.
என்கையென நான் நினைக்கும்
தங்கையின் பொன் வயிற்றில்
மங்கையென உதித்தவளே,
மருமகளே!
உன் சிறுவுருவைக் கண்டவுடன்
கல்லும்கூட உருகிடுமே!- எம்
கவலைகளைக் களையவந்த
திருமகளே!!
ஏனிங்கு கண்களைச்
சிமிட்டி-நீ பொத்துகிறாய்,
நானிங்கு நிற்பதுனக்கு
வெட்கமா?
நானொன்றும் நின்போல
நிர்வாணம் இல்லைமா,
சிமினியாம் கண்திறந்து
விழியம்மா!
அல்லிப் பூப்போன்ற
ஒல்லியான விரல்களாலே
மூடி-நீ மறைத்துவைப்பது
என்னம்மா?
சொல்லிடத்தான் அதையோ,
மெல்லிய வாய்திறந்து,
வல்லியதாய் நீ-போடுகின்ற
சப்தமா?
மடியிலே உனைவைத்து
மகிழ்ச்சியாலே கொஞ்சையிலே,
மழையாகப் பொழிந்தாயே
என்னம்மா?
மாமன் தானுனக்கு
மறைப்பதற்கு என்னருக்கு?-அது
மழைநீரா? பன்னீரா?
சொல்லம்மா!
அன்றாடம் நீ-நனைக்கும்,
துணியெல்லாம் துவைப்பதற்கு-என்
தங்கை கரங்களுக்கு
பொறுக்குமா?
நம் நாட்டில் ஓடுகின்ற,
ஆறு, நதிகளிலே-அதற்கு
போதுமான தண்ணீரும்
இருக்குமா?
கடைதனிலே உடைவாங்க
கற்பனையைப் பணமாக,
நெஞ்சினிலே சுமந்துபோகும்
மாமான்மா!
உனக்கு சடைபோட முடிவேண்டி
கடைகடையாய் அலைந்தேனே,
எக்கடையில் அந்தமுடி
கிடைக்குமா?
கைகளில் உனைத் தூக்கி
நெஞ்சோடு நானணைத்து
கெட்டியான முத்தமொன்று
தரட்டுமா?
அது மாமன் உனக்குத்தரும்
மணி,முத்து எனநினைத்து
மகிழ்ச்சியாலே உந்தன்மனம்
திளைக்குமா?
உன்கை கால்களெல்லாம்
காது கழுத்தெல்லாம்,
பொன்னாய் பூட்டயெனக்கு
விருப்பம்மா!
என்பையைப் பார்க்கையிலே
அதுபொய்யாய்ப் போனதே!-இவ்
வையக வாழ்க்கையென்ன
வாழ்க்கைமா?
கண்ணீரை விற்பதற்கு
கடையொன்று இருக்குமென்றால்
என்னிடத்தில் நிறையச்சேரும்
செல்வம்மா!
கண்ணே! நீயுறங்கு
காலமொன்றும் போகவில்லை
பொன்னாக உன்மேனி
பூட்டலாம்!
பூலோக மங்கையென்ன?
மேலோக மங்கைகூட-அன்று
உன்னோடு போட்டியிட்டுத்
தோற்கலாம்!
தங்கை மகளேயிங்கு
களைப்பை மறந்துநன்கு
கண்களை மூடியே-நீ
தூங்கலாம்!
________
கருத்துரையிடுக