வாழ்ந்து காட்டிய தமிழ் புலவர் கபிலர் - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

 

வாழ்ந்து காட்டிய 
தமிழ் புலவர் கபிலர்

- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 

திருநெல்வேலி


சங்கத்தமிழ் பாடல்களில் கபிலரின் பங்கு அளப்பரியது.  சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றிய கபிலர், தமிழ்ச் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய  ஆசிரியர். இவர் பிறந்தஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் என்று திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் கூறும்,

சங்க கால புலவர் கபிலரின் காலம் கி.மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும், கடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பாரி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என்றும் அழைக்கப்பட்டான். சேரர்களையும், சோழர்களையும் நடுநடுங்க வைத்த மன்னன் இந்த வேள்பாரி.

பறம்பு மலை, இன்றைய நாளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்து சிங்கம்புணரியில் உள்ளது. வெறும் 300 ஊர்களை உள்ளடக்கிய பறம்பு நாட்டின் மன்னன் மூவேந்தர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்ட காரணம், போர்த் திறம் மட்டுமன்று கொடைத்திறமும்தான். `முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி' என்று கடையெழு வள்ளல்களில் ஒருவனாக விளங்கினான்.. 

தன்னலமற்ற கொடைக்கும், ஒப்புயர்வற்ற நட்பிற்கும் இலக்கணமாக திகழ்ந்தவன் பாரி, சங்கப் புலவர் கபிலர் பாரியின் மிக நெருங்கிய நண்பர். பிசிராந்தையார்- கோப்பெரும் சோழன் போல இவர்களும் நட்பின் இலக்கணமாக விளங்கியவர்கள். 

          கபிலர் வேள்மன்னன் பாரியினுடைய உயிர்நண்பரும், அவனுடைய அவைக்களப் புலவருமாக இருந்து அவனுடன் வாழ்ந்து அவன் பெயரை அழியாக் கவிதைகளில் அமரத்தன்மை பெறச்செய்தவர். ஔவையின் வரலாறு அதியனின் வரலாற்றோடு பின்னிக் கிடப்பதுபோல் கபிலரின் வரலாறும் பாரியின் வரலாற்றோடு பின்னிக் கிடக்கின்றது.

இவர் அந்தணக் குலத்தை சார்ந்தவர் என்பதை அவரது பாடல் மூலமாக அறியலாம்,  

“யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்”,

“யானே தந்தை தோழன்; இவர் என் மகளிர்; அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே”

(புறநானூறு, 200-201)

என இவர் தம்மைக் கூறிக்கொள்வதாலும்,

“புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்”

(மேலது, 126)

என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறுவன் மூலமும் அந்தணர் என்பதை அறியலாம்.  

கபிலர் பாடிய பாடல்கள்

          சங்க இலக்கியத்துள் 235 பாடல்கள் இவரது படைப்புகள். இவற்றுள் புறப்பொருள் பற்றியன 38 பாடல்களே. அகத்திணை சார்ந்த 197 பாடல்களில் 193 பாடல்கள் குறிஞ்சிக்குரியனவாம். ஏனைத் திணைகளில் ஒவ்வொன்று பாடி ஐந்திணைப் புலவராக விளங்குகிறார். இவருடைய அகப்பாடல்களுள் 182 களவிற்கும், 12 கற்பிற்கும் 3 கைக்கிளைக்கும் உரியனவாம். இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். 

கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர்  என்றே இவரைக் போற்றினர். 

கைக்கிளையைப் பாடிய ஒரே புலவர் கபிலரே. ‘குறிஞ்சிக் கபிலர்’ என்ற பெயரோடு ‘களவுக் கபிலர்’ என்னும் பெயரும் இவருக்குண்டு. 

இவர் பாடிய பாக்கள்:

நற்றிணை              –        20

குறுந்தொகை       –        29

ஐங்குறுநூறு           –      100

பதிற்றுப்பத்து      –        10

கலித்தொகை        –        29

அகநானூறு            –        18

புறநானூறு             –        28

குறிஞ்சிப்பாட்டு     –      1

ஆக மொத்தம் –      235 பாடல்கள் கபிலர் பாடியவற்றில் நமக்கு கிடைத்துள்ளது.,


நமக்கு பெயர் தெரிந்த 475 புலவர்கள் பாடிய 2381 மொத்த சங்கப்பாடல்களில் கபிலர் ஒருவரது பாடல்களின் எண்ணிக்கை மட்டும் 235 உள்ளது என்றால்   இவர் ஒருவரின் பாடல்கள் மட்டும் 10% மேல் இருக்கிறது என்பதன் மூலம் இவரது செல்வாக்கினை நன்கு உணரமுடிகிறது. 

இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்துவிளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆகும்.

 "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனுக்கு தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப்பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக் கிடந்த 99 பூக்களையும், சிறப்பாக பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்  குறிஞ்சிப்பூவையும்  குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

நமக்கு கிடைத்தவை சில பாடல்களே ஆனாலும், குறிப்பாகக் குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார், அதனால்  ‘குறிஞ்சி பாடிய  கபிலன்’   எனக் கபிலர் சிறப்பிக்கப்பட்டார்.  



கபிலரைப்  பாராட்டிப்  பாடியவர்கள்

தாம் வாழ்ந்த நாளிலேயே புலமைச் சான்றோரால் போற்றப்பட்டவர்  கபிலர். நக்கீரர் இவரை,

உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்”    

என்று   அகநானூறு 78 வது பாடலில் புகழ்ந்துள்ளார். 

அதே போல பெருங்குன்றூர்க் கிழார்,

உவலை கூராக் கவலை இல் நெஞ்சின், நனவில் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே” 

என்று பதிற்றுப்பத்து  85வது பாடலில் போற்றியுள்ளார்.  

பொருந்தில் இளங்கீரனார் என்ற பெரும் புலவரும் 

“செறுத்த செய்யுட் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க்கபிலன்

என்று புறநானூறு, 53வது பாடலில் பாடியுள்ளார். 

மாறோக்கத்து நப்பசலையார்,

புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,

இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, 

பரந்து இசை நிற்கப் பாடினன்”

(மேலது, 126) என்றும்,

“பொய்யா நாவின் கபிலன்”   

(மேலது, 174)  என்றும், 

கபிலரின் திறத்தை போற்றி பாடினார்கள். என்றால் இவருடைய ஆழ்ந்த அறிவும், சத்திய நெறியும்,  பாடும் திறமையும், கல்வி கேள்வியின் மிகுதியும், அகத் தூய்மையும் நமக்கு நன்கு தெரிகின்றன. 

 “கவிதைக்கு பொய் அழகு” என்று சொல்லி தகுதி இல்லாதவரையும் புகழ்ந்து படுவது அல்ல புலமை . புலமை என்றால் ஆழ்ந்த நுண் அறிவு கொண்டவன், உண்மையை திறம்பட உரைப்பதே கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தியவர் கபிலர், 

‘எஞ்சிக் கூறேன்’ (பதிற்றுப்பத்து, 61)  எனச் செல்வக்கடுங்கோ வாழியாதனை நோக்கிக் இவர் கூறும் பாடல் வரியை இன்று தமிழ் கவிங்ஞர்கள்  கவனத்தில் கொள்ள வேண்டும். 

கபிலரால் பாடப்பட்டோர்

          அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோ, வேள்பாரி, வையாவிக் கோப்பெரும்பேகன், மலையன் முதலானோர்

 இவர்களுள் பாரியின் பண்பைப்பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம். பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பானிடம் நூறாயிரம் காணமும் (நூறாயிரம் பொற்காசும்), அவனது ‘நன்றா’என்னும் மலையின்மீதேறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார் என்று ஏழாம் பத்தின் பதிகம் மொழிகிறது.

பேகன் தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தியிடம் கூடிவாழ்ந்தபோது பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்கிழார்  போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப்படுத்த முயன்றார்  (புறநானூறு, 143-147).    இவரது பாட்டால், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்திஒன்பது தலைமுறையாக துவரை (துவாரகை) என்னும் நகரை ஆண்டு வந்தனர்(மேலது, 201)  என்ற  செய்தி  தெரியவருகிறது. சங்க கால புலவர்களில் கபிலரே முதன் முதலில் 

துவாரகை நகரம் பற்றி கூறுகிறார்.

கபிலரால் பாடப்பெற்ற மலைகளும், நாடுகளும், ஊர்களும்

            அயிரைமலை, கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, பறம்புநாடு, கிடங்கில், கொடுமணம், பந்தர், மதுரை, முள்ளூர்க்கானம், வாரணவாசி என்பவை இவரால் பாராட்டப்பெற்றிருத்தலின் அவை இவர் காலத்தில் சிறப்புற்றிருந்தன என்றும், அவற்றுள் பல இவர் பழகிய இடங்கள் என்றும் தெரிகின்றன.

பாரியும் கபிலரும்

பாரியின் மகளிர் மணம் பெறும் பருவம் அடைந்த காலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர்களுள் ஒவ்வொருவரும் அம்மகளிரை மணஞ்செய்துகொள்ள விரும்பி வேள்பாரிக்கு அக்கருத்தை அறிவிக்க, அவன் பெண்கொடுக்க மறுத்தனன். மறுக்கவே மூவேந்தரும் அவனது பறம்புமலையைச் சூழ்ந்துகொண்டு போர்புரிந்தனர்.

அக்காலத்து, இவர் அவர்களை நோக்கி, “பாரியது பறம்புமலை இயற்கைவளம் உடைமையால் முற்றுகைக்குச் சளைக்காது. எனவே, மூவேந்தர்களாகிய நீங்கள் ஒருங்கு இணைந்து முற்றுகை இட்டாலும் பறம்புமலையைக் கைக்கொள்ளமுடியாது. வீரனாகையால் போரில் தோற்றுப் பறம்புமலையைத் தாரான். கலைஞராய் – இரவலராய் ஆடிப்பாடிவந்து நின்றால் பரிசிலாகப் பறம்புமலையையும் தருவான்; பறம்புநாட்டையும் தருவான்”  (மேலது, 109)  எனப் பாடினார். பாரியை மறுமையிலும் நண்பனாகப் பெற விழைந்து,

                    “இம்மை போலக் காட்டி, உம்மை

                    இடை இல் காட்சி நின்னோடு

                    உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே”   (மேலது, 236)

என ஊழை வேண்டுகிறார்.

மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்குப் பாரியின் புகழைப் பாடி வந்தார் கபிலர்.

இந்நிலையில் பறம்புமலையைப் பகைவர்கள் கைக்கொண்டனர்; சூட்சுமமாக வஞ்சித்து பாரியைக் கொலை செய்தனர். 

பாரிக்கு அங்கவை சங்கவை என்று இரண்டு மகள்கள் இருந்தனர். பாரி தவறியதும், இவ்விரு மகள்களையும் திருக்கோவிலூரைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தார் கபிலர். தன் தோழன் இறந்தபின்னும் அவன் குழந்தைகளை, தன் வாரிசாக எண்ணிச் செய்யவேண்டிய கடமைகளை முறை தவறாது செய்தார், இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல.

பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது சால்பையும் பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தே என்றென்றும் நிலைக்கச் செய்தவை. இவர், மூவேந்தரும் வஞ்சகமாக பாரியை கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி வெதும்பி பாடிய செய்யுட்கள், கற்போரை துயரக்கடலுள் சேர்த்துவன ஆகும். 



பாரியின் கொடையைப் பாராட்டும் கபிலர், வஞ்சப் புகழ்ச்சியாகப் ‘பாரி ஒருவனும் அல்லன்;  மாரியும் உண்டு, ஈங்கு உலகு புரப்பதுவே’  (புறநானூறு, 107) என்பதிலுள்ள நயம் மனங்கொள்ளத்தக்கது. மடவரும், அறிவில் மெலிந்தோரும் செல்லினும், பாரி கொடுப்பான் என்று கூறும் கபிலர் புல்லிலை எருக்கம்பூவையும் ஏற்று அருள்செய்யும் கடவுளோடு அவனை ஒப்பிடுகிறார். ‘பாரியும், பரிசிலர் இரப்பின், ‘வாரேன்’ என்னான், அவர் வரையன்னே’  (மேலது, 108)  என்று தன்னையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் வள்ளலாகக் கூறுகின்றார். பாரியின் பறம்பினைப் பிரிய மனமின்றி,

நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்

சேறும் – வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே! ”

 (மேலது, 113)

எனப் புலம்புகின்றார். பாரிக்காகவும், அவன் பெண்களுக்காகவும், அவன் நாட்டுக்காகவும், அவர் வருந்திப் பாடிய பாக்கள் நெஞ்சை நெகிழ்விக்கும் நீர்மையனவாகும்.


கபிலர், பாரி மகளிரைத் தக்காருக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்று எண்ணி அவர்களை உடன் அழைத்துச் சென்றார். பாரிமகளிரோடு, விச்சிக்கோ என்னும் குறுநிலமன்னன், இருங்கோவேள் ஆகிய மன்னர்களிடம் சென்று பாரி மகளிரைக் கொள்ளுமாறு வேண்டினார். அனைவரும் மறுக்கவே அம்மகளிரை அந்தணர்களிடத்தே அடைக்கலமாக ஒப்படைத்தார். அதற்கு மேல்  பாரியைப் பிரிந்து வாழமுடியாத நிலையில் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள சிறு குன்றின் மீது வடதிசை நோக்கி அமர்ந்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார். இதை `வடக்கிருத்தல்' என்பர். இந்தக் குன்று இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது.

``பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒவ்வாது

ஒருங்குவரல் விடாஅது 'ஒழிக' எனக்கூறி,

உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!"

புறநானூற்று (236) கையறுநிலைப் பாடல்

``நீ இறந்த போது, உன்னோடு என்னையும் வரவிடாது `இங்கேயே இரு' எனச் சொல்லிச் சென்றாய். உனக்கு நான் நெருங்கிய நண்பன் இல்லையா?  இங்கிருந்தது போலவே அங்கேயும் நான் உன்னுடன் வாழும் நிலையை எனக்கு இனியேனும் தருவாயாக!" என்று தாம் உயிர் நீக்கும் செய்தியை கபிலர் பாடியுள்ளார். 



கபிலர் குன்று

          திருக்கோவலூரின் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள கபிலர் குன்று (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். 

திருக்கோவலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் ‘கபிலர்குன்று’  உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் ‘கபிலக்கல்’ என்றே இந்த இடத்தைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

            இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது.

சிறந்த நட்பிற்கு உதாரணமாக இவ்விருவரும் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட கபிலர் உயிர்நீத்த குன்றின் மேல் பிற்காலத்தில் சிறு கோயிலும் கட்டி மக்கள் வழிபட்டு வந்தனர். ஆனால் இன்று அந்த புனிதமான இடத்தில் சிகரெட் துண்டுகளும், சாராய பாட்டில்கள் உருளும் அவல நிலையும் உள்ளதை பார்த்தல் வேதனையாக உள்ளது. கபிலர் வடகிருந்து உயிர் துறந்த இந்த தலம் நட்பின் சின்னமாக தமிழக அரசால் போற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும்..

                                                   ------------------------------------------




Post a Comment

புதியது பழையவை

Sports News