ஆறாம் நாள் திருவிழா.............
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்
ஆனந்தமாக நாம் இப்போது ஆறாம் நாள் திருநாளைக்காண வந்துள்ளோம்."மக்களின் குறைபோக்க ,எட்டு திசைகளையும் சுற்றி வந்து,அருள் புரிய வந்த தெய்வங்கள் விரும்பியதை வழங்கும் "என இந்தப் பெருவிழா நமக்கு எடுத்துக் கூறுகின்றது.இந்தநாளில் விளக்கப்படும் தத்துவம்,மற்றும் வாகனம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.இத்தகைய சிறப்பு யாதென இனி காண்போம். ஆறாம் நாள் காலை சுமார் 7.30 மணிக்கு ஆராதனை முடிந்து, நகர்வலம் வரும் தெய்வங்கள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளையும் சுற்றி வந்து ஆலயத்தை அடைவர்.இன்றையதினம், ஆலயத்திற்குள் சிவகங்கை இராஜராஜன் மண்டகப்படியில் ஆராதனை நடக்கும்.மாலையில் ஆராதனை முடிந்து, ஆனந்தமாக மக்களைக்காண இவர்கள் ஆயத்தமாவார்கள்.
மாலை 6 மணி சுமாருக்கு ,யானை மஹால் முன்பு அருள்மிகு திருஞான சம்பந்த பெருமான் சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாற்றை தல ஓதுவாரால் கூறப்பட்டு, அதன்பின் தெய்வங்கள் திருவீதி உலாவிற்கு வருவர்.இந்தலீலை சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலையாக இறைவனால் ஞானசம்பந்த பெருமானைக்கொண்டு நிகழ்த்தப்படும் அற்புதம் இந்த புராணத்தில் விளக்கப்படுகின்றது. இதற்குப்பிறகு, தெய்வங்கள் ஆனந்தமாக நகர்வலம் வரத்தொடங்குவர்.இதைக்காண கண்கள் கோடிவேண்டும்.
ஆறாம் நாள், மாலை அம்மையப்பன் தங்க ரிஷப வாகனத்திலும்,அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்திலும் ஆரோகணித்து நகர்வலம் வருவர்.ரிஷபவாகனத்தின் சிறப்பை கொடியேற்றம் அன்றே விளக்கியுள்ளேன். இந்த வாகனத்தின் சிறப்பான தத்துவமும்,பலனும்இங்கு காணலாம் .
ரிஷப வாகனசேவையை மிக முக்கியமானதாக பக்தர்கள் கருதுவார்கள். பொதுவாக அடியவர்களுக்கு அருள்புரிய ,ஆண்டவன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வருவதாக புராணங்கள் கூறியதை நாம் அறிய முடிகிறது.அருள் பெற்ற ஆன்மா ரிஷபமாகும். இல்லையெனில் ,எப்போதும் இறைவனுடன் இருக்க இயலுமா? இந்த ரிஷபத்தின் நிறம் வெள்ளை.அதனிடத்தில் எந்தவித மாசும் இல்லை என்பதை உணர்த்துவதாக அதன்நிறம் அமைந்துள்ளது...........
ரிஷப வாகனத்தின் நான்கு கால்கள் மிகவும் சிறப்பானதாக விளக்கப்படுகிறது. சமம்,விசாரம்,சந்தோஷம்,சாதுங்கம், என்ற நான்கு அறங்களும் நான்கு கால்களாக அமைந்துள்ளன.
"மாசற்ற அறத்தின் வடிவமாக ஆன்மாக்களிடம் இறைவன் நிரந்தரமாக வந்து தங்குவான்" என இந்த ரிஷப வாகனம் வெளிப்படுத்தும் தர்மமாகும்.இது அனுக்கிரஹக் கோலமாக கருதப்படுகின்றது.இந்த ஆறாம்நாள் திருநாள் ஒரு அற்புதமான தத்துவத்தை நமக்கு விளக்குகின்றது.
1.ஆறாம் நாள் விழாவில் காமாதி ஆறும்(காம,க்ரோத,லோப, மோட்க்ஷ,மத,மச்சர)...
2. கலையாதி ஆறும்-----(காலம், நியதி,கல்,வித்தை,ஆகும்,புருடன், மாயை.).
3.பதமுத்தி ஆறும் (பதமுத்தி,பரமுத்தி, இருவகை மோட்க்ஷநிலை)
. 4.வினைக்குணம் ஆறும்(நல்வினை, தீவினை குணங்கள்).
-எனக்கூறப்படுவன ஒழித்தல் பொருட்டு நிகழ்கின்றது .இந்தத் திரு நாளையும் ,அதன் தத்துவத்தையும்,இறைவன் அமர்ந்து வரும் வாகனத்தையும்,
"பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்....
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் " .........
-என எம்பெருமானையும்,அவரின் அற்புத வாகனம் பற்றியும் ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் விளக்குகிறது...
ஆறாம்நாள் மிகச்சிறப்பாக நான்கு மாசி வீதிகளை தன் பரிவாரங்களுடன் சுற்றிவந்து,மீண்டும் ஆலயத்தை வந்தடைய,அங்கு தீப ஆராதனை நடத்தப்பட்டு,ஆறாம்நாள் திருநாள் இனிதே முடிவடைகிறது.. .....
பெருவிழா தொடரும்...
கருத்துரையிடுக