வெற்றி படிக்கட்டுகள்-நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரை

நெல்லை கவிநேசன்
வழங்கும்
வெற்றி படிக்கட்டுகள்

"தமிழக மாணவர் வழிகாட்டி" மாத இதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் தொடர் "வெற்றி படிக்கட்டுகள்".அந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை இப்போது காணலாம்.

1.புதிதாய் பிறப்போம்...

அது ஒரு பேருந்து நிலையம். 

ஏராளமான பேருந்துகளும், மக்களும் கூடியிருந்த பகுதியில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் நின்றுகொண்டிருந்தார் ஒருவர். 

அருகில் இருந்த பெரியவரிடம் சந்தேகம் கேட்டார். 

“சார்... என்கிட்ட 1100 ரூபாய் இருக்கிறது. நான் எந்த பஸ்ஸில் போகவேண்டும்? என்று சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் பஸ்ஸில் நான் ஏறிக்கொள்கிறேன்” என்றார்.

இவரின் பேச்சைக்கேட்ட பெரியவர் புரியாமல் விழித்தார். 

“நீங்கள் விரும்பிய பஸ்ஸில் பயணம் செய்யுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்று மறுகேள்வி கேட்டார் பெரியவர். 

“நான் விரும்பிய பஸ் ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் சொல்லுங்கள். நான் எந்தப் பஸ்ஸில் போக வேண்டும்?” - என்று தொடர்ந்து கேள்விக்கொக்கியை அடுக்கினார் சந்தேகம் கேட்டவர். 

“நீங்கள் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பது சரிதானா? இந்த பஸ் ஸ்டாண்டில் - டவுண் பஸ், மினி பஸ், ரூட் பஸ் என பலவித பஸ்கள் இருக்கின்றன. இந்த பஸ்களில் எதில் பயணம் செய்தால், நீங்கள் விருப்பப்படும் இடத்திற்கு செல்ல முடியும்? என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். முதலில், நீங்கள் செல்ல வேண்டிய ஊர் எது? என்பதைச் சொல்லுங்கள். பின்னர், நான் உங்களுக்கு ஏற்ற பஸ் எது? என்று சொல்கிறேன். உங்கள் கையில் இருக்கும் பணத்தைப்பொறுத்தும், உங்கள் விருப்பத்தைப் பொறுத்தும் நீங்களே முடிவு செய்யலாம்”- என்றார் பெரியவர்.   

சந்தேகம் கேட்டவருக்கு பிறகுதான் தனது கேள்வியே தவறு என்பது புரிந்தது. 

பஸ் ஸ்டாண்டில் நின்று, “எந்த ஊருக்குச் செல்ல வேண்டும்?” என்பதை முடிவு செய்யாமல் சந்தேகம் கேட்பதைப்போல, இன்று சிலர் தங்கள் மேற்படிப்பு குறித்த சந்தேகங்களைக் கேட்கிறார்கள். 

“நான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். நான் மேற்படிப்பாக என்ன படிக்கலாம்?” என்பதுதான் இன்றைய சில மாணவ-மாணவிகளின் ‘பயணத் திட்டமிடல்’ இல்லாத கேள்விக்கணையாகும்.  

“என் பிள்ளை பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். அவனை எந்தப்படிப்பில் சேர்க்கலாம்?” - என்பதும் சில பெற்றோர்களிடம் குழப்பத்தை உருவாக்கும் விடை தெரியாத கேள்வியாக மாறிவிடுகிறது.

எந்தப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? இந்தப்படிப்பை படித்து முடித்தால் வேலை கிடைக்குமா? வேலையை வழங்கும் படிப்பு எது? என்று பல்வேறு கேள்விகளால் தாக்கப்பட்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் சிலர் நிலைகுலைந்து போகிறார்கள். 

சிக்கலை உருவாக்கும் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்ன?

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தாங்கள் எந்தப் படிப்பில் சேர வேண்டும்? என்னும் கேள்வியால் திண்டாடுவதைவிட, தங்கள் வாழ்க்கையின் தொழிலாக எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று முன்கூட்டியே முடிவுசெய்வது நல்லது. 

இதற்கு, “வாழ்க்கை தொழில் திட்டமிடல்” (Career Planning) என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். 

ஒருவர் தனது வாழ்க்கையை சிறந்தமுறையில் நடத்துவதற்கும், நல்ல வாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், குறிப்பிட்ட காலம் ஒரு பணியை ஏற்று செயல்படுகிறார். அந்தப்பணி- பதவி, வேலை, சிறப்புப் பணி, தொழில் போன்ற பல்வேறு நிலைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். எந்தநிலையில் இருந்து செயல்பட வேண்டும்? என்பதை திட்டமிட இந்த “வாழ்க்கைத் தொழில் திட்டமிடல்” மிகவும் உறுதுணையாக இருக்கிறது. 

வாழ்க்கைத் தொழில் பற்றி சிறப்பாக திட்டமிட்டவர்கள், தங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றியைப் பெறுகிறார்கள். 


உதாரணமாக - "ஒரு வீட்டை கட்ட வேண்டும்” என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் “வீட்டின் வரைபடம்” (House Plan) உருவாக்க வேண்டும். வீட்டில் வரவேற்பரை, படிக்கும் அறை, சமையலறை, குளியலறை, பெரிய ஹால், படுக்கையறை போன்றவற்றைப்பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின்னர், அந்த ஒவ்வொரு அறையின் நீள, அகலங்களை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் கலந்துபேசி நிதிநிலைமைக்கு ஏற்றவாறு வீடுகட்டுதல் பற்றிய முடிவை எடுக்க வேண்டும். பின்னர், பொறியாளரிடம் சென்று, முறையாக ஒரு கட்டிட வரைபடத்தை வரைந்து, கட்டிடம் கட்டுவதற்கான முன்அனுமதியை அரசு அலுவலகத்தில் பெற வேண்டும். அதன்பின்னர்தான், வீடுகட்டும் பணியை தொடங்க வேண்டும். 

இதைப்போலத்தான், வாழ்க்கையில் எந்தவிதப் பணியில் ஈடுபட வேண்டும்? என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். பின்னர், அந்தத் திட்டத்திற்கு ஏற்றவாறு தொடர்புடைய பணிகளை வடிவமைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். 

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு வரைபடம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வாழ்க்கை திட்டமிடல் மிகவும் முக்கியமாகும். இதனால்தான், “வாழ்க்கையில் நீ என்ன ஆகவேண்டும்? என்னும் குறிக்கோளை முதலில் தீர்மானித்துக்கொள். அதன்பின்னர், நீ எப்படி அதனை அடையவேண்டும்? என்று திட்டமிட்டு செயல்படு” என்று கல்வி ஆலோசகர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். 

எனவே, வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைய விரும்புபவர்கள் முதலில், “குறிக்கோளை நிர்ணயித்தல்” (Goal Setting) என்பதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 

பொறியியல் (Engineering), மருத்துவம் (Medical), போன்ற துறைகள் மட்டுமே மிக சிறந்த துறைகள் என்று சிலர் கருதி, அந்தத் துறையில் படிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால், வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று கருதுகிறார்கள். சிலர் விரக்தியின் விளிம்பில் நின்று தவறான முடிவெடுத்தும் தங்களின் உயிரையே மாய்த்துக்கொள்கிறார்கள். 

பள்ளிப்படிப்பை முடித்தபின்பு எந்தப்படிப்பில் சேர்ந்து படித்தாலும், அது சிறப்பைத்தரும் படிப்புதான் என்பதை இளைய உள்ளங்கள் மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது. 

“குப்பையைக் கூட்டும் தொழிலை நீ செய்தாலும், அந்தத்தொழிலை சிறப்பாகச் செய்து “மிகச்சிறந்த குப்பைக்கூட்டுபவன்” என்ற பெயரைப் பெற்றுவிட்டால், அதுதான் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் அடித்தளம்” என்பது மேலைநாட்டு பழமொழி. 

எனவே, மாணவ-மாணவிகள் பள்ளியில் படிக்கும்போதே வாழ்க்கையில் நான் எந்தநிலையை அடைய வேண்டும்? என்ற குறிக்கோளை முதலில் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 

வாழ்க்கையில் குறிக்கோள்களை தீர்மானிப்பதன்மூலம் ஒருவர் தனது வாழ்க்கையைப்பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாம். தனது பணித்திறனை (Performance) வளர்த்துக்கொள்ளலாம். தன்னூக்கத்தோடு (Motivation) உழைத்து திட்டமிட்ட குறிக்கோளை நிறைவேற்றலாம். தன்னம்பிக்கையை (Self Confidence) வளர்த்துக்கொள்ளலாம். எதிர்மறை எண்ணங்களை (Negative Attitude) குறைத்துக்கொள்ளலாம். 

வாழ்க்கையில் உருவாகும் சவால்களை சந்திக்கவும், தரமான வாழ்க்கையை வாழவும் “குறிக்கோளை நிர்ணயித்தல்” மிகவும் அவசியமாகிறது. மேலும், ஒருவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் குறிக்கோளை நிர்ணயித்தல் அமைவதால், இன்று பலரும் பள்ளிப்பருவத்திலேயே தங்கள் குறிக்கோளை நிர்ணயிப்பதில் மிக அதிக கவனம் செலுத்துகிறார்கள். 

ஒரு குறிக்கோளை தேர்ந்தெடுப்பதற்குமுன்பு சில முக்கிய காரணிகளை (Factors) மனதில்கொள்ள வேண்டும். குறிப்பாக - கலைநயம் (Artistic), மனநிலை (Attitude), கல்வி (Education), மகிழ்வு (Pleasure), சமூகம் (Social), உடல்நலம் (Physical), குடும்பம் (Family) மற்றும் நிதி (Finance) - ஆகிய காரணிகள் ஒருவர் தனது குறிக்கோள்களை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தக் காரணிகளை கருத்தில்கொண்டு குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும். 

பள்ளியில் படிக்கும் ஒருவர் கலைப்போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுபெற்று அந்தக் கலைத்துறையில் சிறந்து விளங்க விரும்பினால், அவர் கலை சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கலாம். கலைப்பாடத்தில் விருப்பம் இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்துகொண்டு தங்களது கலைத்திறனை வளர்க்கும் விதத்தில் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகப்போட்டி, சிறுகதைப்போட்டி என வெவ்வேறு தளங்களில் கால்பதித்து தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். 

பள்ளியில் படிக்கும்போதே மாணவ-மாணவிகள் தங்கள் மனநிலையை நேர்மறையாக (Positive) வைத்துக்கொள்வது நல்லது. 

“என்னால் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியும். நான் கல்லூரிக்குச் சென்றபின்பும், சிறந்த பட்டதாரியாக வெற்றி பெறுவேன்” என்ற நேர்மறை எண்ணத்தோடு இருப்பவர்களால் மட்டுமே சிறந்த குறிக்கோளை நிர்ணயிக்க முடியும். 

எதிர்காலத்தில் என்னென்ன கல்வி, வேலைவாய்ப்புகள் இருக்கின்றன? என்பதைப்பற்றிய மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை விரிவாக தெரிந்துகொண்டு, அதன்பின்னர் குறிக்கோள்பற்றி சிந்திப்பது நல்லது. 

குறிக்கோள்களை நிர்ணயிக்கும்போது அந்தக் குறிக்கோள் மகிழ்வைத் தருகிறதா? என்பதைப்பற்றியும் சிந்தனைசெய்து, அதன்பின்னர், மகிழ்ச்சிதரும் குறிக்கோள்களையும் தீர்மானிக்கலாம். குறிக்கோளை அடைவதற்கான உடல்நலம் (Health) தங்களிடம் இருக்கிறதா? என்பதை கண்டிப்பாக முன்கூட்டியே முடிவுசெய்துகொள்ள வேண்டும். சமூகநலன் சார்ந்த குறிக்கோள்கள் (Social Goals) ஒருவருக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கும் என்பதால், அந்தக் குறிக்கோளை வரையறுப்பதில் மிகச்சிறந்த கவனம் செலுத்த வேண்டும். 

குடும்ப  அமைப்புக்கு (Family) எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குறிக்கோளை எளிதில் நிறைவேற்ற முடியும். ‘எவ்வளவு பணம் மாதந்தோறும் சம்பாதிக்க வேண்டும்?’ என்பதை தீர்மானிப்பதன்மூலம் அதற்கு தகுந்தாற்போல குறிக்கோளையும் திட்டமிட்டுக்கொள்ளலாம். 
 
குறிக்கோள்களை நிர்ணயிப்பதற்குமுன்பு அந்தக் குறிக்கோள்களை 5 வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 


அவை- 
1.குறுகிய கால குறிக்கோள்கள் (Short Term Goals)
2.இந்த ஆண்டு குறிக்கோள்கள் (This Year Goals)
3.அடுத்த ஆண்டு குறிக்கோள்கள் (Next Year Goals) 
4.ஐந்து ஆண்டுக்குள் குறிக்கோள்கள் (Within Five Years Goals)
5.வாழ்நாள் குறிக்கோள்கள் (Life Time Goals)
                                                    -ஆகியவை ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள குறிக்கோள்கள்பற்றி இதுவரை சிந்திக்காவிட்டாலும், இந்தப் புத்தாண்டிலிருந்து இத்தகைய குறிக்கோள் நிர்ணயித்தல் அட்டவணையைப் பயன்படுத்தி பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. 

 குறிக்கோள் நிர்ணயித்தல் அட்டவணை 
1.குறிக்கோள்கள்
2.குறுகிய காலம்
3.இந்த ஆண்டு
4.அடுத்த ஆண்டு
5.ஐந்து ஆண்டுக்குள்
6.வாழ்நாள்

“இந்தக் குறிக்கோள்களைப்பற்றி சிந்தித்தப்பின்புதான், எனக்கு ஏற்ற குறிக்கோள்களைத் தேர்ந்தெடுத்து திட்டமிடுவேன்” என்பதை புத்தாண்டுத் தீர்மானமாக கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொள்வது சிறந்தது. 

சிறந்த குறிக்கோள்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

Post a Comment

புதியது பழையவை

Sports News