மாற்று ஏற்பாடுகள்

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்-13

மாற்று ஏற்பாடுகள்

பிளஸ் 2 முடிவுகள் வெளியாகிவிட்டது. 

மாணவ - மாணவிகள் பலருக்கு கொண்டாட்டம். 

வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையும் பிளஸ் 2 தேர்வு, பலருக்கு வாழ்க்கையில் உயர்வை தந்திருக்கிறது. ஆனால் அதேவேளையில் சிலருக்கு அதிர்ச்சியைத் தந்து அவர்களது வாழ்க்கையை திருப்பிப் போட்டிருக்கிறது. 

இளம்வயதில் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விதவிதமாய் கனவுகள் மனதில் பூக்கத்தான் செய்யும். 

“நான் டாக்டர் ஆகவேண்டும்.” 

“நான் இன்ஜினியர் ஆக வேண்டும்”. 

“நான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற வேண்டும்” - என விதவிதமாய் ஆசைகள் அவர்களது மனதில் உருவாகும்.  

ஆடிட்டராக வேண்டும், மேனேஜராக வேண்டும், நர்ஸ் பணியில் சேர வேண்டும் - எனவும் ஆசைக்கனவுகளோடு பல்வேறு மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் ஆசைகளெல்லாம் நிறைவேறுகிறதா? இல்லையா? என்பது அந்த மாணவ - மாணவிகளுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும். 

இந்த ஆண்டு (2011) பிளஸ் 2 தேர்வு முடிவு பல மாணவ - மாணவிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் 2,720 பேரும், இயற்பியல் பாடத்தில் 646 பேரும், வேதியியல் பாடத்தில் 1,243 பேரும், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். உயிரியல் பாடத்தில் 615 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இப்படி சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. 
      
ஒருபுறம் - பிளஸ் 2 தேர்வின் வெற்றி பலருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. 
        
ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அரவிந்த்குமாருக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததால் தஞ்சை, ஆலக்குடி இடையே தென்றல் நகர் என்ற இடத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது தந்தை கும்பகோணத்தில் பொறுப்பான பதவியில் உள்ளார். இருந்தபோதும் “பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற முடியவில்லையே” என்ற ஏக்கத்தில் அரவிந்த்குமார் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார். 17 வயதான அரவிந்தகுமார் அவசரமாய் இந்த முடிவு எடுப்பதற்கு காரணம் என்ன?  

“நினைத்ததெல்லாம் எனக்கு கிடைக்க வேண்டும்” - என இன்றைய இளைய உள்ளங்களில் பலர் எண்ணுகிறார்கள். தாங்கள் எதிர்பார்த்ததெல்லாம் நிறைவேறாவிட்டால் உடனே சோர்ந்துபோய்விடுகிறார்கள். வெற்றி வந்தால் துள்ளிக் குதிக்கிறார்கள். தோல்வி வந்துவிட்டால் துவண்டு போய்விடுகிறார்கள். வெற்றி பெற்றதும் அதிகமாய் மகிழ்வதும், தோல்வியை சந்திக்கும்போது சோகமாய்த் திரிவதும் நல்ல வாழ்க்கைக்கு அழகல்ல.  

தேர்வில் வெற்றி பெறமுடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் இளம் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு வருகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண தேர்வு முடிவுகளைக்கூட ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலை கொண்டவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத முடிவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். 

தோல்விகள் ஏற்படும்போது அதனை எளிதாக ஏற்றுக்கொள்ளாத மனநிலை கொண்டவர்கள் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கிறார்கள். தன்னுடன் படிக்கும் மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மற்றவர்களைவிட தனக்குக் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்துவிட்டால் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை கொண்டவர்கள்தான் இந்த முடிவுக்கு வருகிறார்கள். மதிப்பெண்கள் குறைவாக எடுத்தால் தங்கள் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தினாலும் சில இளைஞர்கள் தவறானப் பாதையை தேர்ந்தெடுத்து உயிரை போக்கிக்கொள்கிறார்கள். 

பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தவர்கள் ஏற்கனவே மனதளவில் காயப்பட்டிருப்பார்கள். பதற்றத்தோடு காணப்படுவார்கள். தனது எதிர்காலத்தை நினைத்து பயப்படுவார்கள். இரவில்கூட தூக்கமில்லாமல் பதற்ற உணர்வுடன் இருப்பார்கள். எந்தவொரு செயலிலும் அக்கறை காட்டாமல் கவனமின்றி செயல்படுவார்கள். அவர்களது முகம் இறுக்கமாக காணப்படும். ஒரு சொல்லமுடியாத சோகத்தை விழுங்கியவர்கள்போல அவர்களது பார்வை வெறிச்சென்று காணப்படும். பேசுவதை குறைத்துக்கொண்டு மவுன விரதத்தை கடைபிடிப்பார்கள். 

“அடுத்ததாக என்ன செய்யவேண்டும்?, எங்கு படிக்கலாம்?, என்ன படிக்கலாம்?, என்று மனதிற்குள் கேள்வி எழுப்பி அதற்கு விடைகாண முடியாமல் திண்டாடுவார்கள். ஏற்கனவே குழம்பிப்போயிருக்கும் இவர்களை சந்திப்பவர்கள், இவர்களின் மனக்காயத்திற்கு மருந்துபோடாமல் அந்தக் காயத்தில் வெந்நீர் ஊற்றுவார்கள். 

“இந்தக்காலத்தில் பிளஸ்-2 தேர்வில் நல்ல மார்க் எடுக்கவில்லை என்றால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். நீ 1200க்கு 750 மார்க் - தான் எடுத்திருக்கிறாய். இது ரொம்ப குறைவு” 

“நீ எடுத்த மார்க்குக்கு ஒரு காலேஜிலேயும் இடம்கிடைக்காது”

“நீ படிச்சுதான் நம்ம குடும்பத்தை கரையேற்றுவாய் என்று நம்பியிருந்தேன். நீ நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்” 

“என்னால்தான் ஒரு டாக்டராகவோ, இன்ஜினியராகவோ முடியவில்லை. உன்மூலம் என் கனவை நனவாக்க நினைத்தேன். என் நினைப்பில் நீ மண்ணைப் போட்டுவிட்டாய்”. 

-இப்படி எத்தனையோ வார்த்தைகள் காயத்தின்மீது கத்தியாய் விழும். மனக்காயத்திற்கு மருந்து போடுவதற்குப்பதில், தீயின் தூறல்களை வார்த்தைகளாக்குவது இளைய உள்ளங்களை கருகச் செய்துவிடும் அல்லவா! 

மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலும் அவன் நம் பிள்ளதானே! என்று எண்ணி, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தவர்களையும் உற்சாகப்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.    

அது ஒரு திடீர் விபத்து. 

சாலையைக் கடந்துவிடலாம் என்று சென்ற கல்லூரி மாணவன் பார்த்தீபன்மீது வேகமாக வந்த ஒரு வேன் திடீரென்று மோதியது. பார்த்தீபன் தலையில் அடிபட்டு ரத்தம் ஓடத்தொடங்கியது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துவந்து சிகிச்சை செய்தார்கள். 

“இவனுக்கு கொஞ்சம்கூட மூளை கிடையாது. கவனக் குறைவாகப்போய் காருக்குள் விழுந்திருக்கானே” என்றார் அப்பா. 

“டேய் நீ பார்த்து நடந்துபோயிருந்தால் இப்படி அடிபட்டிருக்காது” என்று நண்பர்கள்கூட ஆலோசனை என்ற பெயரில் குத்திக்காட்டினார்கள். 
         
“ஏற்கனவே இவன் படிப்புக்கு ரொம்ப செலவுசெய்துவிட்டோம். போதாதக் குறைக்கு ஆஸ்பத்திரி செலவு வேற வந்துட்டுது” - மருத்துவமனையிலும் வரவு செலவுக் கணக்கை வாசித்தான் அண்ணன். 

விபத்தினால் உருவான காயம் தந்த வருத்தங்களைவிட, உறவினர்கள் உருவாக்கிய வார்த்தைக் காயங்கள் பார்த்திபனை நிலைகுலைய வைத்தது. 

விபத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்துபோடும் ஒரு டாக்டரால்தான் அந்தக் காயத்தை குணமாக்க முடியும். 

இதைப்போலவே பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுப்பது என்பது ஒரு விபத்துதான். அந்த விபத்தில் காயம் பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்விதத்தில் அனைவரும் செயல்பட வேண்டும். 

“ராஜேஸ்வரிஞ்ஞ் நீ மார்க் குறைவாக எடுத்ததினால் வருத்தப்படாதே. உன்னை உன் மார்க்குக்கு தகுந்தபடி நான் மேற்படிப்பு படிக்க வைப்பேன்”. 

“நாங்களெல்லாம் உன்னோடு இருக்கிறோம் நீ ஏன் கவலைப்படுகிறாய். அடுத்தமுறை நன்றாக முயற்சிசெய். வெற்றி நிச்சயம்”.

“தோல்வி என்பது ஒரு பின்னடைவு. அந்தத் தோல்வியிலிருந்து நாம் பாடங்களை படித்துக்கொள்ள வேண்டும்”. 

“எந்தச்சூழலிலும் நீ கவலைப்படக்கூடாது. உனது மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி” 

- என பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரும் “ஆதரவுக்குரல்” எழுப்பி மதிப்பெண் குறைந்த மாணவ - மாணவிகளை உற்சாகப்படுத்த வேண்டும்    

உற்சாக வார்த்தைகள்தான் இளம் உள்ளங்களை இனிமைப்படுத்தும். அவர்கள் இதயத்தில் உற்சாகத்தை உருவாக்கி செயல்பட வைக்கும்.  

முன்பெல்லாம் - ஒரு பஸ் “பிரேக் டவுன்” ஆகிவிட்டால் பஸ்ஸில் இருக்கின்ற பயணிகள் அனைவரும் பஸ்சைவிட்டு கிழே இறங்கிவிடுவார்கள். பின்னர், அந்த பஸ் எப்போது பழுதுபார்க்கப்பட்டு சரிசெய்யப்படுகிறதோ அதுவரை அந்த பஸ்ஸின் அருகே காத்திருப்பார்கள். ‘பஸ்’ சீராக்கப்பட்டபின்னர் அந்த பஸ்ஸில் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்வார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரு பஸ் ‘பிரேக் டவுன்’ ஆகிவிட்டால் அடுத்த நிமிடமே அடுத்த பஸ்ஸில் ஏறி பயணத்தை நிறைவுசெய்வதற்கு எல்லோரும் தயாராகிவிடுகிறார்கள்.

இதைப்போலத்தான் - பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் உடனே அடுத்தகட்ட நடவடிக்கைகள்பற்றி சிந்திக்க வேண்டும். மாற்று ஏற்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு சிறந்த முறையில் செயல்படுவதற்கு பழகிக்கொள்ளவேண்டும். “ஒன்று கிடைக்கவில்லையென்றால் இன்னொன்று இருக்கிறது” என்ற மனநிலையோடு செயல்பட்டவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு காணப்படுவார்கள். 

“விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்பது பெரியோர்கள் வழங்கிய அறிவுரை ஆகும். விரும்பிய மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால் கிடைத்த மதிப்பெண்களுக்குஏற்ப, மேற்படிப்பைத் திட்டமிட்டுக்கொண்டால் சிறந்த நிலையை அடையலாம். அப்போதுதான் வாழ்க்கை வசந்தமாகும். 

Post a Comment

புதியது பழையவை

Sports News