மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-4



மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-4


 நெஞ்சம் நிறைந்த நிகழ்வு-4 (2019)


மூன்றாம் நாள் திருவிழா.............

புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்
      
        தன் பக்தர்களின் துன்பம் துடைத்து அவர்களை மகிழ்விக்க ,அம்மை அப்பன் வலம் வருவதைக்காண  மக்கள் வெள்ளம் அனுதினமும் அதிகமாக வருகை புரிய ஆரம்பித்தனர்.அம்மையப்பனின் புறப்பாடு தொடங்குமுன்,  ஆலயத்தில் அவர்களுக்கு தீப ஆராதனை செய்யப்படுகின்றது. பின் ஆலயத்திலிருந்து  அம்மன் சன்னிதி வழியாக அவர்கள் புறப்பட்டு வரும்போது, முதல் வேட்டு முழக்கம் ஆரம்பமாகின்றது.வேட்டுக்களின் சப்தம் கொண்டு  மக்கள் ,தெய்வங்கள் நகர்வலமாக  எவ்விடத்தில் வருகின்றார்கள் என்பதை அறிந்துகொண்டு, தெய்வங்களை ஏதேனும் ஓரிடத்தில் கண்குளிர கண்டு மகிழலாம் என்று தங்களின் குடும்பத்துடன் வீதிஉலா கண்டுஆனந்தம் கொள்கின்றனர். 
             மூன்றாம் நாள் காலை அம்மையப்பருக்கு வாகனமாகத் தங்கச்சப்பரம்  இருக்கும். இன்றையநாளில் காலை 7 மணிக்கு தெய்வங்களின்  புறப்பாடு ஆலயத்திலிருந்து தொடங்கும்.கோவிலுக்குள் இருக்கும் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் காலை எழுந்தருளுவார்கள்.பின் நான்கு மாசி வீதி  சுற்றிஆலயம் வந்தடைவார்கள். 
         இரவு நகர்வலம் வருவதற்கு 7 மணிக்கு ஆலயம் விட்டு புறப்பட்டு நான்கு மாசி வீதிகள்  வழியாக நகர்வலம் வருவார்கள். இவ்வாறு அம்மையப்பன்  நகர்வலம் வரும்போது மேலமாசி வீதியிலுள்ள முருகன் கோவிலருகில் தேவதூதர்களாக அலங்கரிக்கப்பட்ட உருவ பொம்மைகள் ஊஞ்சலாடி, மேலிருந்து கீழிறங்கி, தெய்வங்களுக்கு மலர்தூவி மாலை அணிவிப்பது மிகவும் ரம்யமாக இருக்கும்.இந்த நிகழ்ச்சியைக்காண அந்த இடத்தில் அதிகமாக பக்தர்கள் கூடுவது வழக்கம்.
                   இன்றையதினம் அம்மையப்பர்  அமர்ந்துவரும்  வாகனம் கைலாசபருவதம்.மூன்றாம் நாள் இரவு இராவணனது உடம்பின் மேலுள்ள கைலாசபருவதத்தில் இறைவன் எழுந்தருளுவதாக அமைகிறது. 
                 இராவணனோ ஆணவமலம்  முதிர்ந்த ஜீவாத்மா. அகங்காரத்தின் உச்சத்தில் விளங்குபவன். அதனால் எத்தகைய இழிச் செயலையும் செய்யக் கூசாதவன்.அவன் தனது திமிரால் கைலாச பர்வதத்தை  தூக்கி எடுக்க முயல்கிறான்.இறையனார் அவனது ஆணவத்தை  அழிக்க எண்ணி தனது கால் விரலை ஊன்ற,அவனது கை கைலாயத்தின் அடியில் சிக்குகிறது. அவன் அலறித்துடித்து ,"இஃது யாரால் நடக்கின்றது?" என்பதை அறிகிறான்.
                பின் ,தன் கை நரம்பால் வீணை உண்டாக்கி சாமகானம் பாடுகின்றான்.அவனது இசையைக் கேட்டு,இறைவன் மகிழ்ந்து,அவனுக்கு அருள் புரிந்து விடுவிக்கின்றார். இது "ஸ்திதி "அல்லது  "காப்பாற்றுதலைக்" குறிக்கும். இதிலிருந்து இறைவனுக்குத் தீங்கு செய்தவர்களும் அடங்கிநின்று வழிபடுவாறாயின் அவனுக்கும் இறைவன் அருள்புரிவான்  என்பதும் இதன் மூலம் இறையனார் பெருந்தன்மையும்  நன்கு விளங்குகின்றது.

"பொன்னின் வெண் திருநீறு புனைந்தென.....  
மன்னிவாழ்  கயிலைத் திருமா மலை."  எனக் கைலாச  பர்வத வாகனச் சிறப்பை பெரியபுராணம்  செப்புகின்றது.
                  அன்னை அமர்ந்து வலம்வரும் வாகனமோ காமதேனு. இஃது அற்புதமான வாகனம். தேவர் உலகில் கேட்டதெல்லாம்  வழங்கும் கற்பக விருட்சமும், காமதேனுவும் இந்திரனிடம் இருக்கும் ஒன்று. இப்படிப்பட்ட அற்புத சிறப்பு வாய்ந்த காமதேனு அம்மனுக்கு வாகனம்.
"இழைஇடை  நுழையா வண்ணம் இடைஇறவீங்கு கொங்கைக்.................
தழைகதிர்  மணியும், தெய்வ தருக்களும் கவர்ந்து மீண்டாள். " -என காமதேனுபற்றி பரஞ்சோதியார் தனது திருவிளையாடற் புராணத்தில் கூறுகின்றார்.
            மூன்றாம் நாள் திருவிழா மூவினையும்,முப்புத்தியும், முக்குணமும்,மும்மலமும்,முப்பிறப்பும், முக்குற்றமும்,முப்பற்றும் முதலானவற்றை ஒழித்தற் பொருட்டாக அமைகிறது. என்னே இறைவனின் கருணை. அற்புதமாக மூன்றாம் நாள் திருநாளின் இறை ஊர்வலம்ஆலயம் வந்து சேர,அங்கு அவர்களுக்கு தீப ஆராதணை காண்பிக்க, மூன்றாம்நாள் திருவிழா இனிதே முடிவடைகின்றது.



சித்திரைப் பெருவிழா..
நான்காம் நாள் திருநாள்   
     புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்
      அனுதினமும் அம்மையப்பனை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என பக்தர்கள் ஆர்வமுடன் இருப்பர்.எந்த இடத்தில் அம்மையப்பனை தரிசிக்க முடியுமோ, அவ்விடங்களில் கண்டு தரிசிப்பதை மதுரை வாழ் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
     திருநாளோ 12 நாட்கள் நடந்தாலும் அனுதினமும் தெய்வங்களை அலங்கார வாகனங்களில்  மக்கள்கண்டு மகிழ்வதை நாம் காணமுடியும்.நான்காம் நாள் திருநாளில் தெய்வங்களின் நகர்வலம் சற்றே மாறுபடும்.காலை 9 மணி சுமாருக்கு தீப ஆராதனை முடிந்து தெய்வங்கள் நகர்வலம் கிளம்பி சின்னக்கடைத் தெரு,தெற்கு வாசல் வழியாக வில்லாபுரம் சென்றுவிடும்.அங்கு அழகப்ப பிள்ளை -தானப்ப பிள்ளை வகையறா வில்லாபுரத்து  பாவற்காய் மண்டகப்படி யில் எழுந்தருளி மக்களை மகிழ்விப்பர். 
      அன்று காலை வில்லாபுரம் வந்த தெய்வங்களை அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்லாது பிற பகுதி மக்களும் சென்று சிறப்பாக வழிபாடு செய்வர்......
      மாலை சுமார் 6 மணிஅளவில் தீப ஆராதனை முடிந்து தெற்கு வாசல் சின்னக்கடை தெருவழியாக சித்திரை வீதி வலம் வந்து, ஆலயத்திற்குள்  வந்து சேருவர். அங்கு சோடஜ உபசாரங்கள் நடை பெறும்.
      இன்றையதினம் தெய்வங்களின் நகர்வலம் மாசிவீதி வழியாகச் செல்லாமல்  சித்திரை வீதி வழியாக ஆலயம் வந்தடையும். காலை ,மாலை இரு வேளையும் அம்மையப்பன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு,தங்கப்பல்லக்கு வாகனமாக அமைகிறது.
      திருவிழா உணர்த்தும் தத்துவம் மற்றும் பலன்களை இனி காண்போம்.
       நான்காம் நாள் திருநாள் நாற்கரணம், நால்வகைத் தோற்றம் என்னும் இவற்றை நீக்குதல் பொருட்டு நிகழ்வதாக அமைகின்றது.இப்போது இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
      "நாற்கரணம் "எனப்படுவது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என அறியப்படும்.தமிழ் விடு தூதில் இது சிறப்பாக
 "நல்லேரி  னாற்செய்யு ணாற்கரணத் தேர் பூட்டிச் சொல்லே ருழவர்  தொகுத்தீண்டி" ....என்று ஆசிரியர் கூறும் விதம்  அற்புதம்.
       நால் வகைத் தோற்றம் என்பது, உலகில் உள்ள ஜீவராசிகள் கோடிக்கணக்கானவை.அதாவது,  1. அண்டஜம்-- முட்டையில் தோன்றுவன,(பாம்பு,பறவை.) 2. சுவேதஜம்.--வியர்வையில் தோன்றுவன. (பேன், கிருமி.) 3. உற்பீஜம் --- விதை,வேர்,கிழங்கு, மூலம் தோன்றும் ( மரம்,செடி, கொடி).4. சராயுஜம்--கருப்பையில் தோன்றுவன.( விலங்கு, மனிதன்) எனப் பகுத்துக் கூறியுள்ளனர்.   
           அகங்காரம் நீக்கி,இறைவனால் எந்த நிலையில் படைக்கப்பட்டிருக்கிறோமோ அதை அறிந்து,இவற்றிற்கு மூல காரணமாக விளங்கும் இறைவனின் திருவடியை பற்றுதலே சாலச் சிறந்தது.
இந்த நிலையில் நான்காம் நாள் திருநாள் மிகச் சிறப்பாக நடந்தேறி மக்களைத் தன்னிலை அறியச் செய்கிறது.....  

விழா தொடரும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News