வேளாண்மைப் படிப்புகள்-4

வேளாண்மைப்  படிப்புகள்
- நெல்லை கவிநேசன்

ஒருகாலத்தில் ஒரேவிதமான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தார்கள். நெல் வகையை எடுத்துக்கொண்டால் அவற்றில் ஒருசில ரகங்கள்தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் இந்தியாவில் பயிர் செய்யப்படுகின்றன. 

இயற்கை உரத்தை மட்டுமே நம்பியிருந்த காலம் இன்று அடியோடு மாறிவிட்டது. யூரியா, பாஸ்பேட் என பல்வேறு விதமான உரப் பொருட்களும் தயாரிக்கப்பட்டு வேளாண் வளர்ச்சிக்கு உதவியாய் அமைகின்றன. பயிர்களைத் தாக்கும் பலவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகள் சந்தைக்கு வந்துவிட்டன. 

வேளாண்துறையோடு இணைந்த தோட்டக்கலை, வேளாண்மை அறிவியல், பட்டுப்புழு வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளும் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால், வேளாண்துறை பற்றிய படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவிகளில் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். தனியார் துறையிலும், அரசுத் துறையிலும் ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கி வரும் வேளாண்மை படிப்புகளைப்பற்றி பார்ப்போம். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 

தமிழ்நாட்டில் வேளாண்மை படிப்புகளை நடத்துவதற்கென தனியாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (Tamilnadu  Agricultural University) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை (Agriculture) மற்றும் தோட்டக்கலை (Horticulture)  சம்பந்தப்பட்ட பல்வேறு பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

வேளாண்மை  - பாடப்பிரிவுகள்

பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேர்ந்து படிக்கும்வகையில் -
1. பி.எஸ்சி., வேளாண்மை  (B.Sc. Agriculture)
2. பி.எஸ்சி., தோட்டக்கலை (B.Sc. Horticulture)
3. பி.எஸ்சி., வனவியல்  (B.Sc. Forestry)
4. பி.எஸ்சி., மனை அறிவியல் (B.Sc. Home Science)
5.பி.டெக். வேளாண்மை பொறியியல் (B.Tech. Agricultural Engineering)
6.பி.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல் (B.Tech. Food Process Engineering)
7.பி.டெக். உயிரி தொழில்நுட்பம் (B.Tech. Biotechnology)
8. பி.டெக். தோட்டக்கலை (B.Tech. Horticulture)
9. பி.டெக். எனர்ஜி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் (B.Tech. Energy and Environmental Engineering)
10. பி.டெக். பயோ இன்பர்மேட்டிக்ஸ் (B.Tech. Bio Informatics)
11. பி.எஸ். வேளாண் வணிக மேலாண்மை (B.S.  Agribusiness Management)
12. பி.டெக். வேளாண் தகவல் தொழில்நுட்பம் (B.Tech. Agricultural Information Technology)
13. பி.எஸ்சி. பட்டுப்புழு வளர்த்தல் (B.Sc. Sericulture)

-ஆகிய பட்டப் படிப்புகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வித் தகுதிகள்

இங்கு நடத்தப்படும் பி.எஸ்சி. வேளாண்மை (B.Sc. Agriculture), பி.எஸ்சி. தோட்டக்கலை (B.Sc. Horticulture), பி.எஸ்சி. வனவியல் (B.Sc. Forestry), பி.எஸ்சி. மனை அறிவியல் (B.Sc. Home Science), பி.டெக்.பயோ டெக்னாலஜி (B.Tech. Bio Technology), பி.டெக். தோட்டக்கலை (B.Tech. Horticulture), பி.டெக் பயோ இன்பர்மேட்டிக்ஸ் (B.Tech. Bio Informatics), பி.எஸ் வேளாண் வணிக மேலாண்மை (B.S. Agri Business Management), பி.எஸ்சி. பட்டுப்புழு வளர்த்தல்(B.Sc. Sericulture) போன்ற படிப்புகளில் சேர பிளஸ் 2 படிப்பில் குரூப்-1 (Group - I) கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். 

மேலும், குரூப்-2 (Group - II) பிரிவான இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை பிளஸ் 2 தேர்வில் தேர்ந்தெடுத்துப் படித்தவர்களும் இந்தப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். ஆனால் குரூப் -2 பிரிவில் படித்தவர்கள் பயோ கெமிஸ்ட்ரி (Bio Chemistry), பயோ டெக்னாலஜி (Bio Technology), மைக்ரோ பயாலஜி (Micro Biology), மனை அறிவியல் (Home Science), கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) போன்ற பாடங்களில் ஏதேனும் ஒரு விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டியது அவசியமாகும்.  

இதுதவிர, பிளஸ் 2 தேர்வில் குரூப் -2(ஏ) (Group - II [A]) பிரிவில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை படித்தவர்களும் இந்தப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். 

பி.டெக் வேளாண்மை பொறியியல் (B.Tech. Agricultural Engineering), பி.டெக் உணவு பதப்படுத்தும் பொறியியல் (B.Tech. Food Process Engineering), பி.டெக் எனர்ஜி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் (B.Tech. Energy and Environmental Engineering) ஆகிய படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் உயிரியல் பிரிவு எடுத்துப் படித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்தவர்களும் இந்தப் படிப்புகளில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

எங்கு படிக்கலாம்?

பி.எஸ்சி வேளாண்மை (B.Sc.Agriculture) படிப்பை - கோயம்புத்தூரிலுள்ள அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், மதுரையிலுள்ள அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், கிள்ளிக்குளத்திலுள்ள அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், திருச்சியிலுள்ள அன்பில் தர்மலிங்கம் அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் மற்றும் நாகப்பட்டினத்திலுள்ள அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - ஆகிய வேளாண்மை கல்வி ஆராய்ச்சி மையங்கள் நடத்துகின்றன. 

பி.எஸ்சி தோட்டக்கலை (B.Sc. Horticulture) என்னும் படிப்பு பெரியகுளத்திலுள்ள ஹார்ட்டிகல்ச்சர் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்ற கல்லூரியில் நடத்தப்படுகின்றது. 

பி.எஸ்சி வனவியல் (B.Sc. Forestry) என்னும் படிப்பை- மேட்டுப்பாளையத்திலுள்ள ‘பாரஸ்ட் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற ஆராய்ச்சி மையம் நடத்துகிறது. 

பி.எஸ்சி. மனை அறிவியல் (B.Sc. Home Science) என்னும் படிப்பை ஹோம் சயின்ஸ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் மதுரையில் நடத்தப்படுகிறது. 

பி.டெக் வேளாண்மை பொறியியல் (B.Tech. Agricultural Engineering) படிப்பை - திருச்சியியலுள்ள அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கலாம். 

பி.எஸ்சி. பட்டுப்புழு வளர்த்தல் (B.Sc. Sericulture) படிப்பை கோயம்புத்தூரிலுள்ள அக்ரிகல்ச்சுரல் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கலாம். 

பி.டெக். உயிரி தொழில்நுட்பம், பி.டெக். தோட்டக்கலை, பி.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல், பி.டெக். எனர்ஜி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், பி.டெக். பயோ இன்பர்மேட்டிக்ஸ், பி.எஸ். வேளாண் வணிக மேலாண்மை, பி.டெக். வேளாண் தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்துகிறது. 

பி.எஸ்சி., வேளாண்மை (B.Sc. Agriculture) என்னும் படிப்பை காரைக்காலிலுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் அன்ட் ரிசர்ட் இன்ஸ்டிட்யூட், கலவையிலுள்ள ஆதிபராசக்தி அக்ரிகல்ச்சுரல் காலேஜ், பெரம்பலூரிலுள்ள தந்தை ரோவர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அக்ரிகல்ச்சர் அன்ட் ரூரல் டெவலெப்மெண்ட், பொள்ளாச்சியிலுள்ள வானவராயர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அக்ரிகல்ச்சர் மற்றும் தேனியிலுள்ள காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் டெக்னாலஜி ஆகிய கல்வி நிலையங்கள் நடத்துகின்றன.  

பி.எஸ்சி., தோட்டக்கலை (B.Sc. Horticulture) என்னும் படிப்பு கலவை என்னும் இடத்திலுள்ள ஆதிபராசக்தி அக்ரிகல்ச்சுரல் காலேஜ் என்ற கல்லூரியிலும் நடத்தப்படுகிறது. 

தொடர்புக்கு.......
மேலும் விவரங்களுக்கு -
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003 
இணையதள முகவரி : www.tnau.ac.in 
-என்ற முகவரியில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

புதியது பழையவை

Sports News