கொரோனா வீழியவே! கொரோனா வீழியவே!
  *****   *****   *****   *****
                         கவிஞர் தியாரூ

   தேசந் தோறும் திரியும் கொடிய
      கொரோனா வைரஸ் வீழியவே!
   நாச மோசம் எதுவும் இன்றி
      நன்றாய் உலகம் வாழியவே!

   சீறிப் பாய்ந்து வந்தா லென்ன
      சிங்கம் போலே கர்ஜனைசெய்!
   மாறிப் போகும் இன்னல் யாவும்
      மனிதம் போற்றி அர்ச்சனைசெய்!

   இருமல் தும்மல் காய்ச்சல் இருப்பின்
      இன்றே பெறுவீர் மருத்துவமே!
   வருமுன் தடுப்போம் உறுதி எடுப்போம்
      அதுதான் வாழ்வின் மகத்துவமே!

   கைகால் சுத்தம் கவனம் நித்தம்
      கொரோனா நம்மை நெருங்காதே!
   வையம் எங்கும் நலமே தங்கும்
      வீணாய் கலங்கி வெதும்பாதே!

   கொரோனா நோயை வென்று முடிக்கும்
      கட்டுக் குலையா பாரதமே!
   வராது கொடிய வாதை நோய்கள்
      வாழ்வு செழிக்கும் தாயகமே!

   பூமி தன்னில் பெரிய சொர்க்கம்
      புகழிற் சிறந்த பாரதமே!
   நோயும் பேயும் நம்மைத் தொடாது
      நலன்கள் கொழிக்கும் தாயகமே!

   ஆற்றல் அறிவு ஆக்கம் ஊக்கம்
      அனைத்தும் விளங்கும் பாரதமே!
   ஏற்றம் எழுச்சி எல்லாம் துலங்கும்
      எழிலார் நாடு நம்நிலமே!

   எங்கும் வளமை எதிலும் வலிமை
      ஓங்கி நிற்கும் பாரதமே!
   பொங்கும் அழகில் பொலியும் இன்பம்
      புதுமை திகழும் தாயகமே!

   மக்கள் வாழ்வு மலர்ந்து செழிக்கும்
      மேன்மை மிகுந்த பாரதமே!
   துக்கம் துயரம் துரோகம் இல்லை
      தர்மம் தழைக்கும் தாயகமே!

Post a Comment

புதியது பழையவை

Sports News