விதவிதமாய் பணிகள்
- நெல்லை கவிநேசன்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற சுமார் 24 உயர் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படுகின்ற ஒரே தேர்வு “சிவில் சர்வீசஸ் தேர்வு” (Civil Services Examination) ஆகும். இந்த விவரம் தெரியாத சிலர், ஐ.ஏ.எஸ்.க்கு தனியாக ஒரு தேர்வு நடத்துகிறார்கள் என்றும், ஐ.பி.எஸ்.க்கு தனியாக ஒரு தேர்வு நடத்துகிறார்கள் என்றும் தவறாகப் புரிந்துகொண்டு, தங்கள் தேர்வுத் தயாரிப்பை முறைப்படி மேற்கொள்ள தவறிவிடுகிறார்கள். எனவேதான், இந்தத்தேர்வு பற்றிய விரிவான விளக்கங்களைத் தெளிவாக தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வதற்குமுன்பு, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் உயர் பணிகளான ஐ.ஏ.எஸ்., (I.A.S.) ஐ.பி.எஸ்., (I.P.S.)) ஐ.எப்.எஸ். (I.F.S.) ஐ.ஆர்.எஸ்., (I.R.S.) ஐ.ஐ.எஸ். (I.I.S.)போன்ற சில முக்கியப் பணிகளைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1.இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)
‘ஐ.ஏ.எஸ்.’(I.A.S.)என்னும் பணி ‘இந்திய ஆட்சிப் பணி’யைக் குறிக்கும். இதனை ஆங்கிலத்தில் ‘இந்தியன் அட்மினிஸ்டிரேட்டிவ் சர்வீஸ்’ (Indian Administrative Service) என அழைப்பார்கள்.
மத்திய அரசின் அமைப்பான ‘யூ.பி.எஸ்.சி.’மூலம் (UPSC) இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மத்திய அரசுப் பணிகளிலும் (Central Government Services), மாநில அரசுப் பணிகளிலும் (State Government Service) பணியாற்றும் வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் நிர்வாகப் பணிகளில் முதலிடம் வகிப்பது “ஐ.ஏ.எஸ்.” பணி ஆகும். மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். மத்திய அமைச்சர்களுடன் இணைந்து ஆலோசனை செய்து, கலந்துரையாடல்மூலம் மத்திய அரசின் திட்டங்களை வகுத்தப்பின் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் இவர்களின் பணி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டே அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு நடைமுறைக்கு ஏற்றதாக மறுசீரமைக்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிலைகளில் வெவ்வேறு பதவிகள் வழங்கப்படுகின்றன.
பொதுவாக - ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவுடன், மாநில நிர்வாகப் பணியான ‘சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட்’(Sub Divisional Magistrate)என்னும் பதவி இவர்களுக்கு முதலில் வழங்கப்படுகிறது. நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள், மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகப் பணிகள், வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பொது நிர்வாகம் - போன்ற பணிகளில் பயிற்சி பெறுவதற்காக இந்தப் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்குப் பின்னர் இவர்களுக்கு ‘கூடுதல் மாவட்ட மாஜிஸ்டிரேட்’(Additional District Magistrate) என்னும் பதவி வழங்கப்படும். அதன்பின்னர் ‘மாவட்ட மாஜிஸ்டிரேட்’ (District Magistrate) அல்லது அதற்கு இணையான ‘மாவட்ட ஆட்சித் தலைவர்’ (District Collector) பதவி வழங்கப்படுகிறது.
மாநிலத்திலுள்ள “மாவட்ட ஆட்சித் தலைவர்” என்னும் பதவி, மத்திய அரசின் “துணைச் செயலர்” (Deputy Secretary) பதவிக்கு இணையானது. தலைமையிடத்தில் இதனை ‘இணைச் செயலர்’ (Joint Secretary) என அழைப்பார்கள்.
நமது தமிழ்நாட்டிலுள்ள சிலருக்கு தெரிந்த பதவி “கலெக்டர்” (மாவட்ட ஆட்சித் தலைவர்) என்பதால் “உன் மகன் என்ன கலெக்டருக்கா படிக்கிறான். நம்ம வீட்டு விழாவுக்கு, கலேஜுக்கு லீவுபோட்டுவிட்டு வந்தால் என்ன?” - என்றும் சிலர் இன்றும் கூறுவதைக் கண்கூடாகக் காணலாம். ‘கலெக்டர்’ என்பது படிப்பு அல்ல. அது ஒரு பதவி என்பதை கண்டிப்பாக முதலில் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு நிலைகளில் வழங்கப்படும்.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்காக ஆண்டுதோறும் சுமார் 750முதல் 1,000 பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வினை எழுதினால் ஐ.ஏ.எஸ். என்னும் பணி மட்டுமல்லாமல் வேறு சில பணிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றுள் முக்கியமான சில பணிகள் பற்றிப் பார்ப்போம்.
2.இந்தியன் போலீஸ் சர்வீஸ் (Indian Police Service)
‘ஐ.பி.எஸ்.’ (I.P.S) எனப்படும் “இந்தியன் போலீஸ் சர்வீஸ்” (Indian Police Service) என்பது நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறை ஆகும். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்கள் காவல் துறையில் சேர்ந்ததும், தொடக்கக்காலத்தில், ‘உதவிக் காவல் கண்காணிப்பாளர்’ எனப்படும் ‘Assistant Superintendent of Police’ என்ற பதவியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர், மாநிலத்தின் தலைமைக் காவல்துறை அதிகாரி பணியான ‘டி.ஜி.பி.’ எனப்படும் ‘Director General of Police’ என்ற நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்படும். ஐ.பி.எஸ். பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளான CBI (Central Bureau of Investigation), CRPF (Central Reserve Police Force), BSF (Border Security Force), RAW (Research and Analysis Wing), Central Industrial Security Force (CSIF) மற்றும் Intelligence Bureau ஆகியவற்றில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.
3.இந்திய அயல்நாட்டுப் பணி (Indian Foreign Service)
‘ஐ.எப்.எஸ்.’ (I.F.S.) எனப்படும் “இந்திய அயல்நாட்டுப் பணிக்கு” (Indian Foreign Service) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களில் (Indian Embassies) அதிகாரியாக பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இந்த அதிகாரிப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பல நாடுகளின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. இந்திய அயல்நாட்டுப் பணி (I.F.S) அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாட்டு சபை, உலக வங்கி, சார்க் (SAARC) நாடுகளின் அமைப்பு, யுனெஸ்கோ (UNESCO) ஆகிய அமைப்புகளில் பணிபுரிவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பாஸ்போர்ட் அதிகாரிகள் பணிக்கும் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
4. இந்திய வருவாய் பணி (Indian Revenue Service)
“இந்திய வருவாய் பணி” (I.R.S) எனப்படும் “Indian Revenue Service” பணி என்பது வருமான வரி சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடக்கக்காலத்தில் Assistant Commissioner of Income Tax பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன்பின்னர் பல்வேறு பதவி உயர்வுக்குப்பின்பு Chief Commissioner of Income Tax என்ற பொறுப்பான பதவி வகிக்கவும் வாய்ப்புள்ளது.
“Indian Customs and Central Excise Service” என்னும் பிரிவு சுங்கம் மற்றும் கலால் வரித்துறை சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சுங்க வரித்துறையில் “Assistant Commissioner” பணியில் அமர்த்தப்படுவார்கள். பதவி உயர்வு பெற்றபின்பு முக்கிய பதவியான - Chief Commissioner of Customs and Central Excise, Chairman, Board of Direct Taxes மற்றும் Chairman, Board of Customs and Central Excise - போன்ற உயர்பணிகளிலும் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.
இதுபோன்றே மற்ற உயர் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு வகையான பதவிகளும், பதவி உயர்வும் வழங்கப்படும்.
இந்திய அரசின் மிக முக்கியமான இந்தப் பதவிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வை யாரெல்லாம் எழுதலாம்? அந்தத் தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் என்னென்ன? போன்ற பல விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கருத்துரையிடுக