மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-8



மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 
சித்திரை திருவிழா-8


எட்டாம் நாள் திருநாள்.

புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்



 ஒவ்வொருநாளும் தங்கள் இல்லங்களில் விழாக்கள் நடைபெறுவது போல் ஆனந்தம் கொள்ளும் மக்கள் இந்தத் திருநாள் காலத்தில் இதுவரை காத்திருந்து பார்க்க இருந்த அற்புத நிகழ்வை ஆலயத்தில் கண்டு மகிழ ஆலயம் நோக்கிச் செல்வர்.காரணம், இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம். சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை அம்பிகையின் ஆட்சி நடைபெறும். தாயின் திருவடிப் புகழ் பாடி, அவளின் அன்பும் ஆசியும்  பெற, அவள் பட்டம் ஏற்கும் அற்புத நிகழ்ச்சியைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் இந்தபட்டாபிஷேக நிகழ்வைக்காண ஆர்வமுடன் வருவர்.....
          காலை 10 மணி சுமாருக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கீழைச்சித்திரை வீதி,தெற்கு ஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக  மேலமாசி வீதி வந்த இவர்களின் நகர்வலம்  மீண்டும் ஆலயம் வந்து சேர பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆகிவிடும். இடைப்பட்ட காலத்தில், மேலமாசி வீதி,திருஞான சம்பந்தர் சுவாமிகளின் ஆதீனம் மண்டபகப்படியில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது சிறப்பு........
..            காலையில்  சபாநாயகர்  புறப்பாடாகி ,ஊடல் லீலை நடைபெறும். இரவு ,குறிப்பிட்ட நேரத்தில் அன்னைக்கு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெறும். அன்னை மீனாட்சிக்கு கிரீடம் சாற்றி,செங்கோல் கொடுக்கும் வைபவம் சிறப்பாக நடைபெறும்.
       திருக்கோவிலின் தக்கார் அவர்கள் அன்னை மீனாட்சியிடம் இருந்து செங்கோல் பெற்று,சகல விருதுகளுடனும் சுவாமி சந்நிதியின் இரண்டாம் பிரகாரம் சுற்றிவந்து, மீண்டும் அன்னையின் திருக்கரத்தில் செங்கோலை  சமர்ப்பிப்பார். இதைக்காணத்தான் அலைகடலென மக்கள் ஆலயத்தினுள் செல்வர்.
    இந்தக் காட்சியை ,
 " செழியர்பிரான் திருமகளாய்க், கலைபயின்று,
    முடிபுனைந்து,செங்கோல் ஓச்சி,.........
   செல்வம்  தழைவுஉறுதன் அரசுஅளித்த பெண்ணரசி
   அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்"..
                                ... எனத் திருவிளையாடற் புராணம் சிறப்பிக்கின்றது.
    இதன்பின், அம்மையப்பன் இருவருக்கும் தீபாராதனை காட்டப்பட்டு இரவு சுமார் 9 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து இருவரும் நான்கு மாசி வீதிகளைச்  சுற்றி வருவர்.
 சித்திரைமுதல் ஆவணிவரை அம்மனின் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.எட்டாம் நாள் உற்சவம் தன்வயத்தன் ஆதல் முதலிய கடவுட் குணங்கள் எட்டினையும் விளக்குதல் குறிப்புடையதாக அமைகின்றது.
      இத்தகைய சிறப்புவாய்ந்த எட்டாம் திருநாளான பட்டாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று,நகர்வலம்முடிந்து,ஆலயத்திற்கு வந்தவுடன்,அங்கு அவர்களுக்கு சோடச தீபாராதனை காட்டியபிறகு அன்றைய பட்டாபிஷேகத் திருவிழா இனிதாக முடிவடைகின்றது.

      திருவிழா தொடரும்....
  

நெஞ்சம் நிறைந்த நிகழ்வு-8
மதுரை சித்திரைத் திருவிழா 
8ம்நாள் நிகழ்ச்சி.(2018)



Post a Comment

புதியது பழையவை

Sports News