியதும் இல்லை. பல காலம் பழகி நட்புக் கொண்டவர்கள் கூட இப்படி வருவது அரிய செயலாகும்” என்றார்கள்.

அதைக் கேட்ட மன்னன், “பெரியீர்! சிறிதும் நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம். பிசிராந்தையார் இனிய குணக்குன்று; புகழை அழிக்கும் பொய்க்குப் பகை; மெய்க்கு அணி; புகழின் வாழ்வு; உறுதியான மிக உயரிய உயிர் நட்புக்கு இலக்கு; தமது பெயரைப் பிறருக்குச் சொல்லும் பொழுது ‘என்னுடைய பெயர் கோப்பெருஞ்சோழன்’ என்று பேதையாகிய என் பெயரையே தம்முடைய பெயராகச் சொல்லும் பேதமற்ற அன்புரிமை உடையவர், என்பால் செல்வம் உள்ள காலத்து அவர் வராமல் இருந்தாலும், நான் துன்புறுங்காலத்து வராமல் இருக்கமாட்டார். இஃது உண்மை நட்பாளரின் இயற்கையன்றோ? அவர் பலகாத தூரமுள்ள பாண்டிய நாட்டில் பிசிர் என்னும் ஊரில் வசிப்பவராயினும் இங்கே வருவது உறுதி. அவருக்கும் என்னோடு வடக்கிருக்க இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று பெருமிதத்துடன் கூறினான்.

கோப்பெருஞ்சோழன்

இதற்கிடையில் பிசிராந்தையார், தம் உயிர் நண்பன் கோப்பெருஞ்சோழனுக்கு நேர்ந்தவற்றையும் அவன் துறவு பூண்டு வடக்கிருப்பதையும் உள்ளத்து உணர்வால் அறிந்தார். உடனே புறப்பட்டு சோழ நாட்டு  உறையூரை  நோக்கி சென்றார். 

வழியில் எதிர்ப் பட்டவர் இவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர்."புலவரே! நான் என் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம். தங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே, அது எப்படி?"என்று வியந்து கேட்டனர். அதற்கு மறுமொழியாக ஆந்தையார் ஒரு பாடல் பாடினார். புறநானூற்றில் உள்ள இப்பாடல் நமது வாழ்வியலுக்கு மிகவும் தேவையான ஒன்று.

" யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்காகியர் என வினவுதிராயின்,

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

என்று பாடிய பாடல் மூலம் " வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

அரசன் எதிர்பார்த்தபடி, குறித்த நேரத்தில் அவனெதிரே வந்து நின்றார். பிசிராந்தையாரைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அவர்களுள் கோப்பெருஞ்சோழனின் இன்னொரு இனிய நண்பரும் புலவருமான ‘பொத்தியார்’ “இது நினைத்தால் வியக்கும் தன்மை உடையது. இந்த மன்னன் அரசச் செல்வத்தை எல்லாம் துறந்து இந்நிலைக்கு வரத் துணிந்ததும், வேற்று நாட்டைச் சேர்ந்த இந்தச் சான்றோர் நட்பையே சிறந்த பற்றுக் கோடாகக் கொண்டு, இப்படிப்பட்ட துன்பக் காலத்தில் இந்த இடத்திற்கு வந்தது, இவ்வாறு இப்புலவர் வருவார் என்று துணிந்து சொல்லிய வேந்தனின் ஒப்பற்ற ஆன்மிக-சூக்கும உணர்வும், இவன் சொல்லிய சொல் பழுதுபடாமல் வந்தவரது ஒத்த உணர்ச்சியின் திறமும் வியக்கும்தோறும் வியப்பு வரமின்றி ஓடுகிறது.

ஆதலால் தனது நாட்டில் வாழும் இந்தச் சான்றோர்களது உள்ளத்தை அன்றி, அயல்நாட்டில் வாழும் இந்தச் சான்றோரது உள்ளத்தையும் தனக்கு உரித்தாகப் பெற்ற இப்பெரு வேந்தனை இழந்து இந்நாடு இனி துன்பத்தை அடையுமோ தெரியாது. இதுதான் இரங்கத்தக்கது” என்று ஓர் அற்புதப்பாட்டு மூலம் வெளிப்படுத்தினார்.

பிசிராந்தையாரைக் கண்ட சோழன், “சான்ற குணத்தீர்! நும்மைச் சந்ததமும் நினைத்திருப்பேன். உமது நட்பிற் சிறந்த பெட்புறும் பொருள் வேறு யாதுளது?” என்று மகிழ்ந்தான். பிசிராந்தையாரும் பல தம் உள்ளத்தில் குடிகொண்டிருந்த அரசனது திருவுருவத்தைக் கண்ணாரக் கண்டும் போற்றுவதற்குரிய அவனது ஞானத்தை அறிந்தும், அன்பான சொற்களைக் கேட்டும், வாடிய மேனியை ஆரத்தழுவியும், அவனது நற்குணங்களை ஓயாது வாயால் புகழ்ந்தும் ஐம்புலன்களின் இன்பத்தை ஒருசேரப் பெற்றார்.

நட்புக்கு மரியாதை

பின்னர் ஆருயிர் நண்பன் கோப்பெருஞ்சோழன் மேற்கொண்ட வடக்கிருத்தலை தாமும் மேற்கொள்ளத் தருப்பைப் புல்லை தரையில் பரப்பி அதில் அமர்ந்தார். வடதிசை முகமாக இருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டார். ஐம்பொறிகளை அடக்கி அரசன் ஆருயிரைத் துறக்கும்போது பிசிராந்தையாரும் உயிர் துறந்தார். இங்கு மரணம் மண்டியிட்டு அவர்களை வணங்கியது. நட்புக்கு மரியாதை இருக்கும்வரை கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் வாழ்வார்கள்.

இவ்வாறு இருவரும் தம்நிலை துறந்து ‘வானுக்கு அப்புறத்து உலகம்’ சென்ற அற்புதத்தைக் கண்ட கண்ணகனார் என்ற புலவர், “பொன்னும் பவளமும் முத்துமணியும் ஒன்றுக்கொன்று சேய்மைத்தாய் வெவ்வேறு இடத்து உண்டானாலும் நல்ல அணிகலன்களைச் செய்யும் காலத்தில் கோவையை ஓரிடத்தில் தோன்றியது போல, ஓரிடத்து அணிகலனாய் ஆவது போல, எத்துணைத் தூரம்பட்ட இடத்தில் இருப்பினும் ஒன்று சேர வேண்டிய நேரத்தில் தவறாது சான்றோர் சான்றோரையே சார்வார்” என்ற பொருள்பட அமைந்த பாடலைப் பாடி நெகிழ்ந்தார்.

புலவர் பிசிராந்தையாரும், மன்னன் கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்தில் பண்டைக்கால வழக்கப்படி அவர்களின் பெருமையையும், பெயரையும் கல்லில் பொறித்து நட்டார்கள்.

இக்காட்சியைக் கண்ட கோப்பெருஞ்சோழனின் உற்ற நண்பர்  பொத்தியார் என்னும் புலவர்

 தன் பாடலில் இதனைக் கூறுகிறார்.

"இசைமரபு ஆக நட்பு கந்தாக

இனியதோர் காலை ஈங்கு வருதல்

வருவன் என்ற கோனது பெருமையும்

அது பழுதின்றி வந்தவன் அறிவும்

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே." என்று வியந்து வியந்து பாடி உருகினார்.. தானும் வடகிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார். 

உடனே மன்னன் தடுத்து, “உமக்கு இன்னும் மகப்பேறு இல்லை. மகப்பேறு இல்லாத மாந்தர்கள் வானவர் தம் உலகு புகப்பெறார். ஆகையால் மகன் பிறந்த பிறகு வந்து அரசனது நடுகல் இடம் கொடுக்க, வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்” – குறள் என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கணம் இவர்களின் வாழ்க்கை .

சங்க கால புலவர்களின் வாழ்க்கை நமக்கு மொழியை மட்டும் புகட்ட வில்லை. மொழியோடு காலத்தால் அழியாத பல உண்மைகளையும் மனிதன் வாழும் நெறிகளையும், உயர்ந்த ஞானத்தையும்  நமக்கு வழங்குகின்றன.


                                                                --------------------------






Post a Comment

புதியது பழையவை

Sports News