மாற்றங்கள்... ஏமாற்றங்கள் அல்ல

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-

மாற்றங்கள்... ஏமாற்றங்கள் அல்ல

தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வேண்டும் என சில பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். வேறுசிலர் பொறியியல் வல்லுநராக தங்கள் பிள்ளைகளை மாற்ற வேண்டும் என முழவு செய்கிறர்கள். இன்னும் சில பெற்றோர்கள் அவர்கள் கலெக்டராக வேண்டும் என்ற கனவுகளோடு வாழுகிறார்கள். சிலர் தங்கள் வாரிசுகளை தொழிலதிபராக்கி அழகு பார்க்க நினைக்கிறார்கள். 

பெற்றோர்கள் தங்கள் சந்ததியினர் வளர்ச்சி படிகளில் ஏறும்போது சரிந்து விழாமல் சாதனைபடைக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். 

“நான்தான் படிக்காமல் போய்விட்டேன். என் பிள்ளையாவது என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்” என்று ஆசைப்பட்டு பலவித முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். 

இதனால் - ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து பெற்றோர்கள் சிறந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஆங்கிலப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க இயலாத பெற்றோர்கள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியோடு இணைந்த பல வசதிகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. 

குறிப்பாக - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது. இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. பள்ளியில் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘இலவச சீருடைகள்’ வழங்கப்படுகின்றன. பணவசதி இல்லை என்ற காரணத்தால் படிப்பை இடையில் மாணவ, மாணவிகள் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படுகின்றன. நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருவதற்காக புத்தகப்பைகூட சில கல்வி நிறுவனங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

கிராமப் பகுதியிலிருந்து பள்ளிக்கு படிக்க வருகின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணிகள் (செருப்புகள்), சற்று தொலைவிலிருந்து வருகின்றவர்களுக்கு சைக்கிள்கள், வெகு தொலைவிலிருந்து வருகின்றவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதிகள் வழங்கப்படுகிறது. 

மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பல் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட்டு இலவச கண்ணாடிகளும் வழங்கப்படுகிறது. 

இத்தனையும் மாணவ, மாணவிகளுக்கு நேரடியாகவே வழங்கப்படுகிறது. இவைதவிர, கம்ப்யூட்டர்வழி கல்விமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, இலவச இண்டர்நெட் வசதியும் பல பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆளுமைத்திறனை வளர்க்கவும், ஆங்கிலத்திறனை அதிகரிக்கவும் பல பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. நல்ல தரம் வாய்ந்த ஆசிரியர்களும் இந்தப் பள்ளிகளில் இருக்கிறார்கள். 

“இத்தனை வசதிகள் இருந்தும் சில மாணவ, மாணவிகள் என்னால் படிக்க முடியவில்லை. எங்கள் ஸ்கூல் ரொம்ப சுமார்தான்” என்று எண்ணி தங்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். 

ஆனால் அதேவேளையில் “இந்தப்பள்ளிதான் என்னை வளர்த்தது. எனக்கு வாழும் முறையை கற்றுக்கொடுத்தது. அந்தப் சின்னப் பள்ளிக்கூடம்தான் என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்தது” என்று தாங்கள் படித்த பள்ளியை மனதுக்குள் நினைத்து தங்கள் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் மாணவ, மாணவிகளும் உண்டு.  

சந்திராயன் திட்ட இயக்குனர் திரு. மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோதவாடி என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர். இவர் பதினொன்றாம் வகுப்புவரை கிராமத்துப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர். இன்று - மிகச்சிறந்த அறிவியல் அறிஞராகவும் இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். “எனது சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் தாய்மொழியில் நான் கற்ற பள்ளிப் பாடங்கள்தான் அடிப்படை காரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.     

படிக்கின்ற காலத்தில் இளம் மாணவிகளுக்கு பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லா இளைஞர்களுக்கும் ஏற்படும் வளர் இளம் பருவ பிரச்சினைகள் உடல் ரிதியாகவும், மன ரிதியாகவும் பாதிப்படையச் செய்துவிடுகிறது. இதனால் சிலர் பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாக எடுக்க நேரிடும். 

“நீ படிப்பதற்கு ஏற்றவள் அல்ல. பேசாமல் வீட்டில்போய் ஏதேனும் ஒரு வேலையைப்பார்” என்று கோபப்படும் ஆசிரியர்கள் ஒருபுறம். 

“நான் மட்டும்தான் படிக்காத முட்டாளாக இருக்கிறேன். என்னைப்பற்றி ஊரில் என்ன நினைப்பார்கள்?” என எண்ணும்போது சில மாணவ, மாணவிகளுக்கு அவமானம் அதிகமாகும். 

“உன்னைப் படிக்க வைப்பதற்குப் பதில் பேசாமல் விவசாய வேலைக்கு அனுப்பியிருக்கலாம், நீ பெயில் ஆகிவிட்டாய். இனி வீட்டோடு இருந்துவிடு பள்ளிக்கு போக வேண்டாம்” - என படிப்புக்கு பெற்றோரே தடைபோடும் சூழ்நிலையும் உண்டு. 

இப்படி - ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் மனநிலைகள் இருக்கும்போது இளைய சமுதாய கல்வி வளர்ச்சி நிச்சயமாகப் பாதிக்கத்தான் செய்யும். சில மாணவ, மாணவிகள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இயலாமல் தடுமாறுவார்கள். இதனால் பாடத்தில் நாட்டம் குறையும். பாடத்தில் நாட்டம் குறைந்ததும் இவர்கள் பள்ளித் தேர்வுகளில் தோல்வி அடைவதற்குக்கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

இதனால்தான் தமிழக அரசு சமீபத்தில் ஒரு அரசு ஆணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசு ஆணையில் - “6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது. 

இந்தச் சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசணைக் குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை) எந்த மாணவரையும் “பெயில்” ஆக்கக் கூடாது. படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது. 

தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக்கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது. எந்த மாணவரையும் உடல்ரிதியாகவோ, மனரிதியாகவோ காயப்படுத்தக்கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன. 

தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”. 

தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை தூண்டுமா? தூண்டாதா? என்றுகூட சந்தேகத்தை உருவாக்குகிறது. 

ஏனென்றால் “நான் படித்தாலும் படிக்காவிட்டாலும் ‘பாஸ்’ ஆகிவிடுவேன் என்ற எண்ணத்தில் 8ம் வகுப்புவரை முறைப்படி படிப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவன் அல்லது மாணவி இருந்துவிட்டால் அவர்களால் எப்படி 9ம் வகுப்பில் கவனம் செலுத்தி படிக்க இயலும். 8ம் வகுப்புவரை எல்லா மாணவர்களையும் கண்டிப்பாக பாஸ் ஆக்கிவிட்டுவிட்டால் எதிர்காலத்தில் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கேள்விகள் உருவாகத்தான் செய்கின்றன. 

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவனை 6ம் வகுப்பில் ஃபெயில் ஆக்கியதை எதிர்த்து அவனது பெற்றோர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்தப்பள்ளி மாணவனை பாஸ் ஆக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி, அதே பள்ளியில் அந்த மாணவனை மீண்டும் படிக்க வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துவிட்டது. 

பள்ளிக்கு ஒழுங்காக வருகை தராமலும், படிப்பில் அதிக ஆர்வம் காட்டாமலும், அதிக மதிப்பெண்கள் பெறாமலும் இருப்பதனால்தான் பல பள்ளிகள் மாணவ, மாணவிகளை பெயில் ஆக்கிவருகிறார்கள். இருந்தாலும்கூட இன்று மாணவ, மாணவிகளுக்கு ஆதரவாகவே சட்டம் செயல்பட்டு வருகிறது. 

மாணவ, மாணவிகள் அனைவரிடமும் அறிவு (Knowledge), திறமைகள் (Skills) மற்றும் மனப்பாங்கு (Mindset) ஆகியவை ஒரே சீராகத்தான் இருக்கின்றன. இருந்தபோதும் ஒரு சிலரிடம் “Mindset” எனப்படும் மனநிலை எதிர்பார்த்த அளவில் அமைவதில்லை. அந்த “மனநிலை” தெளிவாக இருந்தால்தான் ஒரு மாணவன் அல்லது மாணவியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக வடிவம் பெறும். இப்படி நல்ல மனநிலை இல்லாவிட்டால் நல்ல மாற்றம் வாழ்க்கையில் ஏற்படாமல் பிரச்சினைகள் வாழ்க்கையில் உருவாகும். 

எனவே படிக்கின்ற காலத்தில் நல்ல மனநிலையை உருவாக்குவதற்கு நல்ல பயிற்சியை மெற்கொள்ள வேண்டும். பள்ளியில் பெறப்படும் சரியான பயிற்சிதான் இளைய உள்ளங்களை சிறந்தவர்களாக மாற்றும்.          

நல்ல மனநிலையை பாதிக்கின்ற வகையில் கோபம், பயம், எரிச்சல், ஆத்திரம், அவசரம் போன்ற சில காரணிகள் அடித்தளமாக அமைந்து விடுகின்றன. இதனால் கூர்மையாய் இருக்க வேண்டிய ஐம்புலன்களான மெய், வாய், கண், காது, மூக்கு, போன்றவைகள் மூலம் கண்டறியப்படும் உணர்வுகள் (Emotions) சரியான அமைவதில்லை. சீராக சிந்தித்து ஒழுங்காக படித்து, நேரான பாதையில் பயணம் செய்ய விரும்பும் இளைஞர்கள் தடைக்கற்களையெல்லாம் படி கற்களாக மாற்றுவதற்கு மன வலிமை (Mental Strength) பெற்றிருக்க வேண்டும். நல்ல மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே நினைத்ததை பெறுகின்ற அளவுக்கு மனநிறைவோடு செயல்பட முடியும். 

மனநிலை சீராக இல்லாததால் பல்வேறு பிரச்சினைகள் இளம் மாணவ, மாணவிகளிடம் உருவாகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகேயுள்ள ஒரு பள்ளியில் மாணவர்களில் சிலர் செல்போன்களில் ஆபாச படங்களை பார்ப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து மாணவர்களிடம் செல்போன் இருக்கிறதா? என ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அந்த பள்ளியில் படிக்கும் விஷ்ணு பிரியன் மாணவரிடம் சிகரெட் லைட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிகரெட் பிடிக்கும் பழக்கம் விஷ்ணு பிரியனிடம் உள்ளதாக நினைத்த ஆசிரியர்கள் அவனுக்கு தண்டனை வழங்கினர்கள். இதனால் மனமுடைந்த விஷ்ணு பிரியன் வீட்டில் இருந்த மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு இறந்துபோனான். 

சிலநேரங்களில் விளையாட்டுக்கூட வினையாகிபோய்விடுகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியில் படித்த மாணவர் இசக்கி செல்வம். சிறந்த கபடி வீரர். கபடி விளையாட்டில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு அணியினர் சண்டையிட்டுக்கொண்டார்கள். முடிவில் இசக்கி செல்வம் சரமாரியாக வெட்டப்பட்டு, உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் களக்காடு என்னும் ஊரில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி இராமலெட்சுமி. இவருடைய பள்ளி ஆசிரியர் அவளது அப்பாவை நேரில் வந்து மதிப்பெண் பட்டியலில் கையெழுத்திட அழைத்துவரச் சொன்னார். இராமலெட்சுமியின் தந்தை “எனக்கு வேலை இருக்கிறது. நீ பள்ளிக்குப் போ. நான் பின்பு வருகிறேன்” என தனது மகளிடம் கூறினார். இதனால் தனது ஊரிலுள்ள ஒரு தோட்டத்திற்கு மண்எண்ணெயை எடுத்துச் சென்று தனது உடலில் தீ வைத்துக்கொண்டு இறந்துபோனாள் அந்தச் சிறுமி.   

இப்படிப்பட்ட சம்பவங்களெல்லாம் மாறுபட்ட மனநிலையோடு கல்வி பயிலுவதால் ஏற்படும் விபரிதங்களாகும். 

படிக்கின்ற காலத்தில் நல்ல மனநிலையை உருவாக்குவதற்கு மாணவ, மாணவிகள் சிறந்த மாணவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். பிரச்சினை வரும்போதெல்லாம் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கலாம். மனதுக்கு பிடித்த ஆசிரியர்களிடம் மனம்விட்டு பேசலாம். உறவுக்காரர்களில் உண்மையான அன்பு உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சி செய்யலாம். ஓய்வு நேரங்களில் நூலகத்திற்குச் சென்று நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். செய்தித்தாள்களில் வரும் நல்ல செய்திகளை கண்டு குறிப்பெடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கலாம். தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட பயிலரங்குகளில் பங்கு பெறுவதன்மூலம் நல்ல மனநிலையை மாணவ, மாணவிகள் எளிதில் உருவாக்கிக் கொள்ளலாம்.   

பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் மற்றவர்கள் போற்றும் வகையில் நல்ல சிந்தனைகளை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஏமாற்றங்களாகிவிடும்.    

Post a Comment

புதியது பழையவை

Sports News