உலகெங்கும் தமிழர் தடம்--நூல் ஆசிரியர்: அமுதன்,

 





உலகெங்கும் தமிழர் தடம்


உலகில் முதன் முதலாகத் தோன்றியது தமிழ் மொழியே என்பதிலும், உலகின் மூத்த குடி தமிழ் மக்களே என்பதிலும் எந்த ஐயப்பாடும் இல்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற புறப்பொருள் வெண்பாமாலை வரிகளை நம்மில் பலர் நெஞ்சை நிமிர்த்திக் கூறுவது உண்டு.

உலகின் முதல் மொழி தமிழே என்பதற்கும், மூத்த குடி தமிழர்களே என்பதற்கும் என்ன ஆதாரம் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.

தமிழ் அறிஞர்கள் பலர், இதற்கான ஆதாரங்களை விளக்கி பல நூல்களை எழுதி இருக்கிறார்கள்.

ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட அந்த நூல்கள், சாதாரண மக்களால் எளிதாகப் படித்து அறிந்து கொள்ள முடியாதவை.

உலகின் முதல் மொழி தமிழே என்பதை அதாரப்பூர்வமாகக் கூறிய தமிழ் அறிஞர்கள், தமிழ்க் குடிதான் மூத்த குடி என்பதற்கான ஆதாரத்தை முழுமையாக ஒரே நூலில் கொடுக்கவில்லை என்பதை, பல நூல்களை வாசித்தபோது நான் தெரிந்து கொண்டேன்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று, தங்கள் தடத்தைப் பதிவு செய்தார்கள் என்ற வரலாறு, பகுதி, பகுதியாகவே சொல்லப்பட்டு இருந்தது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தென் கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை ஒரு நூல் தெரிவிக்கும் நிலையில், மற்றொரு நூல், பழங்காலத் தமிழர்களுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த உறவை படம் பிடித்துக் காட்டியது.

வேறு ஒரு நூல், தமிழர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் பயணமாக கிரேக்கம் வரை சென்று வாணிபம் செய்ததைப் புகழ் பாடியது.

தமிழர்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று அங்கே வாணிபம் செய்ததோடு, தங்கள் தடத்தைப் பதிவு செய்யும் வகையில், அங்கே ஆலயங்களையும், நீர் வளங்களுக்கான அமைப்புகளையும் கட்டினார்கள் என்ற அனைத்து ஆதாரங்களையும் ஒரே நூலில், எளிமையாகத் தர வேண்டும் என விரும்பினேன்.

இதற்காக பல நூல்களைப் படித்து ஆதாரங்களைத் திரட்டினேன்.

மலேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளில் நான் நேரடியாகத் திரட்டிய தகவல்களும் நிறைய இருந்தன.

இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, “உலகெங்கும் தமிழர் தடம்” என்ற நூலை எழுதினேன்.



உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தமிழர்கள் முன் காலத்தில் எப்போது, எப்படிச் சென்றார்கள், அந்த நாடுகளில் இப்போதும் காணப்படும் தமிழர்களின் தடங்கள் எவை என்பதை எல்லாம் இந்த நூலில் வரிசைப்படுத்தினேன்.

அணிந்துரை எழுதுவதற்காக இந்த நூலை முழுவதுமாகப் படித்துப் பார்த்த பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள், “வெற்றுக் கற்பனையின் விளைச்சல் அல்ல; விவேகம் மிக்க ஆசிரியர், காலம் எல்லாம் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளிலும், கல்வெட்டுகளிலும், பயணங்களிலும் கண்ட உண்மைகளின் தொகுப்புத்தான் இந்த நூல். தமிழர்கள் தம் நெஞ்சை நிமிர்த்தி, உலக அரங்கில் நிற்கக் கிடைத்த புதிய கையேடு இது. இந்நூலாசிரியரை எத்தனையாகப் பாராட்டினாலும் தகும்” என்று வாழ்த்தினார்.

அதேபோல, தகைசால் பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள், “வருங்காலச் சந்ததியினருக்கு இந்நூல் கிடைத்தற்கரிய பொக்கிஷம். அவர்கள் இப்பொக்கிஷத்தைப் போற்றி மகிழ்வார்கள். பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்குக் கைமாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை இந்நூல் நமக்குத் தருகிறது. இந்நூல் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக வைக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது ஆசை. நம் கனவு மெய்ப்படல் வேண்டும்” என்று வாழ்த்தினார்.

 “உலகெங்கும் தமிழர் தடம்” என்ற இந்த நூல், சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தரமான புத்தகங்களை மட்டுமே வெளியிடும் ‘அகநி’ பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது.

தகைசால் பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் விருப்பப்பட்டதுபோல இந்த நூல் மாணவர்களுக்கான பாட நூலாக ஆக்கப்பட்டால், வருங்கால சமுதாயமாகிய மாணவ, மாணவிகள், தமிழ் மற்றும் தமிழர்களின் பழங்காலப் பெருமைகளை ஆதாரங்களுடன் ஒரே நூலில், எளிமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

நூல் ஆசிரியர்: அமுதன்,

(மு. தனசேகரன்)

தலைமை செய்தி ஆசிரியர் (பணிநிறைவு), தினத்தந்தி, சென்னை.

தொலைபேசி: 98412 68344


நூலை வாசித்த

 நெல்லை கவிநேசன் 





Post a Comment

புதியது பழையவை

Sports News