நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்-11
‘தற்கொலை பிரச்சனைக்குத் தீர்வு அல்ல’
தமிழகத்திலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் “திறன் வளர்க்கும் பயிற்சிப் பட்டறை” (Workshop) நடத்திக் கொண்டிருந்தேன். அது மாணவிகள் மட்டும் படிக்கும் கல்லூரி. அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் “பகுத்தாய்வு செய்யும் திறன்” (Analytical Skill) வளர்க்கும் முறைகள் பற்றி விவரித்துவிட்டு அவர்களுக்கு ஒரு பயிற்சியை வழங்கினேன்.
அந்தப் பயிற்சி இதுதான்.
“இந்த பயிற்சியில் கலந்துகொள்ளும் உங்களில் யார் யாருக்கெல்லாம் தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் உண்டு?” என்று கேட்டேன்.
எல்லா மாணவிகளுமே செய்தித்தாள் படிக்கும் பழக்கம் தங்களுக்கு இருப்பதை தெரிவித்தார்கள்.
“இன்று நீங்கள் செய்தித்தாளில் வாசித்த செய்திகளில் உங்கள் மனதைப் பாதித்த செய்து எது?” என்று மீண்டும் கேட்டேன்.
மாணவிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பதில்களைச் சொன்னார்கள். ஒருசில மாணவிகள் அன்றைய செய்தித்தாளில் வெளிவந்த ஒரு மாணவியின் தற்கொலையைப்பற்றிய செய்திதான் தங்களைப் பாதித்த செய்தி என்பதை அழுத்தமாகச் சொன்னார்கள்.
அந்த செய்தி இதுதான்.
சென்னையைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்தாள். அவளுக்கு வயது 13. சுமார் 10 நாட்களாக அம்மை நோயினால் பாதிக்கப்பட்டாள். ‘மருத்துவ விடுப்பு’ எடுத்தபின்னர் நோயிலிருந்து குணமானபின்பு மீண்டும் வகுப்புக்கு வந்தாள். அப்போதுதான் தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளை அந்த மாணவியால் சிறப்பாக எழுத இயலவில்லை.
இதனால் - தேர்வு நேரத்தில் “கையேடு” (Guide) ஒன்றைப் பார்த்து தேர்வு எழுதினாள். அப்போது ஆசிரியை தேன்மொழியை கையோடு பிடித்தார். புகார் செய்தார். மற்ற மாணவ, மாணவிகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானாள் அந்த மாணவி.
தேர்வில் தான் பார்த்து எழுதியபோது தனது ஆசிரியை கண்டுபிடித்து விட்டதை தனது அக்காவிடம் கூறியிருக்கிறாள். அதற்கு அவளின் அக்கா “இதற்கு நீ கவலைப்படாதே. உனது உடல்நலக் குறைவு காரணமாகத்தானே நீ தேர்வில் காப்பிடியத்தாய். இந்த வி‘யத்தையும் பெரிதுபடுத்தாமல் நீ நல்லப்படியாக நடந்துகொள்” என்று அவளது அக்கா ஆறுதல் சொன்னாள். இந்த சம்பவம் பற்றி எதையும் தனது பெற்றோரிடம் அந்த மாணவி தெரிவிக்கவில்லை.
மனதில்போட்டு அழுத்திக்கொண்டு மறுநாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டாள், அந்த மாணவி. இதனால் அவளின் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேன்மொழியை காப்பி அடித்ததாக புகார்கூறிய ஆசிரியையை பணி நீக்கம் (Suspend) செய்யவேண்டும் என்றும், உடனே கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
13 வயது நிரம்பிய அந்த மாணவியின் தாய் நிலைகுலைந்து போனாள்.
இதுதான் அந்த மாணவிகளை பாதித்த சம்பவம்.
“இந்த சம்பவத்தை செய்தியாகப்படித்த பல மாணவிகள் தங்கள் மனதில் இ;நத சம்பவம் நீங்காத இடம் பெற்றுவிட்டது” என்று சொன்னார்கள். “இந்தச் செய்தியிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அந்த மாணவிகளிடம் கேட்டேன்.
அதற்கு விதவிதமான பதில்களை மாணவிகள் தந்தார்கள்.
அந்த பதில்கள் இவைதான்.
1. தேர்வை எப்படி நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு விதிமுறைகளை பள்ளி நிர்வாகம் வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளின்படிதான் ஆசிரியர்கள் செயல்பட முடியும். பள்ளி விதிமுறைகளை மீறும் மாணவ, மாணவிகளை இனம்கண்டு அவர்களைப்பற்றி தலைமை ஆசிரியரிடம் தகவல் அளிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. அந்தக் கடமையைத்தான் இந்த ஆசிரியை செய்திருக்கிறார். இதில் ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை.
2. வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்று வழக்கமாக முதலிடத்தில் தேர்ச்சி பெறும் மாணவிக்கு இந்த ‘விபரித ஆசை’ தேவையில்லை. ஏதோ தவறு நடந்துவிட்டது என்று எண்ணி தான் செய்த தவறை உணர்ந்து திருந்த முயற்சி செய்திருக்கலாம். தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள்தான் கிடைக்கும் என்று எண்ணியதால் அடுத்துவரும் தேர்வுகளில் காப்பியடித்துதான் மதிப்பெண்களை உயர்ந்த வேண்டும் என்பது அவசியமில்லை. இங்கு தான் தவறு நடத்திருக்கிறது.
3. “தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால்தான் படிக்கவில்லை. கையேட்டைப்பார்த்து எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று விளக்கம் கொடுத்து ஆசிரியர் அல்லது பொறுப்பாளர்களிடம் தனது நிலையை விளக்கி அந்த மாணவி மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
4. தற்கொலைதான் முடிவு என்ற நிலைக்கு எந்த பெண்ணும் வரவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கிறது. தலைமை ஆசிரியரிடம் முறையிடலாம் பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தைகூறி, ஆலோசனை கேட்கலாம். தன்னுடன்படிக்கும் தோழிகளிடம்கூறி பிரச்சினையைத் தீர்க்க வழிகள் கேட்கலாம்.
5. இந்த சம்பவம் மன அழுத்தத்தால் (Stress) ஏற்பட்ட பிரச்சினையாகும். மன அழுத்தத்தை நீக்குவதற்கு பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடலாம். உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற சின்னஞ்சிறு பயிற்சிகள்கூட மிகப்பெரிய மன நிறைவை நிச்சயம் வழங்கும்.
-இப்படி பல்வேறு கருத்துக்களை மாணவிகள் அந்தப் பயிற்சியில் பகிர்ந்துகொண்டார்கள்.
ஒரு மாணவியின் “திடீர் மரணம்” ஈடுபட்ட முடியாத ஒரு இழப்பாக ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் தோன்றினாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனிமேல் தோன்றாமல் இருக்கவேண்டும் என அந்தக் கல்லூரி மாணவிகள் தெளிவாக விளக்கிப்பேசினார்கள்.
கல்லூரி மாணவிகளில் சிலர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? என்பதை உடனே தெரிந்துகொள்ளும் அளவுக்கு மன பக்குவம் பெற்றிருப்பார்கள். அதனால் சரியான தீர்வுகளை அந்த கல்லூரி மாணவிகள் தெரிவித்தார்கள்.
ஆனால் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் எதிர்பாராத பிரச்சினைகள் வந்ததும் திக்குமுக்காடிப் போகிறார்கள். அந்தப் பிரச்சினைகளை சரியான முறையில் எதிர்நோக்கும் திறனை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். பின்னர் உயிரை மாய்த்துக்கொள்ளும் விபரித முடிவை எடுத்துக்விடுகிறார்கள். “விபரித முடிவுகளினால் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட விபரித முடிவுகளால் அவர்களுக்கு வேண்டுமானால் பிரச்சினை முடிந்திருக்கலாம், ஆனால் அதற்குப்பின்னால் அடுக்கடுக்காய் எத்தனையோ பிரச்சினைகள் உருவாகி விடுகின்றன. மாணவியின் தற்கொலை சம்பவத்தால் ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி ஊர்மக்கள் சாலை மறியல் செய்தார்கள். கண்ணாக எண்ணி வளர்த்த பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் உருவாகிவிட்டது. பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இத்தனை சிக்கல்களும் அந்த மாணவியின் மரணத்திற்குப்பின் உருவான பிரச்சினைகள் அல்லவா?
இன்று எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியும். தீவிரமாக ஆலோசனை செய்தால் நல்ல முடிவு கிடைக்கும். தனக்குப் பிரச்சினை தீர்க்க மரணம் ஒன்றுதான் வழி என்று எண்ணி தற்கொலை முடிவு மேற்கொள்பவர்கள் - இதனால் ஏற்படும் சோகங்களையும், பிரச்சினைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விரும்புபவர்கள் அந்தப் பிரச்சினையை முறைப்படி அணுக வேண்டும்.
அந்த அணுகுமுறைகள் இவைதான்.
1. பிரச்சினை என்ன? என்பதை முதலில் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
2. பிரச்சினையின் வடிவங்களையும், அந்தப் பிரச்சினை ஏற்படுத்தி பாதிப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
3. பிரச்சினைக்கு காரணமானவர்கள் யார்யார்? அதோடு தொடர்புடையவர்கள் யார்யார்? என்பதை இனம்கண்டுகொள்ள வேண்டும்.
4. பிரச்சினை எங்கு? எப்போது? நிகழ்ந்தது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
5. பிரச்சினையின் மூலகாரணத்தையும், இதர காரணங்களையும் இனம்கண்டு கொள்ள வேண்டும்.
6. பிரச்சினையின் காரணங்களை கண்டுபிடித்தபின் அந்த காரணங்களின் அம்சங்களை அலசி ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.
7. பிரச்சினையை எந்தெந்த வழிகளில் தீர்க்கலாம்? என தீர்வுகளை பட்டியலிட வேண்டும்.
8. எத்தனை மாற்று வழித் தீர்வுகள் இருக்கிறதோ அத்தனை தீர்வுகளையும் (Alternative Causes of Actions) கண்டுபிடிக்க வேண்டும்.
9. தீர்வுகளினுடைய நன்மை, தீமைகளை (Merits and Demerits) கண்டறிதல் வேண்டும்.
10. எந்தத் தீர்வை (Solution) தேர்ந்தெடுத்தால் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்குமோ அந்தத் தீர்வை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுதான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறை என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய உள்ளங்கள் தெரிந்துகொண்டால் விபரித முடிவுகளிலிருந்து விலகிக் கொள்ளலாம். விருப்பமான மகிழ்வான வாழ்வை வாழ பழகிக்கொள்ளலாம்.
கருத்துரையிடுக