வெற்றி மந்திரம் - 6

வெற்றி மந்திரம்
- நெல்லை கவிநேசன்

ஐ.ஏ.எஸ்., பணியில் சேருவதற்கு எழுதவேண்டிய தேர்வின் பெயர் என்ன? தேர்வு எழுத என்னென்ன தகுதிகள் வேண்டும்? அந்தத் தேர்வை எழுத எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும்? விருப்பப்பாடங்களை தேர்வு செய்வது எப்படி? எத்தனை முறை அந்தத் தேர்வை எழுதலாம்? - என்றெல்லாம் பலவிதமான தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் பலர் முக்கியமான சில தகவல்களை சேகரிக்க மறந்து விடுகிறார்கள். அப்படி தகவல்களை சேகரித்தாலும் அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்புப் பணியில் ஈடுபட மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். தேர்வுக்கு முறையான தயாரிப்பு மேற்கொண்டாலும் சில முக்கிய குணங்களைப் பெற முயற்சி செய்யாதவர்களுக்கு தேர்வில் சிறப்பிடம் பெற இயலாதநிலை ஏற்பட்டுவிடுகிறது. 
எனவே, சிவில் சர்வீஸஸ் தேர்வில் சிறப்பாக வெற்றிபெற தேவையான குணங்கள் என்னென்ன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். 

1. தன்முனைப்பு (Self Motivation)
ஐ.ஏ.எஸ்., பதவிக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்கள் தனக்குத்தானே உற்சாகத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது - “நீ அப்படிப் படி, இப்படிப் படி” என்று சொல்ல எத்தனையோ ஆலோசகர்கள் அருகில் இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஆலோசகர்களில் பலர் சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதும்போது கிடைக்க மாட்டார்கள். 

 
ஆர்வமிகுதியால் ஏதேனும் ஒரு மாணவர் அல்லது மாணவி ஐ.ஏ.எஸ்., பற்றி விவரம் கேட்க ஆரம்பித்தாலே “அதோ ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி போகிறார்” - என்று கிண்டலும், கேலியும் கலந்த சிரிப்பைத் தேக்கும் கூட்டங்கள்தான் அதிகமாக உள்ளது. இதனால் தனது விருப்பத்தைக்கூட வெளிக்காட்ட இயலாமல் பலரின் ஐ.ஏ.எஸ்., கனவுகள் அஸ்தமனம் ஆகிவிடும். ‘கிண்டல்’ என்னும் கீறல்களுக்கு பயந்து ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு மறந்தவர்களும் இருக்கிறார்கள். 

“யார் என்ன சொன்னாலும்  சொல்லட்டும் - இந்த
 ஊர் என்ன சொன்னாலும் சொல்லட்டும் - எந்தன் 
 பேர் தன்னை ஊரெல்லாம் சொல்லட்டும் - நான்
 ஐ.ஏ.எஸ் தேர்விலே வெல்லட்டும்”  
- என்னும் ஐ.ஏ.எஸ் மந்திரக் குறிக்கோளை மனதில் ஆழமாக பதித்தவர்கள் தன்முனைப்பு கொண்டவர்களாக விளங்குகிறார்கள்.     
 
தங்களின் குறிக்கோளை ஒழுங்காக நிர்ணயித்தவர்கள் மட்டுமே தன்முனைப்பு கொண்டவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் மாறுகிறார்கள்.
 
ஐ.ஏ.எஸ் பணியை குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஆழ்ந்த அறிவை கொண்டவர்களாக இருக்க வேண்டும். படிப்புத்திறன் மிக்கவர்களாகவும், நேர நிர்வாகத்திறன் உடையவர்களாகவும் இருப்பதன்மூலம் எதிர்பார்த்த குறிக்கோளை அவர்கள் அடையலாம். 
 
ஆர்வத்தோடு படிப்பதோடு, புதியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் தன்முனைப்பு கொண்டவர்களாக மாறி விடுகிறார்கள். 
ஐ.ஏ.எஸ்., பணிக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும்போது தன்முனைப்பு கொண்டவர்களாக விளங்கினால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றபின்பும் ஐ.ஏ.எஸ்., பதவியில் முதல் நிலையை அடையலாம். 

2. தொடர் முயற்சி (Persistence)
 
“தொடர் முயற்சி” என்பது, தான் எடுத்துக்கொண்ட செயலில் ஒருவர் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதைக் குறிக்கும். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்காக படிக்கும்போது சில நேரங்களில் பிரச்சினைகள் வரலாம். பாடங்கள் புரியாமல் இருக்கலாம். படித்த பாடங்களை நினைவில் நிறுத்துவதில் சிக்கல் உருவாகலாம். எதிர்பாராத சூழல்களில் நிலைகுலைந்து போகலாம். 

எந்த இக்கட்டுகள் வந்தாலும் அதனை கட்டுக்குள் வைத்துக்கொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றும், எதிர்நீச்சல் போடும் குணம் கண்டிப்பாக சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்குத் தேவை. குடும்பப் பிரச்சினைகள் பூதாகரமாக தோன்றி பலமுனைத் தாக்குதல்கள் நடத்தும்போது சிலர் தனது ஐ.ஏ.எஸ்., முயற்சியை அப்படியே கைகழுவிவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள். எந்தச் சூழலாக இருந்தாலும் தொடர்முயற்சியோடு உழைத்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ் என்னும் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கிறார்கள்.  

3. அதிக ஈடுபாடு (Commitment)
 
சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்களில் சிலர் “எனது அப்பா சொன்னார்” என்றும் “அம்மா சொன்னார்கள்” என்றும், “எனது நண்பர்கள் சொல்கிறார்கள்” என்றும் சொல்லி தேர்வு எழுத முன்வருகிறார்கள். அடுத்தவர்கள் விருப்பத்திற்காக மட்டுமே தேர்வை எழுதுபவர்கள் அதிக ஈடுபாட்டுடன் தேர்வு எழுத விரும்புவதில்லை.
 
தேர்வுக்கு சில நாட்களுக்குமுன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தகத்தை தேர்ந்தெடுத்து சில மணிநேரம் ஒதுக்கி பாடத்தை படித்துவிட்டு தேர்வை சந்திக்கிறார்கள். தேர்வை எழுதி முடித்துவிட்டு “எல்லாரும் சொல்றாங்க ஐ.ஏ.எஸ்., எக்ஸாம் ரொம்ப ஈஸின்னு. ஆனா அந்த எக்ஸாம் எழுதுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்” என்று அங்கலாய்த்து கொள்கிறார்கள். பின்னர் ஏதோ தங்களுக்கு அனுபவம் கிடைத்ததுவிட்டதுபோல அடுத்தவர்களையும் பயமுறுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். 

“ஈடுபாடு” இல்லாமல் எந்த காரியத்தைச் செய்தாலும் வெற்றிபெறும் வாய்ப்புகூட விலகி ஓடிவிடும்” என்பது அறிஞர்களின் கருத்தாகும். எனவே தேர்வு எழுதுபவர்கள் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

4. தகவல் தொடர்புத் திறன் (Communication Skill)
 
சொல்ல வந்த கருத்தை பிறர் புரிந்து கொள்ளும்படி எளிதாகவும், தெளிவாகவும், மற்றவர்களுக்கு தெரிவிக்கும் திறனை “தகவல் தொடர்புத்திறன்” என அழைப்பார்கள். ஆங்கிலமாக இருந்தாலும், தமிழ் மொழியாக இருந்தாலும், வேறு எந்த மொழியாக இருந்தாலும் கருத்துப் பரிமாற்றத்தினை பிறர் புரிந்து கொள்ளும்படி ஏற்படுத்தும் திறன் இருந்தால் அவரை ‘தகவல் தொடர்பு திறன் கொண்டவர் எனக் கூறலாம். 
 
இப்படிப்பட்ட திறன் கொண்டவர்கள் பேசுவதிலும், எழுதுவதிலும் அதிக திறன் உடையவர்களாக இருப்பார்கள். ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தனது கருத்தை மிகத் துல்லியமாக பிறருக்கு தெரிவிக்கும் திறன் படைத்தவராக இருந்தால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள். அதே நேரத்தில் செய்யும் பணியில் சிறப்பு பெறவும் வாய்ப்புள்ளது. 
 
எனவே தேர்வு எழுதும்போதே இந்த திறமையை வளர்ப்பதற்கு வேண்டிய முயற்சியில் ஈடுபட வேண்டியது தேர்வு எழுதுபவர்களின் கடமையாகும். 

5. தலைமைப்பண்பு (Leadership)

“முதல்வனாய் இரு - அல்லது 
 முதல்வனோடு இரு” 
- என்பது பள்ளியில் பயிலும்போதே மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் “ஆட்டோகிராப்”பில் எழுதி கொடுக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகளாகும். எந்தச் சூழலிலும் முதல்நிலையை பெற வேண்டும் அல்லது முதல்நிலை பெற்றவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பது அதன் பொருளாகும். 
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களும் முதல் நிலையை பெறுவதற்கான தலைமைப்பண்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்ந்த நிலைக்கு அவர்களால் கொண்டுவர இயலும். 
தலைமைப்பண்பு கொண்டவர்கள் தெளிவான எதிர்கால பார்வை (Clear Vision) கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அந்தத் தெளிவான தொலைநோக்கு பற்றிய தகவல்களை பிறருக்கு தெரிவிக்கும் திறமையுடையவர்களாவும் இருப்பார்கள். “இடர் ஏற்கும் திறன்”மூலம் (Risk Taking Ability) சவால்களை சந்திக்கும் தன்மையோடு விளங்குவார்கள். இத்தகைய தலைமைப்பண்பு கொண்டவர்கள் “நெறியோடு கூடிய செயல்பாட்டுடன்” (Ethical Behaviour) திகழ்வதால் மற்றவர்களை வழிநடத்துவது அவர்களுக்கு எளிதான செயலாக அமையும். எனவே, தலைமைப்பண்பை பள்ளி, கல்லூரியில் பயிலும்போதே வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வது சிறந்த செயலாகும். 

6. நேர்மை (Honesty)
நேர்மையுடன் வாழ வேண்டும் என்னும் சிந்தனையோடு வாழ்பவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். ஐ.ஏ.எஸ்., பணியில் சேர விருப்பம் கொண்டவர்கள் கண்டிப்பாக இளம்வயதிலிருந்தே நேர்மையுடன் வாழ வேண்டும். ஏனென்றால் ஒரு நாட்டை வழிநடத்தும்போது பலவித நேர்மையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். அந்த நேரங்களில் பிரச்சினைகளை சந்தித்து முடிவுகளை, மேற்கொள்ளும்போது நேர்மையுடன் நடந்து கொள்வது விவேகமான செயலாகும். 

7. தன்னம்பிக்கை (Self Confidence)
 
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அடிப்படையாய் அமைகிறது. தேர்வு எழுத தொடங்கும்போதே சிலர் எதிர்மறையாக சிந்தித்து தன்னம்பிக்கை இழந்து விடுகிறார்கள். “இந்த தேர்வெல்லாம் அறிவாளிகள் எழுத வேண்டியது. பெரிய இடத்து ஆட்களுக்குத்தான் இந்த தேர்வு சரிப்படும். ஐ.ஏ.எஸ்., என்பது எனது கனவுதான். அது எங்கே நிறைவேறப் போகிறது? என்று எதிர்மறையாக சிந்தித்து “தன்னம்பிக்கை” இல்லாமல் கவலைப்பட்டு காலத்தை நகர்த்தியவர்களும் உண்டு. 

தினம்தினம் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால்தான் நினைத்தது நிறைவேறும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 
 
ஐ.ஏ.எஸ்., கனவை நனவாக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக தன்னம்பிக்கையோடு உழைக்க வேண்டியது அவசியமாகும்.    

8. வெற்றி மீது ஆசை (Passion for Success)

வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் வைத்து முழு மூச்சோடு, தீராத ஆசையோடு தேர்வுக்கு தயார் செய்பவர்கள் நினைத்ததை நிறைவேற்றுகிறார்கள்.
அதற்கு எளியவழி இதுதான் “நான் ஓரிரு வருடங்களில் நிச்சயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆகிவிடுவேன்” என்று ஒரு டைரியில் பெரிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நாள்தோறும் காலை வேளையில் தனியாக ஒரு அறையில் அமர்ந்து அந்த டைரியைத் திறந்து தினமும் “நான் ஓரிரு வருடங்களில் நிச்சயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆகிவிடுவேன் என எழுதிவைத்து 15 முறை மனதுக்குள் சொல்ல வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் உங்கள் ஐ.ஏ.எஸ்., கனவு அரங்கேறும் நாள் தொலைவில் இல்லை”. 

 
உங்களின் ஐ.ஏ.எஸ்., கனவு நனவாகும் வரை திரும்பத் திரும்ப காலையிலும், மாலையிலும் நீங்கள் மந்திரம்போல் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு வரும்போது உங்கள் மனதுக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றம் உருவாகும். ஏனென்றால் “மனிதர்கள் எதனை திரும்பத் திரும்ப கேட்கிறார்களோ அதனை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்” - என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும். 
யாரும் இல்லாத தனி அறையில் ஒரு நிலைக்கண்ணாடி முன்பு நின்றுகொண்டு “நான் ஓரிரு நாளில் நிச்சயமாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகிவிடுவேன்” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே வரும்போது தன்னம்பிக்கை பிறக்கும், ஆர்வம் அதிகரிக்கும், உற்சாகம் ஊற்றெடுக்கும் அதுதான் உயர்நிலைக்கு வழிவகுக்கும்.  
இப்படி உங்கள் வெற்றி மீதான ஆசையைப் பற்றி தினமும் சிந்திக்கும்போது, அந்த வெற்றிக்காக உங்களை அறியாமலேயே நீங்கள் உழைக்க ஆரம்பிக்கிறீர்கள். “நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும்” என்ற ஆர்வம் உங்களுக்குள் பிறக்கும்போது நிறைய ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான புத்தகங்களை உங்களை அறியாமலேயே நீங்கள் வாசிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்களை சந்திக்க முயற்சி செய்வீர்கள். 

வெற்றிமீது தீராத ஆசை வரும்போது வெற்றிபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சந்திக்க திட்டம்போட்டு, அவர்களுடைய ஆலோசனையை கேட்பதற்காக மனம் ஏங்க ஆரம்பிக்கும். இதன்மூலம் தேர்வு தயாரிப்பு எளிதாகிவிடும். அதுமட்டுமல்ல உங்கள் மனதில் அறிவுப் பூர்வமான எண்ணங்கள் (Intelligent Ideas) உருவாகும். இந்த எளிதான முறையில் நீங்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாவதற்கான திட்டத்தை அழகாக உருவாக்கிக் கொள்ளலாம். 
“நான் பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறேன் என்னால் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முடியுமா?” என்ற தயக்கத்தில் தேர்வு எழுத தயங்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பட்டப்படிப்பில் வெற்றி பெற்றதற்கான பட்டம் (Degree) மட்டும் நீங்கள் பெற்றிருந்தால் போதும். 

வெற்றிமீது ஆசை வையுங்கள். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். 
 
இனி - சிவில் சர்வீசஸ் தேர்வை வெற்றிகரமாக எழுதுவது எப்படி? என்பதைப்பற்றி காண்போம். 

Post a Comment

புதியது பழையவை

Sports News