ஆனந்தம் தரும் ஆத்திசூடி -5

ஆனந்தம் தரும் ஆத்திசூடி-5
புலவர் டாக்டர். வை.சங்கர லிங்கம்.
மெல்லத் தெரிந்து சொல்.

ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மௌனம் சொல்லி விடும்.மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி  வெற்றி கண்டு இருக்கிறார்கள்.
"எப்போது பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும்" என்று தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.
ஆனால் அதைவிட, ''எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்து இருப்பது மிக அவசியம்.

புத்தர், அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்த அரச குமாரன். மிகவும் அழகாக இருந்தார். உடற்கட்டுடன் இருந்தார். கண்கள் ஒளியுடன் பிரகாசித்தன.
ஆனாலும், அரசன் மிகவும் கலங்கிப் போனான். 
காரணம் ,வாய் எப்போதும் மௌனத்திலேயே இருந்தது.
நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் முயன்று பார்த்துத் தோற்றுப் போனார்கள்.

"என் மகனின் வாய்ப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லையா? " என்று அரசன் புலம்பித் தீர்த்தான்.
இறுதியில், இளவரசனைப் பேச வைப்பவர் களுக்குப் பரிசு என அறிவித்தான்.

 நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

யாராலும் அரச குமாரனைப் பேச வைக்க முடிய வில்லை. அரசன் ஏங்கித் தவித்த படியே அவனது காலத்தைக் கடத்தினான்.
அரசகுமாரனுக்குத் தனிமை மிகவும் பிடிக்கும். அதுவும் காடுகளில் தன்னந்தனியே நடப்பது மிகவும் பிடிக்கும்.

வழக்கம்போல் அவன் காட்டில் தனியே அமர்ந்து வானத்தையும், பசுமையான மரங்களையும், அருவியின் துள்ளல் நடையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது வேட்டைக்காரர்கள் சிலர் மிருகங்களைத் தேடி ஒன்றும் கிடைக்காததால், வருத்தத்திலும்,, சோர்விலும் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது ஒரு ஜோடிக் குருவிகள்‘கீச்…கீச்…’எனச் சப்தமெழுப்பியபடி மகிழ்ச்சியுடன் படபடவென அங்கும் இங்கு மாகப் பறந்து விளையாடிக் கொண்டு இருந்தன. 

இதைப்பார்த்த  ஒரு வேடன்,  இரண்டு அம்புகளை எய்தான். இரண்டு குருவிகளும் அம்படிபட்டுத் தரையில் விழுந்து துடித்தன.

இதைக்கண்ட புத்தர், ஓடோடிப் போய் அவற்றைத் தமது கைகளில் தூக்கினார். அரசகுமாரனின் மனம் உருகியது.கண்களில் கண்ணீர் வழிந்தது. 

முதல் முறையாக அந்தப் பறவைகளைப்பார்த்து ‘நீங்கள் ஏன் பேசிக் கொண்டே பறந்தீர்கள்'என்று கேட்டார்.

இதுவரையிலும் பேசாமல் இருந்த அரசகுமாரன் பேசியதைக் கண்ட வேடர்களுக்கு ஒரே ஆனந்தம். ஓடிச் சென்று இந்தச் செய்தியை மன்னனிடம் கூறினர்.

மகிழ்ச்சியடைந்த மன்னன், அரசகுமாரன் வருகைக்காகக் காத்திருந்தான்.

பேசியதற்கான எந்த அறிகுறியும்  இல்லாமல் அரண்மனையினுள் தமது அறைக்கு  போய்விட்டார் அரச குமாரன்.

மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது.

"வேடர்கள் பொய் சொல்லி இருக்கிறார்கள் "என்று நினைத்து, பொய் சொன்ன வேடர்களின் தலையைச் சீவி விடும்படிக் கட்டளை இட்டார்.
அவர்களோ மன்னனிடம் கதறி அழுதார்கள். 

அங்கு வந்த அரச குமாரனை சென்று பார்த்தார்கள்.
'நீங்கள் பேசியது உண்மை! இது நமக்கு மட்டும்தான் தெரியும்.நீங்கள் வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால்தான்,எங்கள் தலை தப்பும், எங்கள் பிள்ளைகள் அனாதையாவது தடுக்கப்படும்' என்று கூறி அழுதார்கள்.

அவர்கள், மீது கருணை கொண்ட அரசகுமாரன், ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று மட்டும் கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார். இப்படிப் பேசியதை அரசர் கேட்டு விட்டதால் வேடர்களின் தலை தப்பியது.

பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது..நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க இயலாது.
ஆனால் தினமும், சிறிது நேரமாவது பேசாமல், மௌனமாக இருக்க முயற்சி செய்யலாம். அப்போது நமது மனம் மலரும் அதிசயத்தை உணரலாம்.

தேவையான சமயத்தில் தேவையானதை பேசுவதன் மூலம் மட்டுமே  மகத்தான காரியங்களை சாதிக்க முடியும்.  

இதைத் தான் பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் "மெல்லத் தெரிந்து சொல் (81) என்று கூறுகிறார்.

தொடரும்


Post a Comment

புதியது பழையவை

Sports News