மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-2

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா.


பிரம்மோத்ஸவம்......
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்

{திருமதி. புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன், மதுரை தமிழாசிரியர்  .ஆன்மீக சொற்பொழிவாளர் ,மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா நிகழ்வுகள் தினமும் தொகுத்து வழங்கி வருகிறார் }


மீனாட்சி ஆலயத்தில் நடக்கும் புகழ்பெற்ற சித்திரைப் பெருவிழா பற்றி கூற இருக்கிறேன்."பிரம்மோத்சவம்" என்னும் பெருவிழா ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் சிறப்பாக நடைபெறும்.அனுதினமும் ஆலயத்தினுள் இருக்கும் தெய்வங்களை வணங்கிவந்த நமக்கு ஆனந்தமாக நகர்வலம்வந்து நம்மை மகிழ்விக்குமுகமாக ஆலயத்தில் உறையும் தெய்வங்கள் உற்சவர்களாக நகர்வலம் வந்து அருள்புரிவர்.
 இது...."கலங்கவேண்டாம் . உங்களைக் காக்க நாங்கள் இருக்கின்றோம் " எனக்ககூறுமுகமாக அமைகின்றது.மதுரை மாநகரின் அமைப்பே சிறப்பு. தமிழ் மாதங்களின் பெயர்களை தன்னகத்தே கொண்டு வீதிகள் அமைந்திருப்பது அதனினும்  சிறப்பு.
சித்திரை,ஆடி,ஆவணி,மாசி என வீதிகளுக்குப் பெயரிட்டு ,அந்தந்த மாதங்களில் அந்த வீதிகளில் இறைவனை வழிபடுமுகமாக நகர்வலம் செய்விப்பர்.பிரம்மோத்சவகாலத்தில் மாசி வீதிகள் வழியாக அம்மை,அப்பன்,கணபதி,சுப்ரமணியன்,மற்றும் தன் பரிவாரங்களோடு புறப்பாடு செய்து நம்மை மகிழ்விப்பர்.

 சித்திரைப் பெருவிழா.....
 முதல்நாள் நகர் வலமாக அம்மையும்,அப்பனும் வருவதே ஆனந்தமாக இருக்கும். குரு பகவானாக  விளங்கும் இறைவன் மரத்தடியில் அம்மை,அப்பனாக சோமாஸ்கந்தருடன் கற்பகவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருக்கும் கோலம்.இவரின் இந்தக்கோலம் "விருத்திக்கிரம சிருஷ்டிக் கோலம்" என்பர். மரத்தில் உள்ள கிளைகளும்,இலைகளும் தத்துவங்களாகவும்,அவனால் படைக்கப்பட்ட உயிரினங்களாகவும் இருப்பதை விளக்குமுகமாக அமைகின்றது.
உலகில் உள்ள படைப்புக்கு ஆதாரமாக உள்ள வேர்போல, தான் விளங்குவதை உணர்த்துமுகமாக இறைவன் இக்கோலத்தில்  விளங்குகின்றான்.இறைவனின் இடபாகத்தில் வீற்றிருப்பவள் இங்கு "பிரியாவிடை" என அழைக்கப்படுகிறாள். இறைவனை எப்போதும் பிரியாதிருக்குமுகமாக அவனின் இட பாகத்தைப் பெற்றவள்.
இவர்களின் ஆனந்தம், இடையில் வீற்றிருக்கும் சோமாஸ்கந்தர். துன்பத்தைத் துடைத்து,இன்பம் வழங்க வெள்ளி சிம்ம வாகனத்தில் அன்னை முழக்கமிட்டு வருவதுபோல் அற்புதமாக மீனாட்சி, தடாதகை பிராட்டியாக  வலம்வந்து  மக்களுக்கு ஆறுதல் அளிக்க அப்பனுடன் கிளம்பிவிட்டாள்.
அம்பாளின் சிம்மவாகனம் ஒரு சிறப்பு மிகுந்தது.தேவி பாகவதத்தில் அரக்கர்களை அழிக்க,பிரம்மா,விஷ்ணு,சிவன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை அன்னைக்குக் கொடுப்பர். போருக்குச்செல்ல தேவிக்குத்  தேர்வேண்டுமே.தேருக்கு பதிலாக இவளுக்கு சிங்கத்தை வாகனமாக பர்வதராஜன் கொடுக்கின்றான்.
கம்பீரம் ,கர்ஜனை,வேகம்ஆகசிறந்த ஒன்றைத் தனது வாகனமாகக் கொண்டு,விளங்கும் அன்னையாக  அம்பிகை நகர்வலம் வருகின்றாள். "  
     "உருத்திரனை  உமாபதியை உலகானானை..
 .    உத்தமனை  நித்திலத்தை...............
  கற்பகத்தைக்  கண்ணாரக் கண்டுய்ந்தேனே"....என்ற நாவுக்கரசரின் கூற்றுப்படி இறைவன் வாகனம் அமைந்துள்ளது.".....
"அரசுஇறை கொள்ளும் செம்பொன் 
அத்தாணி இருக்கை எய்தி....."
என்ற பரஞ்சோதியாரின் பாடலுக்கு ஏற்ப அன்னை ஊர்வலமாக நகர்வலம் கிளம்பிவிட்டாள். ......
சித்திரைத் திருவிழா தொடரும்.

நெஞ்சம் நிறைந்த நிகழ்வு-2
மதுரை சித்திரைத் திருவிழா 
இரண்டாம் நாள் நிகழ்ச்சி.(2019)

                 

Post a Comment

புதியது பழையவை

Sports News