திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 12

திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா 12-ம்  நாள் நிகழ்வுகள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 12-ம் நாளான வியாழக்கிழமை [21.02.2019] இரவு மலர்க்கேடய சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமி குமரவிடங்கப்பெருமான், மற்றும் தெய்வானை அம்மன் வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெற்றது...






இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.    
அறுபடை வீடுகளில் சிறப்பு வாய்ந்த இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் ஆகும். கொடுமைகள் செய்த சூரனை வெல்ல முருகன் தனது படைவீரர்களோடு தங்கியப் பெருமை திருச்செந்தூருக்கு உண்டு.

“சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை
 சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை”-
என்று ஒரு முதுமொழி உண்டு.

கடவுளர்களில் மிகச்சிறந்த கடவுளாகவும், வேண்டி நிற்கும் பக்தர்களுக்கெல்லாம் அவர்கள் வேண்டிய வரத்தை வழங்கும் கடவுளாகவும் திகழ்பவர் சுப்பிரமணிய சுவாமிகள். இந்த சுப்பிரமணியர்தான் “முருகன்” என்று அழைக்கப்படுகிறார்.

திருமுருகனின் திரு அவதாரம் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டால் அருள் வழங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் அற்புதங்களை அறிந்துகொள்ளலாம்.
 
பிரம்மாவின் புதல்வன்
பிரம்மாவின் புதல்வனான தட்சன் சிவபெருமானை வழிபட்டு வந்தான். இதன்மூலம் ஏராளமான வரங்களை சிவபெருமானிடமிருந்து பெற்றான். பின்னர் உமாதேவியை மகளாகப் பெற்றான். 27 நட்சத்திரங்களையும் மகள்களாகப் பெற்றான். அவ்வாறு 27 பெண்களையும் பெற்ற தட்சன் அவர்களைச் சந்திரனுக்கு மணம் முடித்தான்.
 
27 நட்சத்திரங்களையும் மணந்த சந்திரன் ‘ரோகிணி’ என்பவளிடம் மட்டுமே மிகுந்த பாசத்துடன் நடந்து கொண்டான். இதனால் தட்சன் அதிகமான கோபங்கொண்டான். “நீ தேய்ந்து அழிவாய்” - என சந்திரனைப் பார்த்து சாபமிட்டான்.
 
இதனால் பயந்து நடுங்கிய சந்திரன் சிவபெருமானிடம் வந்து வேண்டினான். சந்திரனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்தார். சந்திரன் தேய்ந்தும், வளர்ந்தும்வரும் நிலை நிலைக்குமாறு செய்தார். பின்னர், சந்திரனைத் தனது சடைமுடியில் சூட்டிக்கொண்டார். இதனால் சிவபெருமான் “சந்திரசேகரன்” - எனவும் பெயர் பெற்றார்.

தட்சனின் கோபம்
சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த சிவபெருமானின்மீது தட்சனுக்குக் கோபம் அதிகமானது.
 
இந்தச் சூழ்நிலையில் - தட்சனின் மகளான தாட்சாயணி உருவிலிருக்கும் உமாதேவி சிவபெருமானை வழிபட்டு வந்தாள். தவங்களும் செய்ய ஆரம்பித்தாள். இதனால் தாட்சாயணி என்னும் உமாதேவியைச் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார்.
 
தன்னை அவமதிக்கும் விதத்தில் சிவபெருமான் நடந்து கொண்டார் என்பதனால் தட்சனுக்குக் கோபம் அதிகமானது. 

யாகம் தந்த வேகம்
இதனால்,- தனக்கு வரங்கள் பல வழங்கிய சிவபெருமானை எதிரியாகவே கருதினான். தட்சன் இப்போது பெரிய யாகம் ஒன்றை நடத்த ஆரம்பித்தான். அந்த யாகத்தில் கலந்துகொள்ள சிவபெருமானைத் தட்சன் அழைக்கவில்லை. ஆனால், அதேவேளையில் தட்சனின் கொடுஞ்செயல்களுக்குப் பயந்த தேவர்கள், அந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள். தனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்தில் கலந்துகொள்ள தாட்சாயணி சிவபெருமானை அழைத்தாள். தனக்கு அழைப்பு தராத தட்சனின் யாகத்தில் கலந்துகொள்ள சிவபெருமான் மறுத்தார். தனது கணவனான சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாவிட்டாலும் தனது தந்தையான தட்சனுக்கு பாடம் புகட்டி நல்வழி காட்ட விரும்பி தாட்சாயணி அந்த யாகத்தில் கலந்துகொள்ள வந்தாள். தனது மகளான தாட்சாயணியைச் சிவபெருமானின் மனைவியாகவே பார்த்த தட்சன், தாட்சாயணியை அவமானப்படுத்தி அனுப்பினான்.

பின்னர் சிவபெருமான் திருக்கண்ணிலிருந்து வீரபத்திரர் தோன்றினார். தாட்சாயணி உமாதேவியிடமிருந்து பத்திரகாளி தோன்றினாள். இருவரும் இணைந்து - தட்சனின் யாகத்தை அழித்தனர். பின்னர் அவனின் தலையைக் கொய்து தட்சனையும் அழித்தார்கள். யாகத்தில் கலந்துகொண்ட தேவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
 
சிவபெருமான் பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்று தட்சனின் உடலில் ஆட்டுத் தலையைப் பொருத்தி அவனை உயிர்பெற்று எழ அருளினார்.

அசுரர்கள் தொல்லைதட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்ட தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.
 
அசுரேந்திரர் என்பவருடைய மகள் மாயை. இவள் காசிப முனிவருடன் இணைந்து சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்னும் மூன்று மகன்களையும், அசமுகி என்னும் புதல்வியையும் பெற்றாள்.
 
இவர்களில் சூரபத்மன் மூத்தவன். தாரகனும் சிங்கமுகனும் இளையவர்கள். தாரகன் யானை முகம் கொண்டவன். சிங்க முகன் ஆயிரம் தலைகளையும், இரண்டாயிரம் கைகளையும் கொண்டவன். ஆட்டுத்தலைத் கொண்டவளாக அசமுகி இருந்தாள்.

தவம்புரிந்த சூரபத்மன்

சூரபத்மன் தனது தம்பிகளோடு சேர்ந்து பல யாகங்கள் செய்து கொண்டிருந்தான்.
 
“சிவபெருமானே எனக்கு 108 யுகங்கள் வாழுகின்ற வரத்தை தர வேண்டும். அதோடு 1008 அண்டங்களையும் ஆளுகின்ற சிறப்பையும் எனக்கு வழங்க வேண்டும். யாராலும் அழிக்க முடியாத வஜ்ஜிர உடலமைப்பு வேண்டும். சிங்க வாகனம் தர வேண்டும். இந்திரஜாலத் தேர் எனக்கு வழங்க வேண்டும்” என சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான் சூரபத்மன். முடிவில் அத்தனை வேண்டுதல்களையும் வரங்களாக சிவபெருமானிடமிருந்து பெற்றான்.
 
“எனக்கு எல்லா வரங்களையும் சிவபெருமான் வழங்கிவிட்டார். எனவே என்னை யாராலும் அழிக்க முடியாது” என்று எண்ணிய சூரபத்மன் ஆணவத்தின் உச்சகட்டத்தில் நின்றுகொண்டு எதிரிலே வருபவர்களிடமெல்லாம் வம்பு இழுத்தான். நீதி நெறிகளை மீறினான். தேவர்களுக்கு ஏராளமான துன்பத்தைக் கொடுத்தான். அவர்களையும் சிறையில் அடைத்தான்.   
 
இந்தநிலையில் சிவ நிந்தனை புரிந்த தட்சனின் மகள் என்ற பழியைப் போக்கிக்கொள்ளவும், தாட்சாயணி என்ற பெயரை நீக்கிக் கொள்ளவும் உமாதேவி விரும்பினாள். இதனால், மலையரசன் இமவானின் மகளாகத் தோன்றி பார்வதி என்ற பெயருடன் உமாதேவி சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தாள்.
 
இப்படி உமாதேவி தவம் புரிகின்ற வேளையில், சிவபெருமானும் தட்சிணாமூர்த்தி, வடிவத்தில் இருந்தார். அதுவும் கல்லான தட்சிணாமூர்த்தி வடிவத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு பிரம்ம புத்திரர்களுக்கும் உபதேசம் செய்வதற்காக, ஓர் ஆலமரத்தின்கீழ் இருந்தார்.
 
“சிவபெருமானின் மௌன நிலையைக் கலைத்தால்தான் இனி சூரபத்மனை அழிக்க முடியும்” என எண்ணிய தேவர்கள் மன்மதனை அழைத்தார்கள். மன்மதன் தேவர்களின் விருப்பப்படி அவர்களின் கவலைகளைப் போக்குவதற்காக சிவபெருமான் இருக்குமிடத்திற்கு வந்தான். யோக வடிவில் இருந்த சிவபெருமான்மீது மலர் அம்புகளை ஏவினான்.
 
சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார். நெற்றிக் கண்ணின் அனலைத் தாங்க முடியாமல் மன்மதன் சாம்பலாகிப் போனான்.
 
இந்தவேளையில் அங்கு வந்த தேவர்கள் சூரபத்மன் செய்கின்ற கொடுமைகளை விரிவாக எடுத்துரைத்தனர். சூரனை அழித்துவிடுவதாக சிவபெருமான் உறுதி கூறினார். அதன்பின்னர் சிவபெருமான் பார்வதியை மணந்தார். சாம்பலாகிப் போன மன்மதனையும் உயிரோடு மீண்டும் வரவழைத்தார்.

ஆறுமுகனின் அவதாரம்
தேவர்களுக்காக சிவபெருமான் பார்வதியை மணந்தார். தேவர்கள் விருப்பத்திற்கிணங்க சிவபெருமான் முருகனைப் பெறுவதற்காக தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்களோடு காட்சி கொடுத்தார். அப்போது இந்த ஆறு முகங்களின் ஒவ்வொரு முகத்தின் நெற்றிக் கண்ணிலிருந்தும் அக்னிப் பிழம்பு (அக்னிப் பொறி) தோன்றியது. இந்த ஆறு அக்னிப் பிழம்புகளையும் கங்கையில் கொண்டு சேர்க்குமாறு தேவர்களிடம் சிவபெருமான் பணித்தார். சிவபெருமானின் அறிவுரைப்படியே வாயுதேவனும், அக்னிதேவனும் கங்கையில் அக்னிப் பிழம்புகளைக் கொண்டு சேர்த்தார்கள்.
 
கங்கை அந்த அக்னிப் பிழம்புகளை இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் சேர்த்தாள். அந்த அக்னிப் பிழம்புகள் ஆறு குழந்தைகளாக அவதாரம் செய்தனர். ஆறு முகங்களோடும், பன்னிரண்டு கைகளோடும் செந்தாமரை மலர்மீது அந்தக் குழந்தைகள் படுத்திருந்தனர்.
 
சரவணப் பொய்கையில் அவதரித்த ஆறு குழந்தைகளுக்கும் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் பாலூட்டினார்கள். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் அந்தக் குழந்தைகளைப் பார்க்க வந்தனர். குழந்தைகளைப் பார்த்த தேவி அந்த ஆறு குழந்தைகளையும் தனது திருக்கரத்தால் அன்போடு சேர்த்து அணைத்தாள். அந்த ஆறு குழந்தைகளும், ஆறுமுகங்களும், பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக மாறிவிட்டது. இதனை  -
“அந்த மில்லதோர் மூவிருவடிவம் ஒன்றாகி
  கந்தன் என்று பேர் பெற்றவனை கவுரிதன் குமரன்”
- என கந்தபுராணம் குறிப்பிடுகிறது.
 
சிவபெருமான் நெற்றிக் கண்ணில் முருகன் பிறப்பிற்கான அக்னிப்பிழம்பு தோன்றிய நேரத்தில் அம்பிகையும், தேவர்களும் பயந்து ஓடினார்கள். அப்போது பார்வதி தேவியின் பாதச் சிலம்பிலிருந்து 9 மணிகள் சிதறி நவசக்திகளாகத் தோன்றினர். பின் வீரபாகுதேவர், வீரகேசரி, வீரமார்த்தாண்டர், வீரமகேசுவரர், வீரராக்தர், வீரபுரந்தரர், வீரதீரர், வீரநந்தகர், வீரமகேந்திரர் ஆகிய ஒன்பது பேரும் முருகப் பெருமானுக்குச் சகோதரர்களாக இருந்து போரில் துணை நின்றனர். பின்னர் முருகப் பெருமானது படைவீரர்களாக இலட்சம் பேர் தோன்றினார்கள்.
 
அசுரர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே அதனைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் தனது ஞானசக்தியை வேலாயுதமாக்கி முருகனிடம் வழங்கினார். முருகப் பெருமானை சூரனை அழிக்கப் புறப்படுமாறும் ஆணையிட்டார்.

சூரசம்ஹாரம்
இலட்சத்தொன்பது படைவீரர்களோடு முருகப்பெருமான் அசுரர்கள் இருக்கும் தெற்குத் திசையை நோக்கிப் பயணம் செய்தார். செல்லுகின்ற வழியில் விந்திய மலைச் சாரலிலுள்ள மாயாபுரியை ஆண்டு வந்த தாரகாசுரனை அழித்தார். பின்னர் அவனுக்குத் துணையாய் நின்று மாயங்கள் செய்த கிரவுஞ்சன் மலையையும் அழித்தார். பின்னர் தென்கடல் ஓரமாக உள்ள திருச்செந்தூர் வந்து தங்கினார். வீரபாகுத்தேவரை அழைத்து, ‘நீர் சூரபத்மனிடம் சென்று அவன் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யச் சொல்லும்” என்று தூது அனுப்பினார்.
 
வீரபாகுத்தேவர் கடலைத் தாண்டி வீரமகேந்திரபுரம் சென்று சிறைச்சாலையில் வாடும் இந்திர குமாரனாகிய ஜெயேந்திரன் முதலிய தேவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொன்னார். சூரனிடம் முருகப்பெருமானின் பெருமையைக் கூறி சிறையில் தேவர்களை விடுதலை செய்யுமாறு வீரபாகுத்தேவர் வேண்டினார். தேவர்களை விடுதலை செய்ய சூரன் மறுத்தான். முருகனைப் பார்த்து ‘சிறுவன்’ என்று சிரித்தான். வீரபாகுத்தேவரையும் சிறை வைக்க முயற்சி செய்தான். திரும்பி வந்த வீரபாகுத் தேவர், சூரனின் நிலையை முருகப்பெருமானுக்கு விளக்கினார். 
 
அங்கு “அன்புக்கும் அறிவுரைக்கும் தட்டுப்பாடு” என்று உணர்ந்த முருகப் பெருமான் முடிவில் போர் தொடுத்தார்.
 
சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், அக்னி முகாசுரன் ஆகிய இருவரும் போரில் பலியானார்கள். அதன்பின்பு சூரபத்மனின் தம்பி சிங்கமுகனும் இறந்தான். சிவபெருமானின் வரத்தினால் பெற்ற இந்திரஜாலத் தேர், சிங்க வாகனம், படைகள் ஆகியவற்றையும் சூரபத்மன் இழந்தான்.

பின்னர் சூரபத்மன் பலவிதமாய்ப் போர் தொடுத்தான். சரணடையாமல் ஆணவத்துடன் எல்லோரையும் அழிக்க முன் வந்தான். முடிவில் சூரபத்மன் மாமரமாக மாறி நின்றான்.
 
அப்போது முருகப் பெருமானுடைய வேல் அந்த மாமரத்தை இரண்டாகப் பிளந்தது. சூரனின் உடலும் இரண்டாகச் சிதைந்தது. மாமரத்தின் ஒரு பாகம் சேவலாகவும், மற்றொரு பாகம் மயிலாகவும் மாறி முருகப்பெருமானை எதிர்த்து வந்தது.
 
ஆனால் இந்தநிலையில் முருகப்பெருமான் சேவலையும், மயிலையும் கொல்லாமல் அருள் புரிந்தார். சேவலைத் தனது வெற்றிக் கொடியாகவும், மயிலைத் தனது வாகனமாகவும் மாற்றி, சூரபத்மனுக்கு அருள் பாலித்தார். ஆணவத்தோடு உலா வருபவர்கள் அழிவைத்தான் சந்திப்பார்கள் என்பதற்கு, சூரபத்மன் வாழ்க்கை என்றும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தொடரும்.


Post a Comment

புதியது பழையவை

Sports News