கோயிலுக்குச் செல்லும்போது.. ---குன்றில்குமார்

"எப்படி? எப்படி ?"-1

-புத்தம் புதிய தொடர்.



                 kundrilkumar@gmail.com

         பிரபல எழுத்தாளர் குன்றில் குமார் அவர்கள் வழங்கும் "எப்படி? எப்படி ?"-புத்தம் புதிய தொடர்.

 நெல்லைகவிநேசன் டாட் காம் இணையதளத்தில் முதல்முறையாக எழுத்தாளர் குமார் அவர்கள் தொடர் வழங்குகிறார்.

     இந்த தொடரில் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படி  நிகழ்த்தப்படுகின்றன ? என்பதை  விளக்கி அதற்கான காரணத்தையும் அருமையாக படம் பிடிக்கிறார், பிரபல எழுத்தாளர் குன்றில் குமார்


கோயிலுக்குச் செல்லும்போது.. 

--குன்றில்குமார்--



நமது நடைமுறை வழக்கத்தில் இருந்துவரும் பல்வேறு பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலும் அதற்கான முழுமையான காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு இருக்கிறது?

அப்படிப்பட்ட எண்ணம் இருந்தாலும் அதற்கான காரண விளக்கத்தை எப்படித் தெரிந்து கொள்வது என்பதும் பலருக்கு சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

அவற்றை அனைவருக்கும் முடிந்த அளவு விவரமாக விளக்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இதன் முதல் பகுதியில் நாம் கோயிலில் இருந்து தொடங்குவோம். 

கோயிலுக்குச் செல்லும்போது நாம் எப்படிச் செல்ல வேண்டும்? என்ன மாதிரியான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்?

பக்தி நிறைந்தவர்கள் குறிப்பிட்ட நாட்களில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அவ்வாறு ஆலயம் செல்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரும் சரி, பின்பும் சரி அசைவ உணவு மற்றும் மது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மாத விலக்கான நாட்களில் பெண்கள் அவசியம் செல்லக் கூடாது 3 முதல் 7 நாட்கள் வரை கோயிலுக்குச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

கடன் வாங்கிக் கொண்டு செல்வது கூடாது. அப்படியே வாங்கினாலும் கோயிலுக்கு என்று கூறி வாங்குவது கூடவே கூடாது.

கோயிலுக்குச் செல்வதற்கு முன்போ அல்லது சென்ற பிறகோ குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பு.

சாப்பிட்டுவிட்டு ஆலயம் செல்வது தவறு. பூஜைக்கு ரொம்ப நேரம் ஆகும் என்றால் அப்போது பிஸ்கட், காபி போன்ற எளிய உணவு உண்ணலாம்.

பரிகாரங்கள் செய்வது என்றால் அதனைத் தாங்களே முன்னின்று செய்ய வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள், உடம்புக்கு முடியாமல் இருப்பவர்கள் போன்றோர் அவர்களின் இரத்த உறவுகள் அல்லது நெருங்கிய விசுவாசிகள், குருமார்கள் மூலமாகப் பரிகாரம் செய்வது நல்லது.

கோயிலுக்குச் செல்லும்போது சுத்தமான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

பெண்கள் இறுக்கமான ஆடைகள், டி ஷர்ட் போன்றவற்றை அணிந்து செல்லக்கூடாது.

ஆண்கள் அரைக்கால் சட்டை, லுங்கி வோன்றவற்றை அணிந்து செல்வதும் தவறு.

ஆடம்பரப் பிரியர்களாக இருந்தால் ஆலயம் செல்லும்போது நிச்சயமாக அதை ஓரம்கட்டி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை அதிகளவில் எடுத்துச் செல்வது தவறு.

கோயில் குளத்தில் கை கால்களை நன்றாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும். முடிந்தால் அதில் நீராடிச் செல்வது இன்னும் நல்லது.

கோயிலுக்குச் செல்வதற்கு முன்போ, பின்போ உறவினர் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

பிரார்த்தனையை நீண்ட நாட்கள் தள்ளிப்போடுவது தவறு. 

குடும்பத்தோடு சென்று சுவாமி தரிசனம் செய்வது நல்லது.



அமாவாசை, பௌர்ணமி, தங்களின் பிறந்த நாள், சித்திரை ஒன்றாம் தேதி, ஜனவரி ஒன்றாம் தேதி, பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய நாட்களில் கோயிலுக்குச் செல்வது உகந்தது.

ஆலயத்திற்குச் செல்லும்போதும், ஆலயத்திற்குள்ளேயும் யாரிடமும் வளவளவென்று பேசுவது கூடாது. முழுஅமைதி காப்பது அவசியம்.

செல்பேசியைப் பயன்படுத்துவதும் கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டும்.

கோயிலில் இருக்கும்போது நமது பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலாச்சாரங்கள், நல்லொழுக்கம் போன்றவற்றைப் பேணிக் காக்க வேண்டும்.

தேவாரம், திருவாசகம் போன்ற கடவுள் சார்ந்த பாடல்களை உள்ளம் உருகப் பாடுதல் நல்லது.

கோயிலுக்குள் சுத்தம் நிச்சயம் கடைப்பிடிக்கப்படுதல் அவசியம்.

தரிசனத்திற்கு உங்கள் நேரம் வரும் வரையில் பொறுமை காத்திடல் வேண்டும். வரிசையில் அடித்துப் பிடித்துக் கொண்டு முந்திச் செல்ல முயற்சிப்பது கூடாது.

மலர்கள், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி, வாழைப் பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அர்ச்சனைக்காக வாங்கிச் செல்லலாம்.

அர்ச்சனைத் தட்டு, சிறு மூங்கில் கூடை, காகிதப் பை, துணிப் பை போன்றவற்றில் அர்ச்சனைப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும்.

கோயில் கோபுர தரிசனம் மிக முக்கியம்.

முதலில் விநாயகரைத் தரிசனம் செய்ய வேண்டும். தலையில் குட்டியும், தோப்புக்கரணம் இட்டும் பிரார்த்திக்க வேண்டும்.

பின்னர் நந்தி, கருடன், மயில் உள்ளிட்ட பிரதான வாகன தெய்வங்களை வணங்க வேண்டும்.

மூலஸ்தானத்திற்கு வெளியே நிற்கும் கடவுளின் மெய்க்காப்பாளர்கள் என்று அழைக்கப்படும் துவார பாலகர்களை வணங்க வேண்டும். அதாவது மூலவரைத் தரிசிக்க அவர்களது அனுமதியை பெறுவதாகப் பொருள்.

பின்னர் மூலவரை வழிபட வேண்டும்.

மூலவரை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள மற்ற மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.

சண்டிகேஸ்வரரை அமைதியாக வணங்க வேண்டும். கைகளைத் தட்டுவது, சொடுக்கு போடுவதைப் பலரும் செய்கிறார்கள். ஆனால் ஆகம விதிப்படி அதனைத் தவறு என்று சொல்வோரும் உண்டு.

ஆலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமம் போன்றவற்றை மேல்நோக்கித் தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும். கிழே சிந்துதல் கூடாது. 

நாம் நெற்றியில் அணிந்தது போக கைகளில் மிகுதியாக உள்ளவற்றை ஒரு பேப்பரில் மடித்து வீட்டுக்குக் கொண்டு செல்லலாம். அல்லது அதற்கு என்று தனியாக வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் போடலாம். கண்ட கண்ட இடத்தில் சிந்துவது தவறு.

விளக்கேற்றிய பின்னர் கைகளில் எண்ணெய் படிந்திருந்தால் அதை நாம் கொண்டு சென்ற துணியில் மட்டுமே துடைத்துக் கொள்ளவேண்டும். கோயில் சுவற்றில் தேய்த்தல் கூடாது.

கோயில் சுவற்றில் கிறுக்குதல், பெயரை எழுதுதல், தேர்வு எண்ணை எழுதுதல் போன்றவை தவறு. உங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லவேண்டுமே தவிர சுவற்றில் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வரவேண்டும். அப்போது நடைப்பயிற்சியின்போது கைகளை வீசிக்கொண்டு நடப்பது போல அல்லாமல் பொறுமையாக, கடவுள் நாமத்தை உச்சரித்தபடி வலம் வரவேண்டும்.

கர்ப்பகிரகத்திற்கு மேலே உள்ள விமானத்தை இருகரம் கூப்பி வணங்க வேண்டும்.

கடவுளைத் தவிர ஆலயத்தில் வேறு எவரையும் வணங்கக் கூடாது.

கோயில் வளாகத்திற்குள் தேவையற்ற வம்புப் பேச்சுக்கள், அரசியல் போன்றவை தவிர்க்கப்படல் வேண்டும்.

உரக்க சிரித்தல், அதிர்ந்து பேசுதல், கூச்சல் போடுதல், கோபப்படுதல், அதிகாரம் மற்றும் ஆணவத்துடன் நடந்து கொள்ளுதல் போன்றவை கூடவே கூடாது.

தரிசனம் செய்யும்போது வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு இடையூறு செய்வது ஆகாது.

அர்ச்சகருக்குத் தட்சணை போடுவது, கோயிலுக்காக உண்டியலில் பணம் செலுத்துவது போன்றவை தவறு கிடையாது.

பிரசாதத்தை சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் இலையைக் குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.

கொடி மரத்திற்கு அப்பால் மட்டுமே கீழே விழுந்து வணங்க வேண்டும். கோயிலுக்குள் வேறு எங்கும் கீழே விழுந்து வணங்குவது கூடாது.

நிறைவாக கோயிலில் ஓரமாக வடக்குத் திசை நோக்கி சற்றே அமர்ந்து கடவுள் திருநாமத்தைக் கூறி வழிபட வேண்டும்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இறைவனை வணங்கும் போது அகமும் புறமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். அத்துடன் நம் முன்னோர்கள் வகுத்த இலக்கண விதிமுறைகளைப் பின்பற்றி கோயிலுக்குச் சென்று வரவேணடும். 

அதுவே முழுமையான பலளை ஒரு பக்தனுக்குக் கொடுக்கும்.


                                                  ---------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News