வெற்றிப் படிக்கட்டுகள் - தொடர் -7 - நட்புப்பாலம் அமைப்போம்...

வெற்றிப் படிக்கட்டுகள் 

தொடர் -7


"தமிழக மாணவர் வழிகாட்டி" மாத இதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் தொடர் "வெற்றிப் படிக்கட்டுகள்". அந்தத் தொடர்க் கட்டுரையின் முழு வடிவத்தை இப்போது காணலாம்.

7.நட்புப்பாலம் அமைப்போம்...

இளம்பருவத்தில் துளிர்விடும் நல்ல எண்ணங்கள் சிலநேரங்களில் பலரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. வளர்ச்சியடைந்த, வளமான வாழ்க்கைக்கு அடிப்படை அமைக்கிறது. ஆனால் அதேவேளையில் அந்த நல்ல எண்ணங்களை செயலாக மாற்ற தவறியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. 

பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்தி, தங்களை சூழ்ந்திருக்கும் தடைகளை தகர்த்தெறிந்து, முன்னேற்றப் பாதையில் நடைபோடுபவர்களின் வாழ்க்கை வசந்தமாகிறது. 

“பிறரோடு பேசிப் பழகுவதற்கு தயக்கமாக இருக்கிறது” என்று சிறுவயதிலேயே தங்களின் அச்ச உணர்வுகளை அரங்கேற்றுபவர்கள் முடிவில் அல்லல்படுகிறார்கள். நல்ல எதிர்கால வாழ்க்கையை இழக்கிறார்கள்.

சங்கர் ஒரு கல்லூரி மாணவன்.

கல்லூரியில் பி.எஸ்.சி. படிக்கும்போதே மிகவும் உற்சாகமாக காணப்படுவான். நாள்தோறும் வகுப்பில் நடத்தப்படும் கல்லூரிப் பாடங்களை நினைவில் நிறுத்தி, தேர்வுகளில் அதிக அதிப்பெண்கள் பெற்று, முதல் மாணவனாகத் திகழ்ந்தான். ஆசிரியர்கள் பலரும் அவனைப் புகழ்ந்தார்கள். வகுப்பு நண்பர்களும் அவனது அபாரத் திறமையைப் பார்த்து வியந்தார்கள். 

சங்கரின் படிப்புத் திறமை சிறப்பாக இருந்தாலும், ‘பிறரோடு பழகும் தன்மை’ அவனிடம் மிகவும் குறைவாகவே இருந்தது. நண்பர்களோடு பழகி மகிழும் தன்மை அவனிடம் இல்லை. தனிமை விரும்பியாகவே காட்சியளித்தான். 

“நண்பர்களோடு நெருங்கிப் பழகினால் எனது படிப்பு கெட்டுவிடும்” என்றும் நம்பினான்.

இதனால், மற்றவர்கள் தன்னோடு பேசும்போது “ஆம்”, “இல்லை” என்னும் ஒற்றை வார்த்தைகளை பயன்படுத்தி பதில் சொன்னான். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தாலும், ஊரிலுள்ள தன்னோடு படித்த மாணவர்களிடம்கூட பேசுவதையும் தவிர்த்தான். படிப்பை மட்டுமே தனது எதிர்கால இலட்சியமாகக்கொண்டு அதிகநேரம் படிப்பதற்கு செலவழித்தான். 

நண்பர்களோடு பேசுவதைத் தவிர்த்தான். மிகவும் அமைதியான முறையில் தனது கல்லூரி நாட்களை நகர்த்தினான். 3 ஆண்டுகள் கல்லூரியில் படித்து முடித்தப்பின்புதான், “அடுத்து என்ன படிக்கலாம்?” என்பதைப்பற்றி சிந்தித்தான். அவனோடு படித்த வகுப்புத் தோழர்களில் சிலர், பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பில் சேர்ந்து கொண்டார்கள். வேறுசிலர், பக்கத்திலுள்ள நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். இன்னும்சிலர் பட்டப்படிப்பை முடிக்க முடியாமல் பரிதவித்து நின்றார்கள். 

சங்கரின் பெற்றோர்கள் “நீ ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் சேர்ந்துவிடு. அதுதான் உனக்கு நல்லது” என்றார்கள். 

பெற்றோரின் பேச்சை மறுக்க இயலாமல் 5 ஆயிரம் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தான். சில வருடங்கள் உருண்டோடியது. எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கவில்லை. “வெளியூருக்குச்சென்று வேலை செய்தால் நிறைய சம்பளம் வாங்கலாம்” என்று அவனது ஆசையைத் தூண்டினார்கள் நண்பர்கள். சென்னைக்குப்போய் முயன்ற பின்பும், அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை. 

சங்கர் நொறுங்கிப்போனான்.

மீண்டும், “ஏதாவது படித்தால் வேலை கிடைக்குமா?” என பல இடங்களுக்குச் சென்று பார்த்தான். அவனது எண்ணம் நிறைவேறவில்லை. 

இப்போது என்ன செய்வது? 

பெற்றோரிடம் தனது நிலையைச் சொல்லவா? அல்லது நண்பர்களிடம் கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கவா? வீட்டில்போய் சும்மா உட்கார்ந்து கொள்ளலாமா? இவ்வாறெல்லாம் சிந்தனை புயல் வெவ்வேறு திசைகளில் சுழன்று அடித்தது. 

சென்னையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். ஊரிலுள்ளவர்களின் கேலி கிண்டலாக மாறி, சங்கரின் நெஞ்சில் வேதனைத்தீயை வளர்த்தது. 

முடிவில் - சங்கர் வீட்டைவிட்டு எங்கேயாவது ஓடிவிடலாமா? என்ற முடிவுக்கு வந்தான். இப்போது “சங்கரை காணவில்லை” என்று பெற்றோர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 

இத்தகைய சூழல் உருவாகுவதற்கு காரணம் என்ன?

மற்றவர்களோடு இணைந்து பழகாமல் தனித்தீவாக தன்னை மாற்றிக்கொண்டு சங்கர் செயல்பட்டதால்தான், இவ்வித எதிர்பாராத சூழல் அவன் வாழ்க்கையில் உருவானது. கல்லூரியில் படிக்கும் காலங்களில் நல்ல நட்புகளைத் தேர்ந்தெடுத்து, அந்த நண்பர்களை தனது ஆளுமை வளர்ச்சிக்கு பயன்படும்விதத்தில் மாற்றிக்கொள்ளாத சங்கரின் வாழ்க்கைப்பாதை தடம்புரண்டுவிட்டது அல்லவா!

குழந்தைப் பருவம் (Childhood), பதின்மப் பருவம் (Adolescence), முதிர் பருவம் (Adulthood), முதுமை பருவம் (Old Age) ஆகிய முக்கிய நிலைகளைக்கொண்டது மனித வாழ்க்கை ஆகும். 

நட்பு என்பது ஒரு மனிதரின் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு தனிமனிதனின் உணர்வுகளை முறையாக வளர்ப்பதற்கு இந்த நட்பு அவசியமாகும். 

“குழந்தைப் பருவத்தில் தன்னிடமுள்ள பொம்மைகளை மற்ற குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்து தனது நட்பைப் போற்றுகிறது சின்னஞ்சிறு குழந்தை. இதன்மூலம், பிறரிடமிருந்து மகிழ்ச்சியை அந்தக் குழந்தைப் பெறுகிறது. பாசம் (Affection), பகிர்வு (Sharing) மற்றும் புத்தாக்க நேரம் (Creative Time) ஆகியவை நல்ல நட்பின்மூலம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு - உணர்வுகளையும், உடைமைகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்காத குழந்தைகள், எங்கெல்லாம் பகிரும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அதனை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்துகிறது” என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும். 

குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போது, அவர்கள் தங்களைப்பற்றி நினைப்பதைவிட, மற்றவர்களைப்பற்றி தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தன்னோடு இருக்கும் சின்னஞ்சிறு வயதினர் தன்னை ஏற்றுக்கொள்ளாத நிலையையும் அந்தக்குழந்தை சந்திக்கிறது. இதனால், சமூகத்திலுள்ள மற்றவர்களைப்பற்றியும் அந்தக் குழந்தை சிந்திக்கிறது. குழந்தை வளரும்போது அதனுடைய மனநிலைகள் (Attitudes), வாழ்க்கை நெறிகள் (Values), ஆர்வம் (Interest) அதிகமாகின்றன.

“இளம்வயதிலேயே நெருக்கம், நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை உருவாக்கும் நட்பு சிலவேளைகளில் முரண்பாடுகள் (Conflicts), எதிர்ப்புகள் (Rivalry) போன்றவற்றையும் குழந்தைகள் மனதில் உருவாக்கத் தவறுவதில்லை. எனவேதான், இளம்பருவத்தில் குழந்தைகளின் மனநிலையை பேணிப்பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களுடைய கடமை” என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

பதின்ம பருவத்திலும் (Adolescence) நல்ல நட்பினால் பல நன்மைகள் விளைகிறது. படிப்பில் ஆர்வம், பள்ளி விழாக்களில் பங்குகொள்ளுதல், குடிப்பழக்கத்தைத் தவிர்த்தல், நல்ல மனநிலையோடு இருத்தல் போன்ற நல்ல குணங்கள் இளம்வயதினரிடம் உருவாகிறது. ஆனால், அதேவேளையில் சில நட்புகள் பிரச்சினைக்குரியதாக மாறி, கெட்ட வழிகளிலும் இவர்களை அழைத்துச் சென்றுவிடுகிறது. 

முதிர் பருவத்தில் (Adulthood) நட்பின் வடிவம் வித்தியாசமான நிலையை அடைகிறது. திருமணம், பெற்றோர், வாழ்க்கைத் தொழில் என வெவ்வேறு நிலைகளில் நட்பு உருவாக்கப்படுவதால், நட்பின் அளவு குறைகிறது. இளம்வயதில் ஏராளமான நட்புகளோடு வலம்வந்தவர்கள் இந்த முதிர் பருவத்தில் தங்கள் நண்பர்களைக் குறைத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக - எதிர்பாலின நண்பர்களைக் (Opposite Sex) குறைத்துக் கொள்வதைக் காணலாம். பணிபுரியும் இடங்களில் ‘அர்த்தமுள்ள நட்பை’ காப்பாற்றுவதில் முதிர் பருவத்தினர் சிரமங்களை சந்திக்கிறார்கள். இருந்தபோதும், நட்புக்கான இலக்கணத்தை முறையாகத் தெரிந்துகொண்டவர்கள் நட்பை போற்றிப் பாதுகாக்கிறார்கள். 

முதுமைப்பருவத்தில் (Old Age) - பணி அழுத்தமும் (Work Pressure), குடும்பப் பொறுப்புகளும் (Family Responsibilities) குறைவாகக் காணப்படுவதால், இந்தப் பருவத்திலுள்ள பலருக்கு நண்பர்கள் மிக முக்கியமானவர்களாகத் தோன்றுகிறார்கள். “சமூகத்தோடு நெருங்கிய தொடர்பு வேண்டும்” என்று நினைப்பதால், பல்வேறு குழுக்கள், அமைப்புகள், சங்கங்கள், கட்சிகள் என வெவ்வேறு அமைப்புகளில் அங்கம்வகித்து நட்பின் மகிமையைக் கொண்டாட விரும்புகிறார்கள். தங்கள் மன திருப்திக்காக நல்ல நட்பைத் தேடுகின்றார்கள். பல கல்வி நிறுவனங்களில் ‘முன்னாள் மாணவர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவி, 50 ஆண்டுகளுக்குப்பின்பு நட்பைத் தேடிச் செல்லும் நல்லவர்களும் உண்டு. இந்த முதுமைப் பருவத்தில் ஒரே வயதுடைய நல்ல நெறிகளோடு வாழ்பவர்களிடம் மட்டுமே அதிக நட்புப் பாராட்ட சிலர் விரும்புவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அந்த நண்பர்களை நமது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வது மிகச்சிறந்த செயலாகும். இளைஞர்கள் சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல நண்பர்களை உருவாக்குவதற்கு சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. 

இதோ சில முக்கிய வழிமுறைகள் :
 • நல்ல நண்பர்களைப் பெற விரும்புபவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகத் திகழ வேண்டும். 
 • மற்றவர்களைப்பற்றி குறைசொல்வது, வதந்திகளைப் பரப்புவது, அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிக்காமல் நடந்துகொள்வது, உறவுகளைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். 
 • பிறருக்கு வாக்குக்கொடுத்துவிட்டால் (Promise)அதனை எந்தச்சூழலிலும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். 
 • உங்களிடம் ரகசியத்தை (Secret) நண்பர்கள் பகிர்ந்துகொண்டால், அந்த ரகசியத்தை மற்றவர்களிடம் வெளியிடாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
 • தனிப்பட்ட முறையில் உங்களோடு பகிர்ந்துகொண்ட தகவல்களையும், தேவையில்லாமல் மற்றவர்களுக்குத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • நண்பர்களின் நலனில் அக்கறைக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். நண்பர்கள் ஈடுபடும் நல்ல செயல்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். 
 • நண்பர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கத்தைப் பழகிக்கொள்ள வேண்டும். 
 • நண்பர்களின் பிறந்த நாள் விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கலாம். 
 • நண்பர்களுக்கு பிடித்தமான உணவு, சிற்றுண்டி ஆகியவற்றையும் அவ்வப்போது அவர்களுக்கு வழங்கி மகிழ்வைக் கொண்டாடலாம்.
 • நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வது நல்ல நண்பர்களைப் பெற உதவும். புன்னகை தவழும் முகத்தோடு காணப்படுவது நட்புக்கு அடித்தளமாய் அமையும். 
 • நண்பர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது “நான் இருக்கிறேன். நீ கவலைப்படாதே” என்று ஆறுதல் வார்த்தையை சொல்வதற்கும் முன்வந்து உதவ வேண்டும். 
 • நண்பர்களை வகைப்படுத்தி அவர்களுக்குஏற்ப பழகவும் தெரிந்துகொள்ள வேண்டும். 
 • தவறான நட்போடு தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதன்மூலம் நேரம் வீணாவதை தவிர்க்கலாம். 
 • மற்றவர்களின் விமர்சனங்கள் தரமற்றதாகவும், வீணான பழியாகவும் அமைந்தால், அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். 
 • யாரிடம்? எப்படி? எப்போது? ஏன் பேச வேண்டும்? என்பதையும் முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டும். கேட்பவர் யார்? என்பது தெரியாமல் உங்கள் மனதிலுள்ள மன அழுத்த சுமைகளை அவர்களின் இறக்கிவைப்பது சிலநேரங்களில் சிக்கலை உருவாக்கிவிடும். 
 • நமக்கு இவர் நெருங்கிய நண்பரா? அல்லது நம்மை மட்டும் அவருக்காக பயன்படுத்தும் நண்பரா? என்பதை அடையாளம்கண்டு, பின்னர் நட்பு பாராட்டுவது நல்லது. 
 • எல்லா நண்பர்களையும் உங்கள் குடும்பத்தோடு நெருக்கமாக இணைத்துக்கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், அதேவேளையில் நெருங்கிய நம்பத்தகுந்த நண்பர்களை குடும்ப உறுப்பினராகக்கூட சேர்த்துக்கொள்வது தவறில்லை. 
 • வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. 
 • “தவறு செய்தது நீதான்” என்று நண்பர்களின் குறையை சுட்டிக்காட்டியும், குத்திக்காட்டியும் பேசுவதை தவிர்ப்பது நல்ல பலனைத்தரும்.
 • நண்பர்களை உரிய நேரத்தில் பாராட்டவும், உரிய மரியாதையைக் கொடுப்பதும் நல்ல நட்புக்கு பாலமாக அமையும்.
 • உங்கள் நண்பர்களின் விருப்பங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றாற்போல் பழக ஆரம்பித்தால், நட்பே ஒரு நல்ல அன்புப்பாலமாக அமையும். 
நல்ல நட்புப் பாலம் அமைப்போம். வாழ்க்கைப்பாதையை வெற்றிகரமாகக் கடந்து செல்வோம்.

Post a Comment

புதியது பழையவை

Sports News