ஆனந்தம் தரும் ஆத்திசூடி!-4
புலவர் டாக்டர். வை.சங்கர லிங்கம்
'சிதையா நெஞ்சு கொள்'(எண் 27)
போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறப்பு முதல் இறுதி வரை போராட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது
பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தால் ஜெயிப்பதுதான் வாழ்க்கை.
பூந்தோட்டத்தில் தினம் தினம் புதுப் புது மலர்கள் பூப்பது உண்டு. ஆனால் அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை.
அது போலத்தான், வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும், போவதும்.
சரியான நேர்மையான வாழ்க்கை பயணப் பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதைதான்.
இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும்தான் நிறைந்து இருக்கும். வாழ்க்கையில்
போராட்டங்கள் இடை விடாது தொடரும் போது மனம் தளர்வது இயல்பானதுதான். அப்போது வாழ்க்கை கசக்க கூடும். உறவுகள் கூட கசக்கும்.
எதற்காக இவ்வளவு துன்பங்களுடன் வாழ வேண்டும் என்று கூட மனம் கேள்வி எழுப்பும். எல்லோரும் நம்மை கை விட்டது போல் தோன்றும். இதுதான் நீங்கள் சிந்திக்க வேண்டிய காலம்.
இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான்.
வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தி கொள்ள ஓவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது.
"போராட்டமே இல்லாத வாழ்க்கை இவ்வுலகில் இல்லை" என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
வாழ்க்கையில் துன்பங்கள் வரும் போது ,அவற்றை எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் மனத் தெளிவு உதவும். "துன்பங்கள் வாழ்க்கையில் வரலாம்; ஆனால் துன்பமே வாழ்க்கை என்றால்? "என்று ஒரு வசனத்தை இன்று எல்லோருமே பேசுகிறார்கள். உண்மை அதுவல்ல.
துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு அவர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விடுகிறது.
இந்த மாதிரியான கடினமான சமயங்களில், நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மனதை சோர்ந்து போக விடக் கூடாது.
"எது நடந்தாலும் பரவாயில்லை "என்ற மன உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு இருக்கிற பிரச்சினை என்னவென்றால் ,"மற்றவர்கள் முன் நம் கவுரவம் குறைந்து விடுமோ ?"என்ற பயம், "அவமானம் ஏற்பட்டு விடுமோ ?"என்ற பயம்!. இவற்றை விட்டு ஒழியுங்கள்.வாழ்க்கை எளிதாகி விடும்.
உங்கள் வாழ்க்கைப் பாதையை நல்ல சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள செய்கை மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும்.
ஒரு மாவட்டத்திற்கு மற்றொரு மாவட்டத்திற்கும் என்ன வேற்றுமை? நடுவில் ஒரு எல்லை இருக்கிறது . அது போல், மனிதனுக்கும், விலங்குக்கும் இடையில் இட்ட எல்லைக்கல் "நல்ல நினைவு ". கள்ளமில்லாத மனம் ,வலிமையான சிந்தனை இல்லை என்றால் வாழ்க்கை வசமாகுமா? ஆகாது.
திருவொற்றியூரில் நெல்லிக்காய் ஒரு மகான் இருந்தார் .மாலையிலே இறைவன் தியாகப் பெருமான் வணங்கும் பொருட்டு மக்கள் போகும்போது ,அம்மகான் "குதிரை போகின்றது" " எருமை போகின்றது" "நாய் போகின்றது" " புலி போகின்றது " "நரி போகின்றது" " பூனை போகின்றது" " பெருச்சாளி போகின்றது" என்று கூறுவாராம்.
ராமலிங்க அடிகளார் போனால் மட்டும்" நல்ல மனமுடைய மனிதன் போகின்றான்" என்பாராம். ஆகவே, "மனிதப் பண்பு உடையவனே நல்ல மனிதன் உண்மையான மனிதன்" என்பதை உணர வேண்டும்.
கப்பல் வடிவமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல!
வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல!கடலில் புயலும் வீசும். தென்றலும் அடிக்கும்.இரண்டையும் கடந்து வாழ்க்கைப் பாதையில் வாழ வாருங்கள்! வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம்.
இதைத்தான் பாரதியார் "சிதையா நெஞ்சு கொள்" (எண்27) என்று புதிய ஆத்திசூடியில் கூறுகிறார்.
அடுத்த புதன்கிழமை(13.5.2020) சந்திப்போம்.
கருத்துரையிடுக