இரண்டாம் நாள் திருவிழா.............
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்
பன்னிரண்டு நாட்கள் மதுரை மக்களை மட்டுமல்லாது,உலக மக்களே வியந்து பார்க்கும் அளவிற்கு அற்புதமாக கொண்டாடப்பட்டுவரும் அன்னை மீனாட்சியின் பிரம்மோத்சவ திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் சிறப்பாக காலை 7 மணி சுமாருக்கு அம்மை அப்பன் இருவரும் நகர்வலம கிளம்பிவிடுவர்.
நான்கு மாசி வீதிகள் வழியாக வலம் வந்து,ஆலயத்தை அடைவர்.ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பிரிவினராக தெய்வங்களுக்குச் சிறப்பு செய்வது வழக்கம்.இந்தவகையில் இரண்டாம் நாளான இன்றைய மண்டகப்படி கோவிலுக்குள் இருக்கும் முத்துராமைய்யர் மண்டகப்படியாக அமைகிறது. காலையில் அம்மையும் அப்பனும் நகர்வலம் வரும் வாகனம் தங்கச்சப்பரம். கணபதி, சுப்ரமணியர், பரிவாரங்களோடு மேளதாளங்கள் இசைக்க இவர்கள் நகர்வலம் வருவர். இதேபோல், மாலையிலும் இவர்களின் நகர் வலம் ஆரம்பமாகும்.இரண்டாம் நாள் இவர்கள் சுற்றிவரும் வீதிகள் நான்கு மாசிவீதிகளாகும். ஆலயத்திலிருந்து மாலையில் கிளம்பி இரவுவரை நகர்வலம் வந்து பின் ஆலயத்தை வந்தடைவர். மாலை புறப்பாட்டின்போது இவர்களின் வாகனம் சிறப்புடையதாக அமையும்.
சாதாரண நிலையில் மக்களைக்காண தெய்வங்கள் நகர்வலம் வரலாம். ஆனால், வாகனங்களில் நகர்வலம் வருவது மிகவும் சிறப்புடையதாக அமையும். உலகில் எல்லா உயிர்களின் படைப்பு,காப்பு,அழிப்பு என்ற தொழில்கள் தெய்வங்களால் நடை பெறுகின்றது என்பது நாமறிந்த ஒன்று. அவ்வாறு இருக்க, இந்த வாகனங்களுக்கு என்ற ஒருசிறப்பு இருப்பது அதனினும் மேலானது. அம்மையும்,அப்பனும் சோமாஸ்கந்தருடன் எழுந்தருளும் வாகனம் பூதவாகனமாகும்.இந்த பூதவாகனம் விருத்திக்கிரம சங்கார கோலம் என்று கூறுவர். ஈசனே பூதகணங்களின் தலைவனாக விளங்குபவர். பூதகணங்களின் தலைவன் தன்வழியாக வந்த பூதகணத்தின்மீது ஆரோகணித்து வருவது மிகவும் அற்புதமாக இருக்கும். உலக உயிர்களின் தலைவன் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களைக் காக்கும் வண்ணம் மக்களை காண வருகிறார்.அப்படிப்பட்ட நிலையில் இறைவன் உலக உயிர்களை உய்விக்கும்பொருட்டு இத்தகைய அருட்கோலத்தில் விளங்குவதாகக் கூறுவர்.
"மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ".....
-என்று அற்புதமாக இந்த பூத வாகனத்தின் சிறப்புபற்றி விளக்குகின்றது சுந்தரர் தேவாரம். இது இவ்வாறு இருக்க ,அன்னை அமர்ந்து நகர்வலம் வரும் வாகனமோ அன்னவாகனமாகும்.இந்த வாகனம் பல்வகையில் சிறப்பாக புராணங்களில் கூறப்படுகின்றது.
அன்னத்தின் செயல்பாடு வியத்தகு ஒன்று.பாலையும் நீரையும் சேர்த்துவைத்தால் நீர் நீக்கி பாலைமட்டுமே அருந்தும்அற்புதம் நிகழ்த்தும் பறவை இது.மேலும் இதன் உடலோ தூய வெண்மை நிறமுடையது.உலகைக் காக்கும் அன்னை மீனாட்சி, ஆலயத்தில் இருக்கும் கோலமோ தனது வலதுகாலை முன் வைத்திருப்பதாக இருக்கும்.தன் பக்தர்களின் குறை நீக்க ,அழைத்தவுடன் ஓடிவரும் நிலையில் அம்பிகை இருப்பது சிறப்பாக உள்ளது.உலகில் வாழும் உயிர்கள் தங்களின் பார்வையில் சிறப்பாக வாழ வழி செய்யும் தாயாக,தெய்வமாக, கருணையின் வடிவமாக,அன்னை மீனாட்சி அன்ன வாகனத்தில் இரண்டாம்நாள் நகர்வலம் வருகிறாள்.
"மதிமலி புரிசை மாடக்கூடற் பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிறகு
அன்னம் பயில் பொழில் ஆலவாய்" என இறையனார் திருமுகப்பாசுரம் செப்புகின்றது.இந்தவகையில் இரண்டாம் நாள் திருவிழா தூலம், சூக்குமம் என்னும் இருவகை யாக்கையும் நீக்கிக்கொள்ளும் பயனைக் குறிப்பதாக அமைகிறது.இத்தகைய நிலையில் இரண்டாம் நாள் திருநாள் சிறப்பாக முடிந்து, அம்மை அப்பன் தன் பரிவாரங்களோடு ஆலயத்தை அடைய,அங்கு தீப ஆராதனை செய்து முடிக்க, இரண்டாம் நாள் திருவிழா இனிதே முடிவடைகின்றது.
நெஞ்சம் நிறைந்த நிகழ்வு-3
மதுரை சித்திரைத் திருவிழா
3ம்நாள் நிகழ்ச்சி.(2019)
கருத்துரையிடுக