ஐந்தாம் நாள் திருவிழா.............
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்
.
நாளுக்கு நாள் மக்களின் மனதில் உற்சாகம் கூடும் வகையில் திருவிழா மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் புதுப் புது வண்ண பட்டாடைகள், வாகனம்,பூ மாலை அலங்காரத்துடன் தெய்வங்கள் நகர்வலம் வருவது அற்புதம்.
ஐந்தாம் நாள் காலை வழக்கம்போல் ஆராதனைகள் முடிந்து, சுமார் 9 மணியளவில் தெய்வங்கள் புறப்பாடாகி ,மாசி வீதிகள் சுற்றிவரும்.இந்த நகர்வலம் ,வடக்கு மாசி வீதியில் உள்ள இராமாயணச்சாவடியில் வைத்து மண்டகப்படி நடத்தப்படும்.இந்த மண்டபத்தில் முற்காலத்தில் இராமாயண உபன்யாசம் நடைபெறுவது வழக்கம்.அதனால், இந்த சாவடிக்கு இப் பெயர் வந்ததாகக் கூறுவர்.
இவ்வாறு தெய்வங்கள் வரும்போது தங்கச்சப்பரத்தில் அமர்ந்து ஆனந்தமாக வருவதைப் பார்க்கலாம். இவ்வாறு வந்த தெய்வங்கள் கோவிலில் இரவு 7.30. மணி சுமாருக்கு மீனாட்சி அம்மன் ஆலயத்திலுள்ள நாயக்கர் மண்டபத்தில் "வேடர்பரி லீலை "என்ற நிகழ்ச்சியினை நடத்துவர். இந்த அற்புத லீலையைக்காண மக்கள்ஆலயத்தில் அதிகமாகக்கூடி கண்டு ஆனந்தம் கொள்வர்.
இரவில் வழக்கம் போல் வடக்கு மாசி வீதி,கீழ மாசி வீதி வழியாக வலம் வரும் போது தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து வலம் வருவர்.இந்த நாளின் தத்துவத்தையும் ,அதன் பலனையும் பற்றி சற்று விளக்கமாகதெரிந்து கொள்வோம்.
ஐந்தாம் நாள் திருவிழா புலன்களின் வழியே செல்லும் ஐம்பொறிகளும், பஞ்ச அவத்தைகளும், பஞ்ச மலங்களும் தம் வலிமை குன்றிவிடுவதைக் குறிப்பதாக அமைகின்றது.ஐந்தாம் நாளின் இரவு ,அசுவ (குதிரை) வாகன ஆரோகணம். இந்தக் கோலம் சம்ஹாரக் கோலமாக அமைகின்றது. தர்ம,அர்த்த,காம, மோட்சங்களாகிய (அறம்,பொருள்,இன்பம்,வீடு) நான்கு கால்களையும்,கிரியை,ஞானம்எனும் இரண்டு காதுகளையும்,பரஞானம்,அபரஞானம் எனும் இரண்டு
கண்களையும், விதியாகிய முகத்தையும் நிடேதமாகிய வாலையும்,ஆகமங்கள் என்கின்ற ஆபரணங்களையும், மந்திரங்கள் எனும் பாதஸரத்தையும் ,கடிவாளம் எனும் பிரணவத்தையும், அண்ட கோடிகளாகிய முதுகையும்,உபநிடதங்களாகிய சேணத்தையும் கொண்ட வேதக் குதிரையில் இறைவன் ஆரோகணித்து சவாரி செய்கிறான் என்பதையும் உணர்த்துகின்றது.எனன அற்புதமான தத்துவமாக இது விளங்குகின்றது?. தங்கக்குதிரை,வேதக்குதிரை என்றும் அவற்றின் உறுப்புகளும் எவ்வாறு சிறப்பாகக் கூறப்பட்டிருக்கின்றது என்பதைக் காணுங்கள்.
குதிரை வாங்கி வருவதற்காக பாண்டியனிடம் பணம் பெற்றுச் சென்ற மாணிக்க வாசகர் ,திருப்பெருந்துறை சிவனிடம் அன்பு கொண்டு அங்கேயே தங்கி ,குதிரை வாங்கப் பெற்றுச் சென்ற பணத்தால் அங்கு ஈசன் குடிகொண்ட ஆலயத்திற்கு குடமுழுக்கு நடத்தினார்.கோபம் கொண்ட பாண்டியன்,அவரை சிறையில் அடைக்க, கணங்களைக் குதிரைகளாக்கி வந்தவரல்லவா ஈசன்.அப்படிப்பட்ட குதிரை, மேற் சொன்ன விதத்தில்தானே அமையும்..
"நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும் ...
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே"....
-என நாவுக்கரசரின் தேவாரப் பாடல் இயம்புகின்றது.அற்புதமாக தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்த தெய்வங்கள் அம்மன் சந்நிதி வழியாக கோவிலுக்குள் வந்து சேர,அங்கு அவர்களுக்கு சோடச தீபாராதனை காட்டப்பட ,ஐந்தாம் நாள் திருவிழா இனிதே நிறைவடைகின்றது.
விழா தொடரும்.
கருத்துரையிடுக