தினமணி நாளிதழில் நெல்லை கவிநேசன் எழுதிய நூலின் கருத்துக்கள்

தினமணி நாளிதழில் 
நெல்லை கவிநேசன் 
எழுதிய நூலின் கருத்துக்கள்

தினமணி நாளிதழ் 14.01.2020 அன்று வெளிவந்த இதழில் நெல்லை கவிநேசன் எழுதிய வெற்றி பெறுவது எப்படி? என்ற தன்னம்பிக்கை நூலில் இருந்து சில பகுதிகளை வெளியிட்டுள்ளது. அந்தப் பகுதி கீழே இடம்பெறுகிறது.

வெற்றி பெறுவது எப்படி?

புத்தகத்தைப்பற்றி…

வாழ்க்கை ஓர் அதிசயம். அதில் பல இரகசியங்கள் புதைந்திருக்கின்றன. வாழ்க்கை ஓர் அற்புதம். அதில் நல்லின்பங்களும், வெற்றிகளும் நிறைந்திருக்கின்றன. புரிந்துகொண்டவர்கள் பலன் பெறுகிறார்கள். தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டவர்கள் தெளிவுப் பெறுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை சுலபமாகிறது. எந்த விஷயத்தையும் எளிதாகக் கையாளக்கூடிய மனப்பக்குவம் அவர்களுக்கு வாய்த்துவிடுகிறது. 

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், எல்லோருமா வெற்றி பெற்றுவிடுகிறார்கள். ‘வெற்றி பெறுவது எப்படி?’ என்னும் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்பவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றிகளை அறுவடை செய்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில், வெற்றிக்கான பாதையில் நம்மை வழிநடத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் சரியான வழிகாட்டி கிடைப்பது அரிது. அத்தகையோரை நம் கண்முன்னால் காண்பது அரிது. ஆனால், காலத்தின் கனிவாய் -அப்படிப்பட்ட ஓர் ஆற்றல்மிக்க வழிகாட்டியாக, இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கிடைத்திருக்கும் ஞான விருட்சம்தான் நெல்லை கவிநேசன் அவர்கள். 

இந்த ஞான விருட்சம் சொரிந்து கொண்டிருக்கும் ஞானப் பூக்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் தற்போது நமது கைகளில் தவழ்கின்ற “வெற்றி பெறுவது எப்படி?” என்னும் இந்நூல். ‘படித்தால் மட்டும் போதுமா?’ என்னும் கேள்விக்கணை முதலாய், ‘பணிவுதரும் பெருமை’ என்னும் முத்தாய்ப்புடன் மொத்தம் 19 அத்தியாயங்கள். அறிவார்ந்தவை;  ஆழமிக்கவை; ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடக்கின்ற நதியைப்போல் கருத்துச் செல்வங்களை உங்களுக்குள் கொண்டு சேர்க்க வல்லவை. 
 
வாசிப்போரின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்ற ஞானக் கதிர்களாய் ஒவ்வொரு அத்தியாயமும் உயிர்த்துடிப்புடன் திகழ்வதை நான் கண்டு ரசித்தேன்; உண்டு களித்தேன். பிரச்சினைகளின் வேர்கள் அடையாளங் காட்டப்படுவது மட்டுமல்ல; அவற்றை அடியோடு கிள்ளி எறிந்து வாழ்வின் முன்னேற்றத்தைக் காண்பதற்கான வழிமுறைகள் எளிய நடையில் சொல்லப்பட்டிருப்பது நெல்லை கவிநேசன் அவர்களின் கைவண்ணச் சிறப்பு. 
 
தேவையற்ற ஒப்பீடுகள் ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவிற்குத் தகர்த்துவிடக்கூடியவை என்பதைத் தெளிவுபடுத்தி, வெற்றி வாழ்விற்கு நேராய் வாசகர்களை ஆற்றுப்படுத்துகின்ற அத்தியாயம் ‘தாழ்வு மனப்பான்மையின் தாயகம்’. வெற்றி பெற்றவர்களிடம் இருக்கும் சிறப்புத் திறமைகள்போன்று தங்களிடம் சிறப்பான திறமைகள் இல்லையென்றால், அந்தத் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுதான் விவேகமான செயல் என்று நூலாசிரியர் அழுத்தமாகச் சொல்வதற்குக் காரணம், அதுதான் சத்தியம். 
 
குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன், அதிக மதிப்பெண் வாங்கியவனைப் பார்த்து அங்கலாய்க்கிறான். பணமில்லாதவன் பணக்காரனைப் பார்த்து ஏங்குகின்றான். நான்கு தலைமுறைக்குச் சொத்துக்களைக் கொண்டவன் நிம்மதிக்காக அலைகின்றான். கிடைப்பது என்ன? வருத்தங்களும் வேதனைகளும்தான். எனவே, நமக்கு வாழ்வைப் பற்றிய தெளிவு அவசியம். தன்னைப் பற்றிய தாழ்வான மதிப்பீடுகளை ஒருவன் தூக்கி எறிந்தால்தான் தலைநிமிர்ந்து வாழ முடியும். 
 
மனிதர்களில் இரண்டு பிரிவினர். நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உலக வளர்ச்சிக்காக செயல்படுகிறவர்கள் ஒரு பிரிவினர். வெளித் தோற்றங்களைப் பார்த்து, ஒப்பீடுசெய்து தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்பவர்கள் மற்றொரு பிரிவினர் என்று சொன்ன ஜென் குருவின் கருத்தை ‘தோற்றம் தரும் மாற்றம்’ என்னும் அத்தியாயத்தில் பொருத்தமாகக் கையாளும் நூலாசிரியரின் நுண்மான் நுழைபுலம் பாராட்டுதற்குரியது. 
 
பணிவும், மனிதர்மேல் பிரியமும் இல்லாதவர்கள், வாழ்வில் நிலைத்த புகழைப் பெற முடியாது. அதற்காகவே ஒரு தனி அத்தியாயம் ‘பணிவு தரும் பெருமை’. ‘உங்களில் யாருக்கும் ஒன்றும் தெரியாது. நான் மட்டும்தான் எல்லாம் தெரிந்தவன்’ என்று மார்தட்டுவதுதான் ஒருவன் வீணாய்ப் போவதற்கான அறிகுறியாக மாறுகிறது என்று நெல்லை கவிநேசன் அவர்கள் நயமாகக் குறிப்பிடுவதில் உண்மையின் ஒளியும் இருக்கிறது; உயர்விற்கான வழியும் இருக்கிறது. 
 
மனிதன் காலில் மனிதன் விழுவது தன்மானத்திற்கு இழுக்குதான். எனினும் வாழ்வின் மதிப்பீடுகளை உய்த்துணர்ந்த ஞானமாமனிதர்களின் காலில் விழுந்து வணங்குவதுதான் ஞானம் பெறுவதற்கான வழி என்னும் ஆசிரியரின் கருத்தையும் சிரந்தாழ்ந்து ஏற்கத்தானே வேண்டும். ஏனெனில், எந்த ஒன்றையும் ஆய்ந்துணர்ந்து வழங்குவதில் கைதேர்ந்தவர் என் அருமை நண்பர் நெல்லை கவிநேசன் அவர்கள். 
 
முத்துமணிகள்போல் எத்தனை எத்தனை கருத்துக் கனிகள். ஞானச் சூரியனின் ஒளிக்கதிர்கள்போல் நூலின் பக்கங்கள்தோறும் எத்தனை எத்தனை சிந்தனைக் கீற்றுகள். தனிமனித மேம்பாட்டிற்காக-ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்காக நெல்லை கவிநேசன் அவர்கள் அயராது மேற்கொள்கின்ற முயற்சிகளின் அடையாளம்தான் அவர்தம் படைப்பாக்கங்கள். வாழ்வில் வெற்றிகளைப் பெறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூலில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. படிக்க படிக்க சிந்தை செம்மையுறும்; வாழ்க்கை மேன்மை பெறும். இது ஒரு ஞானப் பயிற்சி; அற்புதமான முயற்சி. 
 
வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியராக மட்டுமன்றி, நடமாடும் சிந்தனைக் கலைக்கூடமாகவும், திகழ்கின்ற என் அன்பு நண்பர் நெல்லை கவிநேசன் அவர்களின் தோட்டத்தில் இன்னும் ஆயிரமாயிரம் பூக்கள் மலரட்டும்! சமூகம்  சீர்பெற அவர்தம் எழுத்துப்பணி தொடர்ந்து சிறக்கட்டும்!

(நூல் அணிந்துரையில் கவிஞர்.தியாரூ அவர்கள்)

விலை:ருபாய்.50/-

Post a Comment

புதியது பழையவை

Sports News