இலக்கிய இமயம்-'ஹைக்கூ' கவிஞர்.இரா ரவி


இலக்கிய இமயம் 
'ஹைக்கூ' கவிஞர்.இரா ரவி





இலக்கிய இமயமாக, கவிதையின் சிகரமாக ,சரித்திர நாயகனாக வலம் வருபவர் ஹைக்கூ கவிஞர். இரா. இரவி. தனது அற்புதமான இலக்கியப் பயணத்தில் முத்திரை பதித்த இவரை ,நெல்லைகவிநேசன் டாட் காம் சார்பில் சந்தித்தபோது..

உங்கள் படைப்பின் நோக்கம்?

       மூடநம்பிக்கையற்ற பகுத்தறிவுச் சமுதாயம் மலர வேண்டும் ; பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் ;  சாதி, மத சண்டைகள் ஒழிந்து சகோதரத்துவம் மலர வேண்டும். ;  என் படைப்பு, வாசகரை சிந்திக்கச் செய்து சீர்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் ;  ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைந்திட உதவும் 
விதமாக படைக்கின்றேன்.

ஹைக்கூ கவிதை தேர்ந்தெடுக்கக் காரணம் ?
       இயந்திரமயமான உலகில் நீண்ட நெடிய கவிதைகள் படிக்க மக்களுக்கு நேரமில்லை.  கவிதை வாசகர்கள் என்ற சிறிய வட்டத்தையும் தாண்டி எல்லோராலும் வாசிக்கப்படும் வடிவமாக, விரும்பிடும் வடிவமாக ஹைக்கூ இருக்கின்றது.  10 பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய கருத்தை மூன்றே வரிகளில் உணர்த்துவது ஹைக்கூ. அதனால் ஹைக்கூ கவிதையை தேர்ந்தெடுத்து தொடர்ந்து எழுதி வருகிறேன்.



தங்களிடம் இலக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்?
       தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், நடுவராக இருந்த பட்டிமன்றங்களில் பார்வையாளராகக் கலந்து கொண்டு, பட்டிமன்றம் பற்றிய எனது கருத்தை மடலாக அவருக்கு அனுப்பி வந்தேன்.  திடீரென ஒரு நாள் ஓரணியில் பட்டிமன்றம் பேசுங்கள் என்றார்.  பேசி வந்தேன்.  அவர் எழுதவும் ஊக்கம் தந்தார்கள்.  அவர் போலவே பேச்சு, எழுத்து என இரண்டு துறையிலும் முத்திரைப் பதிக்க வேண்டுமென்ற ஆவல் காரணமாக பேசியும், எழுதியும் வருகின்றேன்.
       முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நூலகள் படித்தேன்.  விமர்சனம் எழுதினேன்.  பாராட்டினார்கள்.  அவரது ‘படைப்புலகம்’, மதுரை, திருமலை மன்னர் கல்லூரியில் நடந்தது.  ஓர் அரங்கத்திற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு வந்தது.  எனது நூல்களுக்கு அணிந்துரை தந்து உதவினார்கள். 
       இந்த இருவருமே என்னுள் இலக்கியத் தாக்கதை ஏற்படுத்தி, என்னை வளர்த்தார்கள்.




தங்களது முதல் கவிதை மேடை?
       கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்கள், மாமதுரைக் கவிஞர் பேரவையில் கவிதை பாடிட முதல் மேடை தந்தார்கள்.  தொடர்ந்து அவரது தலைமையில் கவிதை பாடி வருகிறேன்.  மாமதுரைக் கவிஞர் பேரவைக்கு என்னை செயலராக்கி உள்ளார் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள்.  கவியரங்க மேடைகளில் கவிதை பாடி, கைதட்டல் வாங்கிட உதவியவர். 

தங்கள் பள்ளிக்கல்வியில் ஏற்பட்ட இலக்கிய ஆர்வம்?
       மகாகவி பாரதியார் ஆசிரியராக வேலை பார்த்த பெருமை மிக்க சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன்.  அங்கு நுழைவாயிலில் மகாகவி பாரதியார் சிலை உண்டு.  பள்ளிக்கு உள்ளே போகும் போதும், வெளியே வரும் போதும் பார்த்த பாரதியார் சிலை, என்னுள் கவிதை ஆர்வத்தை விதைத்தது.  தொடர்ந்து எழுத் ஆரம்பித்தேன்.  என் முதல் கவிதை மதுரைமணி நாளிதழில் பிரசுரமானது.  பிரசுரமான மகிழ்ச்சியில் தொடர்ந்து எழுதி, பின் நூல்கள் வெளியிட்டேன்.

கல்லூரிக்கு செல்ல முடியாத சூழலில் தங்களின் மனநிலை?
       குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி சென்று படிக்க வசதி இல்லை.  மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 857 மதிப்பெண் எடுத்து இருந்தேன். B.Com. படிக்க வேண்டும், C.A. படிக்க வேண்டும், தணிக்கையாளர் ஆக வேண்டும் என்று கனவு இருந்தது.  அவை எல்லாம் தகர்ந்து கல்லூரி வாழ்க்கையே எனக்கு இல்லாமல் போன வடு இன்றும் உண்டு. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் வணிகவியல் பயின்றேன் .ஆனால் அவற்றிற்கு ஆறுதலாக எனது ஹைக்கூ கவிதைகள் கல்லூரிகளின் பாடநூலில் இடம் பெற்றன.


தங்களது முதல் படைப்பு வெளிவந்த சூழல்?
       முதல் கவிதை மதுரைமணியில் வந்தது.  கவிஞர் இளவல் ஹரிஹரன், கவிதை தொகுப்பு நூல் வெளியிட்டார்.  அதில் எனது கவிதைகளும் இடம்பெற்றது.  அந்த நூலை குமுகம் இதழுக்கு அனுப்பி இருந்தார்.  புதுத்தகம் பகுதியில் நூல் விமர்சனத்தில் எனது கவிதையை மேற்கோள் காட்டி இருந்தார்கள்.  அக்கவிதை :
கடற்கரையில் வீற்றிருந்த
காதலியின் சிரிப்பிற்கு தடை விதித்தேன் !
கலங்கரை விளக்கம் என்று கருதி
கப்பல்கள் வந்து விடுமே!

தங்களது இலக்கிய பயணத்தில் இணையத்தின் பங்களிப்பு?
       தொடக்கத்தில் கவிதை நூல்கள் சொந்தமாக வெளியிட்டு 1000 பிரதிகள் மக்களை சென்றடைய இரண்டு வருடங்கள் ஆனது.  நமது படைப்பு உடனடியாக மக்களை சென்றடைய என்ன வழி? என்று யோசித்த போது, இணையம் என்பதை அறிந்து 2003ஆம் ஆண்டே www.kavimalar.com என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதை இணையம் தொடங்கி இன்று வரை 12 வருடங்களாக நடத்தி வருகிறேன்.  பல இலட்சம் வாசகர்கள் எனது கவிதைகளைப் படித்துப் பாராட்டி உள்ளனர் .  அடுத்து www.eraeravi.blogspot.in வலைப்பூ தொடங்கினேன். https://www.facebook.com/rravi.ravi  என்ற முகநூல் தொடங்கினேன்.  TWEETER, WHATSAPP என்று இணையத்தில் பல்வேறு வழிகளில் படைப்புகளை படைத்து வருகிறேன்.உலகின் முன்னணி இணையங்கள் எனது படைப்புகளை பிரசுரம் செய்து வருகின்றன .


தங்களது இலக்கிய ஆசான் பேராசிரியர்      
இரா. மோகன் பற்றி?
       எழுத்து, பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர்.  ஓய்வின்றி தினமும் உழைத்து வருபவர்.  பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வுக்க்கு ஓய்வு தந்து ஓய்வின்றி உழைப்பவர்.  மற்றவர்களை வளர்த்து விடும் தாயுள்ளம் பெற்றவர்.  இதுவரை 15 நூல்கள் எழுதி உள்ளேன்.  அவருடைய அணிந்துரையுடன் தான் எனது நூல்கள் வரும். அவரது மேற்பார்வையிலேயே எனது நூல்கள் வரும்.  பல்வேறு பணிகள் இருந்தாலும் முன்னுரிமை தந்து அணிந்துரை வழங்கி நூல் சிறப்பாக அமைந்திட ஆலோசனைகளும் வழங்கிடுவார்கள்.  இலக்கிய ஆசான் இரா. மோகன் அவர்கள் 130 நூல்களின் ஆசிரியர்.  அவரை முன்மாதிரியாகக் கொண்டே நான் நூல்கள் எழுதி வருகிறேன்.  25 நூல்களாவது எழுதி விட வேண்டும் என்று இலட்சியம் உள்ளது.

 தங்களது பட்டிமன்ற பயணங்கள்?
       தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுடன் முதல் பட்டிமன்றம் பேசிட அவருடன் மகிழுந்தில் வெளியூருக்கு பயணம் செய்த போது, போகும் வழியிலேயே வாந்தி வந்து விட்டது.  வாந்தி வந்ததன் காரணமாக நான் பேசவில்லை என்றேன்.  அய்யாதான் தன்னம்பிக்கை தந்து பேச வைத்தார்கள்.  தொடர்ந்து வெற்றிகரமாக பொதிகை தொலைக்காட்சி, மதுரை உள்ளூர் தொலைக்காட்சிகள் என பல பட்டிமன்றங்களில், அய்யா அவர்களை நடுவராகக் கொண்டு பேசி வருகிறேன்.

தாங்கள் கலந்து கொண்ட மேடை நிகழ்வுகள்?
       தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுடன் பல்வேறு தொலைக்காட்சிகள், TNPL புகழூர், பெங்களூர் தமிழ்ச்சங்கம், சென்னை கவிதை உறவு விழா என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசி உள்ளேன்.


முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுடனான      நட்பு?.
       1999ஆம் ஆண்டு மலேசியப் பத்திரிகை தமிழ்நேசனில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் ஆத்தங்கரையோரம்! நாவல் பற்றிய பதிவு வந்து இருந்தது.  அதனை அப்போது நான் பணியாற்றும் சுற்றுலாத்துறையின் இயக்குனராக இருந்த அவருக்கு பயத்துடன் அனுப்பி இருந்தேன்.  நன்றிமடல் அனுப்பினார்.  நான், திருமலை மன்னர் அரண்மனையில் ஒலி ஒளிக்காட்சியில் பணிபுரிந்து வந்தேன்.  தற்காலிகமாக ஒலிஒளிக்காட்சி நிறுத்தப்பட்டது.  அங்கு பணிபுரிந்த நான் உள்பட 3 பேருக்கு சென்னைக்கு இடமாற்றம் செய்து ஆணை வந்தது.  மதுரை சுற்றுலா அலுவலகத்தில் ஒரு பதவி காலியாக இருந்தது.  அந்த பதவிக்கு உரிய பவானிசாகர் பயிற்சி 2 மாதங்கள் முடித்து சான்றிதழ் பதிவு செய்து இருந்தேன். எனவே தற்காலிகமாக காலியாக உள்ள பதவியில் மதுரையில் பணிபுரிய வேண்டி விண்ணப்பம் அனுப்பி இருந்தேன்.  உடனடியாக எனக்கு மதுரை சுற்றுலா அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கினார்.  சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான உதவிகளை எல்லோருக்கும் செய்யும் உயர்ந்த பண்பு மிக்கவர்.
       என் மகன் பிரபாகரன் எம்.பி.ஏ. படிப்பதற்கு, கோவை கலந்தாய்வில் கலந்து கொண்டு சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்து அங்கு சென்ற போது விடுதியில் இடம் இல்லை என்றனர்.  எனது மனைவி மிகவும் மனம் வருந்தினார்.  நான் தயக்கத்துடன் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களிடம் வேண்டினேன்.  உடன் அந்தக் கல்லூரியில் விடுதி ஒதுக்கீடு செய்து தந்தார்கள்.  இப்படி மறக்க முடியாத உதவிகள், அவர் எனக்கு செய்துள்ளார்.
       மதுரையில் நடந்த முனைவர் சுந்தர் ஆவுடையப்பன் அவர்களின் மகள் திருமணத்திற்கு முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் வந்து இருந்தார்.  அவர் அருகில் நீதியரசர் நாகமுத்து அவர்களும் இருந்தார்.  அய்யா, நான் செய்த சிறு உதவிகள பாக்யா வார இதழில் எழுதி இருந்தீர்கள்.  நீங்கள் செய்த பெரிய உதவிகளை எழுதவில்லையே என்று கேட்டேன்.  அதற்கு அவர் சொன்ன பதில், நான் செய்த உதவிகளை அன்றே மறந்து விட்டேன் என்றார்.  திருக்குறளை ஆய்வு செய்தது மட்டுமன்றி திருக்குறள் வழி வாழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர்.
       மதுரைக்கு வரும்போது தகவல் தந்து விடுவார்கள்.  நண்பர்கள் சிலரும் வந்து விடுவார்கள்.  அவரை சந்தித்து பேசும் போது பல நல்ல கருத்துக்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
       அவர் சென்னையில் இருந்து கொண்டே மதுரையில் இருக்கும் எனக்கும், கவிஞர் ஆத்மார்த்திக்கும் நட்பை உருவாக்கியவர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.
       முதன்மைச் செயலர் என்ற உயர்ந்த பதவியில் இருந்த போதும் என் போன்ற சாதாரணமானவனிடமும் மிக அன்பாகப் பழகிடும் மிக நல்லவர்.  நேர்மையானவர், பண்பாளர், அவருடனான இனிய நட்பு இனிதே தொடர்கின்றது.

தங்கள் மறக்க முடியாத சம்பவங்கள்?.
       நான் மகாகவி பாரதியார் பணிபுரிந்த பெருமையுடைய சேதுபதி பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தேன்.  பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தேன்.  தோல்வி அடைந்ததால் 11ஆம் வகுப்பிற்கு இடம் தரவில்லை.  செனாய் நகர் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை இரண்டு ஆண்டுகள் படித்தேன்.  அங்கு நன்கு படித்து 857 மதிப்பெண்கள் படித்தேன்.  அதே சேதுபதி பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றிய சம்பவம் மனதிற்கு மகிழ்ச்சி தந்த மறக்க முடியாத சம்பவம்.

தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்ட  மேலச் சீவல்புரி கணேசர் செந்தமிழ் கல்லூரியில் பட்டிமன்றம் . தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் சகோதரர் இறந்து விட்டார் . மற்றவராக இருந்தால் அலைபேசியில் சொல்லி இரத்து செய்து இருப்பார்கள் .ஆனால் அய்யா கல்லூரியில் எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து விடுவார்கள் .திட்டமிட்டபடி செல்வோம் என்றார் .வியப்பாக இருந்தது .கல்லூரியில் வரவேற்று பதாகைகள் பெரிய அளவில் வைத்து இருந்தனர் 1000 மாணவ மாணவிகள் வரவேற்றனர் . சகோதரர் இறந்த சோகம் துளியும் காட்டிக் கொள்ளாமல் வெற்றிகரமாக பட்டிமன்றம் நடத்தி முடித்தார் .நானும் ஒரு அணியில் பேசி வந்தேன் ..பட்டிமன்றம் முடிந்து அணியினர் அனைவரும்  முனைவர் இரா. மோகன் அவர்களின் சகோதரர் அவர்களின் இல்லம் சென்று துக்கம் விசாரித்து வந்தோம்.   மறக்க முடியாத நிகழ்வு .
       எனது முதல் கவிதையை பிரசுரம் செய்த மதுரைமணி நாளிதழை என்னால் மறக்க முடியாது.  இன்றும் என்னுடைய படைப்புகளையும், விழா புகைப்படங்களையும் பிரசுரம் செய்த உதவி வருகின்றார் திரு. சொ. டயஸ்காந்தி மறக்க முடியாத மனிதர்.
       சிற்றிதழ் ஆசிரியர்கள் தரும் ஒத்துழைப்பு மறக்க முடியாதது.

விருதுகள் பல பெற்ற தாங்கள் வாழ்வில் பெரும்பேறாகக்      கருதுவது?
       முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் புலிப்பால் இரவி என்று வழங்கிய விருதை பெரும்பேறாகக் கருதுகின்றேன்.  அதனை பாக்யா இதழிலும் பதிவு செய்து பெருமைப்படுத்தினார்கள்.



தங்கள் இலக்கியப் பணியில் குடும்பத்தினர் பங்களிப்பு?
       எனது மனைவி ஜெயச்சித்ரா.  மகன்கள் பிரபாகரன், கௌதம் இவர்களுக்கு என் போல இலக்கிய ஈடுபாடு இல்லை என்பது உண்மை.  எனக்கு உதவியும் செய்வதில்லை.  இடையூறும் செய்வதில்லை.  என்னை என் போக்கில் இலக்கியத்தில் ஈடுபட எந்தவித இடையூறும் செய்யாமல் இருப்பதையே பேருதவியாகக் கருதுகின்றேன்.  அவர்களை கட்டாயப்படுத்தி இலக்கியத்தில் ஈடுபடுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.


தங்கள் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்?
       எனது 4 நூல்களை வெளியிட்டுள்ள புகழ்பெற்ற வானதி பதிப்பகம், மேதகு அப்துல் கலாம், முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப்., தமிழ்த்தேனீ.இரா. மோகன், தமிழ் வளர்ச்சித் துறையின்  செயலர்  முனைவர்
மூ. இராசாராம், கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன், திருச்சி சந்தர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் ,உலகத் திருக்குறள் பேரவை மதுரை பொதுச்செயலர் மணிமொழியன்,
கலைமாமணி கு .ஞானசம்பந்தன் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் ,மனிதத்தேனீ  இரா .சொக்கலிங்கம், காவல்துறை உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன், காவல்துறை  துணை கண்காணிப்பாளர் ( ஒய்வு ) பேனா மனோகரன் ,கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்ச .சந்திரா, சுற்றுலாத் துறையின் துணை இயக்குனர் ( ஒய்வு ) சா .சுப்பிரமணியன்,முனைவர் க .பசும்பொன்
கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார்,புதுகைத் தென்றல்  ஆசிரியர் புதுகை தருமராசன், மனிதநேயம் ஆசிரியர் பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் பத்திரிகையாளர் ப .திருமலை, பொதிகை மின்னல்  ஆசிரியர் வசீகரன் ,மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா, புதிய உறவு ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன் ,ஏழைதாசன் ஆசிரியர் விஜயக்குமார்,  பொறியாளர்கள்  ஜ .சுரேஷ் , முத்துராஜு,   வழக்கறிஞர்
கு. சாமிதுரை, முனைவர் ஞா.சந்திரன், சண்முக திருக்குமரன், கலாம் கே .ஆர் .சுப்பிரமணியன் ,கவிக்குயில் இரா .கணேசன் மற்றும் சககவிஞர்கள், புகைப்படக்  கலைஞர்கள் ரெ.கார்த்திகேயன் ,சோமு ,செந்தில் ,சிவக்குமார் ,இராதா என்று இந்தப் பட்டியல் நீளும்.பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்  ,

புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பலருடன் எனக்கு நடப்பு உண்டு.அவர்களும் என்னுடைய இலக்கிய வளர்ச்சிக்கு துணை நின்றார்கள் http://www.tamilauthors.com/ இணையத்தின் ஆசிரியர் கனடா இனிய நண்பர் அகில் ,இலண்டன்   கலாநிதி பொன் பாலசுந்தரம், திரு ஐ. தி .சம்பந்தன் ,ஜெர்மனி தம்பி புவனேந்திரன்,

திரு .பாக்கியநாதன் ,திருமதி விக்னா பாக்கியநாதன் இப்படி பலர் உள்ளனர் 
.

இளையதலைமுறைக்கு தாங்கள் சொல்ல விரும்பும் செய்தி?
       எந்தஒரு செயலையும் நாளை என்று தள்ளிப் போடாதீர்கள், இன்றே முடியுங்கள். விஞ்ஞான கண்டுபிடிப்புகளை ஆக்கத்திற்கு நன்மைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.  அழிவிற்கு, தீமைக்கு பயன்படுத்தாதீர்கள்.  சாதி, மத வெறி ஒழிப்போம், சகோதரத்துவம் காப்போம்.  மனிதநேயம் காப்போம். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் நாளை மட்டுமல்ல இன்றும் நமதே!

தங்களது எதிர்கால இலட்சியம்?
       மனிதநேயப் படைப்பாளியாக மூச்சு உள்ளவரை இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைக்க வேண்டும்.  கவிமலர் டாட்காம் என்ற இணையம் 2003ல் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறேன்.  என் படைப்புகள் மட்டும் அதில் உள்ளன.  எதிர்காலத்தில் பெரிய புதிய இணையம் தொடங்கி எல்லோருடைய படைப்புகளையும் இணையத்தில் ஏற்றிப் பார்க்க வேண்டும் என்ற இலட்சியம் உள்ளது.
       சாதி, மத சண்டைகள் இல்லாத சமதர்ம சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமென்ற ஆசை உள்ளது.

--

கவிஞர்.இரா. இரவியின் படைப்புகள்

கவிதைச் சாரல்                     - 1997
ஹைக்கூ கவிதைகள்           1998
விழிகளில் ஹைக்கூ           - 2003
உள்ளத்தில் ஹைக்கூ         - 2004
நெஞ்சத்தில் ஹைக்கூ       - 2005
என்னவள்                                 - 2007
இதயத்தில் ஹைக்கூ         - 2007
கவிதை அல்ல விதை         - 2010
மனதில் ஹைக்கூ                - 2010
ஹைக்கூ ஆற்றுப்படை     - 2010
சுட்டும் விழி                            - 2011
ஆயிரம் ஹைக்கூ               – 2013
புத்தகம் போற்றுதும்          - 2014
கவியமுதம்                              - 2014
ஹைக்கூ முதற்றே உலகு - 2015
வெளிச்ச விதைகள்             - 2016
ஹைக்கூ உலா                      - 2017
கவிச்சுவை                               - 2018
ஹைக்கூ 500                            - 2018
இறையன்பு கருவூலம்        - 2019
இலக்கிய இணையர்
 படைப்புலகம்                         - 2019
ஏர்வாடியார் கருவூலம்       - 2019


பரிசும் பாராட்டும் .

26.01.1992 குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் இவருக்குச் சிறந்த அரசுப்பணியாளருக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

‘தமிழ்த்தேனீ” பேராசிரியர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்ட விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் இரவி பேசினார். பொதிகை உள்ளிட்ட பலவேறு தொலைக்காட்சிகளில் இவரது உரைகள் ஒளிபரப்பாகி உள்ளன.மாமதுரைக் கவிஞர் பேரவையின்   தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிதை பாடி வருகிறார் .மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலராக இருந்து செயல்பட்டு வருகிறார் .

இவரது நேர்காணல்கள், ‘பொதிகை’, ‘ஜெயா’, ‘கலைஞர்’ முதலான தொலைக்காட்சிகளி ஒளிபரப்பாகி உள்ளன.

இரவி இதுவரை 22 நூல்கள் எழுதியுள்ளார்.

‘ஹைக்கூ திலகம்’, ‘கவியருவி’, ‘கவிமுரசு’ உள்ளிட்ட விருதுகளைப் பல்வேறு இலக்கியக் கழகங்கள் இவருக்கு வழங்கி உள்ளன.

இவரது ஹைக்கூ கவிதைகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,  மதுரை தியாகராசர் கல்லூரி, திருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

பல இலட்சம் வாசகர்கள் பார்த்த kavimalar.com, eraeravi.blogspot.in உள்ளிட்ட இணையங்களின் ஆசிரியராக இருந்து, இரவி கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார், ‘RRAVIRAVI’ என்ற முகநூலிலும் எழுதி வருகிறார்.

உலகின் புகழ்பெற்றத் தமிழ் இணையங்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேனீ இரா.மோகன் தொகுத்து, சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை எழுத்தாளர் சங்கம் இவரது ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்தது. பரிசும் பாராட்டுச் சான்றிதழ்களும் புதுவை ஆளுநர் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் புதுவை பல்கலைக் கழகத் துணைவேந்தரால் வழங்கப் பெற்றன.

இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய முறையில் நடத்திய கவிதைப் போட்டியில் இரவி இருமுறை பரிசு பெற்றுள்ளார்.

மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் இருந்து இரவி ‘வளரும் கலைஞர்’ விருதினைப் பெற்றுள்ளார்.

கணினித்தமிழ்ச் சங்கம் மதுரையில் நடத்திய ‘கணிப்பொறித் திருவிழாவில் ‘தமிழும் அறிவியலும்’ என்ற தலைப்பில்லான கவிதைப் போட்டியிலும் இரவி பரிசு பெற்றுள்ளார்.

      ‘இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகளில் பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் க.செல்வக்குமார் (பார்வையற்றவர்) ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார்.

      வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் மு. பாண்டி அவர்களை நெறியாளராகக் கொண்டு செல்வன் லெ.சிவசங்கர் தமது ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டத்திற்காக ‘கவிஞர் இரா.இரவியின் ஹைகூக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வேட்டினை ஒப்படைத்துள்ளார்.

      15-10-2015 அப்துல் கலாம் பிறந்த நாளன்று அருள்மிகு மீனாட்சி அரசினர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மூன்றிலும் பேசியதைப் பெருமையாகக் கருதுகின்றார் இரவி.

      ‘கவிதை உறவு’ ஆண்டு விழாவில் தெய்வத்திரு ‘கலைமாமணி விக்கிரமன்’ விருதை இரவிக்கு நீதியரசர் வள்ளிநாயகம் வழங்கியுள்ளார்.

      கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80-ஆவது பிறந்த நாள் விழாவில் ‘எழுத்தோலை’ விருதைத் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் இரவிக்கு வழங்கியுள்ளார்.

      ‘கவிதை உறவு’  மாநில அளவில் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘கவியமுதம்’ நூலிற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.

      27-05-2017 அன்று செந்தமிழ்க் கல்லூரியில் நடந்த தனித்தமிழ்க் கவியரங்கில் கவி பாடியதற்கு செந்தமிழ் அறக் கட்டளையினர் இரவிக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

      08-10-2017 அன்று சிவகாசியில் கந்தகப் பூக்கள் & நீல நிலா இணைந்து நடத்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் இரவிக்கு ‘ஹைக்கூ செம்மல்’ விருதினை வழங்கினர்.

      15-10-2017 அன்று புதுவையில் ‘மூவடி’, ‘மின்மினி’, ‘துளிப்பா’ இதழ்கள் இணைந்து நடத்திய துளிப்பா நூற்றாண்டு விழாவில் இரவிக்குத் ‘துளிப்பாச் சுடர்’ விருது வழங்கினர்.

      கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் இரவியின் ‘ஹைக்கூ உலா’ நூல் மதிப்புறு பரிசைப் பெற்றுள்ளது.

      29-07-2018 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில் அமைச்சர் க. பாண்டியராசன், கவிஞர் இரா.இரவிக்கு ‘பாரதி விருது’ வழங்கினார்.

      கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலா ‘நூலில் உள்ள தன்னம்பிக்கை ஹைக்கூ’ கவிதைகள், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பாட நூலில் இடம்பெற்றுள்ளன.

      மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கவிஞர் இரா. இரவியின் ‘மனதில் ஹைக்கூ’ நூல் பாட நூலாக உள்ளது.

      ‘பொதிகை மின்னல்’ மாத இதழ் நடத்திய நூல்கள் போட்டியில் ‘ஹைக்கூ 500’ நூல் வென்றமைக்கு 20-10-2019 அன்று நடந்த ஆண்டுவிழாவில் மூவாயிரம் பொற்கிழியும் விருதும் வழங்கினார்கள்.

கவிஞர் முகவரி
கவிஞர் இரா .இரவி,
48 வடக்கு மாசி வீதி மதுரை .
625001.
தமிழ்நாடு .இந்தியா .
அலைபேசி 9842193103 
மின் அஞ்சல் eraeravik@gmail.com.
இணையம் www.kavimalar.com
வலைப்பூ www.eraeravi.blogspot.com
முகநூல் https://www.facebook.com/rraviravi.


கவிஞர். இரா.இரவியுடன்
 ஒரு இலக்கியச் சந்திப்பு 
-- ஜெயா தொலைக்காட்சி--.


Post a Comment

புதியது பழையவை

Sports News