தமிழுக்கும் தமிழர்க்கும் அரும்பணி ஆற்றிய பாவேந்தர் பாரதிதாசன்

 தமிழுக்கும் தமிழர்க்கும் 

அரும்பணி ஆற்றிய 

பாவேந்தர் பாரதிதாசன்



- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 

திருநெல்வேலி. 



பொருளுக்காக துதி பாடுவோரும், பொழுது போக்கிற்காக கவி பாடுவோரும், போலிப் புகழுக்காக எதை வேண்டுமானாலும்  பாடுபவர் அல்ல அந்த கவிஞர். 

கவிதை உலகில், கொள்கைக்காகவும்,  மக்கள் நலவாழ்விற்காகவும் சமுதாய மலர்ச்சி பெற வேண்டும் என்பதற்க்காகவும்  பாடினார் பாவேந்தர்.  

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி என்கிற புதுவையில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்களின் பெயர் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மையார் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார்.இவருடைய இயற்பெயர் “சுப்புரத்தினம்” இவர் தனது தந்தையின் மீது கொண்ட அளவு கொண்ட பாசத்தினால் அவரது பெயரின் முதற் பாதியில் கனகசபை என்கிற அவரது அப்பாவின் பெயரினை சேர்த்து கனக சுப்புரத்தினம் என்று சேர்த்துக்கொண்டார். பிறகு அவரது பள்ளிப்படிப்பு முதல் அவர் கனகசுப்புரத்தினம் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை கற்று தேர்ந்து, பின் பாரதியார் மீது கொண்ட பற்றால் பாரதி தாசனாகி தன் பெயரை “பாரதிதாசன்” என மாற்றி கொண்டார். 



பாரதிதாசன் அவர்களின் தந்தையான கனகசுப்புரத்தினம் அவர்கள் புதுவையில் ஒரு மிக பெரிய செல்வந்தராக வலம் வந்தார். அந்த சமயத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் புதுவையில் இருந்ததால் அவர் பிரெஞ்சு பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை தொடங்கினார். இருப்பினும் அவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார். 

1907  -   புதுவை மகாவித்வான் ஆ. பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.  புதுவை மாநிலக் கல்வே கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார்.

1908  -   பாவேந்தர் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.  பாரதியாரின் புலமையும், எளிமையும் கவிஞரைக் கவர்ந்தன.  பாரதி மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

1909  -   இவர் தன் பதினெட்டாம் வயதில் காரைக்காலைச் சேர்ந்த நிரவி எனும் ஊரில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணி ஏற்றார்.  பாவேந்தர் தன் கற்பனைத் திறத்தாலே தமிழ் உலகை வலம்வரத் தொடங்கினார்.  அவர் புதுவை கே.எஸ்.ஆர்., கண்டெழுதுவோன் கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ். பாரதிதாசன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார்.

சிறு வயது முதலே அழகான பாடல்கள் எழுதும் திறன் பெற்றிருந்த பாரதிதாசன், தன் பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார். அங்கு சீரிய முறையில் தன் தமிழறிவை விரிவுபடுத்தியவர் மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலை பட்டத்தை இரண்டே ஆண்டுகளில் கற்று தேர்ந்தார். கல்லூரி படிப்பு முடித்த உடன் 1919-இல் காரைக்காலில் உள்ள அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார்.


1920  -   பழனி அம்மாளை இல்லறத் துணைவியாக ஏற்றார்.  இவர்கள் சரசுவதி, கோபதி, வசந்தா, ரமணி எனும் மக்களைப் பெற்றெடுத்தார்கள்.  கோபதி தான் இன்று மன்னர் மன்னனாக உலா வருகின்ற பெருங்கவிஞர்.

தேசிய இயக்கத்தில் சேர்ந்து கொண்ட பாவேந்தர் கைத்தறித் துணிகளைத் தெருத்தெருவாக விற்பனை செய்தார்.  தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன், புதுவைமுரசு, துய்ப்ளேக்ஸ், முல்லை, குயில் ஆகிய இதழ்களுக்குப் பாவேந்தர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

1929  -   பெரியார் ஈ.வெ.ராவின் சுயமரியாதைக் கருத்துகள் பாவேந்தரைக் கவர்ந்தன.  அதன் மூலம் பெரியாருடன் தொடர்பு கொண்டார்.  சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர் என்று பெரியார் இவரைப் பாராட்டினார்.  இவர் அப்போது அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற திராவிட இயக்கத்தினரிடம் நட்புக் கொண்டிருந்தார்.  திராவிட மேடைகள் தோறும் கவிஞரின் கவிதை வரிகள் பாடப்பட்டன.  அப்போதுதான் புலவர் மத்தியிலே உலாவந்து கொண்டிருந்த கவிஞர், மக்கள் மத்தியில் உலாவரத் தொடங்கினார்.  மக்கள் கவிஞராக விளங்கினார்.

செட்டிநாட்டுத் தமிழறிஞர்களிடம் நட்பு கொண்டிருந்தவர் அவர்களின் நிதி உதவியுடன் சென்னை சாந்தோம் சாலையில் 'முத்தமிழ் மன்றம்'  நிறுவினார்.  

கவிஞர் சுரதா அந்தக் மன்றத்தில் இணைந்தார். அவர் பாரதிதாசன் மீது பற்றுக் கொண்டதனால் இராசகோபால் எனும் தன் இயற்பெயரை சுரதா (சுப்புரத்தினதாசன்) என்று மாற்றிக் கொண்டார்.

பாரதிததாசன் தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க காலத்தில் ஆத்திகராகவே விளங்கினார். இதனால் 'ஸ்ரீ மயிலம் சுப்ரமணியர் துதியமுது', 'சக்திப்பாட்டு', 1933 ஆம் ஆண்டு மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் 'நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்' என்று பிரகடனம் செய்தார். பாரதிதாசனின் முதற் கவிதையான 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பது அவர் இயற்கையையும் பிறவற்றையும் தெய்வமாகக் கண்டார் என்பதை உணர்த்துகிறது. இவர் தமிழர் மரபு வழிபட்ட பக்திப் பாவலனாக இருந்து 'மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது' பாடியுள்ளார். விநாயகர் காப்பு, விநாயகர் துதி, சிவபெருமான் துதி, உமை துதி, திருமால் துதி போன்ற வழிபாட்டுப் பாடல் பாடியுள்ளார். பாரதியிடம் பாரதிதாசன் கொண்ட பற்றாலும், ஈர்ப்பாலும் சக்தி வழிபர்டைச் சார்ந்திருந்தார் என்று கூறலாம்.

1946  -   அறிஞர்களின் வாழ்த்து, பாராட்டுக் கவிதைகள், கட்டுரைகள் கொண்ட 'புரட்சிக் கவிஞர்' என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார்.  அதிலிருந்து இவர் புரட்சிக் கவிஞர் எனப்பட்டார்.                பாவேந்தரின் கவிதைகள் குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், காதலா? கடமையா? தமிழச்சியின் கத்தி, இளைஞர் இலக்கியம், இசையமுது முதலிய அரிய நூல்கள் கவிஞரின் படைப்பாகும்.

1946  -   ஜீன் மாதம் 29-இல் பாவேந்தரின் 55 வயது பிறந்தநாள் விழா நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது.  அவ்விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முயற்சியால் ரூ.25000 – பணமுடிப்பு வழங்கப்பட்டது.  அந்த ஆண்டு நவம்பரில் அரசு ஆசிரியப் பணியிலிருந்து பாவேந்தர் ஓய்வு பெற்றார்.

1950  -   பொன்னுச்சாமிப் பிள்ளை முயற்சியால் பாவேந்தருக்கு மணிவிழா நடைபெற்றது.  அவ்விழாவில் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்தி ரூ.1000 நிதியும் அளிக்கப்பட்டது.

1954  -   புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்றத்திற்குத் தலைமை வகித்தார்.



பாவேந்தர் புரட்சிக்கவி புரட்சி கவிஞர் பாரதிதாசன் நூல்கள்: பாரதிதாசன் மொத்தம் 86 நூல்களை எழுதியுள்ளார் மற்றும் பல்வேறு திரைப்பட வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் குயில் என்ற வார இதழை வெளியிட்டு வந்தார். 

பாண்டியன் பரிசு இருண்ட வீடு அழகின் சிரிப்பு குடும்பவிளக்கு இசைஅமுது எதிர்பாராத முத்தம் குறிஞ்சித்திட்டு முல்லைக்காடு விடுதலை வேட்கை ஆகியவை அவரது படைப்பில் சில முக்கியமானவை. 

பாரதிதாசன் பாவேந்தர் உரிமையாளராகவும் ஆசிரியராகவும் பொறுப்பேற்று நடத்திய இதழ்கள் : 

1. புதுவைமுரசு (வார இதழ்) 1930 முதல் 1931

2. ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் (மாதாந்தக் கவிதைப் பத்திரிக்கை 1935

3. குயில் (புத்தகம்) 1946

4. குயில் (ஒரு பெயர்ப்பன்னூல்) 1947

5. குயில் (திங்கள் இதழ்) 1948

6. குயில் (தினசரி) 1948

7. குயில் (கிழமை இதழ்) 1958 முதல் 1961

8. குயில் (மாதம் இரு முறை) 1962

இவற்றில் பாவேந்தர் பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் எழுதியுள்ளார், அவை :

1. பாரதிதாசன்

2. கே.எஸ். பாரதிதாசன்

3. புதுவை கே.எஸ்.ஆர்

4. கே.எஸ்.ஆர்.

5. நாடோடி

6. வழிப்போக்கன்

7. அடுத்த வீட்டுக்காரன்

8. கே.எஸ்.

9. சுயமரியாதைக்காரன்

10. வெறுப்பன்

11. கிறுக்கன்

12. கிண்டற்காரன்

13. அரசு

14. கைகாட்டி

15. கண்டெழுதுவோன்

16. செய்தி அறிவிப்பாளர்

17. உண்மை உரைப்போன்

18. கே.ஆர்

19. குயில் செய்தியாளர்.

ஒரு துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் அதே துறையில் சிறந்து விளங்குபவர்கள் மீது பற்று கொள்வது இயல்பு. அதே போல்தான் தமிழ் மீது அதீத பற்று கொண்ட கனகசுப்புரத்தினமும் மூத்த கவி பாரதியரால் ஈர்க்கப்பட்டார். பாரதியாரின் பாராட்டையும், அன்பையும் பெற்றார். அன்று முதல் தன் பெற்றோர் வைத்த பெயரான “கனகசுப்புரத்தினம்” என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் என பெயரை மாற்றிக்கொண்ட பிறகு அந்த பெயரிலேயே தன் படைப்புகளை வெளியிட தொடங்கினார். திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட இவர் , தந்தை பெரியார் போன்ற அரசியல் தலைவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர். அதற்காக பலமுறை சிறையும் சென்றார்.

காந்தியடிகள், நேரு, திலகர் போன்ற தலைவர்க் புதுவை வந்தபோது அவர்களை நேரில் காணும் வாய்ப்பு கவிஞருக்குக் கிடைத்தது. மேலும் பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. ஐயர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுடன் பாரதிதாசன் நெருங்கிப் பழகியவர்.

புதுவையில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற போது, அந்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டார் பாவேந்தர்.

அவரது தமிழ் இலக்கிய நடை கண்டு வியந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் அவருக்கு கதை வசனம் எழுத வாய்ப்புகள் வழங்கினர். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் 1954-இல் நடைபெற்ற புதுச்சேரி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் 1960-இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

கடவுள் மறுப்பு , சாதி ஒழிப்பு கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட இவர் அது சார்ந்து பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். “எதிர்பாராத முத்தம்”, “குடும்ப விளக்கு”, “இசையமுது”, “தமிழ் இயக்கம்”, “அழகின் சிரிப்பு”, “தமிழச்சியின் கத்தி”, “பாண்டியன் பரிசு”, “பெண்கள் விடுதலை” போன்றவை இவரது படைப்புகளில் மிக சிறந்ததாக கருதப்படுகின்றன.

பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் பெரியார் “புரட்சி கவிஞர்” என்ற பட்டத்தையும் வழங்கினார். தமிழக அரசாங்கம் அவர் பெயரில் “பாரதிதாசன் பல்கலைக்கழகம்” என்ற மாநில பல்கலைக்கழகம் ஒன்றை திருச்சியில் நிறுவியுள்ளது. மேலும் அவரது நினைவை போற்றும் வகையில்  ஆண்டு தோறும் தமிழில் சிறந்து விளங்குபவர் ஒருவருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது.


பாடல் துறையில் மட்டுமின்றிச் சிறுகதைத் துறையிலும் சிறந்து விளங்கியவர் பாவேந்தர். தம்முடைய புரட்சிக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்குச் சிறுகதைத் துறையும் அவருக்குத் துணை புரிந்தது.

1955 ஆம் ஆண்டில் புதுவை ஞாயிறு நூற்பதிப்பகத்தார் கவிஞரின் சிறுகதைகளைக் தொகுத்துப் 'பாரதிதாசன் கதைகள்' என்று நூலாக வெளியிட்டனர். 1931-32 ஆம் ஆண்டுகளில் 'புதுவை முரசு' வார இதழில் வெளிவந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது.

மூடப்பழக்க வழக்கங்களைச் சமுதாயத்திலிருந்து ஒழிக்க விரும்பி, நகைச்சுவையாக எழுதப்பட்டவையே அச்சிறுகதைகள். 1930 ஆம் ஆண்டில் 'ஏழைகள் சிரிக்கிறார்கள்' என்ற தலைப்பில் பாரதிதாசனது சிறுகதைகளைத் தொகுத்துப் பூம்புகார் பிரசுரம் வெளியிட்டது. புதுவை முரசு, குயில், தமிழரசு, சினிமா உலகம், போர்வாள் போன்ற இதழ்களில் வெளிவந்த 30 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

வாழ்க்கையின் துன்ப துயரங்களைச் சுமக்கின்ற அவலம் குறைவதற்காக, ஏழைகள் சிரிக்கிறார்கள், ஆயினும் அவர்கள் அறிவும், உணர்வும் பெற்றெழுந்து விட்டால், ஓடப்பராய் என்பதைப் பாவேந்தரின் கதைகள் தெரிவிக்கின்றன. மூடநம்பிக்கைகளை எள்ளி நகையாடித் தம் கதைகளின் மூலம் பகுத்தறிவுக் கனல் பாய்ச்சுகின்றார் பாவேந்தர்.

'செவ்வாய் உலக யாத்திரை' என்ற சிறுகதை பாவேந்தரின் கற்பனைத் திறனுக்கோர் எடுத்துக்காட்டாகும். பாவேந்தருடைய கதைகள், இரண்டு பக்க அளவேயுடைய மிகச் சிறிய கதைகளாகும். சிரிக்க வைப்பதாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் அவை இருக்கின்றன. பாவேந்தர் கதையை மக்களுக்கு தெரிவிப்பதே நோக்கமாகக் கொள்ளாமல் அக்கதைகள் மூலம் அவர் சொல்லவந்த கருத்துக்களையே முன்வைக்கின்றார். தமது புரட்சிக் கருத்துக்களை சிறுகதை வடிவில் தந்தார். சிறுகதைகள் மட்டுமின்றி சில நெடுங்கதைகளையும் எழுதியுள்ளார். 'கெடுவான் கேடு நினைப்பான்' அல்லது 'வாரிவயலார் விருந்து' என்ற தலைப்பில் புதுவை முரசு இதழில் பாவேந்தர் ஒரு நெடுங்கதையை எழுதியிருப்பதாகவும் அறிய முடிகின்றது. 'எல்லோரும் உறவினர்கள்' என்ற தலைப்பிலும் முற்றுப் பெறாத ஒரு தொடர்கதையைக் குயில் இதழில் எழுதியுள்ளார் பாவேந்தர். அவ்வகையில் ஒரு நல்ல கதையாசிரியராகவும் பாவேந்தர் விளங்குவதை நாம் அறிய முடிகின்றது.

இளமையில் இருந்தே நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் பாவேந்தர். பள்ளி நாடகங்களில் தலைமை நடிகராகவும் நடித்துக் காட்டியவர். குசேல உபாக்யானம், பாதுகாபட்டாபிசேகம் முதலிய நாடகங்களில் தலைமை நடிகராக நடித்ததோடு, நாடகத்தை நடத்துகிற பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். குசலேனும், ராமனுமாகத் தோன்றிய பாவேந்தர், சுசீலை, சீதை போன்ற பெண் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்புத் துறையில் வல்லவரான பாவேந்தர், பிற்காலத்தில் நாடக நூல்கள் பலவற்றை எழுதினார். இரணியன் அல்லது இணையற்ற வீரன், நல்ல தீர்ப்பு, கற்கண்டு, அமைதி, சௌமியன், படித்த பெண்கள், சேரதாண்டவம், கழைக்கூத்தியின் காதல், பாரதிதாசன் நாடகங்கள், பிசிராந்தையார், தலைமை கண்ட தேவர் கோயில் இரு கோணங்கள் முதலிய 12 நாடக நூல்களை வெளியிட்டுள்ளார் பாவேந்தர்.



ஒன்றை நன்றாக விளக்க வேண்டும் என்றால் அதை நாடகமாக எழுத வேண்டும் என்று பாவேந்தர் தமது படித்த பெண்கள் நாடகத்தின் முன்னுரையில் கூறுகின்றார். அதற்கிணங்க அவர்தம் நாடகங்கள் அமைந்துள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என நான்கு பிரிவுகளாக உள்ளன.

'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடகம் 1934-இல் எழுதப் பெற்று நடிக்கப்பட்டது. 1939-இல் அது நூல் வடிவம் பெற்றது. பகுத்தறிவு இயக்க கொள்கைகளைப் பறைசாற்றுவதாக இந்நாடகம் திகழ்கின்றது. 

இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, இந்திய விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பல பாடல்களைப் பாடியவர் பாவேந்தர். 



பழந்தமிழ் கூத்தின் சிறப்பை நல்லதீர்ப்பு என்ற நாடகம் புலப்படுத்துகிறது. பொருந்தாத் திருமணத்தைச் சாடும் நகைச்சுவை நாடகமே கற்கண்டு நாடகம் ஆகும். உரையாடலற்ற ஊமை நாடகமாகிய 'அமைதி' நாடகம் ஒரு புதமை படைப்புடைய ஒரு கதையமைப்பாகும். முடியாட்சியைக் குடியாட்சி ஆக்கும் நோக்கில் படைக்கப்பட்டது சௌமியன்' என்னும் நாடகம் ஆகும்.

பெண்கல்வி பெருகுதல் வேண்டும். அவர்கள் ஆண்களுக்கு நிகராக வாழ்தல் வேண்டும் என்ற கருத்தை விளக்குவது படித்த பெண்கள் என்ற நாடகக் கதையமைப்பாகும்.

சங்க இலக்கியத்திலே காணப்படும் ஆட்டனத்தி ஆதிமந்தி ஆகியோரின் காதல் வாழ்வை விளக்கும் நாடகமே சேரதாண்டவம் ஆகும்.

சங்க காலப் புலவராம் பிசிராந்தையாரின் பெருமை கூறும் நாடகமே 'பிசிராந்தையார்' இந்த நாடகத்தில், 'தமிழனின் உயிர் தமிழே ஆகும் தமிழில் பற்றில்லாதவன் தமிழன் அல்லன்' என்று புலவர் கூறுவது, புரட்சிக் கவிஞரின் உள்ளத்துடிப்பே ஆகும். 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி இந்நாடகத்திற்கு ஐயாயிரம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியது.

1980 ஆம் ஆண்டு பூம்புகார் பிரசுரம் வெளியிட்ட 'கோயில் இரு கோணங்கள்' பாவேந்தர் எழுதி இதுவரை வெளிவராத எட்டு நாடகங்களின் தொகுப்பாகும். இந்நாடகங்கள் குயில், முரசொலி போன்ற இதழ்களில் வெளிவந்தவை.

பாவேந்தர், புரட்சிக் கவிஞர், போன்ற சிறப்புப் பெயர்களைப் பாரதிதாசன் பெற்றிருந்த போதிலும், அவரது கவிதைகளுக்குக் கிடைக்காத சாகித்யா அகாடெமியின் விருது 'பிசிராந்தையார்' என்ற நாடகத்துக்குக் கிடைத்திருப்பது பாவேந்தர் மிகச் சிறந்த நாடக உணர்த்துகிறது.

மக்களிடையே கருத்துக்களை எளிதில் பரப்புவதற்குத் திரைப்படமே மிகச் சிறந்த சாதனம். இளமையிலிருந்தே நாடகத் துறையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடே, புரட்சிக் கவிஞரைத் திரையுலகிற்கு இழுத்துச் சென்றது. 1947 முதல் 1953 வரை ஆறு ஆண்டுகள் திரைப்படத் துறையில் தீவிரமாக ஈடுபட்டார் பாவேந்தர்.

பாலாமணி அல்லது பக்காத் திருடன், கவி காளமேகம், சுலொசனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி, ஆகிய திரைப்படங்களுக்குப் பாவேந்தர் திரைக்கதை, உரையாடல், பாடல்கள் எழுதியுள்ளார்.

தாம் உரையாடல் எழுதிய வளையாபதி என்ற திரைப்படத்தில், தம்மைக் கேட்காமல் சில வரிகளை மாற்றி விட்டார்கள் என்பதற்காக, மாடர்ன் தியேட்டர்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்துடன் நாற்பதாயிரம் ரூபாய்க்கு செய்திருந்த ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தாராம் பாவேந்தர். பணத்தைப் பாவேந்தர் எப்பொழுதும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டாகும்.



தமிழ்ப் படங்களின் தரக்குறைவான நிலை பற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே கவலைப்பட்டவர் பாவேந்தர். எப்படியும் தரமான தமிழ்பபடம் ஒன்றைத் தயாரிக்க விரும்பிய பாவேந்தர் அந்த நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். 14.10.1960இல் 'பாரதிதாசன் பிக்சர்ஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார். தாம் எழுதிய பாண்டியன் பரிசு காப்பியத்தைத் திரைப்படமாக்க முயன்றார். பங்காளிகள் அனைவரும் விலகிச் சென்றதால் அந்த முயற்சி தோல்வி கண்டது.

பின்னர் 'மகாகவி பாரதியார்' என்ற தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க விரும்பி, திரைக்கதை – உரையாடல் யாவும் எழுதி முடித்தார். படமெடுக்கப் போதிய பணம் தம்மிடம் இல்லாததால், தமிழன்பர்களிடம் நிதி திரட்டியாவது படத்தை எடுக்க நினைத்தார். அதற்காக ஓர் அறிக்கை வெளியிட்டார்.

'என் விண்ணப்பம் இதுதான்! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!" என்ற அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆயினும் பாவேந்தர் ஆசை, இறுதிவரை நிறைவேறவில்லை.

மூடநம்பிக்கையைப் பகுத்தறிவின் மூலம் உணர்த்தியவர் நம் பாவேந்தர். சமூகத்தில் ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த கல்வியினைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும். பெண் கல்வியை கற்றால் இவ்வுலகம் செம்மையோடும், சிறப்போடும் விளங்கும். புரட்சிக் கவிஞர் அவர்கள் புதுவையில் ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். யார் எதைச் சொன்னாலும் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும், மூடநம்பிக்கை எதிலும் வைக்கக் கூடாது என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென்று கூட்டத்தினரைப் பார்த்து 'அதோ! பின்னால் பாருங்கள்! என்றார். கூட்டத்திலிருந்து அனைவரும் ஆவலோடு திரும்பிப் பார்த்தார்கள். பார்ப்பதற்குரிய ஒரு காட்சியும் அங்கே நிகழவில்லை. இப்படித்தான் யார் எதைசை; சொன்னாலும், அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் நடந்து விடுகின்றீர்கள். இதனால் நன்மையா, தீமையா, லாபமா, நட்டமா என்பதையெல்லாம் சிந்திப்பதே இல்லை. நாம் ஏமாளிகளாக இருக்கக் கூடாது. எதையும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்' என்றார் புரட்சிக் கவிஞர். தொடக்கக் காலத்தில் பாரதிதாசன் பக்திக் கவிஞராக இருந்தார். கடவுள் நம்பிக்கை கொண்ட பாடல்களை எழுதினார். 1926 ஆம் ஆண்டு அவருடைய முதல் நூலாகிய மயிலம் சுப்ரமணியர் துதியமுது வெளிவந்தது. புதுவையில் இருந்து இருபது கல் தொலைவிலுள்ள மயிலத்திலிருந்து, மாசிமகத்தை ஒட்டி ஆண்டுதோறும் முருகன் சிலையைப் புதுவைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார். அவ்விழாவில் பாடுவதற்காக எழுதப்பட்ட பக்திப்பாடல்களே 'சுப்ரமணியர் துதியமுது' நூலாயிற்று. இந்நூலின் பாடல்கள் யாவும் கடின நடையில் அமைந்தவை.

பின்னர், விடுதலை இயக்கப் போராட்டத்தின் போது பத்தாண்டுகள் பாரதியாருடன் பழகுகின்ற வாய்ப்பு பாவேந்தருக்கு கிடைத்தது. அப்பொழுது அவர் தேசியக் கவிஞராக மாறினார். அவரது கவிதை நடையும் எளிமையாக மாறியது. கதர் ராட்டினப்பாட்டு, சிறுவாம் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு முதலிய விடுதலை உணர்வு ஊட்டும் தேசியப் பாடல்களை அப்பொழுது அவர் எழுதினார். பாரதியாருடைய மறைவுக்குப் பிறகு, பெரியாருடன் பழகுகின்ற வாய்ப்பு பாவேந்தருக்கு வாய்த்தது. அந்த நட்பின் விளைவாக, 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் பாவேந்தரும் சேர்ந்தார். அது முதல் பகுத்தறிவு இயக்கக் கவிஞராக மாறினார். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைக் குடியரசு போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.

சமயத்தின் பெயராலும், சாதிகளின் பெயராலும் சமுதாயத்தில் நிலவிவந்த சீர்கேடுகளைச் சாடினார். கண்மூடிப் பழக்கவழக்கங்கள் மண்மூடிப் போகும் வகையில் புரட்சிகரமான பாடல்களை எழுதினார். மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, சமுதாய மாற்றத்திற்கு வித்திட்டார்.

தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்கு பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

1966 - சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது மெரினா கடற்கரையில் பாவேந்தரின் திருவுருவச்சிலை முனைவர் மு. வரதராசனாரால் திறந்து வைக்கப்பட்டது.

1968 - புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியை மாண்புமிகு முதலமைச்சர் திரு. வி. வேங்கடசுப்பு அவர்கள் தலைமையில் மேதகு துணைநிலை ஆளநர் சீலம் அவர்கள் திறந்து வைத்தார்.

1970 - 1969-ஆம் ஆண்டிற்கான புதடெல்லியின் சாகித்திய அகாதெமி விருது பாவேந்தரின் 'பிசிராந்தையார்' எனும் நாடக நூலுக்கு வழங்கப்பட்டது.

1971 - புதுச்சேரி அரசால் பாவேந்தரின் பிறந்த நாள் விழாக் கொண்டாடப்பட்டது. பாவேந்தரின் இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. அவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக் கூடமும் அமைக்கப் பட்டது. 

பாவேந்தர் இதழாசிரியராகப் பெறுப்பேற்று நடத்திய புதுவை முரசு (1930), ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935), குயில் (1947), திங்கள் இதழ், கிழமை இதழ், தினசரி ஆகியவற்றின் படிகளும், அவரது கவிதைகள் இடம் பெற்ற பொன்னி, தமிழ் முரசு, தேச சேவகன், சுகாபி விருத்தினி,  குடிஅரசு ஆகிய இதழ்களும், பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர்களும் மற்றும் பாரதிதாசன் படித்த புத்தகங்கள் பலவும் மக்கள் பார்வைக்கும் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்கும் ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

1992 - பாரிசில் பாவேந்தரின் நூற்றாண்டு விழா மே மாதத்தில் கொண்டாடப்பட்டது.

1993 - பாவேந்தரின் 'பிசிராந்தையார்' நாடகம் திரு. எல். கதலீஸ் என்பவரால் பிரெஞ்சு மொழியில் நூலாக வெளியிடப்பட்டது.

1994 - தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களில் தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் அறக்கட்டளையை நிறுவியுள்ளது.

1997 - புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் 10.5.1997 இல் பாரதிதாசன் கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது.

2001 - மத்திய அரசு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருப் படத்துடன் கூடிய அஞ்சல் தலையை 9.10.2001இல் வெளியிட்டுள்ளது.

பாவேந்தரின் படைப்புகள் உலக இலக்கிய வரிசையில் இடம் பெறத்தக்க பெருமை உடையவை. 

 இயற்கையைப் பாடி இறவாப் புகழ்பெற்ற கீட்சு, செல்லி போன்ற ஆங்கிலக் கவிஞர்கட்கு இணையானவர் என்பதைக் காட்டிலும், இயற்கையின் அழகுக் கூறுகளைப் பாடும்போதும் மக்கள் நலனையே மனதில் கொண்டு பாடும் பாங்கால் அவர்களினும் பாவேந்தர் உயர்ந்து காணப்படுகின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய் தனக்கென தனி முத்திரை பதித்தார். பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும், சிறப்பும் மிக்கவராய்த் திகழ்ந்தவர்தான் பாவேந்தர் பாரதிதாசன்.  

பாவேந்தர் தமிழ் இலக்கியத் துறையிலும், சமுதாயத் துறையிலும் அழிக்க முடியாத அடையாளங்களை விட்டுச் சென்ற ஒரு மாபெரும் மக்கள் கவிஞர். தமிழ்ச் சமூகம் என்றும் அவரை நினைவு கூரும். 

                                                         ------------------------------







Post a Comment

புதியது பழையவை

Sports News