ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2,

 முகத்தை மூடிக்கொண்ட புதுகை பஸ் ஸ்டாண்ட் சுவரும்...
செல்ஃபி எடுத்துக்கொண்ட ஏர்போர்ட் ’கின்ன்ஸ்’ சுவரும்!

பேருந்துப் பயணங்களில் தூரத்து வீடுகள், பம்பு செட்  சுவற்றில் திருச்சி சாரதாஸ் விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்..  .அதற்கு முன் நிகழ்வாக சிலவரிகள்... (80 களில்...என்பதை நினைவில் )..... தூரத்திலிருந்து பார்வையானசுவர்களை நோட்டமிட உதவிக்கு ஒரு அஸிஸ்டண்டுடன்  திருச்சி செயிண்ட் ஜோஸப் காலேஜ்   தொடங்கி...  .திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர் மணப்பாறை விசிட்ஸ்!

பெரும்பாலும் ஏரியா டவுன் பஸ்ல ஒரு ‘பிஸினெஸ் டிரிப்’ போவோம். போகும்போது வலது பக்கம்  ...வரும்போது இடது பக்க ஜன்னலோரப் பயணம். சிறிய டைரியில்ஊர்ப் பெயர் ...மைல் கல் அடையாளம் மற்றும் உத்தேச  நீள அகல அளவுகளைச்சங்கேதமாய் எனக்கு மட்டும் புரிந்தால்போதுமென நான்    குறிப்பெடுப்பதை  எட்டிப்பார்க்க நேரிடும் பக்கத்து சீட் பயணிக்கு என் மீது ஏற்படும்  குழப்பமும்    சந்தேகமும் குறைந்த பட்சம் இறங்கும் வரையிலுமாவது நீடிக்கும்.

 பாலு மகேந்திரா குழுவில் உதவி இயக்குனராக இருந்த ஜேடி எழுதி பாக்யாவில்வெளிவந்த...ஒரு கவிதை போல்“விச்சிராந்தியாய் யோசிக்க விடாமல் எவளாவது ஒருத்திஅழகாய் இருந்துதொலைப்பாள்”- பஸ்ஸில் ! என்னும் கவி சீன் எல்லாம் ஆங்காங்கே நிஜத்திலும் வந்து போகும்  … அப்போதையநாளில் பஸ்ஸ்ல ஆடியோ கேஸட் & வூஃபர் ஸ்பீக்கர் வசதி  இருப்பது செகண்ட்ஏஸி க்குச் சமம். வீடியோ பஸ்... வேறெ லெவல்!

முகமறியா ஊர்களில் இறங்கி.....தெரியாத ஆளுக்கு வாடகை சைக்கிள் கொடுப்பதில்லை என்னும் ‘ஆல்இன் ஆல் அழகு ராஜா’ விதியை  உடைக்க பர்மா பஜாரில் வாங்கிய இரண்டு பள பளமோண்டியா கைக்கடிகாரங்கள் போதும். அதை ஈடாக வைத்து அந்தந்த ஊர்களின்வாடகை சைக்கிள் கடையில் கேரியர் வெச்ச வண்டியை எடுத்து வண்டிப்பாதைமற்றும் ஒத்தையடிப்பாதைகளில் ’வயல் வலம்’ வந்து... .அந்த பம்புசெட் எடத்தை நெருங்குவோம்.... அதற்கு முன்னே சுயவிவரம் சொல்லிசைக்கிள் கடையிலேயே ஐடியா கேட்க ... அந்த நெலத்துக்குச் சொந்தமான வெவசாயி அய்யா அல்லது அம்மா அவங்களது குடும்ப நெலவரம் மொத்தமும் ஆதார் மாதிரி சொல்லிருவாய்ங்க!


கண்டதும், நொடிப்பொழுதில் குனிந்து...அந்தப் பெரியவர் காலைத் தொட்டுஆசீர்வாதம் பண்ணுங்கன்னு சொல்லும்போதில்... ’யார்றா இவன்’ என்ன்னும் அவர்களின் திடீர் திகைப்புஅடங்கி...சுதாரிப்பதற்குள்.... ‘பி.காம்.படிச்சிட்டு வேலையில்லாம அலையுறோம் என்னும் சுய புராணத்துடன்.... நீங்க மனசு வெச்சால தான் கெளரவமாக பிழைக்கமுடியும்’...  என்னும் வார்த்தைகளில்...அவர்களின்கடுமை மாறி, முகம்… வாஞ்சையுடன் அன்பு பூக்கும். பம்பு செட் சுவற்றில் வரையக் காத்திருக்கும்  விலையுயர்ந்த பெயிண்ட் கேட்டலாக் காட்டி, மோட்டார் கதவு ஜன்னல் எல்லாத்துக்கும்கூட கலர் அடிச்சுத்தர்றது ..ப்ளஸ் பொங்கலுக்கு எடுக்கப்போகும் துணிமணிக்கு திருச்சி சாரதாஸில் சிறப்புத் தள்ளுபடி உண்டு என்னும் *கண்டிஷன்ஸ் அப்ளையில் அந்த வாரத்துக்கான ஒரு 300  சதுர அடி சுவர் விளம்பர வேலையும்900 ரூபாய் வருமானமும் உறுதிப்படும். (இதையே, உங்கள் சுவருக்கு ஒரு வாடகைதருகிறோம் என்று நேரடியாக சொல்லி ‘எவனுக்கு வேணும் ஓங்காசு’ன்னுதிரும்பிய சோக அனுபவங்கள் அநேகம்..)

 அதே சுவர் விளம்பரம் முழுமை பெறும் நாளில் பிரமாதமாய் விருந்தே வைச்சு அவங்க புள்ளையாவே கருதி அனுப்பிவைத்த திண்டுக்கல் திருச்சி சாலையோர விவசாய  நிலங்களை இன்றும் நான் காரில் கடக்கும்போதில் லேசா ‘கண்ணுல  ஜல வேர்வை’ கட்டும்’!

 
80 களில்! திண்டுக்கல் அருகே ஒரு மோட்டார் கேணி சுவர் வேலை முடியும் சமயம் அங்கே வயல் வேலை பாத்த ஆவுடை என்பவரின் பொண்ணுக்கு சீர்வைக்கும் அளவுக்குதகுதியில்லாத துருஏறிய ஒரு பழைய ட்ரெங்குப் பெட்டிக்கு லைட் பச்சைஅடிச்சு காண்டா வெளக்குல புகைபிடிச்சு டிசைன்ல ஓரத்துல ‘ஆ.முத்துராக்கு’ன்னு எழுதிய பின் தான் அந்தக் குடும்பத்தில் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாதென்பது தெரியவந்தது

பக்கத்துவீட்டு பள்ளிச் சிறுசு மட்டும் எழுத்துக்கூட்டி வாசித்து எங்களுக்கு  “ஃபெரெண்ட் ரிக்வெஸ்ட்” வாங்கித் தந்த சம்பவங்கள் சுகமானவை. மேலும் நட்புத் திருமணங்களுக்கெல்லாம் ..கையால் வரைந்த வாழ்த்துகளுடன்...சாப்பாடு நேரத்துக்கு கரெக்டா போயிடுவோம்.

பொதுவா எல்லா ஊரு பஸ்ஸ்டாண்ட் சுற்றுச்சுவர் ஏரியா என்றால்..நம்மால் சிலநொடிகள்கூட நிற்கக்கூட முடியாது.. பயங்கர நெடி... புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சுவர், (கழிப்பறை தவிர்த்து) அதனை பெயிண்ட் செய்து இரண்டு நாள்  இரவில் குளிரும் பகலில் ‘பொட்ட’ வெயிலிலும் நின்று கண்கள் மட்டும் தெரிய..தலையில் பெரிய டபுள் முண்டாசு கட்டிக்கொண்டு, என் ஊர்மக்கள், நண்பர்கள் யாரும் என்னை அடையாளம் கண்டுவிடாதபடி முகத்தை மூடி‘சர்வசிரத்தையுடன்’ வேலை செய்தது என் வாழ்வில் மிகக் கடுமையான ஒன்று. அந்த வலி மிகுந்த நாட்கள் பற்றி… உண்மையில் இன்று வரை என் குடும்பத்தினருக்குக்கூடத் தெரியாது. இடையே ஒரு சின்ன மழையால் இரண்டுநாள் என்ற திட்டம் மூன்றாம் நாள் வரை இழுத்தது. அந்த வேலைப்பளு(ப்ப்ப்பா...நினைத்தாலே வலிக்கும்.)  அதே நேரம் வேலை செய்வது நான் என்று தெரியக்கூடாது: அதே நேரம் என் வேலை பளிச்சென்று தெரிய வேண்டும்.  பஸ் ஸ்டாண்ட் சுற்றுச் சுவர் முழுதும் தகதகப்பில் அவுட்லைன் ஷேடிங்கில் சாரதாஸ் விளம்பரம். அப்போது கடித்தசிலபஸ் ஸ்டாண்ட் கொசுக்களின் உபயம் ஒரு வாரம் காய்ச்சல். அப்போது அதை சிரமம்என நான் நினைத்து வீட்டுக்குப் போயிருந்தால் சாப்பாடு உறுதி.இருப்பினும் கவிஞர் வாலிக்கு கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ பாடல்போல....ஆண்டவர் ஆர்ட்ஸ்...ஜீவி நாகை.. ஓவியர் மாருதி, ம.செ. ஜெயராஜ் போல்பெரிய லெவலில் வரணும்னு ஒரு ‘சொந்தக்கால்’  வைராக்கியம். இன்றும் எந்த நாட்டிலும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துகொள்ள வைக்கும் . புதியன தேடி உள்ளுக்குள் பல்ஸ்...ஓடும்...என் மதிப்புக்குறிய திருச்சி ஆர்.ஆர்.கண்ணன் அடிக்கடி எனக்குச் சொல்லும் ’ஜெயிக்கப்பிறந்தோம்’ என்னும் ’வெற்றி வெறி’ தடவிய சுலோகம்  வந்து வந்து மோதும்.
 

அன்று  சுவர் ஓவியம் வரைந்த கைகளுக்கு சமீபத்தில் மீண்டும் ஒரு  சாதனை வாய்ப்பாக சென்னை விமான நிலைய நெடிய சுவர் ஓவிய நிகழ்வு.. நண்பர் திரு.சுதாகருடன் இணைந்து ஒரு ஓவிய மகிழ்வு. விரைவில் கின்னஸ் சாதனை அறிவிப்பு வரலாம். ( திடீர்னு 1986 லிருந்து 2019க்கு ட்ராக் மாறியதற்கு மன்னிக்க...) 80 களில் அன்று கலைந்த முடியுடன்...வெயிலில் கருத்து...எந்நேரமும் ஒரு கெமிக்கல் நெடியுடன் கைகால்கள் உடைகள் யாவிலும் எண்ணற்ற வண்ணங்கள். என்னைக் கண்ணாடியில் எனக்கே பார்க்கச் ’சகிக்காத கோலங்கள்’. அந்த சமயம் என்னைப் போயி சொந்தத் தொழில்பார்க்கும் மாப்பிள்ளைன்னு பார்க்க வந்த காரைக்குடியின் ஒரு பெரிய இடத்துச் சம்மந்தம் என்னைப் பார்த்த First look ஒன்றே போதும். அன்றைய நிராகரிப்பின் வலி… ஆண் வேதனை வெளியில் சொல்லப்படுவதில்லை!

விளைவு ....சுருதி நல்லாயிருக்கும்போதே திருச்சிக் கச்சேரியை
முடித்துக்கொண்டேன். சென்னைக் கனவுடன் ( - தொடர்வோம் )








3 கருத்துகள்

  1. கடந்த காலத்திலும் நிகழிலும் அசைகிற சம்பவங்களை வாசிக்கச் சலிக்காத நடையில் தருகிறீர்கள்.அருமை.வாழ்த்துகள்.தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...நிழலாடும் நினைவலைகள்...உங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும்

      நீக்கு
    2. நன்றி...நிழலாடும் நினைவலைகள்...உங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும்

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News