தேர்வைத் தெரிந்துகொள்வோம்...-3

3. தேர்வைத் தெரிந்துகொள்வோம்...
  - நெல்லை கவிநேசன்

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதத் தேவையான தகுதிகள் என்னென்ன? எந்த வயதுவரை இந்தத் தேர்வை எழுதலாம்? எத்தனை முறை எழுதலாம்? போன்ற தகவல்களைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே தெரிந்து கொண்டவர்கள் தாங்கள் விரும்பும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற உயர் பதவிகளில் எளிதில் சேர வாய்ப்புகள் உள்ளன. 

1. தேர்வு எழுத தகுதியானவர்கள் யார்?

ஐ,ஏ,எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வை பி.ஏ., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.காம்., பி.காம்.(சி.ஏ)., பி.பி.எஸ்.சி., பி.எஸ்.சி.,(அக்ரி)., பி.சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பார்ம்., பி.எஸ்.சி.நர்சிங் பி.ஹெச்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., போன்ற கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் போன்ற பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பை (Bachelors Degree) முடித்தவர்கள் - தேர்வை எழுதலாம்.

இதேபோல், எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., எம்.காம்., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., போன்ற பட்டமேற்படிப்பு (Post Graduate Degree) படித்து முடித்தவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.
 
மேலும் ஆராய்ச்சிப் படிப்புகளான எம்.பில்., பி.எச்.டி., போன்ற பட்டம் பெற்றவர்களும் இந்தத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திற்கு சென்று படிக்க இயலாமல், தொலைநிலைக் கல்விமூலம் (Distance Education) பட்டம் பெற்றவர்களும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

2. எந்த வயதுவரை எழுதலாம்?
 
சிவில் சர்வீசஸ் தேர்வை பொதுவாக பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்ற 21 வயது நிரம்பியவர்கள் எழுதலாம்.
 
பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் (Open Competition [OC]) 21 வயதுமுதல் 32 வயதுவரை இந்தத் தேர்வை எழுதலாம். பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் (Other Backward Classes[OBC]) 21 வயதுமுதல் 35 வயதுவரை இந்தத் தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் (SC / ST) 21 வயதுமுதல் 37 வயதுவரை இந்தத் தேர்வை எழுத வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 
 
மாற்றுத் திறனாளிகளான பார்வையிழந்தவர்கள், காது கேட்காதவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் 21 வயதுமுதல் 42 வயதுவரை இந்தத் தேர்வை எழுதலாம். 
 
இதேபோல் இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இனப் பிரிவின் அடிப்படையில் (Community Basis) வயது உச்ச வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் வயது தளர்வு (Age Relaxation) வழங்கப்படுகிறது. அதாவது பொதுப்பிரிவினர் 37 வயதுவரையும், பிற பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் 40 வயதுவரையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் 42 வயதுவரையும் தேர்வு எழுதலாம்.

3. எத்தனை முறை எழுதலாம்?

பொதுவாக சிவில் சர்வீசஸ் தேர்வை பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 6 முறை (Attempts) தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 9 முறை இந்தத் தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் 21 வயதுமுதல் 42 வயதுவரை இந்தத்தேர்வை எழுத வாய்ப்புகள் உள்ளது. 

4. தேர்வு அறிவிப்பு எப்போது? 
 
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பை “எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்” (Employment News) என்னும் ஆங்கில வார இதழில் விரிவாகக் காணலாம். 

5. தேர்வு எழுதுவது எப்படி?
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்கள் முதலில் தேர்வுத் திட்டம் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வில் இடம்பெறும் கேள்விகள், தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளலாம்.

“சிவில் சர்வீசஸ் தேர்வு” (Civil Services Examination) என்பது மொத்தம் இரண்டு நிலைகளைக்  (Two Stages) கொண்டதாகும். அவை -  
I.சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு (Civil Services Preliminary Examination)
II.சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வு[எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு]  (Civil Services Main Examination (Written and Interview)
  -ஆகியவை ஆகும். 
 
இந்த இரண்டு தேர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதி, தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உயர் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதல்நிலைத் தேர்விலும், முதன்மைத் தேர்விலும் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அடுத்தமுறை இந்தத் தேர்வு எழுதும்போது எல்லா தேர்வுகளையும், மறுபடியும் மீண்டும் எழுத வேண்டும். அதாவது - முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளையும் மீண்டும் எழுத வேண்டும். 
 
இனி - முதல்நிலைத் தேர்வு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

I.முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination)
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு (Civil Services Preliminary Examination) இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். இந்தத் தேர்வில் -
(1) தாள் - I (Paper-I) பொதுஅறிவுப் பாடம் - 200 மதிப்பெண்கள் 
(2) தாள் - II (Paper-II) திறனறியும் தேர்வு - 200 மதிப்பெண்கள் 
- என இருவகைத் தேர்வுகள் இடம்பெறும்.

(1) தாள்- I (Paper-I)
தாள் - 1 எனப்படும் தேர்வு மொத்தம் 2 மணி நேரம் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். பொதுஅறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் அதிகம் இடம்பெறும். கேள்விகள் கொள்குறி வினா வகையில் (Objective Type Questions) அமைந்திருக்கும். அதாவது, - இந்தக் கேள்வித்தாளில் இடம்பெறும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் 4 பதில்கள் கொடுத்து அதில் சரியானவற்றை தேர்வு செய்யும் வகையில் தேர்வுமுறை அமையும். 

பாடத்திட்டம்
இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.
1.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய நடப்புச் செய்திகள் (Current Events of National and International importance)
2.இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் குறித்த வரலாறு (History  of India and Indian National Movement)   
3.இந்திய மற்றும் உலக புவியியல் - இந்திய மற்றும் உலக புவியியல் குறித்த இயற்கை அமைப்பு, சமூக, பொருளாதாரத் தகவல்கள் (Indian and World Geography-Physical, social,Economic,Geography of India and the World) 
4.இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சி அமைப்பு - அரசியலமைப்பு, அரசியல் சட்டம், ஒழுங்கு முறைகள், பஞ்சாயத்து ராஜ், பொதுக் கொள்கைகள், உரிமைகள் மற்றும் கட்டமைப்புகள் (Indian Polity and Governance–Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues etc.) 
5. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி - ஏழ்மை, சமூக இணைப்பு, மக்கள் பிரிவுகள் மற்றும் சமூக அமைப்புகள் (Economic and Social Development Sustainable development, Poverty, Inclusion, Demographics, Social Sector initiatives etc.)
6.சுற்றுச்சூழல்கள்,பருவநிலை மாறுதல்கள் (General Issues on Environmental Ecology, Bio-- -diversity and Climate Change – that do not require subject specialization) 
7. பொது அறிவியல் (General Science)

தாள்-1 தேர்வில் பொதுஅறிவு பற்றிய பாடங்கள் இடம்பெறுவதால் இதனை “பொதுஅறிவுப் பாடத்தேர்வு” (General Studies) என்றும் அழைப்பார்கள். 

(2) தாள் - I (Paper-I)
போட்டியாளரின் புரிந்துகொள்ளும்திறன், பிரச்சினையைத் தீர்க்கும் திறன், புத்திக்கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் விதத்தில் தாள் - 2 தேர்வு அமையும். இந்தத் தேர்வும் 2 மணி நேரம் நடத்தப்படும். இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். இந்தத் தேர்விலும் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இடம்பெறும். கொள்குறி வகை வினா அமைப்பில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும். 

பாடத்திட்டம்
          
இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும். 
1. புரிந்துகொள்ளும் திறன் (Comprehension)
2. இணைந்துபழகும் மற்றும் தகவல்தொடர்புத் திறன்கள் (Interpersonal Skills including Communication Skills) 
3. காரணம் அறிதல் மற்றும் பகுத்தாய்வு திறன்கள் (Logical Reasoning and Analytical Ability)  
4. முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறன்கள் (Decision Making and Problem Solving Skills)  
5. பொது புத்திக்கூர்மைத் திறன் (General Mental Ability) 
6. பொது எண் கணிதம் [எண்கள் மற்றும் அதன் உறவுகள்] (10ம் வகுப்பு தரம்) புள்ளிவிவரங்களைப் புரிந்துகொள்ளுதல் [10ம் வகுப்பு தரம்] (Basic Numeracy [Numbers and their relations, orders of magnitude etc.] [Class X level] Data Interpretation [charts, graphs, tables, Data sufficiency etc.–Class X level])  
7. ஆங்கில மொழியை அறிந்துகொள்ளும் திறன் [10ம் வகுப்பு தரம்] (English Language Comprehension Skills) (Class X level)   

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) வெற்றி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வில் (Main Examination) கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
 
முதன்மைத்தேர்வு என்றால் என்ன? அந்தத் தேர்வில் இடம்பெறும் பாடங்கள் எவை? அதற்கான பாடத்திட்டங்கள் என்னென்ன? போன்ற விவரங்களையும், விளக்கங்களையும்பற்றி விரிவாகப் பார்ப்போம். 

Post a Comment

புதியது பழையவை

Sports News