ஐ.டி.ஐ. (I.T.I) படிப்புகள் - 3

ஐ.டி.ஐ. (I.T.I) படிப்புகள்
- நெல்லை கவிநேசன்

தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பல்வேறு சான்றிதழ் படிப்புகளைப் படித்து எளிதில் வேலை வாய்ப்பை பெற நல்ல வாய்ப்புகள் உள்ளது. “இன்டஸ்ட்ரியல் டிரைனிங் இன்ஸ்டிட்யூட்” (Industrial Training Institute) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொழிற் பயிற்சி நிறுவனத்தை “ஐ.டி.ஐ.” (I.T.I.) என்றும் அழைக்கிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே இந்தப் பயிற்சியில் சேர்ந்து சான்றிதழ் பெறலாம். 

இந்தப் பயிற்சிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை நடைபெறுகின்றன. குறுகிய கால தொழிற்பிரிவுகளுக்கு அவ்வப்போது சேர்க்கை நடைபெறுகிறது. பெரும்பாலும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படியும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.களில் சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொழில் வளர்ச்சியின்மூலம் உருவாகும் வேலை வாய்ப்புகளை, இளைஞர்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைமூலம் மாநிலங்கள் முழுவதும் 60 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை இயக்கி வருகின்றன. இதுதவிர சுமார் 620 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. 

இந்த சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளும், தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளும் நிறைய உண்டு. சுயமாகவும் தொழில் செய்ய முடியும். வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம். 

பொறியியல் தொழிற் பிரிவுகள்  (Engineering Trades)

ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்புகளில் பிளஸ் 2 தேர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு 2 வருடப் படிப்பாக தொழிற்கல்வி படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவை -

கம்மியர் - தொழிற்சாலை மின்னணுவியல் (Mechanic - Industrial Electronics) என்ற படிப்பு இரண்டு வருடப் படிப்பு ஆகும். இந்தப் படிப்பில் தொழிற் பயிற்சிகளைப் பெற பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்

மேலும் கம்மியர் - இயந்திரம் மற்றும் மின்னணுவியல் (Mechanic - Machatronics) படிப்பு இரண்டு வருடப் படிப்பு ஆகும். இந்தப் படிப்பில் தொழில் பயிற்சிகளைப் பெற பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவாகக் கொண்டு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

அதுமட்டுமல்லாமல் கம்மியர் - கணினி வன்பொருள் (Mechanic - Computer Hardware) என்ற இந்தத் தொழில் படிப்பு இரண்டு வருடப் படிப்பாகும். இந்தத் தொழில் படிப்பில் பயிற்சி பெற பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று பொறியியல் தொழிற் பிரிவில் சான்றிதழ் படிப்பிற்காக தொழில் பயிற்சியை பெற கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் உள்ளன. 

பொருத்துநர் (Fitter), கடைசல் பிடிப்பவர் (Turner), இயந்திர வேலையாள் (Machinist), இயந்திர வேலையாள் - அரவை இயந்திரம் (Machinist - Grinder), கம்மியர் - குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் (Mechanic - Refrigeration and Air - Conditioner), கம்மியர் பராமரிப்பு - வேதிப்பொருள் நிறுவனம் (Maintenance Mechanic - Chemical Plant), கம்மியர் கருவிகள் - வேதிப்பொருள் நிறுவனம் (Instrument Mechanic - Chemical Plant), கம்மியர் கருவிகள் (Instrument Mechanic), கம்மியர் - மோட்டார் வண்டி (Mechanic - Motor Vehicle), இயந்திரப்பட வரைவாளர் (Draughtsmen - Mechanical), கட்டிடப் பட வரைவாளர் (Drughtsmen - Civil), நில அளவையாளர் (Surveyor), மின்சாரப் பணியாளர் (Electrician), மின்முலாம் பூசுபவர் (Electro Plater), கம்மியர் - வானொலி மற்றும் தொலைக்காட்சி (Mechanic-Radio and Television), கம்மியர் மின்னணுவியல் (Electronic Mechanic), தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு (Information Technology and Electronics System Maintenance), லிப்ட் மெக்கானிக் (Lift Machanic), கம்மியர் மற்றும் செயலாள் மின் அணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புமுறை (Mechanic Cum Operator Electronics Communication System) ஆகிய பாடப்பிரிவுகள் 2 வருட படிப்பாக தொழிற்பயிற்சியை பெற உதவியாய் உள்ளன. 

மேலும், கருவி மற்றும் அச்சு செய்பவர்  (Tool and Die Maker) மற்றும் கம்மியர் இயந்திரப் பராமரிப்பு (Mechanic - Machine Tool Maintenance) இந்தப் படிப்புகள் 3 மாத படிப்பாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் - கம்மியர் (டீசல்) (Mechanic Diesel), பம்ப் ஆப்பரேட்டர் - மெக்கானிக் (Pump Operator - Cum Mechanic), பிளாஸ்டிக் செய்முறை பணியாள் மற்றும் செய்முறை செயலாள் (Plastic Processing Operator) இந்தப் பாடப்பிரிவுகள் ஓராண்டுப் படிப்பாக தொழிற்பயிற்சி பெற  உதவிபுரிகின்றன. 

மேலும் - கம்மியர் ஆட்டோ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (Mechanic Auto Electrical and Electronics) மற்றும் கம்மியர் இரு சக்கர வாகனம் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய பாடப்பிரிவுகள் 6 மாத படிப்பாக நடத்தப்படுகிறது. 

8ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பொறியியல் தொழிற்பிரிவுகள் பாடத்தில் தொழிற்பயிற்சியை மேற்கொள்ள கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் உள்ளன. 

மேலும், கம்பியாள் (Wireman), வர்ணம் அடிப்பவர் (Painter) மற்றும் கம்மியர் விவசாய இயந்திரம் (Mechanic Agricultural Machinery) இந்தப் தொழிற்படிப்புகள் 2 வருட படிப்பாக தொழில் பயிற்சிகள் பெற உதவியாக உள்ளன. 

குறிப்பாக-பற்ற வைப்பவர் (Welder), உலோகத் தகடு வேலையாள் (Sheet Metal Worker), தச்சர் (Carpenter), குழாய் பொருத்துபவர் (Plumber), கட்டுமான வேலை செய்பவர் (Mason Building Constructor), அச்சு வார்ப்பவர் (Foundryman), கம்மியர் இயந்திரக் கலப்பை (Mechanic - Tractor), மாதிரி அமைப்பு செய்பவர் (Pattern Maker) இந்தப் பாடப்பிரிவுகள் ஓராண்டு படிப்பாக தொழிற்பயிற்சி பெற உதவிபுரிகின்றன. 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்காக 2 வருடப் படிப்பாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் 14 வயதுமுதல் 25 வயது வரையுள்ளவர்கள் சேர்ந்து பயிற்சி பெறலாம். 

இந்தப் பாடப்பிரிவிலுள்ள கட்டமைப்பு பொருத்துநருடன்கூடிய பற்ற வைப்பவர் (Fabrication cum Fitter) மற்றும் குழாய் பொருத்துநருடன்கூடிய மின்சாரப் பணியாளர்  (Plumber cum Electrician)  இந்தப் பிரிவுகள் தொழிற் பயிற்சியை கற்றுக்கொள்ள உதவியாய் உள்ளன. 

பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக - 

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு வருடப் படிப்பாக எண்ணியல் புகைப்படக் கலைஞர் (Digital Photographer), கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant), டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆபரேட்டர் (Desktop Publishing Operator), செயலகப் பயிற்சி (Secretarial Practice) மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில்) ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பில் தொழிற்பயிற்சியாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 

மேலும் இதே பிரிவில் “நெட்ஒர்க் டெக்னிஷியன்” (Network Technician)  என்ற தொழிற்பயிற்சி 6 மாத கால பயிற்சியாக வழங்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக -

ஐ.டி.ஐ. தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பில் தொழிற்கல்வி பயிற்சியைப் பெற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக ஒரு வருடப் படிப்பாக ஆடை தயாரித்தல் (Dress Making), லித்தோ ஆப்செட் மெஷின் மைண்டர் (Litho Offset Machine Minder), கைவினைஞர் உணவுத் தயாரிப்பவர் (Craftsman Food Production), நிறம் அகற்றுதல் மற்றும் சாயம் தோய்த்தல் மற்றும் காலிகோ அச்சடித்தல் (Bleaching Dyeing and Calico Printing) ஆகிய தொழிற்கல்விப் படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 

மேலும், ஓட்டுநருடன்கூடிய கம்மியர் (Driver-cum-Machine), டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) மற்றும் கம்ப்யூட்டர் எய்டட் எம்ப்ராய்டரி மற்றும் நீடில் ஒர்க் (Computer Aided Embroidery and Needle Work) போன்ற தொழிற்பயிற்சிகள் 6 மாதப் படிப்பாக இப்பிரிவில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 

8-ம் வகுப்பு முறையாக பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக -

தோல்பொருள் உற்பத்தியாள் மற்றும் காலணி உற்பத்தியாள், துணி வெட்டுதல் மற்றும் தையல் வேலை, பூத்தையல் மற்றும் வேலைப்பாடு போன்ற தொழிற்கல்வி படிப்புகள் பயிற்சியாக ஐ.டி.ஐ. நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ் படிப்பில் 8ம் வகுப்பு முறையாக பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக கற்றுக்கொடுக்கப் படுகின்றன. 

திறன்மிகு மையங்களின் தொழிற்பிரிவுகள் (Centre of Excellence- Sectors)

ஐ.டி.ஐ. சான்றிதழ் கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக 2 வருடப் படிப்பாக தானியங்கி ஊர்தி (Automobile Sector), உற்பத்தி மற்றும் தயாரிப்பு (Production and Manufacturing), மின்சார பணி (Electrical), கட்டுமான பொருத்துநர் மற்றும் பற்ற வைப்பவர் (Fabrication - Fitting and Welding), ஆடை வடிவமைத்தல் மற்றும் தையல் (Apparel), தோல்பொருள் மற்றும் காலணி (Leather Goods and Footwear), உபசரிப்பு மேலாண்மை (Hospitality Management), மேலும் கட்டுமானம் மற்றும் மர வேலைப்பாடுகள் (Construction and Wood Working) ஆகிய தொழிற்கல்வி படிப்புகள் பயிற்சிகளாக கற்றுக் கொடுக்கப் படுகின்றன. 

Post a Comment

புதியது பழையவை